Language Selection

தேவன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இது பேய்கள் ஆட்சி செலுத்தும் தேசம். இங்கு பிணங்களுக்குத் தான் கொண்டாட்டம். இங்கு சந்தோஷமாக வாழ வேண்டுமாயின், நாமும் பிணங்கள் ஆனால் தான் அது சாத்தியமாகும். மூன்று  தசாப்தம் புலிகளோடு வாழ்ந்த மக்கள்,  இன்று பேய்கள் மத்தியில் வாழ்க்கையினை நகர்த்த வேண்டியுள்ளது. இன்று  தமிழ் மக்களின் வாழ்க்கையில் சகல வழிகளிலும் சந்தோஷங்கள் சாகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. புலிகள் என்ற பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம், நாட்டில் பயங்கரவாதமே இல்லை என்று ஓலமிட்டுக் கொண்டிருக்கும் மகிந்தாவும், மகிந்தாவின் வால்பிடி அரசியல்வாதிகளும் நாடு முழுவதும் குறிப்பாக வடபகுதியில் இராணுவ பயங்கரவாதத்தினை கட்டவிழ்த்து விட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆட்கடத்தல்… இப்படியே வன்முறைகள் நாளுக்கு நாள் கூடி கொண்டே போகிறது.

 

 

வெட்டவந்தவனுக்கு வாள் எடுத்து கொடுத்தவன் கதை போன்று, ஒரு சில தமிழ் காடையர்களும், இன்று அதிகாரத்தினை கையில் வைத்திருக்கும் தமிழ் அரசியற் காடையர்களும் இந்த காட்டுமிராண்டி இராணுவத்தோடு சேர்ந்தே செயற்படுகின்றார்கள். அன்று புலிகள் செய்த கொலைகள் கண்ணுக்கு தெரிந்த டக்கிளஸ் கும்பலுக்கு இந்த குற்ற செயல்கள் மட்டும் கண்ணுக்கு தெரியவில்லையா? புலிகளோடிருந்த அதே கருத்து சுதந்திர மறுப்பு, கொலைகள், மிரட்டல்கள்,

பணம் பறிப்பு, கடத்தல்கள்… வன்முறைகள் எந்தவித மாறுதலுமின்றி தொடர்கின்றது.


ஜனநாயகம் என்ற பெயரில் ஆபாசமான படங்கள், கஸட்டுக்கள் என்ற இளம் சமூகத்தினரின் பாலியல் உணர்வினை தூண்டும் வகையில் பாலியல் சம்பந்தமான பொருட்கள் தாராளமாக புளக்கத்திற்கு விடப்பட்டுள்ளது. விபச்சாரம், தவறான பாலியற் தொடர்புகள் என்று தமிழ் சிறு பெண்பிள்ளைகளின் வாழ்வில் என்றுமில்லாத அளவிற்கு திணிக்கப்பட்டு வருகின்றது.


17 வயது பெண்பிள்ளை ஒருவர், தான் 14 வயதிலிருந்து பாலியலில் ஈடுபட்டு வருவதாகவும் 76 பேர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டிருப்பதுடன், இதில் பெரும்பாலானோர் இராணுவத்தினர் என்ற தகவல் வெளிவந்துள்ளது. பாலியல் தொடர்பிற்காக பல இளம் பெண்கள் பலாலி இராணுவ முகாமிற்கு சென்று வருவதாக விசாரனையின் போது தெரியவந்துள்ளது. எயிட்ஸ் நோயினால் தாக்கப்பட்டிருக்கும் இந்த 17வயது சிறுமியின் எதிர்காலம் என்ன ஆவது…? போர் குற்றத்திற்கு எதிராக மகிந்த கும்பல் தகவல் வெளியிடும் போது, எங்கள் இராணுவத்தினர் கண்ணியமானவர்கள், எந்த சட்ட விரோதமான செயல்களிலும் ஈடுபடமாட்டார்கள் என்று உளறியவர்கள்,  வடபகுதியில் நடைபெற்று வரும் இந்த சம்பவங்களிற்கு என்ன சொல்லப் போகிறார்கள். புலிகள் புலிகள் என்று வாய்க்குவாய் திட்டித் தீர்த்த தமிழ் பொறுக்கி அரசியல்வாதிகளும் அதன் வால்பிடிகளும் இந்த வன்முறை சம்பவங்களுக்கு எதிராக என்ன செய்யப் போகின்றார்கள்?


