10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

நோர்வே அரசின் முந்தானையில் மறைந்தபடி அரசியல் செய்யும் சந்தர்ப்பவாத நோர்வேத் தமிழ் இடதுசாரிகளும் பினாமிப் புலிகளும்….

”மீண்டும் நோர்வே பற்றிய செய்திகள் ஊடகங்களில் அடிபடத் தொடங்கியுள்ளன.கடந்த செப்டெம்பர் மாத நடுப்பகுதியில், ஜ.நா.பொதுச்சபைக் கூட்டத்தில் பங்குபற்ற நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நோர்வே பிரதமர் ஜீன்ஸ் ஸ்ரோல்ரென்பேர்க் மற்றும் அந்த நாட்டு அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

இதன் பின்னரே நோர்வே பற்றிய செய்திகள் இலங்கை ஊடகங்களில் இடம் பிடிக்கத் தொடங்கின.

இலங்கையுடனான உறவுகளைப் புதுப்பிக்கும் நோக்கில் எரிக் சொல்ஹெய்மை கொழும்புக்கு வருமாறும் இந்தச் சந்திப்பின் போது அழைப்பு விடுத்திருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இதையடுத்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் கொழும்பு வருவதற்கு எரிக் சொல்ஹெய்ம் இணங்கியுள்ளார்.”

மேற்கண்ட செய்தி நறுக்கு தமிழ்மிரர் என்ற தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளபடி எரிக் சூல்கெய்ம் அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கைக்கு போகவிருப்பதாக அவர் தலைமை வகிக்கும் அமைச்சின் செய்தித்தொடர்பாளர் இந்த கட்டுரையை எழுதும் எனக்கு உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் தமிழ்மிரர் எழுதுவது போல், தைமாதம் எரிக் சூல்கெய்ம் இலங்கை செல்வார் என்ற தகவலை பாதுகாப்புக்காரணங்களால் அவர் உறுதிப்படுத்த மறுத்தார். அத்துடன் எரிக் சூல்கெய்ம் இலங்கையில் மேற்கொள்ளவிருக்கும் பயணத்தின் நிகழ்ச்சிநிரலையும் பாதுகாப்புக் காரணங்களால் வெளியிட மறுத்தார்.

எரிக் சூல்ஹெம் இன் பேச்சுவார்த்தை தலைப்புக்கள்

ஆனால் இந்தக் கட்டுரையாளர் பலதரப்பட்ட தொடர்புகள் ஊடாகப் பெற்றுக்கொண்ட தகவல்களின்படி கீழ்வரும் விடயங்கள் எரிக் சூல்கெய்ம் இலங்கை அரசின் பிரதிநிதிகளான, குறிப்பாக மகிந்தவின் சகோதரர் பசிலுடன் விவாதிக்கவுள்ளதாக தெரியவருகிறது.

1. இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, மற்றும் பொருளாதார உறவு விரிவாக்கல்

2. தொழில்நுட்ட பரிமாற்றம்; மற்றும் உயர்கல்வி மேம்பாடு

3. மே 18 க்கு முன்பாக இருநாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்களின் இன்றைய நிலையும், அவை பற்றிய மறுபரிசீலனையும். (சமாதான ஒப்பந்தமல்ல, குறிப்பாக நோர்வே தேசிய பெற்றோலிய நிறுவனம் Statoil மன்னார் வளைகுடாப் பிரதேசத்தில் எண்ணெய் அகழ்வில் பங்கெடுப்பது பற்றிய ஒப்பந்தத்தின் எதிர்காலம்.)

4. நோர்வே அரசின் மூன்றாம் உலகநாடுகளின் அபிவிருத்தி நிறுவனத்தின் (NORAD) இலங்கைக்கான திட்டவரைபும், இலங்கை அரசின் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஒத்துழைப்பும்.

5. நோர்வேயில் தங்கியிருக்கும், வதிவிட அனுமதிபெறாத இலங்கையர்களையும், குற்றங்கள் புரிந்த இலங்கையர்களையும்; இலங்கைக்கு நாடு கடத்துவதும், குற்றவாளிகள் பரிமாற்றமும்.

6. நோர்வேயின் தன்னார்வ தொண்டுநிறுவனங்களின் செயற்பாட்டை விரிவுபடுத்தலும், அதற்கான உள்கட்டமைப்பு உருவாக்கலும்

7. யுத்தத்திற்கு பின்னான இலங்கையின் அபிவிருத்தியில்; நோர்வேயில் வதியும் இலங்கையர்களின் பங்களிப்பும்; அதற்கான உள்கட்டமைப்பு உருவாக்கலும்.

