Language Selection

பதிவினை முழுமையாக ஒலி வடிவில் கேட்க :
(ஒலிவடிவில் கேட்டுக்கொண்டே பதிவை வாசிப்பது கூடுதல் விளக்கமாகவும் சலிப்பற்ற அனுபவமாகவும் இருக்கும்)

{play}http://mmauran.net/oli_files/konesar.mp3{/play}

 

== கோணேசர் கோயில் கதை ==

சில மாதங்களுக்கு முன்னர் கனடாவிலிருந்து வந்திருந்த நண்பருக்குத் திருகோணமலையின் முக்கிய பகுதிகளைச்சுற்றிக் காட்டும் சாக்கில் எனது சொந்த ஊரின் சில பகுதிகளை நீண்ட காலத்துக்குப்பிறகு மறுபடியும் பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தது.

ஆயுதப்போர் முடிந்த பிறகு ஏற்பட்டுள்ள புதிய சூழலில் பவுத்த-சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு எப்படிப் படு தீவிரமாக நடந்தேறி வருகிறது என்பதைக் கண்ணுக்கு முன்னால் தெளிவாகவே வேதனையோடு காண முடிந்தது.

கடைசி நாள் நாம் கோணேசர் கோயிலைப் பார்ப்பதற்காகப் போனோம். அங்கு மட்டும் இந்தச் சம்பவம் நடந்திருக்காவிட்டல் இப்பதிவின் தலைப்பு வேறொன்றாக இருந்திருக்கும்.

(இப்பதிவுக்குத் தலைப்பெடுத்துக்கொடுத்த எம்பெருமான் கோணேசுவரருக்கு நன்றிகள். :))

கோயிலைச் சுற்றிப்பார்த்துவிட்டு படிவழியே இறங்கிக்கொண்டிருந்தபோது ஒரு முசுலிம் குடும்பத்துக்கும் கோயிலின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது.

 
சைவப்பழமாய் நின்றிருந்த கோயில் தர்மகர்த்தா சபையின் பிரமுகர் ஒருவர் அக்குடும்பத்தைத் திரும்பிப்போகச்சொல்லிக் கடுமையாகப் பேசிக்கொண்டிருந்தார்.

நானும் நண்பரும் அக்குடும்பத்தை அணுகி என்ன நடந்ததென்று விசாரித்தபோது, தாம் தமிழ்நாட்டிலிருந்து சுற்றுலாப்பயணமாக இங்கே வந்திருப்பதாகவும், வந்திருந்த முசுலிம் பெண்கள் தலையை மூடி அணிந்திருந்த துணியைக் கழற்றி விட்டுத்தான் கோயிலுக்குள் போக வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சொல்வதாகவும் தாம் இது தொடர்பாக இந்தியத்தூதரகத்தில் முறையிடப்போவதாகவும் சொன்னார்கள்.

அப்பெண்கள் உண்மையில் முகம், கண் எல்லாவற்றையும் மூடிய கரிய ஆடை அணிந்திருக்கவில்லை. தலையை மட்டும் மூடி முக்காடிட்டிருந்தார்கள். குடும்பத்தலைவரான ஆண் வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார். தொப்பி போட்டிருக்கவில்லை.

தமிழரான பாதுகாப்பு உத்தியோகத்தர் இப்போது சிங்களத்தில் அக்குடும்பத்தை நோக்கிக் கத்தி வெருட்ட ஆரம்பித்தார்.

கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு அந்த முசுலிம் பெண்கள் தம் பக்க நியாயத்தைக் கோபத்துடனும் துணிச்சலுடனும் எடுத்து வைத்து வாதிட்டுக்கொண்டிருந்தனர்.

தாம் முக்காட்டினை அகற்றப்போவதில்லை என்பதில் உறுதியாய் இருந்த அப்பெண்கள், கோயிலினுள் தாம் போகாவிட்டாலும் சுற்றுப்புறத்தைப் பார்க்கவாவது அனுமதிக்குமாறு கோரினர். தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலினுள் கருவறை வரைக்கும் செல்லக்கூடத் தம்மை அனுமதித்தார்கள் இங்கே ஏன் அனுமதிக்கிறீர்கள் இல்லை என்று கேட்டனர். அப்போது கோயிலினுள் இருந்து அவ்வழியால் கீழிறங்கிக்கொண்டிருந்த ஏனைய பெண்கள் பலர் உடலை அதிகம் மூடியிராத ஆடைகள் அணிந்திருப்பதைக் காட்டி தமது வார்த்தைகளில் "திறந்து போட்டு உள்ளே போகலாம்; மூடிக்கொண்டு போகக்கூடாதா" என்று கேட்டனர்.


உடனடியாக நான் உள்ளே சென்று கோயில் நிர்வாகத்தினரை அணுகி இக்குடும்பத்தினை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கேட்டேன்.

எமக்கிடையில் நிகழ்ந்த நீண்ட தர்க்கத்தில் கோவில் நிர்வாகத்தினர் பின்வரும் வாதங்களை முன்வைத்து அக்குடும்பத்தை உள்ளே அனுமதிப்பதில்லை என்பதில் கடுமையாக நின்றனர்.


1. அவர்கள் தமது பள்ளியினுள் மற்ற மதத்தவரை அனுமதிப்பார்களா? நாம் மட்டும் அவர்களை ஏன் அனுமதிக்க வேண்டும்?

2. அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டுவிட்டு வந்திருப்பார்கள்.

3. இப்படியே விட்டால் இனி தொப்பி போட்டுக்கொண்டும் வருவார்கள்.

