வறண்ட பூமியாக உள்ள ராஜஸ்தான் மாநிலம் விரைவில் நச்சுப் பாலைவனமாக மாறிப்போகும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மான்சாண்டோ நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து, தண்ணீரை வரைமுறையின்றி உறிஞ்சும் பாசனத்தைச் செயல்படுத்திப் பேரழிவை விதைக்கக் கிளம்பியுள்ளது, அம்மாநில அரசு .

பி.டி. பருத்தியின் மூலம் விவசாயிகளைத் தற்கொலைப் பாதைக்குத் தள்ளிய அமெரிக்கக் கொலைகார மான்சாண்டோ விதை நிறுவனத்துடன் ராஜஸ்தான் மாநில அரசு கடந்த ஜூலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. உலகின் ஏகபோக விதை நிறுவனமான மான்சாண்டோவுடன் கூட்டுச் சேர்ந்து, இரண்டாவது பசுமைப் புரட்சி என்ற பெயரில் வீரியரக சோளம், பருத்தி, மிளகு, தக்காளி, முட்டைக்கோசு, வெள்ளரி, காலிபிளவர், தர்ப்பூசணி முதலானவற்றுக்கான விதைச் சந்தையை விரிவுபடுத்த அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது. அரசின் விவசாயத்துறை, தோட்டக் கலைத் துறை, சுவாமி கேசவானந்த் விவசாயப் பல்கலைக்கழகம், மகாராணா பிரதாப் விவசாயத் தொழில்நுட்பக் கழகம், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பாக அம்மாநில அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இரகசியமாகப் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி விவரம் கேட்டதன் வாயிலாக இப்போது மெதுவாகக் கசிந்துள்ளது.

பி.டி. பருத்தியின் மூலம் விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிய அமெரிக்கக் கொலைகார மான்சாண்டோ நிறுவனத்தினால் ராஜஸ்தான் நச்சுப் பாலைவனமாக மாறிப்போகும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது

இந்த ஒப்பந்தப்படி, மான்சாண்டோ நிறுவனம் விதை உற்பத்தி மற்றும் விநியோகத்தை மேற்பார்வையிட்டு நடத்தும். இதன் தொடர்ச்சியாக வீரியரக விதைகளைக் கொண்டு விவசாயம் செய்து, அவற்றைப் பெருக்கிப் பரவலாக்கவும் செய்யும். உதாரணமாக பருத்தியை எடுத்துக் கொண்டால், பருத்தி பயிரிடுவது, உரமிடுவது, பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பது, அறுவடை இயந்திரத்தைப் பயன்படுத்துவது, விதைகளைச் சேகரிப்பது முதலான அனைத்தும் மான்சாண்டோவின் மேற்பார்வையில்தான் நடக்கும்.

மான்சாண்டோவின் வீரியரக விதைகள் கொடிய இரசாயனங்களால் பாடம் செய்யப்பட்டவை; பயன்படுத்துவதற்கே அபாயகரமானவை. அதிக மகசூல் தரும் வழக்கமான விதைகளை விட, மான்சாண்டோவின் வீரியரக விதைகள் ஒன்றரை மடங்கு அதிகமாகத் தண்ணீரை உறிஞ்சக்கூடியவை. மேலும், இந்த விதைகள் கூடுதலாக உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டையும் அதிகரிக்கக்கூடியவை. இதனால் மண்வளமும் நீர்வளமும் குறைந்து ராஜஸ்தான் மாநிலம் விரைவில் மனித இனம் வாழ முடியாத நச்சுப் பாலைவனமாகிப் போகும் என்று விவசாய ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த ஒப்பந்தப்படி, மாநில அரசின் விவசாய மற்றும் கால்நடை பல்கலைக்கழகங்கள் வாயிலாக விவசாய ஆராய்ச்சிகளை மட்டுமின்றி, மரபணு ஆராய்ச்சி செய்து கொள்ளவும் மான்சாண்டோ நிறுவனத்துக்குத் தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. இத்தகைய ஆராய்ச்சிகளில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு மாநில அரசுதான் ஊதியம் கொடுக்கப் போகிறது. இத்தகைய அடிக்கட்டுமான வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு மான்சாண்டோ தனது லாபத்தைப் பெருக்கிக் கொள்ளப் போகிறது. மொத்தத்தில், ராஜஸ்தானின் விவசாய ஆராய்ச்சி முழுவதையுமே மான்சாண்டோ கட்டுப்படுத்துவதாகவும் விவசாயப் பல்கலைக்கழகங்கள் மான்சாண்டோவுக்கு அடிபணிந்து வேலை செய்வதாகவும் மாற்றப்பட்டுள்ளன.

பிரபல அறிவியலாளரான பி.எம்.பார்கவா உள்ளிட்டுப் பல்வேறு அறிவியலாளர்களும் சுற்றுச்சூழலாளர்களும் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் நிறுவப்பட்டுள்ள இத்தகைய பல்கலைக்கழகங்களையும் ஆய்வுக்கூடங்களையும் இப்படியொரு ஏகாதிபத்திய நிறுவனத்துக்குச் சேவை செய்யுமாறு மாற்றுவது எந்த வகையில் நியாயமாகும் என்று கேட்கின்றனர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களையும் விதைகளையும் சட்ட விரோதமான முறையில் அங்கீகரித்து, இந்திய அரசின் பல்வேறு துறைகள் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குச் சேவை செய்கின்றன என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றர்.

ராஜஸ்தான் மட்டுமின்றி குஜராத், கர்நாடகா, இமாச்சல பிரதேசம், ஒரிசா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் இதேபோன்று சோளம், பருத்தி மற்றும் காய்கறிகளுக்கு வீரிய ரக விதைகளை மான்சாண்டோ அளிக்கப் போகிறது. 2012-13-க்குள் மரபீணி மாற்றப்பட்ட சோளம் மற்றும் பருத்தியைப் பயிரிடவும், களப்பரிசோதனைகள் செய்யவும், நாடு முழுவதும் ஒரு லட்சம் விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும், இந்திய அரசின் 450 விஞ்ஞானிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் விதைகளையும் விவசாயத்தையும் ஒட்டுமொத்தமாகக் கட்டுப்படுத்துவதாக மாண்சாண்டோ மாறிவிடும். இனி இந்தியா என்பதற்குப் பதிலாக, மாண்சாண்டோலாந்து என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

________________________________

- புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
_____________________________