மேற்கூறப்பட்டுள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கான தலைப்புக்கள், எதிர்பார்க்கப்பட்டவைகள் தான். ஆனால் இவற்றில் ஜந்தாவதும், ஏழாவது தலைப்பும் நோர்வே வாழ் தமிழர்கள் மத்தியில் சலசலப்பையும், சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசும் நோர்வேயில் நெடியவன் குழுவின் எதிர்காலமும்

இதில் ஜந்தாவது தலைப்பானது இலங்கை அரசின் வேண்டுதலின் பேரில் விவாதிக்கப்படவிருப்பதாக தெரியவருகிறது. நோர்வே அரசு குற்றவாளிகளை இலங்கைக்கு நாடுகடத்தும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால், அதனால் இன்றைய நிலையின்படி கொலைக்குற்றம் புரிந்த மூன்று தமிழ் ஆண்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்படலாம். அதேவேளை மறுதலையாக இலங்கை அரசு நோர்வேயில் தங்கியிருக்கும் புலிகள் பலரை தம்மிடம் கையளிக்குமாறு நோர்வேக்கு வேண்டுகோள் விடுக்கும் நிலை ஏற்படும். இதன் அடிப்படையில் நெடியவன் மற்றும் அவரின் குழுவைச் சேர்ந்த பலர் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம். தகவல் அறிந்த வட்டாரங்களின் கருத்துப்படி ஸ்வீடன் நாட்டில் விமான எதிர்ப்பு ஆயுதங்களையும், நோர்வேயின் கடல்சார் ஆயுதங்கள்; மற்றும் தொழில்நுட்பங்களை புலிகளுக்கு கிடைப்பதற்கு வழி செய்தவர்கள் கூட இன்று நோர்வேயில் வசிக்கின்றனர். இவர்களையும் தம்மிடம் கையளிக்குமாறு இலங்கை அரசு நோர்வேயிடம் கோரலாம்.

நோர்வேயைப் பொறுத்தமட்டில் மரணதண்டனை நிறைவேற்றும் நாடுகளுக்கு குற்றவாளிகளை நோர்வே நாடு கடத்துவதில்லை. இலங்கை அரசு நோர்வே வாழ் புலிகளுக்கு மரணதண்டனை விதிக்க மாட்டாதென நோர்வே அரசுக்கு வாக்குறுதி கொடுக்கும் பட்சத்தில் இலங்கைக்கு நெடியவன் மற்றும் புலிகள் பலர் நாடுகடத்தப்படலாம். அப்படியான நிலை ஏற்படுமானால், புலிகளைத் தானே நாடு கடத்தினார்கள் என்று இடதுசாரிகள் மவுனம் காப்பது சரியான அரசியலாகாது. இலங்கையில் கொலைகார பாசிசசக்திகள் அரசை நிருவகிக்கும் இன்றைய நிலையில், அங்கு யாரையும் நாடுகடத்துவதை அனுமதிக்க முடியாது.

நோர்வே சந்தர்ப்பவாத தமிழ் இடதுசாரிகளும் புலிப்பினாமி அமைப்புகளும்

அடுத்ததாக சலசலப்பை ஏற்படுத்தக் கூடியது ஏழாவது தலைப்பாகும். அதாவது "யுத்தத்திற்கு பின்னான இலங்கையின் அபிவிருத்தியில், நோர்வேயில் வதியும் இலங்கையர்களின் பங்களிப்பும், அதற்கான உள்கட்டமைப்பு உருவாக்கலும்." என்ற தலைப்பாகும். இந்தத் தலைப்பு நோர்வே வாழ் புலிகளின் பினாமி அமைப்புகள் இலங்கையில் கால் ஊன்றுவதற்கு வழிசெய்யும் என நம்பிக்கையாக கூறலாம்.

