புலி அழிவுடன் திடீரென உருவான இடதுசாரியமோ, இன்று புலியை எதிர்க்காது கூடிக் கூத்தாடுகின்றது. இதன் மூலம் தான் தமிழ்மக்களின் விடிவுக்கு வழிகாட்ட முடியும் என்கின்றனர். புலியை விமர்சிக்காது இருப்பதன் மூலம் தான், தேச பக்தர்களை இடதுசாரிகள் பக்கம் கொண்டு வர முடியும் என்று சந்தர்ப்பவாதம் பேசுகின்றது. இது புலி சமன் தேசியம் என்ற அரசியல் கோட்பாடு மூலம், அரசை மட்டும் எதிர்க்கின்ற புலி இடதுசாரியமாக முன்தள்ளப்படுகின்றது. இந்தப் புலி இடதுசாரியம் புலிகளின் அரசியலை "புலிகளின் தவறுகளையெல்லாம்" என்று வகைப்படுத்துகின்றது. இப்படி இனியொரு புலியின் "தவறுகளை" திருத்தி, புலித் தேசியத்தை உயர்த்த இன்று கூடிக் கூத்தாடுகின்றனர். இந்தத் "தவறுகளை" இடதுசாரிய சந்தர்ப்பவாதம் மூலம் களைந்து, புலிக்கே தலைமை தாங்கலாம் என்பது தான் இதன் பின்னுள்ள சந்தர்ப்பவாத நுண் அரசியலாகும். புலியின் "சரியான" அரசியலில் உள்ள "தவறுகள்" பற்றிய விளக்கம், அந்த இடதுசாரியத்தின் பெயரில் வலதுசாரிய அரசியலைக் காட்டுகின்றது.
இப்படிப்பட்ட இந்த இடதுசாரி சந்தர்ப்பவாதம், காலத்துக்கு காலம் புலி வரலாறுடன் ஒன்று கலந்து வந்துள்ளது. இது தான் புலியின் அரசியலில் உள்ள "தவறுகள்" என்று காட்டி அதை திருத்தக் கோரியது. தான் திருத்தப் போவதாக கூறி அதனுடன் கலந்தது. புலியின் வலதுசாரிய பாசிசத்தை மறுத்து, புலி என்ற இடதுசாரியத்தில் ஏற்பட்ட "தவறு" என்றது. இவை ஒன்றும் எம்முன் புதிதல்ல. கடந்த காலத்தில் புலியின் "தவறானதில்" இருந்து சரியான அரசியல் வழிக்கு கொண்டு வர என்று கூறிக்கொண்டு இடதுசாரியம் பேசிய கூட்டம், புலியாக மாறியது. இது பழைய கதை. அன்று தீப்பொறியை மாற்றி தமிழீழக் கட்சியாக்கியவர்கள், புலிக்காகவே வெளியில் இருந்து எஞ்சிய இடதுசாரிய அரசியலையே புலியாக்கி அழித்தனர். இன்று போல் அன்றும் அவர்கள் அதற்குத் தத்துவ விவாதம் நடத்தியதன் மூலம், புலியை பூசி மெழுகினர். அன்று அவர்கள் புலியைப் பயன்படுத்தி வர்க்கப்போராட்டம் என்றனர்.
இன்று இனியொருவும் புதிய திசைகளும் மாபியாப் புலியை பயன்படுத்தி தங்கள் இடதுசாரிய அரசியலை மக்கள் முன் வைப்பதாக கூறிக்கொண்டு, புலி மாபியாக்களுடன் கூடி குலாவுகின்றனர். புலி என்றால் தேசியம், புலியுடன் தான் மக்கள் உள்ளனர் என்பது, இவர்களின் புதிய இடதுசாரிய சந்தர்ப்பவாத புலித் தத்துவமாகும்.
1983 இல் வலதுசாரிய தமிழ்தேசியம் தன்னை இடதுசாரியமாக அலங்கரித்துக் கொள்ள, தங்கள் அமைப்புகளில் இடதுசாரிய கோசங்களையும், இடதுசாரியம் பேசிய நபர்களையும் உள்வாங்கிக் கொண்டது. இதன் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றி, அதன் பெயரில் தமிழ் மக்களை ஓடுக்கினர்.
இன்று புலத்து மாபியா புலிகள் தங்கள் அரசியல் இருப்பை நியாயப்படுத்தி அதைத் தக்கவைக்க, இடதுசாரிய நியாயப்படுத்தல்கள் தேவைப்படுகின்றது. இதன் பின் இடதுசாரிய சந்தர்ப்பவாதிகள் மக்களை புலியூடாக தேடுவதாக நியாயப்படுத்திக் கொண்டு, அவர்களுடன் சேர்ந்து அரசியல் செய்கின்றனர்.
