”இந்நாள் மஹிந்த பாசிசத்தின் அடிவருடியும், முன்னாள் புலிப்பாசிசத்தின் கிழக்குப் பிரதிநிதி தளபதியுமான கருணா இலங்கை ராணுவத்தினருக்காக, பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி விபச்சார தரகனாக செயற்பட்டான்; என, அவனின் மற்றொரு இருண்ட பக்கத்தை அமெரிக்காவின் குறிப்புகள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ்.

விக்கிலீக்ஸ் இன் தகவலின்படி கிழக்கு மாகாணத்தில் நிலைகொண்டிருந்த ராணுவத்தினருக்காக விபச்சாரத்தில் ஈடுபடுமாறும் பல்வேறு பெண்களை அனுப்பி வைத்தார் கருணா. இதற்காக தனியாக ஒரு விபச்சாரக் குழுவையும் அவர் வைத்திருந்தார். கருணாவின் நிர்ப்பந்தம் மற்றும் உயிர்ப் பயம் காரணமாக இந்தப் பெண்கள் கருணாவின் உத்தரவுக்கு கட்டுப்பட நேரிட்டது.

 

 

புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து போனதும், இராணுவத்துக்கு எந்த அளவு கேவலமான வேலைகளைச் செய்துள்ளான் கருணா என்பதையும் அது வெளிக்காட்டியுள்ளது. தற்போது கருணா, ராஜபக்சே அமைச்சரவையில் அமைச்சராக இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.” இது புலிகள் சார்பான இணையத்தில் விக்கிலீக்சை ஆதாரம் காட்டி வந்துள்ள செய்தி. இதேபோல் புலிப்பினாமிகளின் "இடதுசாரி தேசிய முன்னணியின்” தலைமை இணையமான இனியொருவின் பங்காளி இணையமான தமிழ்வின் இன் கருத்துப்படி "கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினருக்காக கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தம்மிடம் இருந்த போராளிகளை கொண்டு பாலியல் தொழிலையும் நடத்தியதாகவும் விக்கிலீக்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது". என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.

புலிப்பினாமிகளும், அவர்களின் "இடதுசாரி தேசிய முன்னணி" தலைமை இணையமான இனியொருவும் பிரச்சாரம் செய்வது போல தன்னுடன் பிரிந்த பெண் போராளிகளை கருணா விபச்சாரத்தில் ஈடுபடுத்தினானா என்பது இங்கு ஆய்வுக்கு எடுக்கப்படுகிறது. இதன் உண்மை தன்மை தான் என்ன என்று ஆராய்வதே இந்தச் சிறு கட்டுரையின் நோக்கம்.

 

பெண்களும், புலிகளும்

 

மேற்கூறியபடி இந்தக் கருணா என்ற களவாணியின் மாமா வேலை இன்று சந்திக்கு வந்தவுடன் புலிப்பினாமிகளும், அவர்களின் "இடதுசாரி தேசிய முன்னணியும்", குத்தி முறிந்தபடி கண்டனங்கள் வெளியிடுகின்றனர்.

ஆனால் இவனோ புலிகளில் இருந்த காலத்திலேயே பெண்கள் மீதான பலாத்காரத்தை பிரயோகிப்பதில் மன்னனாக விளங்கினான். "ஸ்பெசல் ரெயினிங்" என்ற போர்வையில் எதிரியிடம் பிடிபட்டால் எப்படி பாலியல் சித்திரவதையை தாங்குவது என்று கற்றுத் தருகிறோம் என்று கூறி பெண் போராளிகளையும், இயக்கத்தில் வற்புறுத்தி சேர்க்கப்பட்ட இளம் பெண்களையும் கருணா உட்பட்ட புலிகளின் தலைமை பாலியல்வதைக்கு உள்ளாக்கினர். சில வருடங்களின் பின் களவாணி கருணா புலிகளிடம் இருந்து பிரிந்து சென்ற போது, நடுத்தெருவில் விடப்பட்ட பல கிழக்கு பெண் போராளிகள் படுகீழ்த்தரமான முறையில் பிரபாகரனின் வன்னிப் புலிகளால் பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு புலிகளும், புலிகளின் மறுவிளைபொருளான கருணாவும் பெண்களை நடாத்தும் விதத்தில் பெரிதும் வேறுபட்டவர்கள் அல்ல. ஆணாதிக்கத்தின் அனைத்து குணாம்சத்தையும் உள்ளடக்கிய புலிகள் பெண்களை தமது தேவைக்கும், போராளிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவுமே இயக்கத்தில் இணைத்தனர். இதற்கு முன் பெண்களை இயக்கத்தில் இணைத்த இயக்கங்களான EPRLF, Plot போன்ற அமைப்புக்களை எள்ளி நகையாடியவர்கள் புலிகள். இதன் அடிப்படையில் கருணான மாமா வேலை பார்த்தான் என்பது ஆச்சரியப்படத்தக்க விடயம் அல்ல. ஆனால் அவன் தமிழ் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தினான் என்பதே இன்றுள்ள நிலையில் இங்கு முக்கியமான கேள்வி.

