அண்டை நாடான நேபாளத்தில், அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரான நேபாள  மாவோயிஸ்டு கட்சியைச் சேர்ந்த  ராம் குமார் சர்மாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத் தொடக்கத்திலிருந்து தொலைபேசியில் கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன. தலைநகர் காத்மண்டு-வில்  இந்தியத் தூதரகம் நடத்திவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியிலிருந்து அவரது மகள் நீக்கப்படுவார் என்றும், நாங்கள் குறிப்பிடுவது போல் பிரதமர் தேர்தலில் செயல்படாவிட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் தொலைபேசி வழியாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் மிரட்டினர்.

 

ராம் குமார் சர்மா, முன்பு லோக்தாந்திரிக் என்ற மாதேசி பிராந்தியக் கட்சியில் இருந்தவர். பின்னர் மாவோயிஸ்டு கட்சியில் இணைந்த அவர், அதன் மத்திய கமிட்டி உறுப்பினராகவும் உயர்ந்துள்ளார். தற்போது நேபாளத்தில் நடந்துவரும் பிரதமர் தேர்தலில் மாவோயிஸ்டு வேட்பாளரான பிரசந்தாவை ஆதரிக்குமாறு நேபாள மாதேசி கட்சியினரிடம் கோரியதுதான் அவர் செய்த குற்றம். நேபாள பிரதமர் தேர்தலில் மாவோயிஸ்டு கட்சி வெற்றி பெறக் கூடாது என்பதே இந்தியாவின் நோக்கம். எனவேதான் இந்த மிரட்டல்.

கடந்த ஆகஸ்டு 7-ஆம் தேதியன்று தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்த ராம் குமார் சர்மா, இதனை ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து, பணம் கட்டிய பின்னர் திடீரென இடமில்லை என்று அவரது மகளை 11-ஆம் வகுப்பில் சேர்க்க மறுத்துள்ளது, பள்ளி நிர்வாகம். தனது உயிருக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு ராம் குமார் சர்மா அரசியல் நிர்ணய சபையிடம் கோரியுள்ளதோடு, நேபாள அரசாங்கத்திடமும் மனித உரிமை அமைப்புகளிடமும் முறையிட்டுள்ளார்.

இந்திய உளவுத் துறையினரும் இந்தியத் தூதரகத்தினரும் இவற்றை மறுத்த போதிலும், நேபாளத்தில் யாரும் இதை நம்பத் தயாராக இல்லை. ஏனெனில், நேபாளத்தின் உள்விவகாரங்களில் வெளிப்படையாகவே இந்தியா தலையிட்டு வருகிறது என்பது யாவரும் அறிந்த உண்மை.

நேபாள்“காந்திபூர்’’,”காத்மண்டு போஸ்டு” முதலான நாளேடுகளை நடத்திவரும் நேபாளத்தின் பெரிய பத்திரிகைக் குழுமமான காந்திபூர் பப்ளிகேஷன்ஸ், இந்தியாவின் தலையீட்டை அவ்வப்போது விமர்சித்து எழுதி வந்தது. இதன் தொடர்ச்சியாக, கனடாவிலிருந்து கொல்கத்தா துறைமுகத்துக்கு கடந்த மே மாதத்தில் வந்த அந்நாளேட்டுக்கான செய்தித்தாள் காகிதம், இந்திய உளவுத்துறையால் நேபாளத்துக்கு அனுப்பப்படாமல் ஒரு மாதத்துக்கும் மேலாக முடக்கி வைக்கப்பட்டது.  இதனால் அப்பத்திரிகைக் குழுமம் தொடர்ந்து நாளேடுகளை வெளியிட முடியாத நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இந்தியத் தூதர் ராகேஷ் சூட்-இடம் இப்பத்திரிகை நிறுவனத்தினர், தாங்கள் ‘ஆக்கபூர்வமான’ கட்டுரைகள் எழுதுவதாக உறுதியளித்த பின்னரே, பெட்டகங்கள் நேபாளத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்புத் தூதரான  ஷியாமா சரண், நேபாள அரசியல் நெருக்கடியைத் தீர்க்க ஆலோசனை கூறுவது என்ற பெயரில் நேபாளத்துக்கு வந்து பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களைச் சந்தித்துள்ளார். மாவோயிஸ்டுகளை ஆதரிக்கக் கூடாது என்று அவர் பல கட்சிகளிடமும் எச்சரித்ததாக நேபாள ஊடகங்கள் அம்பலப்படுத்தி செய்தி களை வெளி யிட்டன.

