Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நடந்ததை மூடிமறைக்கும் வரை, சமூகம் இருட்டில் தத்தளிக்கும். பொய்யர்களும், புரட்டுப் பேர் வழிகளும், மக்கள் மேல் சவாரி செய்வார்கள். சமூகம் தனக்காக போராடும் என்பதை, கனவிலும்; நினைத்து பார்க்க முடியாது. இந்த பாதையில் தான் தமிழ்த்தேசிய அரசியல் தொடர்ந்து புளுத்து சமூகத்துக்கு நஞ்சிடுகின்றது. இதை மாற்ற வேண்டும் என்றால் புலிகள் விமர்சிக்கப்படவேண்டும். இதை அரசியல் ரீதியாக செய்வதை விரும்பததால், எம்மை எங்கும் இருட்டடிப்பு செய்கின்றனர்.    

இந்த இடத்தில் தீபச்செல்வன் போன்றோர் புலியை முன்னிறுத்தி, மீண்டும் புலிப் பல்லவி பாடுகின்றனர். தீபச்செல்வனின் அரசியல் என்ன, என்பதை இங்கு கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது. நீங்கள் முற்போக்காளரா? உங்கள் அரசியல் என்ன? மக்கள் மேலான பேரினவாத கொடுமைகளை பேசுவதால் மட்டும், ஒருவர் முற்போக்காளராக இருந்து விட முடியுமா? இல்லை. எதிர்மறையில் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் மேல் புலிகள் நடத்திய கொடூரங்களை மட்டும் பேசுவதால், ஒருவர் முற்போக்காளராக மாறிவிடுவாரா? இல்லை. நீங்கள் யார்?. மக்களையல்ல, புலியை ஆதரித்த, ஆதரிக்கும் வலதுசாரிய பிற்போக்காளராக இருந்துள்ளீர்கள், இருக்கின்றீர்கள்.

இந்த நிலையில் போராடுவது பற்றி பேசுகின்றீர்கள். "மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்து ஆயுதம் தூக்கிக் களத்திற்கு செல்லுவது எத்தனை உன்னதமானது. அதற்கான சூழல் எனக்கிருக்கவில்லை என்பது குற்ற உணர்வைத்தான் தருகிறது." என்கின்றீர்கள். சரி எந்த மக்களுக்காக! எதற்காக வாழ்வை அர்ப்பணிக்க எண்ணுகின்;றீPர்கள்? சிங்களவன் தமிழன் என்ற இன எல்லைக்குள்தான் என்றால், இது படுபிற்போக்கானது.

தமிழ்மக்கள் என்று பொத்தாம் பொதுவில் கூறுவது, அந்த மக்களை ஒடுக்கும் பிற்போக்கு அரசியலுக்கு காவடி தூக்கத் தான் அந்த ஆயுதம் உதவும். மக்களுக்கு உதவாது. புலிகளின் வரலாறு அது. அதுதான் உங்கள் மொழியில் "நாங்கள்" என்றும் "எங்கள் மக்கள் என்றும்" அது பிரிந்து கிடந்தது. எதிரி பேரினவாதம் என்பதால், அதற்கு எதிராக ஆயுதம் ஏந்தினால் மட்டும் அது முற்போக்காகிவிடாது. அது மக்களுக்கான அர்பணிப்பாகிவிடாது. அது உன்னதமானதாகிவிடாது. எந்த அரசியலுக்காக ஆயுதம் தூக்குகின்றீர்கள் என்பதுதான், இதை தீர்மானிக்கின்றது. இதுவல்லாத எந்தத் தியாகமும், மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகின்றது. இதனை புலிகளின் வரலாறு மட்டுமின்றி, உலக வரலாறுகள் பல மிகத் துல்லியமாகவே நிறுவியுள்ளது.