 

கருணாவும் விபச்சாரமும்

 

புலிகளில் இருந்து தப்பிச் சென்ற கருணா, சில கால அலைச்சலின் பின் கோத்தபாய, ராஜபக்~வின் நேரடி எடுபிடிக் கும்பலாக மாறினான். இதன் பின் மஹிந்த பாசிச அரசின் உளவுத்துறையின் தலைமை அதிகாரியாகவும்; ராஜபக்~ குடும்பத்தின் ஏவல்நாயாகவும் செயற்பட்டான். கெந்த விதாரணயின் ஏற்பாட்டில் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த, ஒர் அளவுக்கு தமிழ் தெரிந்த பெண் ஒருவர் கருணாவின் அந்தரங்க செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்தப் பெண் 2002 இல் இருந்து இலங்கைப் புலனாய்வுத் துறையில் வெளிநாட்டுப் பகுதியில் அல்லது தூதரகங்களுடனான உளவுத்துறை தகவல் பரிமாற்றம் செய்யும் பகுதியில் இயங்கியவர். 2006 இன் கடைசியில் ஆரம்பித்த கருணாவுக்கும் இப் பெண்ணுக்குமான உறவு, TMVP இக்கும் கருணாவுக்குமான பிளவை ஏற்படுத்தியது. கருணாவுக்கு, ஆங்கிலம், சிங்களம் போன்ற மொழிகளைக் கற்றுக் கொடுத்த இப் பெண் அவனின் அரசியல் ஆலோசகரானதுடன் தனது ஆண் சகோதரர்கள் உதவியுடன், கருணாவின், கோத்தபாயாவின் தொடர்புகளைப் பாவித்து தமது பொருளாதாரத்தையும் உயர்த்த வழிசமைத்தார். கருணாவுடன் சேர்ந்த இந்தக் கும்பலின் ஆள் கடத்தலினால் பெறப்பட்ட பல கோடி ரூபா, இந்தப் பெண்ணின் நேரடி நெறிப்படுத்தலில் முதலீடு செய்யப்பட்டது. இப்பணத்தில் ஒரு பகுதி தான் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தமது ஆதாரவாளர்கள் மூலம் முதலீடு செய்யப்பட்டது.

இச்சமயத்தில் கோத்தபாய படைத்துறையின் எல்லாப் பகுதிகளையும் ஆய்வுக்கு உள்ளாக்கி, உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்தார். அப்போது, படையினரின் விடுமுறை காலத்தில் அவர்கள் பலர் தமது சொந்தக் கிராமங்களுக்கு போவதால், படைத்துறையின் தாக்குதிறன் குறைக்கப்படுகிறதென கண்டறியப்பட்டது. இக்குறையை நிவர்த்தி செய்ய தமிழ்ப் பிரதேச எல்லைகளில் விடுமுறையை உல்லாசமாக கழிக்க விடுதிகள் அமைக்கப்பட்டது. குறிப்பாக அனுராதபுரத்திலும், ஹபறணையிலும் பாரிய விடுமுறைகால தளங்கள் அமைக்கப்பட்டது. இங்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இவ் விடுமுறைகால விடுதிகளை இயக்குவதற்கு கோத்தபாயவின் நண்பர்கள் வட்டத்தில் உல்லாச விடுதிகள் நடாத்தி அனுபவம் உள்ளவர்கள் சிலரிடம் பொறுப்பு வழங்கப்பட்டது. இவ் விடுதிகளுக்கு பாதுகாப்பாக, புலிகளுக்கு விபரம் தெரியாத முறையிலும் விபச்சாரத்தை ஒழுங்கு செய்ய சிலர் ஏற்பாடு செய்யப்பட்டனர். அவர்களின் ஒருவர் கருணாவின் "மைத்துனர்" அதாவது அவரது அந்தரங்க பெண் செயலாளரின் மூத்த சகோதரன் ஆவார். இவர் நீர்கொழும்பு பெண்களை ஒழுங்கு செய்து அனுராதபுரத்திலும், ஹபறணையிலும் இயங்கிய விடுமுறை விடுதிகளுக்கு அனுப்பி வைத்தார். இதே நபர் தான் ஜப்பானின் ஜிக்கா, JICA (The Japan International Cooperation Agency) நிறுவனத்தாலும், மற்றும் சில நிறுவனங்களாலும் கிழக்கு மீன்பிடி தொழிலாளர்களுக்கு வழங்கிய குளிரூட்டி வாகனங்களை கருணாவின் செல்வாக்கை பயன்படுத்தி தனதாக்கியவர். ஆனால் கருணாவை இவரும்; இவரின் சகோதரியும் பயன்படுத்தினார்கள் என்று யாராவது சொன்னால் அது அபத்தம். விபச்சாரம், ஆள்கடத்தல் மூலம் வந்த அனைத்து வருமானமும் கருணாவின் காதலியான சிங்கள பெண்ணால் நிருவகிக்கப்பட்டாலும், கருணாவின் உறவினர்கள், நண்பர்களான பினாமிகளின் பெயரிலேயே முதலீடு செய்யப்பட்டது. இப்பணம் தான் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்யப்பட்டது.