இதற்கான முன்னேற்பாடாகவே கடந்த ஜூன் 9 ஆம் திகதி அன்று முள்ளிவாய்க்கால் வழிகாட்டியும், நோர்வேயின் சூழலியல் மந்திரியுமான எறிக் சூல்கெய்ம் இன் தலைமை உரையுடன்; புலிப்பினாமிகளின் அமைப்பான நோர்வே ஈழத் தமிழர் பேரவையினால் (NCET), "நோர்வே சமாதான கட்டமைப்பு மையம்", (Norwegian Peace Building Center) என்ற அமைப்பின் வழிகாட்டலுடன் கருத்தரங்கு ஒன்று ஒஸ்லோவில் நடத்தப்பட்டது. இது சம்பந்தமாக தமிழ்அரங்கம் அம்பலப்படுத்தி கட்டுரைகளையும், செய்திகளையும் வெளியிட்டது. அவ் அம்பலப்படுத்தலை புலிப்பினாமிகள் மறுக்கவில்லை. மாறாக இக் கருத்தரங்குக்கு பின், நோர்வே வாழ் புலிகளின் முக்கியஸ்தர்கள் சிலர் இலங்கை கிரீன் மூவ்மென்ட்(Green  Movement of Sri Lanka ) இன் உதவியுடனும், நோர்வேயின் அபிவிருத்தி நிதியத்தின்(Utviklings Fond) ஏற்பாட்டிலும் இலங்கைக்கு சென்றுவந்தனர்.

இதனால் நோர்வே புலிகள் மத்தியில் சிறு பிளவு கூட ஏற்பட்டது. அவ்வாறு சென்று வந்தவர்கள் நோர்வே புலிகளின் பொருண்மிய ஆலோசனை அமைப்பான TECH, The Economic Consultancy House (also stands for Tamil Eelam Consultancy House))சேர்ந்தவர்களாகும். இதைக் கண்டித்து தமிழ்நெட் கட்டுரை வெளியிட்டது.

ஆனால் புலிப்பினாமிகளின் அமைப்பான நோர்வே ஈழத் தமிழர் பேரவையினால் (NCET), "நோர்வே சமாதான கட்டமைப்பு மையம்", Norwegian peace building center (NOREF) என்ற அமைப்பின் வழிகாட்டலுடன் நடந்த மேற்கூறிய கருத்தரங்கில் பங்குபற்றிய நோர்வே வாழ் இடதுசாரிகளான முனைவர் பேராசிரியர் சண்முகரத்தினம், மற்றும் சுவடுகள் குழுவைச் சேர்ந்தவர்கள் தமிழ்அரங்கத்தின் அம்பலப்படுத்தலை மடத்தனமானதென்றும், அவதூறென்றும் அறிக்கை விட்டதுடன், ஆதாரம் கேட்டார்கள். இந்தக் கட்டுரையை எழுதும் என்னையும், தமிழ்அரங்கத்தின் முதன்மை எழுத்தாளர் ரயாகரனையும் காரசாரமாக விமர்சித்து தேசம்நெட்டில் பேட்டி கொடுத்தார் முனைவர், பேராசிரியர் நா.சண்முகரத்தினம். அப் பேட்டியில் எமக்கு ஆங்கிலம் தெரியாதது தான் நாம் அவதூறு பரப்பக் காரணமாக இருக்கலாம் என்று கூட முனைவர் அவர்கள் கருத்து தெரிவித்தார். ஆனால் என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல இவர்களின் நாற்றக்கேடு சந்திக்கு வந்த வண்ணமுள்ளது.

மேற்படி சூல்ஹெய்ம் இன் இலங்கை அரசுடனான "யுத்தத்திற்கு பின்னான இலங்கையின் அபிவிருத்தியில்; நோர்வேயில் வதியும் இலங்கையர்களின் பங்களிப்பும்; அதற்கான உள்கட்டமைப்பு உருவாக்கலும்." என்ற தலைப்பிலான பேச்சுவார்த்தை வெற்றியளிக்குமானால் அதனால் தனிப்பட்ட பலன் பெறப்போபவர்களில், இந்தச் சந்தர்ப்பவாத தமிழ் இடதுசாரிகளும் உள்ளடக்கம்.

