08142022ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

தேசியம் என்பது எப்போதும் முதலாளித்துவ நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது புனைவா!? – பகுதி 03

தேசியம் முதலாளித்துவ கோரிக்கையல்ல என்று காட்ட, பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தையே திரித்துக் காட்டுகின்றனர். பாட்டாளி வர்க்கம் தனது வர்க்கப் போராட்டத்தில் முரணற்ற தேசியத்தை முன்னிறுத்தி நடத்திய போராட்டங்களைக் காட்டி, தேசியத்தை வர்க்கமற்றதாக காட்டமுனைகின்றனர். தேசியத்தை முதலாளித்துவ கூறு அல்ல என்று காட்டும் அக்கறை, முதலாளித்துவ நலன் சார்ந்தது. அதாவது பாட்டாளி வர்க்கத்தை முதலாளித்துவ நலனுக்கு பயன்படுத்த முனைகின்ற அரசியலாகும். அதைப் பாட்டாளி வர்க்கத்தின் பெயரில் செய்வது தான், இங்கு அரசியல் சதியாகும்.

2ம் உலக யுத்தம் நடந்த காலத்தில், சோவியத் விடுவிக்கப்பட்ட பிரதேசமாக, தன்னை தொடர்ந்து தக்கவைக்க வேண்டியிருந்தது. உலகநாடுகளும் அவைகளின் எல்லைகளும், சர்வதேச விதிமுறைகளும் மறுக்கப்பட்ட காலம் அது. ஆக்கிரமிப்பு ஊடான மறுபங்கீடு நடந்த காலம் அது. பொதுவான ஏற்றுக்கொள்ளப்பட்ட, பரஸ்பரம் மதிக்கப்பட்ட சர்வதேச எல்லைகள் என்பதைக் கடந்த ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்த நிலையில், சோவியத்யூனியன் தன்னை தற்காக்க வேணடியிருந்தது.

உலகமே முதலாளித்துவ சமூமாக இருந்த நிலையில், சோவியத்தில் மட்டும் முதலாளித்துவமல்லாத அதற்கு எதிரான சமூகக் கட்டமைப்பு இருந்தது. பாட்டாளி வர்க்கம் தன் தற்காப்பு சார்ந்த யுத்தத்தில் தேசியக் கூறை அடிப்படையில் கொண்டிருந்தது. இவை இரண்டு தளத்தில்

1. சோவியத் பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சியின் கீழ், வர்க்கங்களைக் கொண்ட ஒரு நாடாக இருந்தது. பாட்டாளி வர்க்கமல்லாத வர்க்கப் பிரிவினரைக் கொண்ட, அவர்களின் முதலாளித்துவ தேசிய உணர்வை ஆக்கிரமிப்புக்கு எதிராக அணிதிரட்ட வேண்டியிருந்தது.

2. முதலாளித்துவ உலகத்தில் அதன் ஆக்கிரமிப்புக்கு எதிராக, ஒரு நாடு சார்ந்த உலக முதலாளித்துவ வரைமுறையை உள்ளடக்கிய, ஆக்கிரமிப்புக்கு எதிராக தேசிய உணர்வை ஒன்றிணைக்க வேண்டிருந்தது.

இதை பாட்டாளி வர்க்கம் தன் கையில் எடுக்கத்தவறினால், முதலாளித்துவ வர்க்கம் அதை தன் கையில் எடுத்து பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டமாக மாற்றிவிடும். மறுபக்கத்தில் உலக ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்க முடியாது. புதிய முரண்பாடுகள், புதிய வர்க்க சேர்க்கையைக் கோரியது. இது தேசியத்தை முதலாளித்துவம் அல்லாததாக மாற்றிவிடுவதில்லை.

இதை மேலும் புரிந்துகொள்ள, இலங்கையில் பேரினவாதத்துக்கு எதிரான தமிழ்தேசியத்தை எடுப்போம்;. இந்த தமிழ் தேசிய ஜனநாயகப்; புரட்சியை எந்த வர்க்கம் தலைமை தாங்குவது என்ற போராட்டம், ஆரம்பம் முதலே நடந்தது. பாட்டாளிவர்க்கம் தன் வர்க்க நலனை அடைய, ஜனநாயகப் புரட்சி உள்ளடங்கிய தனது நலன் உள்ளடங்கிய போராட்டத்தைக் கோரியது. முதலாளித்துவ வர்க்கம் பாட்டாளி வர்க்க நலனை மறுத்து, தன் தலைமையில் பாட்டாளி வர்க்கத்தை ஓடுக்கும் தேசியத்தைக் கோரியது. பாட்டாளி வர்க்கத்தின் நலனை மறுக்கும் அதன் தேசியக் கூறு, இயல்பில் உலக ஒழுங்குக்குள் தன்னை ஒழுங்குபடுத்தி அதற்குள் சீரழிந்தது. அது மக்களையே ஒடுக்கும் கும்பலாக மாறி அழிந்தது. இது வெறும் புலிகள் மட்டுமல்ல, பாட்டாளி வர்க்க நலனை முன்னிறுத்தாத அனைவரும் இப்படித்தான் இயங்கினர். தங்கள் வெற்றுக் கோசங்கள் மூலம், மக்களுக்கு எதிராக இருப்பதையும் செயல்படுவதையும் அவர்களால் மூடிமறைக்க முடியவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் போன்ற குழுக்கள் கூட, மக்கள் விரோத அன்னிய கைக்கூலிகளாக இருந்தபடி, கோசங்களையும் இடதுசாரிய லும்பன்தனத்தையும் திணித்தனர்.