இந்த கும்பல்கள் எதுவுமே செய்யப்  போவதில்லை. அவர்களுக்கு தேவையானது இப்படியொரு சமூகமே. சமுதாயத்தில் மதுப்பழக்கம், போதை பொருள் பழக்கங்களை தூண்டி விடுவதும், பாலியல் உணர்வுக்கு இளைஞர்களின் சிந்தனையினை மாற்றி இளம் சமூகத்தினரை அறிவு பூர்வமான சிந்தனையினை மழுங்கடிப்பதும் இந்த கும்பல்களிலின் இன்றைய தேவையாகிறது. அறிவு பூர்வமான அரசியற் கருத்துக்களை மக்கள்,  குறிப்பாக இளம் சமூகத்தினர் உள்வாங்கி கொண்டால் தங்கள் சுரண்டல் ஒடுக்குமுறை அதிகாரத்திற்கு எதிராக அமைந்துவிடும் என்பது முதலாளித்துவ மேலாதீக்க சிந்தனை கொண்ட அரசியல்வாதிகளோடு எப்போதுமுள்ள பயமாகும். நவீனத்துவம், நாகரீகம் என்ற பெயரில் இந்த மேலத்தேய சீரளிவு சிந்தனையினை எங்கள் மண்ணிலும் பரவவிட்டு மக்களுடைய கலாச்சார பண்பாடுகளை சிதறடித்து எதிர்கால சமூகத்தினரின் சிந்தனையினை மட்டுப்படுத்தி,  தங்கள் நலன்களை பேணிக் கொள்வதே இந்த மேலாதிக்க சிந்தனையாளர்களின் நோக்கமாகும். முதலாளித்துவ சிந்தனை கொண்ட சகல உலக அரசியல்வாதிகளுக்குமே இது பொதுவான உணர்வு.


நாடு கடந்த தமிழீழ அரசில்வாதிகளாக இருந்தாலும் சரி, கூட்டமைப்பு அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, மகிந்த கும்பல்களாக இருந்தாலும் சரி அல்லது வால்பிடிகள் டக்கிளஸ், கருணா, பிள்ளையான் ஆனாலும் எல்லாருடைய சிந்தனையின் மையப்புள்ளி ஒன்று தான். “சுரண்டல்…”.  இந்த சிந்தனைக்குள் மூழ்கிப் போனதால் புலிகளும்,  புலித்தலைமைகளும் புலிகளை காரணம் காட்டி சேர்த்த மக்கள் பணத்திலே கொழுத்துப் போயிருந்த கேபி போன்ற கும்பல்களால் இலகுவாக அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டார்கள்.


புலிகள் தங்கள் ஆதரவாளர்களுக்கு விட்டு சென்ற அரசியல் “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”என்ற வாசகம் மட்டும் தான். இதை தவிர சமூதாய அடக்கு முறைக்கு எதிராக சிந்தித்து செயற்படக் கூடிய போராட்ட உணர்வினையும் சிந்தனையினையும் மக்கள் மனதில் எள்ளளவு கூட வளர்த்தது கிடையாது. புலம் பெயர்நாடுகளில் வாழும் புலியாதரவாளர்களும் மேடை கிடைத்து விட்டால், அது எந்த மேடை என்றில்லாமல் மாவீரர் உரையினை ஆரம்பித்து விடுகிறார்கள். வெறும் வாசகத்தினை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி, இத்தனை அழிவினை ஏற்படுத்தியது போதாதென்று,  இன்றும் தொடர்ந்து சிலர் ஊளையிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஏமாற்றுபவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு பல தந்திர உபாயங்களை பயன்படுத்தி கொள்கிறார்கள். நாங்களும் எந்திரனுக்கும், மன்மதன் அம்பிற்கும் கை தட்டி விசிலடிப்பது போல் இதற்கும் ஒரு விசிலடி. பயனற்ற, சாத்தியமற்ற, அவசியமற்ற இந்த அரசியற் கோஷங்களால் எத்தனை யுகம் ஆனாலும்  எதையும் சாதிக்கப் போவதில்லை. சாத்தியமற்ற அரசியற் கோஷங்களாலை சாத்தியமாக்க கூடிய உங்களுடைய உரிமைகளைக் கூட எதிரி இலகுவாக தட்டிக் கழித்து விடுகிறான். எங்கள் அறியாமை எதிரிக்குத் தான் சாதகமாகிறது.

இதனை புரிந்து கொண்டு இந்த புதிய வருடத்தில் நாங்களும் புதிய சிந்தனைகளை உள்வாங்கி, அறிவுபூர்வமான சகல சிந்தனைகளையும் எங்களோடு வளர்த்தெடுத்து எங்களுக்கும், மக்களுக்கும் பயனுள்ள மனிதர்களாக எங்களை ஆக்கி கொள்வோம்.