இன்று தமிழ் இளையோர் அமைப்பு (TYO), தமிழ் மாணவர் அமைப்பு, தமிழ்ஈழ பெண்கள் அமைப்பு, தமிழீழ பொருண்மிய கழகம்(TECH), தமிழ் சுகாதார அமைப்பு(THO) போன்ற புலிகளின் முன்னணி அமைப்புகளை சேர்ந்தவர்கள் பலர் நோர்வேயின் முந்தானையில் மறைந்தபடி இலங்கைக்குள் புக தயாராக உள்ளனர். இவர்களுக்கும் நோர்வே அரசிற்கும் இடையில் ஆலோசகர்களாக இருப்பவர்கள், புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் பேச்சுவார்த்தை நடந்த காலத்தில், சர்வதேச கல்வியியலாளர்கள் மற்றும் அரசுகளிடையே, புலிகளுக்கு சார்பான கருத்தியலை பிரசாரப்படுத்த உருவாக்கப்பட்ட பினாமி அமைப்பான (The Centre for Just Peace and Democracy (CJPD)

 

 

என்ற நிறுவனத்தை சேர்ந்த தமிழ் கல்வியாளர்களே. இவர்கள் பலர் நோர்வேயில் இல்லாவிட்டாலும்,  இன்று நோர்வேயில் வசிக்கும், மேற்படி அமைப்பின் ஆலோசகரான முனைவர் சண்முகரத்தினம் தலைமை ஆலோசகராக செயற்படுகிறார். 25 வருடங்களுக்கு மேலாக நோர்வேயில் பேராசிரியராக பணியாற்றும் முனைவர் சண்முகரத்தினம், அபிவிருத்தி சம்பந்தமாக நோர்வேயின் பல சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு(INGOs); கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். இதன் அடிப்படையில், இவரை விட சிறந்ததோர் தமிழ் ஆலோசகர் புலிகளுக்கு கிடைக்கப்போவதில்லை. அதேவேளை இன்று இலங்கையில் அரசுடன் சேர்ந்தியங்கும் பல சிங்கள, மற்றும் தமிழ் கல்வியாளர்கள் பலரும் இவரின் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள் என்பதும் அவரின் ஆலோசகருக்கான தகுதியை கூட்டுகின்தென்றால் மிகையாகாது.

இறுதியாக :

நான் முன்பு ஒரு கட்டுரை எழுதிய போது அதை கீழ்வரும் கேள்வியுடன் முடித்திருந்தேன். "புலிகள் தமது நலனுக்காகவும், தமது பாசிச-தரகு அரசியலை நிலைநாட்டுவதற்காகவும்; ”எண்ணெய்க்காக காயும் எள்ளுப்போல” இயங்குகிறார்கள். புலிகளைப் பொறுத்த மட்டில் இது ஒரு இயல்பான ஒரு விடயம். ஆனால்; இடதுசாரிகளாகவும், முற்போக்கு ஜனநாயக சக்திகளாகவும் தம்மை காட்டிக்கொள்ளும் சண்முகரத்தினமும், சுவடுகள் குழுவும் புலம்பெயர் புலிப்பினாமிகளுடன் சேர்ந்து இலங்கையில் புலிகள் அழிந்த பின்பும் ஏன் ”எள்ளுடன் காயும் எலிப்புளுக்கை போல” இயங்க முற்படுகின்றார்கள்???? ”

இன்று இந்த கேள்விக்கு பதில் வந்துள்ளது. சுயநலமும், பிரமுகர்த்தனமும், தங்களை இலங்கை அரசியல் களத்தில் நிலைநிறுத்த வேண்டிய தேவையுமே இந்த "இடதுசாரி"களை புலியுடன் கும்மியடிக்க வைத்துள்ளது.

மேலும் மக்கள் நலம் சார்ந்து அரசியல் வேலை செய்வோரின் பணி, நம் தேசத்தில் இலகுவானதல்ல என்பதை முத்தாய்ப்பாக இங்கு தோழர்களுக்கு நினைவுபடுத்துகிறேன் .

பிற்குறிப்பு :

இங்கு எழுதப்பட்டுள்ளது அவதூறு என்று பிரச்சாரம் பண்ணுவதற்கும், இதை யார் எழுதினார்கள் என்றும், எழுதியவனை தமது ரசிகர் மன்றங்கள் மூலமாக தேடுவதற்கும் நேரத்தை பாவிக்காமல், இங்கு எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பிரமுகர்கள் பதில் தர முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

 

உசாத்துணை :

 

  1. http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7173%3A2010-06-12-07-59-47&catid=340%3A2010-06-12-08-00-33&Itemid=1
  2. http://www.cjpdonline.org/cj/en/page/60/Resource%20Network+
  3. http://www.utviklingsfondet.no/Utviklingsfondet_-_forsiden/Vart_arbeid/Her_jobber_vi/Sri_Lanka/Partnere_pa_Sri_Lanka/Green+Movement+of+Sri+Lanka.9UFRnOZr.ips
  4. http://tamilnet.com/art.html?catid=79&artid=32313

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்