4. கோவிலினுள் தலையை மூடி வருவதை தடுத்திருக்கிறோம். முக்காட்டினை அகற்றினால் உள்ளே வர அனுமதிப்போம்.

5. இவர்களை "இப்படி விட்டு விட்டுத்தான்" நாம் "இந்த நிலையில் " இருக்கிறோம்.

6. கோணேசர் சக்தி வாய்ந்தவர். நாம் இவர்களை உள்ளே விட்டுத் தவறிழைத்தால் உரிய தண்டனையை எமக்குத் தந்துவிடுவார். இங்கு பூசைசெய்த ஒவ்வொரு பூசாரிக்கும் நடந்தது தெரியும்தானே..

7. அவர்கள் நம்பிக்கையோடு வரவில்லை. சிங்களவர்கள் அப்படியில்லை நம்பிகையோடு வருகிறார்கள். இது புதினம் பார்க்க வரும் இடம் இல்லை.


இவை ஒவ்வொன்றும் நான் அவர்களது ஒவ்வொரு வாதத்தையும் மறுத்துச் சண்டை பிடித்தபோது அடுத்தடுத்து வைக்கப்பட்டவை.

இவ்வாதங்கள் தமக்கிடையில் முரண்படுவது வெளிப்படையாகவே தெரிகிறதில்லையா? அந்த முரண்பாடுதான் கோயில் நிர்வாகத்தினரது உண்மையான மனநிலையை படம் பிடித்துக்காட்டுகிறது.


மற்ற மதத்தவரை பள்ளிக்குள் அனுமதிப்பதில்லை என்ற வாதம் இங்கே தொடர்பற்றதாகும். ஏனென்றால் அவ்வாறு அனுமதிக்காத பள்ளிகள் முசுலிம்கள் தவிர்ந்த வேறெவரையுமே அனுமதிப்பதில்லை. ஆனால் நீங்கள் கோவிலினுள் மற்ற எல்லாரையும் அனுமதிக்கிறீர்கள். பள்ளிகள் அனுமதிப்பதில்லை என்று இந்த முசுலிம்களைத் தண்டிப்பது எவ்வளவு தூரம் கேவலமாகவும் தார்மீகத் தவறாகவும் இருக்கிறது?

யார் என்ன சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு வருகிறார்கள் என்பதை அறிய வாசலில் ஏதாவது கருவி மாட்டி வைத்திருக்கிறீர்களா? நானே அன்று ஆட்டிறைச்சியும் மீனும் சாப்பிட்டிருந்தேன். அங்கு ஒளிப்படம் எடுக்கவும் இனிய மாலைப்பொழுதைக்கழிக்கவும் வந்திருந்த வெள்ளைக்காரர்கள் உபவாச விரதமிருந்து புண்ணிய நதியில் நீராடிவிட்டா வந்திருக்கிறார்கள்?

கோணேசர் கோவில் சிவாலய விதிப்படி அமைக்கப்பட்டதோ அன்றிச் சிவாலய விதிப்படி பூசைசெய்யப்படும் ஆலயமோ அல்ல. அப்படியாக இருந்திருந்தால் தலையை மூடி ஆடையணிந்து கோவிலினுள் வருவதைத் தடுப்பதற்கு அது ஓர் ஆகக்குறைந்த நியாயமாகவும் இருந்திருக்கும். சரி, அப்படியே சிவாலய விதிகளை அவர்கள் அபிநயிக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். தலையை மூடியபடி கோவிலுக்குள் போவதற்குச் சமமான குற்றம் ஆண்கள் மேலாடையுடன் கோவிலுக்குள் போவதுமாகும். அங்கு எந்த ஆண்களும் மேலாடைய அகற்றிவிட்டு கோவிலினுள் போவதில்லை. அப்படி இருக்க இப்போது திடீரென்று என்ன சிவாலய விதி முளைத்தது?

அங்கே புதினம்பார்க்கவும் சுற்றுலாவாகவும் எத்தனையோ வெவ்வேறு இனத்தவர் வருகிறார்கள். அவர்கள் எல்லாம் நம்பிக்கையோடு வருவதாகக் கருதும் ஆலய நிர்வாகம் முசுலிம்கள் மட்டும் நம்பிக்கையோடு வருவதில்லை என்று கருத என்ன நியாயம் இருக்க முடியும்?

ஆக அவர்கள் சாட்டுக்காகச் சொன்ன எந்தவொரு காரணமும் உண்மை அல்ல. எல்லாம் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு வெறும் பொய்யாகி நிற்கின்றன.

அப்படியானால் உண்மையான காரணம் என்ன?

"இவர்களை "இப்படி விட்டு விட்டுத்தான்" நாம் "இந்த நிலையில் " இருக்கிறோம். "

என்ற அவர்களது கூற்றில் தான் அது ஒளிந்திருக்கிறது.

ஆலய நிர்வாகத்தினரது இந்த நடத்தைக்கான உளவியல் காரணம் எது?

அதைப்புரிந்துகொள்ள இலங்கையிலுள்ள தமிழ் இன வாதிகள் முசுலிம்கள் பற்றிக் காலகாலமாகக் கொண்டுள்ள கண்ணோட்டத்தினைப் புரிந்துகொண்டாகவேண்டும்.