1970களில் சிறிமா அரசாங்கத்தில் இடதுசாரிகள் பாட்டாளி வர்க்க பொருளாதாரம் என்ற ஒன்றை, லும்பன்தனத்துடன் நடைமுறைப்படுத்தியது போன்று தான் ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ்சின் இடதுசாரியமும்.

பாட்டாளிவர்க்க தலைமையில் அவை என்றும் இருக்கவில்லை. பாட்டாளிவர்க்க தலைமையிலான போராட்டத்தை என்.எல்.எவ்.ரி., பேரவை முதல் இயக்கத்துக்கு எதிரான உள்ளியக்க அமைப்புக்கள் பல கட்ட போராட்டத்திலும் நடத்;தின. இப்படி அவர்கள் தான் முதலில் அழிக்கப்பட்டார்கள். இதை புலிகள் மட்டும் செய்யவில்லை. முதலில் பெருமெடுப்பில் புளட்டும், இறுதியில் புலியும் செய்தது.

பாட்டாளி வர்க்கம் அன்று கோரியது, தன் வர்க்கப் போராட்டத்தை அல்ல. பல ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஐக்கிய முன்னணியை அடிப்படையாக கொண்ட தேசிய போராட்டத்தைக் கோரியது. இனமுரண்பாட்டை பிரதான முரண்பாடாக இனம் கண்டதன் மூலம், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஜனநாயக் கோரிக்கையை தனதாக்கியது. ஆம் முதலாளித்துவ தேசிய கோரிக்கை என்பது ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக இருப்பதால், அதை தனது கோரிக்கையாக்கியது. பாட்டாளி வர்க்கம் அதை தனது முரணற்ற கோரிக்கையின் எல்லையில் முன்னிறுத்துகின்றது. தேசியம் என்பது சாராம்சத்தில் தன் மக்களை சுரண்டாத கற்பனை பொருளல்ல. சுரண்டும் வர்க்கத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டதுதான்.

இதுவல்லாத தேசியம் என்பது கற்பனையானது. பாட்டாளி வர்க்கம் என்ன செய்கின்றது, தன் தலைமையில் இதை அங்கீகரித்து, பாட்டாளி வர்க்க நலனுக்கு இசைவான வகையில் படிப்படியாக அதை இல்லாதாக்குகின்றது.

சீனப்புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் நடந்த போது, அங்கு முதலாளித்துவ வர்க்கத்தை உள்ளடக்கியிருந்தது. பல வர்க்கத்தின் ஐக்கிய முன்னணி மூலம்தான் புரட்சி வெற்றிபெற்றது. ஆகவே தான் அது புதிய ஜனநாயக புரட்சியாக இருந்தது. அது சோவியத் போல், சோசலிச புரட்சியல்ல. சோசலிச புரட்சிக்கு முந்தைய ஒரு கட்டம். சோவியத்தில் தேசிய முதலாளித்துவத்துக்கும் எதிரான வர்க்கப் போராட்டமாக இருந்தது. சீனாவில் தேசிய முதலாளித்துவ வர்க்கத்துடன் சேர்ந்து, தரகு முதலாளித்துவ மற்றும் நிலப்புரத்துவம்துக்கு எதிரான போராட்டமாக இருந்தது.

இந்த எல்லையில்தான், பாட்டாளி வர்க்கம் தேசியத்தை தன் வர்க்க நலனுக்கு ஏற்ப முன்னிறுத்தியது. தேசியத்தில் உள்ளார்ந்து காணப்படும் முரணற்ற ஜனநாயகக் கூறுகளை உயர்த்துவதன் மூலம்தான், முரணான முதலாளித்துவத்தை பாட்டாளி வர்க்கம் தனிமைப்படுத்தி தனது வர்க்க நலனை அடைய முனைகின்றது. முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரணற்ற கூறுக்கும், முரண்பாடான கூறுக்கும் உள்ள முரண்பாட்டையே, பாட்டாளி வர்க்கம் தன் கையில் எடுக்கின்றது. உதாரணத்துக்கு மற்றவன் உழைப்பை சுரண்டுவது ஜனநாயகமா!? முரணற்ற ஜனநாயகம் இதை ஜனநாயகமாக கருதுவதில்லை. முரணான ஜனநாயகம் இதை ஜனநாயகமாக கருதுகின்றது. தேசியத்தின் முழுச் சாரமும் இப்படித்தான் உள்ளது.

தொடரும்

பி.இரயாகரன்

17.01.2011

1. தேசியம் என்பது எப்போதும் முதலாளித்துவ நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது புனைவா!? - 01

2. தேசியம் என்பது எப்போதும் முதலாளித்துவ நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது புனைவா!? – பகுதி 02


பி.இரயாகரன் - சமர்