நேபாளத்தில் முடியாட்சிக்கு எதிரான பேரெழுச்சியைத் தொடர்ந்து, ஐ.நா.மேற்பார்வையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி, அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடந்தது. அதில் அதிக இடங்களைக் கைப்பற்றிய மாவோயிஸ்டுகள் ஏப்ரல் 2008-இல் தமது தலைமையிலான புதிய இடைக்கால அரசாங்கத்தை நிறுவினர். நேபாளத்தில் மன்னராட்சி தூக்கியெறியப்பட்ட போதிலும், மன்னராட்சியால் உருவாக்கப்பட்டு, மன்னராட்சியைக் காத்துவந்த நேபாள இராணுவம் அப்படியே தக்கவைக்கப்பட்டது, நேபாள மக்கள் எழுச்சியின் பலவீனமானமாகும். மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் நேபாளத்தில் தேர்தல்கள் நடந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரமில்லாத  அரசாங்கங்கள்கூட, இராணுவத்தின் துணையுடன் ஒவ்வொருமுறையும்  கலைக்கப்படுவதும் கவிழ்க்கப்படுவதும் ஏற்கெனவே நடந்துள்ளதால், இனி நேபாள இராணுவம் குடியாட்சிக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்று மாவோயிஸ்டுகள்  அறிவித்தனர்.

ஆனால்,  அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராகவும், புதிய இடைக்கால அரசின் ஒப்புதலோ, உத்தரவோ இல்லாமலும் மன்னராட்சியின் கீழிருந்த நேபாள இராணுவத்தின் தளபதியான ருக்மாங்கத் கடுவால், இந்தியாவின் ஆசியுடன் நேபாள இராணுவத்தில் 2800 பேரை தன்னிச்சையாகச் சேர்த்தார். பல இராணுவ அதிகாரிகளுக்குப் பதவி நீட்டிப்பு செய்தார். இது சட்டவிரோதமானது என்று மாவோயிஸ்டுகளின் அரசாங்கம் பிறப்பித்த உத்தரவை அவர் உதாசீனம் செய்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்குக் கட்டுப்பட மறுத்து, சட்டவிரோதமாகச் செய்யல்படும் இத்தலைமைத் தளபதியைப் பதவி நீக்கம் செய்ய மாவோயிஸ்டுகளின் அரசாங்கத்தின் பிரதமரான பிரசந்தா உத்தரவிட்டார். இருப்பினும், போலி கம்யூனிஸ்ட் கட்சியான மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நேபாள அதிபர் ராம்பரண் யாதவ், சட்டவிரோதமான வழியில் பிரதமர் பிரசந்தாவின் உத்தரவை ரத்து செய்து, இராணுவத் தலைமைத் தளபதி பதவியில் நீடிக்க உத்தரவிட்டார்.