புலத்து புலி மாபியாக்கள் தமிழ் மக்களின் பிரச்சனையை, இன்று எப்படி எந்த வழியில் தீர்க்கலாம் என்று கருதுகின்றனர். இலங்கையில் ஒரு குண்டை வைப்பது மூலமும், இந்தியா மற்றும் ஏகாதிபத்திய தலையீடு மூலமும் இதை தீர்க்கலாம் என்ற இந்த எல்லைக்குள் தான் அவர்கள் அரசியல் செய்கின்றனர். இவர்களுடன் கூடித்தான் சந்தர்ப்பவாத இடதுசாரியம் பயணிக்கின்றது.
இலங்கை வாழ் மக்கள் தான், இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்பதை மறுக்கின்றனர். அதற்கு உதவுவது தான் புலம்பெயர் மக்களின் அரசியல் கடமை என்பதை மறுக்கின்றனர். இந்த வகையில் தான் தமிழ்நாட்டு புலியாதரவு தமிழ்தேசியம் கூட இயங்குகின்றது. இலங்கை வாழ் மக்கள் தான் இதைத் தீர்க்க முடியும். இதற்கு வெளியில் அல்ல. புலம் மற்றும் தமிழ்நாட்டு புலித் தமிழ்தேசிய அரசியல் இதை மறுக்கின்றது.
இலங்கை வாழ் மக்கள் தங்கள் பிரசச்னைக்கு தீர்வு காணவேண்டும். இங்கு தமிழ்மக்கள் ஒரு இனம் என்ற வகையில், அவர்கள் கடந்த காலத்தில் போராட முற்பட்டனர். இதன் போது அவர்கள் சொந்தக்காலில் அணிதிரள்வதை இயக்கங்கள் தடுத்து நிறுத்தின. அன்னிய சக்திகளின் துணையுடன், தாம் விடுதலை பெற்றுத் தருவதாக கூறியே தமிழ்மக்களை ஓடுக்கினர். இதன் வளர்ச்சியில் புலிகள் தாம் அல்லாத யாரையும் விட்டு வைக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தான், எம்மக்களை தேசியத்தின் பெயரில் புதைகுழிக்குள் நிரப்பினர்.
எம் மண்ணின் மூச்சைக் கூட புலிகள் விட்டுவைக்கவில்லை. அதன் மேல் பேரினவாதம் சவாரிவிட்டது. இன்று மீளவும் அந்த மக்கள், தங்களை தாங்கள் புனர்ஜென்மம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். தங்கள் சொந்தக்காலில் நிமிர்ந்து நிற்கும், அனைத்து முயற்சியும் அவசியமானது. அந்த வகையில் எழுகின்ற சுயாதீனமான முயற்சிகளை, இன்று புலத்து மற்றும் தமிழ்நாட்டு புலித் தமிழ்தேசிய கூட்டம் அரசு சார்பானதாக முத்திரை குத்துகின்ற அரசியல் கூத்தைப் பார்க்கின்றோம். இதன்பின் இடதுசாரியம் வால்பிடித்து செல்வதைப் பார்க்கின்றோம்.
புலத்து மாபியாப் புலிகளும், தமிழ்நாட்டு புலியாதரவு தமிழ்தேசிய கூட்டமும், அதனுடன் சந்தர்ப்பவாத கூட்டமைக்கும் இடதுசாரிய கூட்டமும், இலங்கை வாழ்மக்கள் தான் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் எந்த அரசியலையும் முன்நகர்த்தவில்லை. புலத்து மாபியா புலி கூட்டம் முன்தள்ளும் தேசியத்தின் பின் தான், தீர்வு காணமுடியும் என்று கருதுகின்றனர். அவர்களோ இலங்கையில் குண்டை வெடிக்க வைப்பது முதல் ஏகாதிபத்திய தலையீடு மூலம் தீர்வுகாண முடியும் என்ற தீர்வை முன்தள்ளுகின்றனர். இதன் பின்னணியில் சந்தர்ப்பவாத இடதுசாரியமோ புலியை விமர்சிப்பதை தவிர்த்து, ஒன்றாக ஓரே நேர் கோட்டில் நின்று ஒட முனைகின்றனர்.
இலங்கை வாழ் தமிழ்மக்கள் இதை தீர்க்க என்ன செய்யலாம் என்பதை பற்றி அக்கறை கிடையாது. அந்த மக்கள் தங்கள் சொந்தக் காலில் நின்று தான் இதை தீர்க்க முடியும். வெளியில் இருந்தல்ல. தமிழ்மக்கள் தங்கள் மேலான இனவொடுக்குமுறையை, சிங்கள மற்றும் சிறுபான்மை மக்களுடன் சேர்ந்துதான் இதைத் தீர்க்க முடியும். இதுவல்லாத எந்த முயற்சியும், எந்த கருதுகோளும் அந்த மக்களை மீண்டும் ஒடுக்கத்தான் பயன்படும். இலங்கையில் நிலவும் பாசிசம் தன் சர்வாதிகாரத்தை வெளிப்படையாகவே சிங்கள மக்கள் மேலும் இன்று ஏவத்தொடங்கியுள்ளது.