== சைவ வேளாளத் தமிழ் இனவாதம் ==

ஈழத்தமிழரின் தேசிய அரசியலைத் தலைமையேற்று நடத்தியதும் இன்றுவரைக்கும் காப்பாற்ற நினைப்பதும் சைவ வேளாள ஆதிக்கமே. வெள்ளைக்காரக் காலனியாதிக்கவாதிகளுக்குக் கூழைக்கும்பிடுபோட்டு, கால்பிடித்துவிட்டபடி உள்ளூர் மக்கள் மீது தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியதும் தமிழ் இனவாதக் கண்ணோட்டத்தோடு உண்மையான பேரினவாத ஒடுக்குமுறைக்கெதிரான மக்கள் உணர்வுகளை திசை திருப்பி நாசமாக்கியதும், எப்போதும் ஆதிக்க சக்திகளாக உள்ள எசமானருக்கு கால்பிடிப்பதும் தாம் அடக்கி வைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களையும் தமது ஆளுகைக்கு உட்பட்ட பிற மக்களையும் அடக்கியாள்வதும் இந்த சைவ வேளாள ஆதிக்க மனநிலையின் தன்மைகள்.

பெருமையுடன் வெள்ளைக்காரச் சுற்றுலாப்பயணிகளை அனுமதித்துக் கோடிக்கணக்காக சம்பாதிக்கும் கோயில் நிர்வாகம், வேறு வழியின்றிச் சிங்களவர்களுக்கு இடைஞ்சல் தராது அனுமதித்து வரும் நிர்வாகம், தமது ஆதிக்கத்தை நிலை நாட்டவும் தமது வக்கிர மனநிலையைக் கொட்டித்தீர்க்கவும் இன்னொரு சிறுபான்மை மீது உறுமுகிறது. இது சைவ, வேளாள, இனவாத வக்கிரமே அன்றி வேறில்லை.

தமிழனான பாதுகாப்பு உத்தியோகத்தன், தம்மைத் தமிழராக இனங்காணும் தமிழ் நாட்டு முசுலிம் குடும்பம் ஒன்றை நோக்கி, அக்குடும்பம் அறிந்தேயிராத சிங்கள மொழியில் மனநோய் பிடித்துக் கத்துகிறான். அவன் கத்திய அதே மொழியின் அதே வக்கிரத்தோடுதான் வீதிகள் தோறும் சிங்கள பவுத்த பேரினவாத இராணுவம் தமிழரையும் முசுலிம்களையும் பார்த்துக் காலகாலமாகக் கத்துகிறது. சைவ வேளாள ஆதிக்கம், இலங்கையின் ஒடுக்கும் அதிகாரமொன்றின் வக்கிரக் கத்தலையும் அக்கத்தலின் மொழியையும் வாங்கி இன்னொரு இனத்தின் மீது ஏவுகிறது.

ஒருபுறம் சிங்களத்தில் கத்தியவாறும், மறுபுறம் தமக்குள் வெற்றிக்களிப்புப் பூரிப்புடனும் புன்னகையுடனும் சிரித்துக்கொண்டும் நிற்கிறது சைவ வேளாளத் தமிழ் இனவாதம்.

இது மனநோய் அன்றி வேறென்ன?

இந்த மனநோய் அதிகாரத்தையும் ஆயுதத்தையும் தரித்துக்கொண்டால் என்ன செய்யும் என்பதை நாம் தொண்ணூறுகளில் வடபுலத்தில் முசுலிம்களை துரத்தியடித்தபோது பார்த்தோம்.

இந்த மனநோய் ஒரே நேரத்தில் ஆதிக்க மனநிலையாலும் அதே நேரத்தில் தோல்வியடைந்த இயலாமையாலும் உண்டாக்கப்படுகிறது.


இந்தச்சம்பவம் நடப்பதற்குச் சில மணிநேரம் முன்னதாக ஆலய நிர்வாகசபையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் என்னை அணுகி, கோயில் இராசகோபுரக் கட்டுமானப்பணிகளுக்கு உதவி வழங்குமாறு கோரினார்.

இலங்கையிலேயே ஆக உயரமான கோபுரமொன்றினைக் கோணேசர் கோவிலுக்குக் கட்டும் முயற்சியில் இருக்கிறார்கள்.


இப்போது கோயில்கள் கட்டுவதும் இராசகோபுரம் கட்டுவதும் இந்துக்களுக்கு சைவர்களுக்கும் தனியான மதம் சார்ந்த விடயமாகவன்றி, ஒட்டுமொத்த தமிழர்களின் அரசியல் நலன் சார்ந்த விடயமாக மாறியிருக்கிறது.

நயிணை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு கோபுரம் கட்டும் பணியையும் இதனோடு இணைத்துப்பார்க்கலாம்.

கோணேசர் கோவில் இராவணன் வெட்டுப் பகுதியில் சில பிக்குகளுடன் கூட வந்த சிங்கள அதிகாரிகள் ஏதோ அளவீடுகள் செய்துவிட்டுப்போன கையோடு அச்சத்தில் அங்கே எட்டடி உயரத்தில் ஓர் இராவணன் சிலை அமைப்பதற்கான முயற்சிகளை கோவில்காரர்கள் முடுக்கி விட்டிருக்கிறார்கள்.

சைவத்தை "இந்து"மதம் இலங்கையில் வெற்றிகொள்ளப் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இந்துமதத்தின் வில்லன்களுள் ஒருவனான இராவணனுக்கு சைவக்கோவில் ஒன்றில் சிலையெடுப்பு!

இலங்கையில் ஆளுக்காள் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு மத அடையாளங்களைத் தூக்கிக்கொண்டு இடியப்பச்சிக்கலான பனிப்போர் ஒன்றினை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.