நேபாள அரசியல் கட்சிகள், நேபாள இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து இந்தியாவின் ஆதரவுடன் திரைமறைவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபடுவதைக் கண்ட மாவோயிஸ்டுகள், கடந்த 2009-ஆம் ஆண்டு மே மாதத்தில் இடைக்கால அரசிலிருந்து பதவி விலகுவதாக அறிவித்தனர். நேபாள இராணுவத் தளபதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குக் கட்டுப்பட்டவரா, அல்லது அரசுக்கு மேலான அதிகாரம் கொண்டவரா? என்ற கேள்வியை நாட்டின் முன்வைத்து,  குடியாட்சியின் உயரதிகாரத்தை நிலைநாட்ட அரசாங்கத்துக்கு வெளியே மக்களைத் திரட்டிப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

மாவோயிஸ்டுகள் பதவி விலகிய பிறகு, நேபாளத்தின் போலி கம்யூனிஸ்ட் கட்சியான மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியும் நேபாள காங்கிரசும் கூட்டணி அரசை நிறுவின. மா-லெ கட்சியின் மாதவ குமார் நேபாள் பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்த அரசாங்கமோ வெளிப்படையாகவே இந்திய மேலாதிக்கத்தின் கைக்கூலி அரசாகவே செயல்பட்டது. அதன் துரோகங்கள்-சதிகளை எதிர்த்து நாடாளுமன்றப் புறக்கணிப்பு, தெருப்போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் -என  மாவோயிஸ்டுகள் தொடர்ந்து போராடி வந்தனர்.

நேபாள எழுச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் பதவிக் காலம் கடந்த மே 28- ஆம் தேதி முடிவடைந்திருக்க வேண்டும். இக்காலத்திற்குள் இந்த அவை அரசியல் சட்டத்தை எழுதி முடித்திருக்க வேண்டும். ஆனால் நேபாள காங்கிரசு, போலி கம்யூனிஸ்ட் மா-லெ கட்சி மற்றும் பிற கட்சிகள் தமது வர்க்க நலன் காரணமாக நேபாளத்தின் எதிர்கால அரசியல் சட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்பதில் மாவோயிஸ்டுகளுடன் முரண்பட்டு நிற்கின்றன. இக்கட்சிகள் முதலாளித்துவ ஜனநாயக அரசியல் சட்டங்களைக்கூட ஏற்கத் தயாராக இல்லை. இவற்றாலும், திரைமறைவில் நடந்த இந்தியாவின் மேலாதிக்க சதிகளாலும் அரசியல் நிர்ணய சபையில் அரசியல் சட்டங்களை இயற்றும் பணி நிறைவேறவில்லை.

இதனால் அரசியல் நிர்ணயசபையின் காலம் முடிவடைவதையொட்டி நெருக்கடி தீவிரமானது. பின்னர், கடைசி நேரத்தில் மூன்று பெரிய கட்சிகளான நேபாள ஐக்கியப் பொதுவுடமைக் கட்சி(மாவோயிஸ்ட்), நேபாள ஐக்கியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மற்றும் நேபாள காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பொதுக் கருத்துக்கு வந்தன. அதன்படி, அரசியல் நிர்ணய சபையை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பது, 2006-ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட அமைதி நடவடிக்கைக்கான ஒப்பந்தத்தை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பை அளித்து பொதுக் கருத்தின் அடிப்படையிலான தேசிய அரசை நிறுவுவது, மாதவ குமார் நேபாளை பிரதமர் பொறுப்பிலிருந்து விலக்குவது – ஆகிய மூன்று முடிவுகளை அறிவித்தன. இருப்பினும், அரசியல் நிர்ணய சபை நீட்டிக்கப்பட்ட மறுநாளே மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியும் நேபாள காங்கிரசும் தமது பழைய ஆட்டத்தைத் தொடர்ந்தன.

13 மாதங்கள் பதவியில் இருந்த பிரதமர் மாதவ குமார் நேபாள் கடந்த ஜூன் 30-ஆம்தேதி  பதவி விலகி,  அடுத்த பிரதமர் பதவியேற்கும்வரை தற்காலிகப் பொறுப்பில் இருந்த நிலையில், ஜூலை 21-ஆம் தேதி பிரதமர் பதவிக்கான தேர்தல் நடந்தது. பிரதமராக நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றிபெற 600 பேர் கொண்ட     நேபாள நாடாளுமன்றத்தில் 301 வாக்குகள் தேவை.