பொது எதிரிக்கு எதிராக ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் தியாகங்கள் அர்ப்பணிப்புகள், சொந்த மக்களுக்கு எதிராக இருந்தது தான் என போராட்ட வரலாறாகவே பதிவாகியுள்ளது. எங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் கோசத்துடன் போராட்டங்கள் நடந்ததோ, அங்குதான் தியாகங்கள் மக்களுக்காக இருந்தது என்பது வரலாறாக உள்ளது. புலிகள் போராட்டம் சொந்த மக்களுக்கு என்னத்தைச் செய்தது? மக்களின் அழிவையும், சிதைவையும், துயரத்தையும் அது பரிசாக கொடுத்தது. போராட்டம் இதற்காகவா நடத்தப்பட்டது?. இதற்கு எதிரியை குற்றஞ்சாட்டுவது அபத்தமானது. எதிரி அப்படிப்பட்டவன் என்பது உண்மையாக இருக்கும் போது, அவனைக் குற்றஞ்சாட்டி தம்மை மூடிமறைப்பது பிற்போக்கான சதி அரசியல்.  எதிரி  என்றும், மக்களின் எதிரிதான். அதில் இருந்து மீட்க வெளிக்கிட்டவர்கள், அதையே சொல்லி நிற்பது என்பது தங்கள் பாசிசத்தின் மூலம் மக்களை ஏய்த்தலாகும். இதைத்தான் நீங்கள் செய்கின்றீர்கள்.     
 
"மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்து ஆயுதம் தூக்கிக் களத்திற்கு" நீங்கள் சென்று இருந்தால் என்ன செய்திருப்பீர்கள். சொல்லுங்கள். ஆயுதத்தை மக்களுக்கு எதிராகவே  பயன்படுத்தி இருப்பீர்கள் என்பது தெளிவாகும். மக்களை "எங்கள் மக்களாக்க" ஒடுக்கி வைக்கவும், அவர்கள் குழந்தைகளை இழுத்துச்செல்லவும், சிங்கள முஸ்லீம் அப்பாவி மக்களை கொல்லவும், மாற்றுக் கருத்துக்களை தமிழ் மண்ணில் முளைவிடாது அவர்களை ஒடுக்கவும், புலிகளின் அனைத்து மனிதவிரோத செயல்களையும்  செய்யவும், அதேநேரம் சிங்கள் இராணுவத்துக்கு எதிராகவும் கூடத்தான் உங்கள் ஆயுதம் இருந்திருக்கும். இதற்கு வெளியில் உங்கள் ஆயுதம் செயல்படுவதற்கு ஏற்ற எந்த மக்கள் அரசியலும் புலிகளிடம் இருந்தது கிடையாது.      

நீங்கள் புலியில் எப்படி செயல்பட்டு இருப்பீர்கள் என்பதை உங்கள் வார்த்தை ஊடாக பார்ப்போம்; "வீட்டுக்கொருவர் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதை நமது மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அது சாதாரணமான உடன்பாடல்ல. மிகவும் கஸ்டமானது. பெற்றோர்களே பிள்ளைகளைப் போராட்டத்தில் இணைப்பது என்பது மிகத் துயரம் தருவது. ஆனால் அதைவிட எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை. வயது குறைந்த பிள்ளைகள் மீளவும் பெற்றோர்களிடம் சேர்க்கப்பட்டார்கள். நாங்கள் எங்கள் மக்களுக்காக நடத்திய போராட்டத்தை எப்படியாவது விடுதலை நோக்கி நகர்த்த வேண்டியிருந்தது. அதற்காகப் பல இழப்புக்களையும் வலிகளையும் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது." இதுதான் புலியின் உறுமல், அதை இன்றும் நியாயம் என்று வழிமொழியும் வலதுசாரிய வக்கிரமும் இங்கு தீபச்செல்வன் மூலம் மீளக் கொப்பளிக்கின்றது.

"எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை" என்று கூறுகின்ற புலியிசத்தைக் கடந்து, தீபச்செல்வனிடம் மக்கள் நலனென எதுவும் அன்றும் இன்றும் இருக்கவில்லை என்பது இங்கு வெளிப்படுகின்றது. "வேறு வழிதெரியவில்லை" என்று கூறி, மக்களை ஒடுக்கியது புலிகள். "வேறு வழிதெரியவில்லை" என்று கூறித்தான், அரசும் ஒடுக்குகின்றது. அனைத்து மனித விரோத செயலையும் நியாயப்படுத்த, இப்படித் தான் முடிகின்றது. எந்த மனித முகமும் இவர்களிடம் இருப்பதில்லை. புலிகள் மக்களை பிடித்து வைத்திருந்ததால், "வேறு வழிதெரியவில்லை" அதனால் "பயங்கரவாதிகள் மேல்" குண்டு போட்டோம். இதுதான் நாளை அரசு சொல்லப்போகும் சாட்சியம். அரசு எம்மைக் கொல்வதை தடுக்க எமக்கு "வேறு வழிதெரியவில்லை", அதனால் நாங்கள் மக்களை பிடித்து வைத்தோம், இது தான் புலியின் சாட்சியம். மக்கள் துயரம் பற்றி எழுதும் தீபச்செல்வனின் சாட்சியம் கூட இதுதான்.  

