மக்களை யுத்தமுனையில் இருந்து வெளியேற்றுவதற்கான பொறுப்பு, மக்களுக்காக போராடுவதாக கூறுகின்றவர்களின் தார்மீகப் பொறுப்பாகும். இதைச் செய்தபடிதான் அரசுக்கு எதிராக, மக்கள் மீதான தாக்குதலுக்காக குற்றஞ்சாட்ட முடியும். யுத்தமுனையில் மக்களை பலாத்காரமாக வைத்திருப்பதையே புலிகள் செய்தனர். மக்களை யுத்தமுனையில் கட்டாயப்படுத்தி நிறுத்தி வைத்து, அவர்களை புலிகள் பலியிட்டனர். பின் அரசு அவர்களை பலியிடுவதாக கூறுவது அபத்தம். அரசு பலி கொடுக்கவில்லை பலியெடுத்தது. மக்கள் விரும்பி தாமாக பலியெடுக்கும் யுத்தமுனையில் இருக்கவில்லை. மக்கள் வெளியேற புலிகள் அனுமதித்திருக்கவில்லை.
வடக்கு கிழக்கில் புலிகளுடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களை விட, அங்கிருந்து வெளியேறிய மக்கள் தொகை தான் மிக அதிகம். இதேபோல் தான் புலம்பெயர் நாட்டுக்கு புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கையும். மக்கள் வெளியேறுவதை தடுக்க, காலத்துக்குகாலம் புலிகள் தடைகளை ஏற்படுத்தி வந்தனர். சொத்தை எழுதி வாங்கினர், ஆட்களை பணயக்கைதியாக பிடித்தனர். இப்படி பல வழிமுறை. இதை மீறிச் சென்றபோது கொன்றனர். யுத்தம் தொடங்கிய பின்பும், புலிகள் தோற்றுவந்த போதும், புலிகள் மேலான இராணுவ இலக்குக்குள் மக்கள் சிக்கினர். புலிகள் மக்களை இதற்குள் சிக்கவைக்கும் வண்ணம் நடந்தது கொண்டனர். புலிகள் மக்களை இதில் இருந்து வெளியேறவிடாது தடுத்ததுடன், யுத்த நடைபெறாத வவுனிக்குளம் போன்ற பிரதேசம் சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களையும் கட்டாயப்படுத்தி யுத்தப+மிக்குள் அனுப்பிவைத்தனர். யுத்தபூமியில் இருந்து தப்ப விரும்பியவர்களுக்கு வழங்கிய உதிரியான மரணதண்டனையில் தொடங்கியது தான், இறுதியில் மக்கள் கூட்டம் மேலான துப்பாக்கி சூடுகள். இவை அனைத்தும் இராணுவ முற்றுகைக்கு உள்ளான புலிகள் பிரதேசத்தில் நடந்தது.
இப்படி நடந்ததை மறுக்கும் தீபச்செல்வன், அதை திரிக்கின்றார். "சரணடைந்த மக்கள், படைகளின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல்தான் சரணடைந்தார்கள். அரசு உணவு, மருந்துத் தடைகளைப் போட்டுப் பல களமுனைகளைத் திறந்து மக்களையும் விடுதலைப் புலிகளையும் பிரிக்கச் சதித் திட்டம் வகுத்துத் தாக்குதல்களை நடத்தியது. அவற்றை முகம் கொடுக்க முடியாத மக்கள் எதிரியாகப் பார்த்த படைகளிடம் சரணடைய நேரிட்டது. மக்கள் சரணடைவதற்குப் போராளிகள் பாதைகள் எடுத்துக் கொடுத்ததாக நான் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்." என்கின்றார். நடந்ததை திரிக்க, அரச படைகளின் கொடூரமான நடத்தையை தனக்கு சாதமாக்கிக் கொள்கின்றார்.
"மக்கள் சரணடைவதற்குப் போராளிகள் பாதைகள் எடுத்துக் கொடுத்ததாக நான் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்." என்கின்றார். வேடிக்கையான பொய். மக்கள் பாதுகாப்பாக வெளியேற புலிகள் விரும்பி இருந்தால், அதற்கான பகிரங்கமான ஒரு தீர்வை உலகறிய முன்வைத்திருக்க முடியும். இது வெளியில் இருந்து புலிகளை நோக்கி கோரப்பட்டது. மக்கள் அதை விரும்பவில்லை என்று நடேசன் கொடுத்த பேட்டிகள் உலகறிந்தது. மக்கள் வெளியேறுவதை புலிகள் தங்கள் வன்முறைகள் மூலம் தடுத்தனர்.