மாவோயிஸ்டுகள் 237 எம்.பி.க்களைக் கொண்டுள்ளனர். நேபாள காங்கிரசு 114 எம்.பி.க்களையும் மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி 109 எம்.பி.க்களையும் கொண்டுள்ளன.  இரு பெரும் கட்சிகளான மாவோயிஸ்டு கட்சியும் நேபாள காங்கிரசு கட்சியும் பிரதமர் பதவிக்கு தமது வேட்பாளர்களை அறிவித்தன. போலி கம்யூனிஸ்டு கட்சியான மா-லெ கட்சி, பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சி வேட்பாளரை ஆதரிப்பதாக எழுத்து பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது. அவ்வாறு ஆதரவு கிடைக்காததால் அக்கட்சி போட்டியிடவில்லை.

மாவோயிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்ட பிரசந்தாவும் நேபாள காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் துணைத் தலைவரான ராமச்சந்திர பௌதேலும் பெரும்பான்மை பெற முடியாமல் தோல்வியடைந்தனர். பிரசந்தாவுக்கு 242 வாக்குகளும் பௌதேலுக்கு 124 வாக்குகளும் கிடைத்தன. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மாதேசி கட்சிகளும் இதர சிறிய கட்சிகளும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. மா-லெ கட்சி நடுநிலை வகித்தது.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால், அடுத்த கட்டமாக மீண்டும் ஜூலை 23-ஆம் தேதியன்று பிரதமர் பதவிக்கான மறுதேர்தல் நடந்தது. அப்போதும் இதே அளவில்தான் பெரிய கட்சிகளின் வலிமை இருந்தது. மீண்டும் ஆகஸ்ட் 2,  6,  23 – ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து தேர்தல்கள் நடந்த போதிலும் யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் ஏறத்தாழ இதே நிலைமைதான் நீடித்தது. இப்போது மீண்டும் ஆறாவது முறையாக செப்டம்பர் 5-ஆம் தேதியன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஐ.நா.வின் அமைதி நடவடிக்கைக்கான அரசியல்பணித் திட்டக் குழுவின் (UNMIN) கண்காணிப்புக் காலமும் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடைவதால், இக்குழுவை நீட்டிக்கக் கோருவதா, வேண்டாமா என்பதையொட்டி மாவோயிஸ்டுகளுடன் இதர அரசியல் கட்சிகள் முரண்பட்டு நிற்கின்றன.

ஐ.நா. குழு கடந்த 2007 ஜனவரி முதலாக நேபாளத்தில் இயங்கி வருகிறது. மாவோயிஸ்டுகளின் செம்படையையும் நேபாள இராணுவத்தையும் இது கண்காணித்து வந்தது. ஓராண்டு காலத்துக்கு இப்பணி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நேபாளத்தில் புதிய அரசியல் சட்டம் நிறைவேறுவதில் தாமதமானதால், நேபாள அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் இக்குழுவை தொடர்ந்து நீட்டித்து வந்தது.

தற்போது நேபாள இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியான சத்ரமான்சிங் குருங், ஐ.நா.வின் கண்காணிப்புக் குழு இனி அவசியமில்லை என்கிறார். மேலும், நேபாள இராணுவம் என்பது ஐ.நா. கண்காணிப்பின் கீழ் இல்லை என்றும், நேபாள இராணுவம் புதிதாக ஆளெடுப்பையும் ஆயுதக் குவிப்பு செய்வதையும் ஐ.நா. குழு எதிர்ப்பதற்கு எவ்வித உரிமையுமில்லை என்றும் அவர் கொக்கரிக்கிறார்.