தீபச்செல்வன் கூறுகின்ற புரட்டைப் பாருங்கள் "வயது குறைந்த பிள்ளைகள் மீளவும் பெற்றோர்களிடம் சேர்க்கப்பட்டார்கள்" என்கின்றார். இது புலியின் கொள்கை கிடையாது. அன்று புலிகள் மேல் நிலவிய சர்வதேச அழுத்தத்தின் போதுதான். உலகின் முன் புலிகள் நடிக்க வேண்டியிருந்தது. "பெற்றோர்களிடம் சேர்க்கப்பட்டார்கள்" என்பது உங்கள் புலியின் சொந்த சரக்கல்ல. யுத்தம் தீவிரமடைய, உலக கண்காணிப்புகள் தகர்ந்து போக, குழந்தைகளை புலிகள் வகைதொகையின்றி பலியிட்டனர். இறுதியுத்தத்தின் போது, ஆயுதத்தை குழந்தைகளின் கையில் திணித்து அவர்களை பலியிட்டனர் புலிகள். உங்கள் கவிதை வரிகளே இதற்கு சாட்சியமாக உண்டு. உதாரணமாக

"குழந்தைகள் போரிடுகிற களம் பற்றி
நான் ஒரு பரணியெழுதுகிறேன்?"

என்று கூறும் நீங்கள், புலிகளால் "வயது குறைந்த பிள்ளைகள் மீளவும் பெற்றோர்களிடம் சேர்க்கப்பட்டார்கள்" என்ற புரட்டை எப்படித்தான் சொல்ல முடிகின்றது?. இங்கு உங்களின் நேர்மை என்பது பொய்யாக, மக்கள் பற்றிய அக்கறை எல்லாம் போலியாகிவிடுகின்றது.     
 
யுத்தத்தில் புலிகள் பலியிடப்பட்டவர்கள் போக, சரணடைந்த புலிகளில் ஆயிரக்கணக்கில் குழந்தைகளும் அடங்கும். சரணடைந்தவர்களில் காணாமல் போனவர்களில், குழந்தைகளும் அடங்கும். "வயது குறைந்த பிள்ளைகள் மீளவும் பெற்றோர்களிடம் சேர்க்கப்பட்டார்கள்" என்பது பொய்யும் பித்தலாட்டமுமாகும். அது சர்வதேச சமூகத்தை ஏமாற்ற, வழமை போல் புலிகள் நடத்திய நாடகம்.

"எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை" என்று கூறிக்கொண்டு, அதை மக்கள் போராட்டம் என்பது மோசடித்தனமான அரசியலாகும். "நாங்கள் எங்கள் மக்களுக்காக நடத்திய போராட்டத்தை.." என்ற கூறுகின்ற அரசியல் அடித்தளத்தில் "நாங்கள்" என்பது யார்? "எங்கள் மக்களுக்காக" என்ற கூறுகின்ற "நாங்கள்", மக்களுக்கு வெளியில் போராட்டத்தை குத்தகை எடுத்துக் கொண்டு ஆட்டம் போட்ட புலிப் பாசிசத்தின் வக்கிரத்தை எடுத்துக் காட்டுகின்றது. ஆக இங்கு "நாங்கள்" என்ற லும்பன் கூட்டம் "எங்கள் மக்களுக்காக நடத்திய போராட்டத்தை" பற்றி நியாயப்படுத்தி பேசுகின்றது. இந்தப் பாசிசம் தன் சர்வாதிகாரத்தை தொடரவே "வீட்டுக்கொருவர்" என்று கூறி நாயைப்போல் குழந்தைகளை இழுத்துச் சென்றனர். இந்த புலிகளின் வக்கிரத்தைத்தான் "மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்" என்பதும், "அது சாதாரணமான உடன்பாடல்ல. மிகவும் கஸ்டமானது" என்பதும், "பெற்றோர்களே பிள்ளைகளைப் போராட்டத்தில் இணைப்பது என்பது மிகத் துயரம் தருவது." என்றும் கூறுகின்ற பின்னணியில், இது மக்கள் போராட்டமல்ல, புலிகள் தங்கள் சர்வாதிகாரத்தை தொடர நடத்திய வக்கிரம் என்பது வெளிப்படையானது. பேரினவாதம் நடத்திய இனவழிப்பை மக்கள் தங்கள் சொந்த வாழ்வில் உணர்ந்த போதும் கூட, மக்கள் அதை எதிர்த்துப் போராட முன்வரவில்லை. அதாவது அதை புலிகள் அனுமதிக்கவில்லை. புலிகள் மக்கள் போராடுவதை மறுத்ததுடன், போராட்டத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் மக்களை தமக்காக பலியிட்டனர். இதை "நாங்கள் எங்கள் மக்களுக்காக நடத்திய போராட்டம்" என்று புலிகள் கூறிக் கொண்டனர். இப்படி மக்களை ஒடுக்கியதன் மூலம், பேரினவாதத்துக்கு புலிகள் உதவினர்.

இப்படி தாங்கள் செய்ததை நியாயப்படுத்தும் போது "எப்படியாவது விடுதலை நோக்கி நகர்த்த வேண்டியிருந்தது. அதற்காகப் பல இழப்புக்களையும் வலிகளையும் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது." என்று கூறி இனவழிவை நடத்தி முடித்தனர். இங்கு "எப்படியாவது விடுதலை நோக்கி" என்று, விடுதலையை கொச்சைப்படுத்துகின்றனர். "எப்படியாவது" என்று கூறி, மக்களை ஒடுக்கி அடக்கிய புலிகளின் வாரிசாக தீபச்செல்வன் கொக்கரிக்கின்றார். "எப்படியாவது" என்று கூறும் இவரின் மக்கள் பற்றிய அக்கறை, வலதுசாரியத்தின் வக்கிரம். இந்த "இழப்புக்களும் வலிகளும்" இறுதியில் எதைத்தான் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது. இங்கு இன்றும் இதை சரி என்று சொல்கின்ற தீபச்செல்வனின் வலதுசாரியத்தின், மக்கள் நலன் என்ன என்பதைத்தான் இதனூடாகப்  பார்க்கின்றோம்.  தங்களை பாதுகாக்க மக்களை புலிகள் யுத்த பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்தவர்கள், அவர்களை பேரினவாத பாசிட்டுகள் மூலம் பலியிட்டு தம்மை காப்பாற்றத்தான் முனைந்தனர். மக்களையல்ல. "எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை" என்று கூறி இதைத்தான் செய்தனர். இது வெறும் புலிகளின் கதையல்ல, வலதுசாரிகளின் கதை இது. 

தொடரும்
பி.இரயாகரன்

1.புலி அரசியலுக்கு மக்களின் பிணம் தேவைப்பட்டது. தீபச்செல்வனின் அரசியலுக்கு எது!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 01)

 

2.வர்க்கம் கடந்து இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்கான குரல்கள், வர்க்கம் கடந்ததா!? மக்கள் சார்பானதா!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 02)

 

3.கடந்தகால விமர்சனம், சுயவிமர்சனமற்ற சாக்கடையில் தான் அரசியல் மிதக்கின்றது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 03)

 

 

4.தீபச்செல்வன் பற்றிய பொதுமதிப்பீடு மீதான அரசியல் திரிபு (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 04)

 

5.இனம் வர்க்கம் சார்ந்து குறுகிய வலதுசாரிய எதார்த்தம் தான் தீபச்செல்வனின் படைப்புகள் (தீபச்;செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 05)

 

6.தமிழ் மக்கள் தோற்றது என்? புலிகள் அழிக்கப்பட்டது ஏன்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 06)

 7."சிலர் போராட்டத்தைச் சரியாக உணராமல்" செயல்பட்டதால், தவறுகள் நடந்ததாம்! (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 07)