மக்கள் வெளியேறுவதை தடுத்த புலிகள் தான், மக்களைப் பலியிட்டனர். குறிப்பாக காயமடைந்தவர்களை கப்பல் மூலம் செஞ்சிலுவைச் சங்கம் வெளியேற்ற முனைந்தபோது, அவர்களுடன் குடும்ப உறுப்பினர் வெளியேற முற்பட்டபோதெல்லாம் புலிகள் அவர்களைத் தடுத்தனர்.
இப்படியிருக்க இங்கு "சரணடைந்த மக்கள், படைகளின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல்தான் சரணடைந்தார்கள்." என்பது ஒரு பக்க உண்மைதான். இதுதான் புலிகளின் நிலையும் கூட. புலிகளும் கூடத் தான் சரணடைந்தனர். இதில் புலிகள் சரணடைந்தது இறுதியாகத்தான். அவர்கள் தாங்கள் சரணடையும் முடிவு எடுத்த போதுதான், மக்களையும் விடுவித்தனர். அதற்கு முன் புலிகளை மீறித்தான், அவர்களின் துப்பாக்கிச் சூட்டைக் கடந்து தான் மக்கள் சரணடைந்தனர். புலி உலகறிய பிரச்சாரம் செய்த செஞ்சோலைப் படுகொலையை எடுங்கள். செஞ்சோலை என்று புலிகள் அறிமுகம் செய்தது, அனாதைக் குழந்தைகள் வாழும் இடமாகத்தான். இப்படி இருக்க தாக்குதல் நடந்த அன்று, பல்வேறு பாடசாலையைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவர்கள் அன்று இரவு தங்கியிருந்தது எற்காக? புலிகளின் கட்டாய இராணுவப்; பயிற்சிக்காகத்தான். புலிகள் அங்கு அவர்களைக் கொண்டுவந்து பயிற்சிகளும் வழங்கினர். இதற்கு முன் இப்படி புலிகள் பயிற்சி கொடுத்த படங்கள் பல வெளியிட்டிருந்தனர். யுத்தபூமியில் பயிற்சி முகாம்கள் கூட இராணுவ இலக்காக, செஞ்சோலையும் இராணுவப் பயிற்சி முகாமாக மாறி இருந்தது. செஞ்சோலைக்குரிய அந்த அர்த்தத்தில் இருந்து புலிகள் அதனை அகற்றியிருந்ததையும், அங்கு கொல்லப்பட்ட பலர் பாடசாலையைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையும், பளிச்சென்று வெளிப்படும் இந்த உண்மை உணர்த்தியது.
ஆனால் இதை புலிகள் செஞ்சோலைக் குழந்தைகள் என்று கூறினார். இதைத்தான் வலதுசாரிகள் முதல் இடதுசாரிகள் வரை தூக்கிவைத்து ஆடினர். இங்கு அக் குழந்தைகள் பாடசாலை மாணவர்கள் கட்டாயப்படுத்தி பயற்சி வழங்கப்பட்டனர் என்ற வகையில், அவர்கள் அப்பாவிகள். இந்த அப்பாவிக் குழந்தைகளை புலிகள் பலியிட்டனர். ஆனால் உலகின் முன் அதை மூடிமறைத்தனர். இப்படித் தான் உண்மைகளை வலது முதல் இடது வரை, தங்கள் குறுகிய சந்தர்ப்பவாத அரசியல் தளத்தில் மூடிமறைத்து, அரசுக்கு எதிராக மட்டும் இதை திசைதிருப்பினர், இதன் மூலம் இது போன்ற மக்கள் மேலான தாக்குதலை திட்டமிட்டு உருவாக்கிய புலிகள், அதை அரசு மேலான பொதுப் பிரச்சாரமாக்கினர். அரசின் கண்மூடித்தனமான அழித்தொழிப்பின் பின்னணியில், திட்டமிட்ட பிரச்சார நோக்கில் புலிகள் இதைக் கையாண்டனர். மக்களைச் சார்ந்து நின்று புலிகளை விமர்சிப்பவர்கள், உலகில் யாரும் இருக்கவில்லை.