தமிழ் சிங்கள மக்கள் தம் மீதான ஓடுக்குமுறையை இனம் கண்டு ஒன்றிணையும் வரலாற்று கட்டத்தில் உள்ளனர். இந்த அரசியல் எதார்த்தத்தை மறுப்பது தான், புலத்து மற்றும் தமிழ்நாட்டு புலித் தமிழ்தேசியத்தினதும் இதன் பின் வால் பிடிக்கும் சந்தர்ப்பவாத இடதுசாரியத்தினதும் அரசியலாகும். புலத்து மாபியா புலிகளின் தேசியம் மூலம் தீர்வு காணமுடியும் என்று கூறிக்கொண்டு, அதை திருத்தி எடுத்தால் சரி என்று கூறுகின்ற இடதுசாரிய பித்தலாட்டங்கள் இன்று அரங்கேறுகின்றது. அந்த மக்கள் சுயமாக போராடுவதை மறுக்கின்றது. அதை குழிபறிக்கும் புலத்து மற்றும் தமிழ்நாட்டு புலியாதரவு தமிழ்தேசிய கூட்டமும், இடதுசாரிய சந்தர்ப்பவாத அரசியலும், மக்களின் சுயாதீனமான அனைத்தையும் அரசு சார்பானதாக முத்திரை குத்துகின்றது.
இலங்கை மக்களின் சுயாதீனமான செயல்பாடுகளை மறுத்த அரசியலும், அரசு சார்பானதாக முத்திரை குத்துகின்ற அரசியலும், குறிப்பாக தமிழ்-சிங்கள மக்கள் ஒன்றிணைவதைத் தடுக்கின்றது. மக்கள் சொந்தக் காலில் நிற்பதை மறுக்கும் போது, அரசுடன் சேர்ந்து தீர்வு காணும் அரசியலாக அது கொப்பளிக்கின்றது.
இனியொரு கூறுவதைப் பாருங்கள். "இலங்கை அரசிற்கு எதிரானவர்களெல்லாம் புலிகள் என்ற சமன்பாட்டை அவர்கள் உருவாக்க முனைகிறார்கள். அதன் வழியாக புலிகளின் தவறுகளையெல்லாம் அரசை எதிர்க்கும் அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகள் மீதும் சுமத்த முனைகிறார்கள். இலங்கை அரசின் வெளிப்படையாகத் தெரியும் அடக்குமுறைகளுக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்படும் போதும், போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் போதும், அவர்கள் யாராக இருந்தாலும் சரி புலிகள் என்ற முத்திரையைப் பதித்து அன்னியப்படுத்த முயல்கிறார்கள்" என்று விளக்கம் தங்கள் சந்தர்ப்பவாத இடதுசாரிய அரசியலுக்கு கொடுக்கின்றனர். யாரெல்லாம் புலியுடன் சேர்ந்தும், அதை விமர்சிக்காது சந்தர்ப்பவாத அரசியல் செய்கின்றரோ, அவர்கள் எல்லாம் புலி அரசியலை தூக்கி முன்னிறுத்துகின்றனர். இன்று புலத்து புலி மாபியாத் தலைமையுடன் யாரெல்லாம் கூடிக் குலவி அரசியல் செய்கின்றனரோ, அவர்கள் எல்லாம் புலிக்குத்தான் காவடி எடுக்கின்றனர்.
அரச எதிர்ப்பு என்பது, மக்கள் தங்கள் சொந்த விடுதலைக்காக அவர்கள் தங்கள் சொந்தக்காலில் நின்று போராடுவதற்காகத்தான். புலி மாபியாக்கள் தாங்கள் திருடிய மாபியா சொத்தை பாதுகாக்கவும், அதை பெருக்கவும், அன்னிய தலையீடு மூலம் தங்கள் நலனை அடையவும் தான், அரசை எதிர்க்கின்றனர். இந்தவிதமான அரச எதிர்ப்பை நாம் ஆதரிக்கவில்லை. நாங்கள் அரசை எதிர்க்கின்ற போது, புலி மாபியாக்களில் இருந்து வேறுபட்ட அரசியல் நோக்கம் கொண்டு தான் எதிர்க்கின்றோம். இந்த அரசியல் வேறுபாட்டை இல்லாதாக்கின்ற சந்தர்ப்பவாத இடதுசாரிய அரசியல், புலி அரசியல்தான். நீங்கள் "மார்க்சியம்" பேசுவதால் மட்டும், இது புலிசார் அரசியலல்ல என்றாகிவிடாது. புலியை விமர்சியாது சந்தர்ப்பவாதம் மூலம், புலியைச் சார்ந்து சென்றுதான் தமிழ்தேசியத்தையும் மகிந்தாவின் பாசித்தையும் வெல்ல முடியும் என்றால், அந்த "மார்க்சிய" அரசியல் கோட்பாட்டை முன்வையுங்கள்.
பி.இரயாகரன்
11.11.2010