அனுராதபுரத்திலும், ஹபறணையிலும் நடைபெறும் விபச்சாரம் சம்பந்தமாக இந்த வருடம் சித்திரை மாதம் ஒரு பேட்டியை தமிழ் அரங்கம் பிரசுரித்தது. அப்பேட்டி தமிழ் அரங்கத்திற்காக என்னால் கொழும்பில் பெண்களுக்கான உதவி நிறுவனம் ஒன்றின் இரு சமுக ஆர்வலர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. விக்கிலீக்கின் அம்பலப்படுத்தலின் பின் அவர்களுடன் தொடர்பு கொண்டபோது, அவர்கள் சொன்ன தரவின் உள்ளடக்கம் சில மேலே வாசித்தத்துக்கு பொருந்திப் போகின்றது.

அவர்களின் தரவின்படியும், நான் பேட்டி கண்ட நில்மினியின் கருத்துப்படியும், குறித்த பிரதேசத்தில் கடத்தப்பட்ட தமிழ் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தவில்லை என தெரியவருகிறது. அதேவேளை கருணாவுக்கு 2006 இன் கடைசிப்பகுதியில் இருந்து கிழக்கிலங்கையில் பெரிய அளவில் நேரடியாக இயங்கக்கூடிய நிலை எதுவும் இருக்கவில்லை. ஆனால் கருணாவுக்கு கீழ் இருந்த பிள்ளையான் முதல் பலருக்கும் அவ்வசதி இருந்தது. இவர்கள் கருணாவுக்கு கீழ் இயங்கினர். இவர்கள் அனைவருமே கோத்தபாயவுக்கு கீழ் இயங்கினர். அவர்களின் தேவைகளை இவர்கள் பூர்த்தி செய்தனர். இந்த அடிப்படையில் தான், அன்று அனைத்தும் நடந்தது. இக்காலத்தில் தான் அமெரிக்காவின் குறிப்பு 18.05.2007 அனுப்பப்பட்டது. இந்த வருட இறுதியில் தான் கருணா லண்டனில் கைதாகின்றான்.

அனுராதபுரம், ஹபறண தவிர கிழக்கில் இருந்த இராணுவத்துக்கு என்று விபச்சார விடுதிகளை அரசு இயக்கியதா இயங்கினதா என்பது எமக்கு தெரியாது உள்ளது. மேல்மட்ட இராணுவத்தின் தேவைக்கு பெண்கள் பயன்படுத்தப்பட்டனரா என்பது, இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் தமிழ் பெண்கள், பலதளத்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளானார்கள். எப்படி? எங்கே? எந்த நிலையில் என்பது இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

அதேவேளை புலிகள் கிழக்கிலிருந்து அரசபடைகளால் அகற்றப்பட்ட பின், பல நூற்றுக்கணக்கான பெண்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். இது சம்பந்தமான தகவல்கள் சர்வதேச மனிதஉரிமை நிறுவனங்களாலும், மனித உரிமை ஆர்வலர்களாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ் அரங்கம் புலத்தில் பலர் வாய் மூடி இருக்க, கிழக்கின் விடிவெள்ளிகள் பெண்கள் மீதான கொடுமைகளை அம்பலப்படுத்தியுள்ளது. இப்பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கும், பாலியல் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பது உண்மையான தகவல்கள் ஆகும். இவற்றிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும், காரணமானவர்கள் அரசபடைகளும்; அவர்களுடன் கூடிக்குலாவும் கருணாவும் பிள்ளையானும் என்றால் மிகையாகாது. அதாவது இந்த இரு கொலைகாரரும் இலங்கை அரசுடன் சேர்ந்து கிழக்கு பெண்கள் மீது புரிந்த கொடுமைகள், "மனித குலத்தின் மீது நிகழ்த்தப்படும் அதி உச்ச பயங்கரவாதம் "(Crime against humanity) என்ற வரையறைக்குள் உட்பட்ட குற்றங்களாகும்.