புலிகள் மக்களையிட்டு அக்கறை கொள்ளவில்லை. இதேபோல்தான் இடதுசாரிய சந்தர்ப்பவாதம் வரை இயங்கியது. புலியைப் பாதுகாக்க, அதன் பின் உள்ள அனுதாபிகளை சார்ந்து நிற்க முனைப்புக்கொண்ட அரசியல், மக்களின் துயரத்தை இட்டு எதையும் முன்வைத்து அவர்களை சார்ந்து நின்று போhராடத் தயாராக இருக்கவில்லை. இப்படி மக்களை புலிகளாக்கிக் கொண்டு, புலிக்கு பின்னால் வால் பிடித்துக்கொண்டு அரசை மட்டும் எதிர்த்தனர்.
புலிகளும் மக்களும் என்றும் ஒன்றாக இருந்தது கிடையாது. மக்களை மந்தைகளாக்கிய புலிகள், அவர்களை மேய்த்தனர். இங்கு அரசு மக்களை புலியிடமிருந்து பிரித்தது என்பது அபத்தம். அரசு செய்தது, மந்தைகளுக்குரிய புல்வெளியை இல்லாதாக்கியது. புலிகள் தொடர்ந்து மேய்க்க முடியாத நிலையை உருவாக்கியது. மந்தையை வெட்டித் தின்றால்தான் மேய்ப்பவனுக்குரிய வாழ்வாக்கியது. இதைத்தான் அரசு செய்தது. "அரசு உணவு, மருந்துத் தடைகளைப் போட்டுப் பல களமுனைகளைத் திறந்து மக்களையும் விடுதலைப் புலிகளையும் பிரிக்கச் சதித் திட்டம் வகுத்துத் தாக்குதல்களை நடத்தியது" என்ற உண்மை, புலிகளில் இருந்து மக்கள் பிரிந்து இருந்த உண்மையை பொய்யாக்கிவிடாது.
மக்களும் புலிகளும் பிரிந்து இருந்தால்தான், மக்களை அதில் இருந்து பிரிக்க முடிகின்றது. மக்கள் அரசுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை. மக்களில் இருந்து பிரிந்து இருந்த புலிகள் தான் யுத்தம் செய்தனர். இங்கு "பிரிக்கச் சதி" நடக்கவில்லை. மக்கள் வேறு புலிகள் வேறு என்று பிரிந்து கிடந்ததை அரசு பயன்படுத்தி, மக்களுக்காக புலி போராடுவாக கூறும் அதன் வக்கிரமான முழு வே~த்தையும் இது வெளிபடுத்தும் வண்ணம், அதை தனிமைப்படுத்தும் வண்ணம் கொடுமைகளையும் கொடூரத்தையும் ஏவியது. புலியை அழித்தல் அல்லது இராணுவத்தை அழித்தல் என்பது, குறிப்பான இராணுவ இலக்கு என்பது யுத்தத்தை தேர்ந்தெடுத்தவர்களின் அரசியல் தெரிவு. இது சரியான அரசியல் தெரிவாக இல்லாத போது, யுத்தம் கூட அழிவுகரமானது தான். அதுதான் நடந்து முடிந்தது. இங்கு புலிகள் மக்கள் போராட்டத்தை முன்வைக்காது, தங்கள் சுயநலன் சார்ந்த போராட்டத்தை முன்வைத்த இராணுவ நகர்வும், இறுதியாக அதன் அழிவும் அவர்களிள் சொந்த அரசியல் தேர்வாகும்;. இதற்குள் தான் மக்களை பலியாடாக்கி புலிகள் மக்களைப் பலியிட்டனர். இல்லை மக்கள் தாமாகவே முன்வந்து, இதற்குப் பலியாகிப் போனார்கள் என்று கூறுகின்ற தீப்ச்செல்வன் அரசியல் தான், மக்கள் விரோத புலி அரசியலாகும்.
பி.இரயாகரன்
தொடரும்
4.தீபச்செல்வன் பற்றிய பொதுமதிப்பீடு மீதான அரசியல் திரிபு (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 04) 6.தமிழ் மக்கள் தோற்றது என்? புலிகள் அழிக்கப்பட்டது ஏன்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 06) 11.யுத்தத்தில் "மக்களை ஆயுதமாக, காயாகப் பாவித்தது" யார்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 11) 13