ஐ.நா.கண்காணிப்புக் குழுவை நீட்டிப்பதா, வேண்டாமா என்பதை நேபாளத்தின் குடியாட்சியும், குடியாட்சியின் முக்கிய அங்கமான நாடாளுமன்றமும்தான் முடிவு செய்யவேண்டுமே தவிர, நேபாள இராணுவம் அல்ல என்கின்றனர், மாவோயிஸ்டுகள். அமைதி நடவடிக்கைகள் நிறைவேறும்வரை ஐ.நா.குழு நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். ஆனால், நேபாள அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்திலும் நேபாள இராணுவத் தளபதியின் முடிவை ஆதரித்து, மாவோயிஸ்டுகளுடன் முரண்பட்டு நிற்கின்றன.

அமைதி ஒப்பந்தத்தைச் சீர்குலைத்து, தமது வர்க்க நலன்களுக்கு ஏற்ப நேபாளத்தின் பிற்போக்கு கட்சிகளும் புரட்டல்வாதக் கட்சிகளும் சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டு தொடர்ந்து துரோகமிழைத்து வருகின்றன. அரசியல் நிர்ணய சபையில் தனிப்பெரும் கட்சியான மாவோயிஸ்டு கட்சிக்கு அதிகாரமிக்க பதவிகளைத் தர இக்கட்சிகள் மறுக்கின்றன. மன்னராட்சியின் ராணுவத்தையே தற்போதைய நேபாளத்தின் இராணுவம் என்றும், மாவோயிஸ்டுகளின் 19,600 பேர் கொண்ட செம்படையை அதனுடன் இணைக்கமுடியாது என்றும் இவை வாதிடுகின்றன.  ஐ.நா.மேற்பார்வையில் செயல்படுத்தப்படும் அமைதி ஒப்பந்தத்தை மீறி, இப்போது இக்கட்சிகளின் ஆதரவோடு நேபாள இராணுவத்துக்கு ஆளெடுப்பதும் ஆயுதங்களைக் குவிப்பதும் நடக்கத் தொடங்கி விட்டன. இச்சட்டவிரோதச் செயலை அம்பலப்படுத்தி,  தாங்களும் செம்படைக்கு ஆளெடுப்பை நடத்தப் போவதாக மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். அவ்வாறு செய்தால் இராணுவம்-போலீசை ஏவி தடுத்து நிறுத்துவோம் என்று எச்சரிக்கிறது, நேபாளஅரசு

மன்னராட்சிக்கு எதிரான எழுச்சி உச்சநிலையை அடைந்த போது, மன்னராட்சி இனியும் நீடிக்க முடியாமல் முட்டுச் சந்துக்கு வந்தபோது, மாவோயிஸ்டுகளுடன் கூட்டணி கட்டிக் கொண்ட நேபாள அரசியல் கட்சிகள், இன்று அதை முறித்துக் கொண்டு மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நிற்பதையும், நிலைமை உச்ச கட்டத்தை எட்டிவிட்டதையும் இவையனைத்தும் நிரூபித்துக் காட்டுகின்றன. “மாவோயிஸ்டுகளை நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சியாக ஏற்க வேண்டுமானால், செம்படையைக் கலைக்க வேண்டும். போர்க்குணமிக்க இளம் கம்யூனிஸ்டு கழகத்தையும் கலைத்து விட வேண்டும். மன்னராட்சிக்கு எதிரான மக்கள் யுத்தக் காலத்தில் செம்படை கைப்பற்றிக் கொண்டு கூலி-ஏழை விவசாயிகளிடம் விநியோகித்துள்ள நிலப்பிரபுக்களின் நிலங்களையும் வீடுகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இவையனைத்தையும் நிறைவேற்றாதவரை புதிய அரசியல் சட்டத்தை நிறைவேற்ற இயலாது” என்று இக்கட்சிகள் பிரகடனப்படுத்தியுள்ளன.