== பவுத்த சிங்களப் பேரினவாதம் ==இலங்கையின் மத அடையாளங்களுக்கிடையிலான முரண்பாடுகளின் வரலாற்றுப்பின்னணி எதுவாக இருப்பினும், தற்போது எழுந்துள்ள இந்தச்சிக்கலின் முழு முதற்காரணி சிங்கள- பவுத்தப் பேரினவாதமே.

ஒப்பீட்டளவில் முற்போக்கான தன்மைகள் கொண்ட பவுத்த நெறி படுதோல்வியடைந்துள்ள இடங்களுள் முதன்மையானது இலங்கைதான்.

எவற்றுக்கெல்லாம் எதிராக பவுத்த நெறி கலகம் செய்ததோ அவற்றிடமெல்லாம் தோற்றுக் கடைசியில் அவையாகவே ஆகிவிட்டிருக்கிறது. இலங்கையில் உள்ள பவுத்த மதம் பண்டைய இலங்கை ஆதிக்குடிகளின் வழிபாட்டு முறைகள், இந்துமத மரபு ஆகியவற்றின் கலவையாகத்தான் இருக்கிறதே ஒழிய, பவுத்தமாக இல்லை. இந்த ஆதிக்குடி வழிபாடு-இந்துமரபு-பவுத்தச் சின்னங்கள் கொண்ட புதிய மதமான "இலங்கைப் பவுத்தம்" இலங்கையின் பெரும்பான்மை இனமொன்றின் பொது அடையாளமாக வலிந்து உருவாக்கப்பட்டிருப்பதுடன் உலகச்சிறுபான்மை என்ற பயவுணர்வு கொண்ட மக்கள் கூட்டமொன்றின் பொது அடையாளமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. இங்குதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.


முன்னர் சைவ வேளாள மனநோயின் காரணங்களாக நான் கூறிய இரண்டு எதிரெதிர் மனநிலைகள் தான் இங்கும் வேலை செய்கிறது. ஒரே நேரத்தில் தாழ்வுச்சிக்கலும் ஆதிக்க வெறியும்.


ஒரு நாட்டில் அல்லது ஒரு பிரதேசத்தில் ஒத்த பொது அடையாளங்களுடனிருக்கும் பெரும்பான்மையான சமூகமொன்றில் இயல்பாகவே காணப்படக்கூடிய மேலாதிக்க மனநிலைகளைத் தட்டியெழுப்பி அந்தப்பொது அடையாளங்களைக் கோசமாக்கி அரசியல் லாபங்களை அறுவடை செய்துகொள்ளலாம். அதையே அடுத்தடுத்து வந்த இலங்கையின் ஆட்சியாளர்கள் செய்தார்கள். அவ்வாறு தட்டியெழுப்பப்பட்ட "பூதம்" இன்று "சிங்கள" என்ற அடையாளத்தையே கேள்விக்குள்ளாக்கும் படியாகச் சிங்களக் கிறித்துவர்கள் மீதே பாய வெளிக்கிடுகிறது.

இலங்கையர் மீது பலமுறை நிகழ்ந்த தென்னிந்தியப்படையெடுப்புக்கள் இலங்கைத்தமிழரின் சமயமாகவும் இருந்த பவுத்தத்தை முற்றாகத் துடைத்தழித்துவிட்டமை இங்கே ஒரு கெடுவிளைவாகிவிட்டது.
(இதில் தேரவாத-மகாயான பவுத்தங்களுக்கிடையான மோதல் எவ்வளவு தூரம் பங்களிப்புச்செய்திருந்ததென்பது பற்றிச் சொல்ல எனக்கு அறிவில்லை)

உசுப்பியெழுப்பப்பட்ட சிங்கள-பவுத்தப் பேரினவாதம் புத்தர் சிலையையும் பவுத்தச்சின்னங்களையும் அதிகாரத்தின், ஆதிக்கத்தின் குறியீடுகளாக இலங்கை முழுவதும் நட்டுவைத்து தனது மனநோயை வெளிக்காட்டத்தொடங்கியது. உலகமெங்கும் வரலாறு நெடுகிலும் ஆதிக்கத்தினதும் ஆக்கிரமிப்பினதும் குறியீடாக இருக்கும் கொடிகள், இலட்சனைகள் போன்று புத்தரின் உருவமும் சிலைகளும் ஆக்கப்பட்டுள்ளன.


ஆக்கிரமிப்பின் குறியீடாக மத அடையாளம் ஒன்று நாட்டப்படும்போது அது ஏனைய மத அடையாளங்களைத்தான் தாக்க முடியும். ஏனைய மத அடையாளங்களை அழித்துத்தான் அது தன்னை நாட்டிக்கொள்ள முடியும்.

முதற்கட்டமாக இலங்கையின் பன்மத வழிபாட்டிடங்கள் குறிவைக்கப்பட்டன. பன்மத வழிபாட்டிடங்கள் இலங்கையின் ஒரு சிறப்பம்சம். சிவனொளிபாதம், கதிர்காமம், நயிணைதீவு போன்ற இடங்கள் எல்லா மதத்தவரும் புரிந்துணர்வோடும் வேறுபாடுகளின்றியும் கூடுகிற இடங்களாக இருக்கின்றன. அவை பவுத்த சிங்கள மயமாக்கப்பட்டன. பிறகு தமிழரதும் முசுலிம்களதும் மத அடையாளங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு அங்கே பவுத்தச்சின்னங்கள் நிறுவப்பட்டன.

