Language Selection

தேவன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று பரவலாக தமிழ்மக்கள் புலம் பெயர்ந்து வாழும் வெளிநாடுகளில் அரசியற் கூட்டங்கள், இலக்கிய சந்திப்புக்கள், புத்தக வெளியீடுகள் போன்ற பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

30வருடங்கள் கருத்துக்களும், சிந்தனைகளும் சிறைப்படுத்தப்பட்ட அந்த இருண்ட நாட்கள் மாறி, இப்படியான நிகழ்வுகளை சுதந்திரமாக நாடாத்த முடிகின்ற சூழ்நிலை உருவாகியிருப்பது ஆரோக்கியமான வரவேற்க வேண்டியதொரு விடயமே. இந்த வாய்ப்பினை இன்றைய கலந்துரையாடல்களும், சந்திப்புகளும் எப்படி பயன்படுத்துகின்றன என்பதைப் பொறுத்தே பயன்பாடும் அமையும். தங்கள் சுயலாபத்திற்காகவும், தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகவும் நடாத்தப்படும் நிகழ்வுகள் மக்களுக்கு பயன்படப் போவதில்லை. பெரும்பாலான நிகழ்வுகள் இந்த அடிப்படையில் தான் நடைபெறுகின்றன.

அதைவிட போட்டி மனப்பான்மையும் இதற்கு ஓரு காரணமாக அமைகிறது. சாதாரண வாழ்க்கையிலே ஒவ்வொரு நடைமுறை விடயங்களிலும் தமிழ்மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் போட்டி மனப்பான்மை இன்று கலந்துரையாடல், சந்திப்புக்களில் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

மார்க்ஸியம், இலக்கியம், அரசியல் என்று கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொண்டு தங்களை புத்தியீவிகளாக மக்களுக்கு காட்டிக் கொள்வதோடு சமூகத்திலே ஒரு அந்தஸ்த்தினை பெற்றுவிடுவதே இந்த முற்போக்காளர்களின் நோக்கமாகும். சரியான கருத்துக்கள் செயற்திட்டங்களோடு தங்களை இணைத்துக் கொள்ள முடியாத இவர்கள், தங்களின் செயற்பாடுகளால் புதிய புதிய முரண்பாடுகளை உருவாக்குகின்றனர். தங்களை சட்டாம்பியர்களா வைத்துக் கொண்டு தங்களுக்கு ஆலவட்டம் வீச நாலு பேரையும் வைத்துக் கொண்டு காலத்துக்கு காலம் கரணமடித்து வாழ்க்கையினை ஓட்டுவதே இவர்களின் பிழைப்பாயிற்று. கடந்த காலங்களில் இவர்களுடைய அரசியற் போக்குகள், ஒவ்வொருவருக்கும் இடையிலான விமர்சனங்களும் முரண்பாடுகளும் இவர்களது இணைவிற்கு பெரியதோர் முட்டுக்கட்டையாக உள்ளது. எந்த நிலமையிலும் மனதளவிலோ, கொள்கை அடிப்படையிலோ இவர்களால் ஒன்றுபட முடியாது. தங்களுடைய தனிப்பட்ட அல்லது பொதுவான அரசியற் தவறுகளை…, தங்கள் மீதான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியாத போக்கும், தங்கள் தவறுகளை நியாயப்படுத்த முயலும் மனநிலையும் தான் இவர்கள் சிந்தனையில் மேலோங்கி உள்ளது.

தங்களை சமூக அக்கறையாளர்களாகவும், சமுதாய நலன் விரும்பிகளாவும் காட்டிக் கொள்ளும் இவர்களுடைய முயற்சிகள் அனைத்தும் அவரவர் சொந்த நலன்களை மையப்படுத்தி நடைபெறுகின்றது என்பது மக்களுக்குத் தெரிந்த உண்மையே. படித்தவர்கள், புத்தியீவிகள், பழைய கம்யூனிஸ்கட்சி உறுப்பினர்கள், மார்க்சியம் படித்தவர்கள் என்று பல சக்திகளிடம் இந்த சுயநலப் போக்குத் தான் மேலோங்கியுள்ளது. தங்களை விமர்சனத்திற்கு உட்படுத்திப் பார்க்காத இவர்களின் மனநிலை நேர்மையான ஓரு அரசியலில் தங்களை இணைத்துக் கொள்ளவோ, சரியான அரசியற் திட்டங்களை முன் வைத்து செயற்படவோ முடியாதவர்களாகவே இவர்களை வைத்திருக்கின்றது. நேர்மையற்ற இவர்களுடைய போக்கு திரும்பத் திரும்பவும் தவறான சக்திகளோடு, சந்தர்பவாத அரசியலோடு அல்லது செயற்பாடுகளோடு தான் இவர்களை இணைத்துக் கொள்கிறது. நேர்மையான அரசியலை முற்போக்கு சக்திகளை ஏற்றுக் கொள்ள முடியாத அல்லது இனம் கண்டு கொள்ள முடியாத இவர்களுடைய போக்கினால் அப்படிப்பட்ட முற்போக்காளர்களோடு, முற்போக்கு அமைப்புகளோடு புதிய முரண்பாடுகளையே ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