இது போல் வடக்கில் மற்றைய குழுக்கள் PLOT, EPDP, TELO.. இதில் ஈடுபட்டன.ENDLF கருணா குழுவுடன் சேர்ந்து கிழக்கில் இதில் ஈடுபட்டது. பலர் கடத்தப்பட்;டு காணாமல் போனார்கள். பல பிணங்கள் கிடைத்தன. பெண்கள் என்றால் பாலியல் பண்டம் தான். அதற்காகவே கடத்தியிருப்பார்கள். இதை எப்படி யாருடன் சேர்ந்து நுகர்ந்தனர் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. அனைத்தும் அரச படைகளின் கீழ்தான் நடந்தன.

உண்மை இவ்வாறிருக்க குறிப்பான அக்குற்றங்களை "விபச்சாரம்" (அமெரிக்க ஆவணம்) என வரையறுப்பது, இந்த பஞ்சமாபாதகர்கள் அவர்களின் பொறுப்பிலிருந்து தப்பிப்பதற்கே உதவும்.

இதன் அடிப்படையில் விக்கிலீக்கின் அம்பலப்படுத்தலுக்கு அடிப்படையான அமெரிக்க தூதரின் ஆவணங்கள், தவறான அரசியல் தகவலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்முறை வேறு, விபச்சாரம் வேறு. இரண்டையும் ஒன்றாக்கி, பலாத்காரத்தை விபச்சாரமான ஆக்குகின்றது. இது வீக்கிலீக்கின் மீது குற்றம் சுமத்துவதல்ல. அது ஒரு ஊடகம் மட்டுமே. இன்று வெளிவந்துள்ள தகவல்களுக்கு தமிழ்தேசிய கூட்டணியின் முன்னாள், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பரிமாறிய தகவல்கள், மூலாதாரமாக இருந்துள்ளன என்ற தகவல்களும் கூட வெளி வந்துள்ளது.

சரியான தகவலுக்குள் இப்படியான அரை குறையான அரசியல் சார்பு தகவல்களை இணைத்து சர்வதேச சமூகத்திற்கு வழங்குவதானது, எந்த வகையிலும் எம் மக்களின் துன்பத்திற்கு நியாயமான தீர்வை ஏற்படுத்த வழிவகுக்காது. அதேபோன்று "கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினருக்காக கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தம்மிடம் இருந்த போராளிகளை கொண்டு பாலியல் தொழிலையும் நடத்தியதாகவும் விக்கிலீக்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என விக்கிலீக் தகவல்களில் கூறப்படாத விடயங்களும், விக்கிலீக் அம்பலப்படுத்துவதாக சொல்லி பொய்ப் பிரசாரம் பண்ணுவதும், எந்தவொரு இலாபத்தையும் தரப்போவதில்லை. மாற்றாக பொய்ப் பிரச்சாரங்கள் குற்றவாளிகள் தப்பிப்பதற்கே வழிவகுக்கும். அத்துடன் கருணாவை மட்டம்தட்ட செய்யும் பிரச்சாரமானது, அவனை பாதிப்பதை விட பாதிக்கப்பட்ட எமது பெண்களையும், முன்னாள் பெண் போராளிகளையும் அவமானப்படுத்தும் ஒரு செயலாகும்.

எது எப்படி இருப்பினும், இன மத வேறுபாடுகளுக்கப்பால், தமிழ் பெண்களாக இருந்தாலென்ன, சிங்களப் பெண்களாக இருந்தால் என்ன, பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது பெண்கள் மீதான வன்முறையே! இன்று கருணாவின் நாற்றக்கேடு சந்திக்கு வந்துள்ள நிலையில்; தலித்தியமும், கிழக்கியமும், பெண்ணியமும் கதைத்தபடி பெண்கள் மீதான வன்முறை மூலமும், ஆள்கடத்தல் மூலமும், கருணா கும்பலால் சம்பாதித்த பணத்தில் உல்லாசம் அனுபவிக்கும் புலம்பெயர் பிரகஸ்பதிகள் எந்த முகத்துடன் சமூக அரங்கில் வலம் வர போகிறார்கள்?????

 

உசாத்துணை :

 

  1. http://www.guardian.co.uk/world/us-embassy-cables-documents/108763
  2. http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6940:2010-04-12-19-43-35&catid=337:2010-04-06-19-21-55
  3. http://thesamnet.co.uk/?p=23633#comment-200650
  4. http://inioru.com/?p=18793
  5. http://tamilwin.com/view.php?22ipXdc3PI34bi2F302HQAcd2ojv2eF982e2SLB4b31GY0
  6. http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5701:-q-q-&catid=277:2009