இந்தப்போக்கு மத அடையாளங்கள் நெருக்கடி நிலைக்குத்தள்ளப்பட்டு தீவிரமான முரண்பாடாக எழக் காரணமானது.

முசுலிம்களுக்கு இசுலாம் மத அடையாளமே அவர்களது முழுமையான இன அடையாளமாக இருப்பதால் அவர்கள் முழுத்தீவரத்தோடு இந்தப்பிரச்சினைக்குள் இழுக்கப்படும் வாய்ப்புக்கள் உருவாயின.

இலங்கையின் கொதிக்கும் முரண்பாடாக இருக்கும் சிங்கள பவுத்த - தமிழர் முரண்பாட்டில் மதம் அடிப்படைக்காரணியாக இல்லாத போதிலும் வேறு வழியின்றி இழுத்துவிடப்பட்டுள்ளது.
மொழிசார்ந்த இன முரண்பாடே இங்கே அடிப்படையாக அமைந்த போதிலும் தட்டியெழுப்பப்பட்ட சிங்கள பவுத்த பூதம் சைவ அடையாளங்களைக் குறிவைத்துத் தாக்கத்தொடங்கியது.
இத்தாக்குதல் அதிகம் பிற்போக்குத்தனமானதாக இல்லாமலிருந்த சைவத்தரப்புக்களைக்கூட மத அடையாளத்தை முன்னிறுத்தும் நிலைக்குத்தள்ளியது. பிற்போக்குத்தனமான சைவத்தரப்புக்கள் இயல்பாகவே வெகுண்டெழுந்தன.

பிற்காலங்களில் இங்கே பரப்பப்பட்ட இந்துமதம் இந்தப்பிரச்சினைக்குள் தன்னையும் இழுத்துவிட்டுக்கொண்டது.

கிறித்துவர்கள், பிரதான தேசிய முரண்பாட்டின் அடிப்படையான "மொழி" அடையாளத்தோடு மட்டும் தமது அணிகளைத் தெரிவுசெய்துகொண்டனர்.

இதில் புதினம் என்னவென்றால் பவுத்தம் படுதோல்வியடைந்துவிட்ட காரணத்தால் சிங்கள மக்கள் தெய்வ நம்பிக்கையும், "தெய்வ அனுக்கிரகம்" பற்றிய மூட நம்பிக்கைகளையும் அதிகளவாகக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தமது "தெய்வத்" தினவுக்காக இந்து-சைவக் கோயில்களை உண்மையான பக்திப்பரவசத்துடன் நாடி ஓடுகின்றனர். படைவீரர்களும் அவ்வாறே.

சாதாரண பவுத்த சிங்கள மக்களுக்கோ இந்து அடையாளங்கள் புனிதமானவை. பவுத்த சிங்களப் பேரினவாதத்துக்கோ அச்சின்னங்கள் போட்டியானவை.

இந்தச் சமூக நிலமையை பேரினவாதம் தனித்துவமான வழிமுறையினூடாகக் கையாள்கிறது.

பெரும்பாலான சிங்களவர்கள் நாடியோடும் இந்து-சைவ தலங்களை முதலில் பன்மத வழிபாட்டிடங்களாக மாற்றும் "நட்புரீதியான" வேலைத்திட்டத்தில் இறங்குகிறது. பின்னர் படிப்படியாக அவ்விடங்களில் பவுத்த சிங்கள மேலாதிக்கத்தை நிறுவி விடுகிறது.

(முன்னேசுவரம், கன்னியா, கோணேசர் கோயில் போன்றன தற்காலத்தைய எடுத்துக்காட்டுக்கள்)தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் கடைந்தெடுத்த சிங்கள பவுத்தப் பேரினவாத மனநிலை கொண்டவர்களது அமைச்சாக இருக்கும் தொல்லியல் அமைச்சினூடாக மற்றயவர்களின் அடையாளங்கள் பட்டப்பகலில் பலர்கண்பார்க்கக் கைப்பற்றப்படுகின்றன.

தமிழ் பவுத்தம் பற்றி சைவ வேளாள இனவாதம் எதுவும் பேசாமல் மூடி மறைக்க, பண்டைய தமிழ் பவுத்தர்களின் விகாரைகள் எல்லாம் "சிங்களவர்" சின்னங்களாக்கபப்டுகிறது. அப்பகுதிகளெல்லாம் சிங்களவரது பூர்வீக பூமியாக நிறுவப்படுகிறது.

கிறித்துவ வழிபாட்டிடங்களில் முதற்கட்டமாக சிங்கள மொழிமூலப் போதனைகளைத் தொடக்கி பின்னர் படிப்படியாக அதனுள்ளும் நுழைந்துகொள்கிறது. இங்கே மொழி முரண்பாடு மட்டுமே முன்நிற்கிறது.


இந்த மத அடையாள நடுகைகளும் பவுத்த சிங்கள மயமாக்கமும் இரண்டு முக்கிய நிபந்தனைகளைக் கொண்டவை.

1. அதிகார- இராணுவ உதவி

2. சிங்களக் குடியேற்றம்


இதற்கு அரசொன்றின் துணை கட்டாயம் வேண்டும்.

இலங்கையில் பேரினவாத பவுத்த-சிங்கள அரசு ஆட்சியிலிருப்பதால் இத்தகைய ஆக்கிரமிப்பு மிக இலகுவாகச்செய்யப்படக்கூடியதாக இருக்கிறது.