எந்தவொரு மனிதனுக்கும் சுயவிமர்சனம் அவசியமானது. தெரிந்தோ தெரியாமலோ விட்ட தவறுகளை திருத்திக் கொள்வதற்கும், மற்றவனை பாதிக்காமல் சமுதாயத்திற்கு நேர்மையான பயனுள்ள மனிதனாக தன்னை மாறிக் கொள்ள சுயவிமர்சனமே வழி அமைத்துக் கொடுக்கிறது. சமுதாய நலன் விரும்பிகட்கும், அரசியலில் தங்களை இணைத்துக் கொள்பவர்களுக்கும் சுயவிமர்சனம் அவசியமான ஒன்று. சுயவிமர்சனமற்றவர்களும், மற்றவர்களின் சரியான நியாயமான விமர்சனங்களை ஏற்க மறுப்பவர்களும் சுயநலப் போக்கு கொண்டவர்களாக, சந்தர்ப்பவாத பிழைப்புவாத போக்கு கொண்டவர்களாகத் தான் இருக்க முடியும். புலம் பெயர்ந்து வாழும் சமூகத்தில் புத்தியீவிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளும் பலர் முன்னெடுக்கும் செயற்பாடுகளில் தவறான இந்த சுயநலப் போக்கே காணப்படுகிறது.

மார்க்ஸியத்தினை படித்து வைத்து வித்துவம் காட்டும் பலர் கூட்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள். கடந்த காலங்களில் நேர்மையான பல முற்போக்கு சக்திகளை, உண்மையான தோழர்களை ஓரம் தள்ளி முரண்பாடுகளை ஏற்படுத்தி தங்களை செழுமைப்படுத்திக் கொண்டு பிழைப்பு நடாத்தியவர்கள் இன்று தங்களைப் பற்றிய விமர்சனம் எதுவுமில்லாமல் தேவதூதர்களாக மீண்டும் மக்கள் முன் தோன்றியுள்ளார்கள். இவர்கள் தங்கள் கடந்தகால தவறுகளை மறைத்து நாடகமாடுகிறார்கள். ஏதாவது செய்ய வேண்டுமென்பதற்காக எதையாவது செய்வது இவர்களின் தொழிலாகிவிட்டது.

இன்று பல முற்போக்கு சக்திகளுக்கிடையிலான இடையிலான இடைவெளிகளும், முரண்பாடுகளும், அவர்களுடைய கருத்துக்கள்… உழைப்புக்கள்… முழுமையாக மக்களை சென்றடைவதற்கு பெரியதோர் தடையாகவுள்ளது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.

80பதின் பிற்பகுதிகளில் புலிகளின் தீவிர எதிர்ப்புக்கு மத்தியிலும் புலம்பெயர் நாடுகளில் வெளிவந்த பத்திரிகை ஆசிரியர்கள், சஞ்சிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் சேர்ந்து சிலமாற்று அரசியற் திட்டங்களை முன் வைத்து பல சந்திப்புக்கள், கலந்துரையாடல்களை நடாத்தினார்கள். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் இவர்களின் ஒருமைபாட்டிற்கு தடையாயிற்று. எந்த அரசியற் திட்டங்களையும் முன்னெடுத்து செயற்படுத்த முடியாது போயிற்று. ஆனாலும் சில முற்போக்கு சிந்தனையாளர்கள் மத்தியில் ஒரு புரிந்துணர்வினை ஏற்படுத்திற்று. காலப்போக்கில் சிறுசிறு முரண்பாடுகள் களையப்பட்டு ஓர் கொள்கைத் திட்ட அடிப்படையில் இணைந்து செயற்பட வாய்ப்பாயிற்று. இருந்தும் பல பயனுள்ள முற்போக்கு சக்திகள் தனித்தனியாக பிரிந்து உதிரிகளாக செயற்படுவது தமிழ்மக்களின் துரதிஸ்டமே. முற்போக்கு சக்திகளுக்கிடையில் வளர்ந்து வரும் இந்த முரண்பாடுகள் மக்களை சரியான கருத்துக்களில் இருந்து அந்நியப்படுத்துவதோடு தவறான சக்திகள் இந்த மக்களை உள்வாங்கி கொள்ள வாய்ப்பாகிவிடுகிறது. சாதாரண மக்கள் மத்தியில் முற்போக்குவாதிகளைப் பற்றி தவறான கருத்தினை ஏற்படுத்த இந்த முரண்பாடுகள் காரணமாக அமைகின்றன. இதை முடிந்தளவு தவிர்த்துக் கொண்டு ஒரு புரிந்துணர்வினை ஏற்படுத்தி செயற்பட வேண்டும். சந்திப்புக்கள், ஒன்று கூடல்களை ஏற்படுத்தி முரண்பாடுகளை விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும். நேர்மையான முற்போக்கு சக்திகளின் ஒருமைப்பாடு இன்றைய கட்டாய தேவையாகும்.