இக்கட்சிகளின் துரோகத்தை அம்பலப்படுத்தி “நாட்டுப்பற்றுகொண்டோரும் இடதுசாரிகளும் ஜனநாயகக் குடியரசை ஆதரிப்போரும் அணிதிரள்க!” என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் மாவோயிஸ்டுகள் ஐக்கிய முன்னணியைக் கட்டியமைத்துப் போராட விழைகின்றனர். நேபாளத்தில் தேசிய-ஜனநாயக  கூட்டுத்துவ மக்கள் குடியரசை நிறுவவும், அதை அரசியல் நிர்ணயசபையில் சட்டமாக நிறைவேற்றவும் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.

2009-இல் குடியாட்சியின் உயரதிகாரத்தை நிலைநாட்டக் கோரி மாவோயிஸ்டுகள் பதவி விலகிய பிறகு, மாவோயிஸ்டுகள் தலைமையில் எந்தவொரு கூட்டணி அரசும் அமையக் கூடாது; இதர கட்சிகளின் தலைமையில் அரசு அமைந்தாலும் அதில் மாவோயிஸ்டுகளைக் கூட்டணி சேர்க்கவும் கூடாது  என்பதுதான் இந்திய மேலாதிக்கவாதிகளின் நோக்கம். இந்தியாவின் மேலாதிக்க நலன்களுக்கு எதிராக, சுதந்திரமாக-சுயாதிபத்திய உரிமையுடன் தனது சொந்த அரசியல் சட்டத்தை நேபாளம் உருவாக்கிக் கொள்ளக்கூடாது என்பதுதான் இந்தியா மற்றும் உலகெங்குமுள்ள பிற்போக்கு சக்திகளின் நிலைப்பாடாக உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, மீண்டும் கம்யூனிச சித்தாந்தம் தலைதூக்கக் கூடாது  என்ற வெறியோடு அமெரிக்கா  தலைமையிலான உலக முதலாளித்துவம் நேபாள உள்விவகாரங்களில் அதீத அக்கறை காட்டி தலையீடு செய்து வருகின்றது. இதனால்தான் மக்களிடம் செல்வாக்கிழந்துள்ள போதிலும், நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் அல்லாத இதர அரசியல் கட்சிகளை இந்தியாவும் உலக முதலாளித்துவமும் முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்துகின்றன. இதனால்தான் நேபாளத்தில் நிலவி வரும் நாடாளுமன்ற முட்டுக்கட்டை முடிவுக்கு வராமல், மீண்டும் புதிய நெருக்கடிகளும் இழுபறிகளுமாகத் தொடர்கிறது.

வரலாற்று ரீதியாகவும் பூகோள ரீதியாகவும் இந்தியாவுடன் பின்னிப் பிணைந்துள்ள சிறிய அண்டை நாடுகளின் சுதந்திரம்-சுயாதிபத்தியம் என்பனவெல்லாம் இந்தியாவின் நலன்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும், அவற்றை அடிமை நாடுகளாகக் கருதி தலையிட்டு மேலாதிக்கம் செய்வதையும் தனது இயல்பான நடவடிக்கையாகவே இந்தியா கருதுகிறது. இதற்கேற்ப நாட்டு மக்களிடமும் இம்மேலாதிக்கத்தை நியாயப்படுத்தும் கருத்தை ஊட்டி வளர்த்துள்ளது. இந்தியாவின் தலையீடு தெற்காசிய வட்டாரத்திலும் குறிப்பாக, நேபாளத்திலும் மேலும் மூர்க்கமாகி வருவதையும், இந்தியாவின் மேலாதிக்க நலன்களுக்கு ஏற்ப ஒரு பொம்மை அரசை நிறுவி, மாவோயிஸ்டுகளைத் தனிமைப்படுத்தும் உத்தியுடன் இந்தியா கீழ்த்தரமாக முயற்சித்து வருவதையும் நேபாள நிலைமைகள் உணர்த்துகின்றன.

___________________________________

- புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010