அண்மைக்காலங்களில் இந்த அரசின் பேரினவத நிகழ்ச்சிநிரலுக்கு இருந்த ஒரேயொரு பலமிக்க சவாலான விடுதலைப்புலிகள் அழிந்த விதம் இன்னும் மோசமாக இந்த ஆக்கிரமிப்புக்கு வழிதிறந்துவிட்டிருக்கிறது.
(இங்கே விடுதலைப்புலிகள் ஓர் எதிர்ப்பின் குறியீடாக மட்டுமே வருகிறார்கள். அவர்களது அரசியற்பலவீனங்கள் பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு ஒட்டுமொத்தமாக நன்மைசெய்வதாகவே இறுதியில் மாறிப்போய் நின்றது)


== முசுலிம்கள் ==முசுலிம்களின் வகிபாகம் இங்கே மேலும் சிக்கலானது.


குர் ஆனின் படி சிலைவணங்கிகள் நரகத்துக்குரியவர்களும் "வேற்று" மனிதர்களுமாவர். இசுலாமியக் கோட்பாடுகளின் படி சிலை வணங்கிகளை, இணைவைப்பவர்களை விட இசுலாமியர்கள் உயர்ந்தவர்கள்
சுவனத்துக்குப் பாத்தியதையானவர்கள். கூடவே இசுலாமே ஒரேயொரு இறுதி இறை மார்க்கம். இவ்வாறானதொரு "மேட்டிமை" மனநிலை, தம்மை "வேறானவர்களாகக்" கருதும் மனநிலை இசுலாத்தினூடாக முசுலிம்களுக்குப் போதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் (ஒரு சில கிறித்துவப் பிரிவுகளைத் தவிர ) ஏனைய அத்தனை மத அடையாளங்களும் சிலைவணக்கத்தை அடிப்படையாகக்கொண்டவையே.

இவற்றின் பின்னணியில் இசுலாம் அடையாளம் சிறுபானமையாக இருப்பதால் பெரும் வீரியத்தோடு நிற்கும் சிங்கள-பவுத்த அடையாளத்தினால் கைப்பற்றப்படும் நிலையில் இருக்கிறது.

"மதம் பரப்பும்" தன்மைகொண்ட இசுலாம், பல்வேறு கிறித்துவ அடையாளங்கள் இயல்பாகவே இந்து-பவுத்த அடையாளங்களுக்குப் பிரச்சினையே.

மத அடையாளங்களைத்தாண்டியும் முசுலிம்கள் என்ற இன அடையாளத்துடன் தமிழரோடும் சிங்களவரோடும் அவர்கள் மோத வேண்டியவர்களாகவுள்ளார்கள்.

"தமது" இடங்களில் பள்ளிவாசல்களைக்கட்டி ஆக்கிரமிக்கிறார்கள் என்று தமிழ் இந்துக்கள் முறைப்படுவதும், தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் முசுலிம் அடையாளங்கள் பவுத்தமயமாக்கப்படுகின்றன என்ற முசுலிம் தரப்பு முறைப்பாடுகளும் அடிக்கடிக் கேட்கின்றன.

சிங்கள பவுத்தர்களோ, முசுலிம்கள் தமது இடங்களைக் கைப்பற்றிக்கொண்டு பள்ளிகட்டிப் பெருகுகிறார்கள் என்று முறைப்படவும் செய்கிறார்கள்.

போதாக்குறைக்கு இலங்கை முசுலிம்களிடையே காலகாலமாக நிலவிவந்த கபுறு வணக்கம் போன்ற சிறு வழிபாட்டுப்போக்குக்கள் தற்போதைய "ஒற்றை இசுலாம்" மயமாக்கலின் கீழ் அழிக்கப்பட்டுவருகிறது.== கன்னியாக் கதை ==


மீண்டும் திருகோணமலைக்கே வருவோம்.

இந்த மாவட்டமே இலங்கை இனப்பிரச்சினையின் மேடை. மிகச்சிறந்த காட்சிக்கூடம். சிறப்பான மியூசியமும் கூட.

திருகோணமலையிலுள்ள முக்கியமான சுற்றுலாத்தலம் கன்னியாவாகும். கன்னியாவில் ஏழு சுடு நீர்க் கிணறுகள் உண்டு.

காலகாலமாக இப்பகுதி சைவர்களுக்கும் முசுலிம்களுக்கும் முக்கியமாக இருந்துவந்துள்ளது. சைவர்களுக்குச் சில கோயில்கள் இங்கே உண்டு. கூடவே இறுதிச்சடங்கு செய்யும் மிகப்புனிதமான இடமாக அவர்களுக்கு இது இருக்கிறது. முசுலிம்களுக்கு, கன்னியா சுடுநீர்க்கிணறுகளைத்தாண்டி சற்று தள்ளியுள்ள குன்றில் ஏறினால் சியாறத் ஒன்று இருக்கிறது (நாற்பதடி மனிதனின் சியாறத் என்று சொல்லுவார்கள்)

சைவர்களுக்கு இப்பகுதி தொடர்பான புராணக்கதைகள் உண்டு. இக்கிணறுகள் இராவணனால் உருவாக்கப்பட்டவை என்றொரு நம்பிக்கை உண்டு. அதன்வழி அந்தியேட்டிச் சடங்குகள் செய்வதற்கான புனித இடமாகக் காலகாலமாக அவர்களுக்கு இந்த இடம் இருந்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே சைவர்கள் அந்தியேட்டி செய்தமைக்குக் கல்வெட்டுச்சான்றுகளும் உள்ளன.

முசுலிம்களின் சியாறத்தும் மிகப்பழமைவாய்ந்தது. நான் சிறுவயதில் கன்னியாக்கு போகின்றபோது என் பெற்றோர் அந்த சியாறத்தைப் பார்க்கவும் என்னை அழைத்துப்போவார்கள்.

கன்னியாக்கிராமம் தமிழர்கள் செறிந்துவாழும் இடமாகவே இருந்தது.

போரின்போது எல்லா இடங்களையும் போல கன்னியாவும் போர்வாயில் அகப்பட்டுக்கொண்டது. மக்கள் செத்தார்கள், சிதறி ஓடினார்கள். கன்னியாவைச் சூழவுள்ள பகுதிகள் மக்கள் நடமாட்டம் தடைசெய்யப்பட்ட படைத்துறைக் கண்காணிப்பின் கீழ் இருந்துவந்தது.

புலிகள் ஆயுதரீதியாக ஒழிக்கப்பட்டு போரும் ஓய்ந்த பிறகு இவ்விடம் பெரும் சுற்றுலாத்தலமாக மீண்டும் மாறியது.

கன்னியாச் சுற்றுலாத்தலம் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையினால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. கடந்த எட்டு மாதங்களில் முப்பது லட்சம் ரூபாய்களை இச்சபை கன்னியாவிலிருந்து வருமானமாகப் பெற்றுள்ளது.

தற்போது அரசாங்க அதிபரால் பலவந்தமாக அப்பகுதியின் நிர்வாகம் கைப்பற்றப்பட்டு தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.


(திருகோணமலை நகரமத்தியில் நெல்சன் திரையரங்குக்கும் முன்பாக சும்மா நின்ற அரசமரத்தையும் தொல்பொருள் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. அந்த அரசமரத்தை பவுத்த தொல்கதைகளோடு தொடர்புபடுத்தி ஆய்வுகள் நடக்கிறது)

அங்கே மும்மொழியில் ஒரு அறிவித்தற்பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில் கன்னியா தொடர்பான சைவர்களின் நம்பிக்கைகள் போன்ற விபரங்கள் எழுதப்பட்டிருந்தன. அவ்வறிவித்தற்பலகை பிடுங்கப்பட்டதுடன் அருகிலிருக்கும் வெல்கம் விகாரையுடன் கன்னியாவைத் தொடர்புபடுத்தும் தனிச்சிங்களத்தினாலான விளம்பரப்பலகைகளே எங்கும் வைக்கபப்ட்டுள்ளன.


கன்னியாவுக்கும் சைவர்களுக்குமான தொடர்பு முற்றாக மறைக்கப்பட்டுக் கன்னியாவினை வெல்கம் விகாரையுடன் தொடர்புபடுத்துவதே அங்கு முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சிநிரலாகும்.


இத்தனைக்கும் கன்னியா வெந்நீர்க்கிணறுகளை அண்டிச்சில இந்துக்கோயில்கள் இருந்தன. அவற்றுள் சேதமடைந்தவற்றை மீளக்கட்ட அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

அதேவேளை அப்பகுதியில் புதிதாய் விகாரை ஒன்று கட்டுவதற்காகப் பணம் சேர்க்கும் பிரசாரத்தைக் கன்னியாவில் ஓர் அறைபோட்டு இருந்தவாறு பிக்கு ஒருவர் ஒலிபெருக்கியில் செய்துகொண்டிருக்கிறார்.
பெருமளவில் அங்கே வரும் சிங்களச் சுற்றுலாப்பயணிகளே அவரின் இலக்கு வாடிக்கையாளர்கள்.

அங்கே இருந்த அரசமரத்தின் அடியில் ஒரு பிள்ளையார் சிலை கனகாலமாக இருக்கிறது. தற்போது அந்தப்பிள்ளையார் சிலைக்கு எதிர்ப்பக்கமாக அதே அரசமரத்தின் கீழ் புத்தர் இருக்கிறார்.


கன்னியாவில் அமைந்திருந்த சியாறத்துக்குப் போவது படையினரால் தடுக்கப்பட்டுள்ளது.

கதிர்காம வாய்ப்பாடு இங்கேயும் செயற்படுத்தப்படுகிறது.

அதிகாரத்தைப் பயன்படுத்தித் தலையிடு - பன்மதத் தலமாக்கு - கைப்பற்று

சைவர்கள் அந்தியேட்டிக் கிரியை செய்யப் பயன்படுத்தும் மண்டபத்தில் "சிறீ லங்கா புத்தரின் தேசம்" என்று சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது.


கன்னியா ஒரு காலத்தில் தமிழ் பகுதியாக இருந்தது என்பதற்கு சான்றாக இடிந்துபோன நிலையில் ஒரு வாயில் வளைவும், சற்றுத்தள்ளி 8ம் வகுப்புவரையுள்ள ஒரு தமிழ்ப்பாடசாலையும் இருக்கிறது.
== முடிவுரை ==


அதிகாரத்திலிருக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் சிங்கள-பவுத்தப் பேரினவாதத்துக்கும் மிக நெருக்கமான கொள்வினை கொடுப்பினைகள் உண்டு.

ஆளும் வர்க்கத்தின் நலன்களும் சிங்கள பவுத்தப் பேரினவாதத்தின் நலன்களும் ஒரே புள்ளியில் இணைகின்றன. இதற்கிடையில் தற்போது பிராந்திய, உலக வல்லரசுகளின் நலன்கள் ஆளும் வர்க்க நலன்களோடு பிணைந்துகொண்டுள்ளன.

இந்த மூன்று நலன்களுக்கும் எதிராகவும் இடைஞ்சலாகவும் இயங்கிக்கொண்டிருந்த தமிழரின் ஆயுதம் தாங்கிய தேசியப்போராட்டம் முற்று முழுதாகத் துடைத்தழிக்கப்பட்டுள்ளது.

வேறெந்த எதிர்ப்பும் இலங்கையில் இல்லை. இருதரப்பாலும் இல்லாமலாக்கப்பட்டுள்ளது. இந்தச்சூழலில் தான் இம்மூன்று நலன்களதும் பாற்பட்ட நிகழ்ச்சிநிரல் மிகுந்த வேகத்துடன் முன்னெடுக்கப்படுகிறது. சிறுபான்மை இனங்களின் தாயகப்பிரதேசங்கள், குடிப்பரம்பல் எல்லாம் குலைக்கப்படுவதன் மூலம் இனியும் ஓர் எதிர்ப்பு எழாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது.

அதில் ஒரு கூறான பவுத்த சிங்கள ஆக்கிரமிப்பு சிறுபான்மை மக்களைப்பொறுத்தவரை உணர்ச்சிகளைத்தூண்டக்கூடிய ஒன்று.


கன்னியாக் கதையை வாசிக்கும் போதும், வன்னி மண் புத்தர் சிலைகளால் நாளாந்தம் நிரப்பப்படும் செய்திகளைப்படிக்கும் போதும், நாகவிகாரையில் கொஞ்ச நேரம் நின்று அவதானிக்கும் போதும் நாம் உணர்ச்சிவசப்படுகிறோம். கண் கலங்குகிறோம். கோபமுறுகிறோம்.

சாதாரண மக்கள் இவ்வாறுதான் கோபமூட்டப்படுகிறார்கள்.

இந்த ஆக்கிரமிப்பை எப்படி எதிர்கொள்வதென்று தம்மாலியன்றளவு யோசிக்கிறார்கள்.

அவர்களுக்கு காட்டப்படிருப்பது, தத்தமது மத அடையாளங்களை பெரிதாக்கி, நிறுவி எதிர்கொள்ளும் வழிமுறை மட்டுமே. இதுதான் இன்று மத அடையாளங்கள் சிறுபான்மை மக்களது எதிர்ப்பரசியலோடு பின்னிப்பிணைந்தமைக்கு அடிப்படை. சிங்கள மக்களுக்கும் "பயங்கரவாத, பிரிவினைவாத " நெருக்கடிக்கு ஒரே தீர்வாகப் போதிக்க்கப்பட்டிருப்பதும் இதுவேதான்.

ஆக மொத்தத்தில் இலங்கை மக்கள் மத அடையாளங்களது பெரும் போரினுள் அமிழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.

அதைத்தாண்டியும் இலங்கையில் பிரச்சினைகள் உண்டென்று சிங்களவர்களும் மற்றவர்களும் சிந்திக்க மறுக்கிறார்கள்.

இங்கே நான் மேற்சொன்ன மூன்று தரப்புக்களின் நலன்களில் பேரினவாத-பவுத்த நலன்களே பெரும்பான்மை மக்களை வெல்ல உதவும் ஒரேயொரு பிரசாரக்கருவி. அதனைச் சிங்கள மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதன் மூலம் மூன்று தரப்புக்களையுமே இலங்கை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடலாம். (சிங்கள மக்களிடையே விதைக்கப்பட்டிருக்கும் பேரினவாதத்துக்கான ஆதரவு தான் இலங்கை மக்களுக்கு எதிரான எல்லாச் செயற்பாடுகளுக்கும் மிகப்பலம் மிக்க ஆயுதமாக இருக்கிறது. )


அதற்கான வேலைகள் நடைபெறும்போது சமாந்தரமாக இன்னொன்றும் செய்யப்படவேண்டும் . அது சிங்கள-பவுத்த பேரினவாத்தினதும், ஆளும் வர்க்கத்தினதும், உலக - பிராந்திய வல்லரசுகளினதும் நலன்கள் சார்ந்த நிகழ்ச்சி நிரலுக்கு மறுபடியும் தடையையும் எதிர்ப்பையும் உருவாக்குவது.

ஏற்கனவே இருந்த புலிப்பாணி எதிர்ப்பு ஆபத்தானது. செயற்றிறன் குறைந்தது.

அதற்கு இலங்கையிலுள்ள சிறுபான்மைச்சமூகங்களும் ஏனைய ஒடுக்கப்படுவோரும் ஒன்று சேர வேண்டும். இவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி இணைக்கும் அரசியற் செயற்றிட்டம் வேண்டும். அதற்கு பெரும் முட்டுக்கட்டையாய் இருப்பது இந்த "அடையாளங்களை" எதிரும் புதிருமாக முன்னிறுத்தி அலைக்கழியும் நிலைமையே.

புத்தர் சிலைகளின் படையெடுப்புக்கு எதிரான மதம் சார்ந்த சண்டைகள் கூட இவ்வாறுதான் முதன்மை நிகழ்ச்சிநிரலுக்குச் சாதகமாகிப்போகிறது.

அதற்கு மத அடையாளங்களின் ஆக்கிரமிப்பு தொடர்பான உணர்ச்சிகர நாடகத்திலிருந்து வெளியில் வந்து இன்னும் கூர்மையாக அடிப்படைப்பிரச்சினை மீதான கவனத்தை ஏற்படுத்த வேண்டும்.

அதாவது இருண்டதோடெல்லாம் போரிட்டுக்கொண்டிருக்காமல் பேயைக் கண்டுபிடித்து ஒழிக்கவேண்டும்