10042023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

ஈழவிடுதலையும் இடது நாட்டாமையும்……

மீள்குடியேற்றம் மீளாத்துயருள்
மீண்டதாயில்லை
வாள்கொண்ட கொடுமரசு வீழுமென
நாமிழந்ததோ கொஞ்சமில்லை
நீள்கின்ற வஞ்சகமும் குழிபறிப்பும்
மீளெழுந்து தொடர்கிறதோ……

குறுந்தேசியம் குதறியெமை
வெறுந்தரையில் வீழ்த்தியது போதாதாம்
புரட்சி வேடமிட்டு
புலத்தெழுந்தனர் நூறுமுக நா வல்லவர்கள்
என்னென்ன தத்துவ முத்துக்கள்
ஆய்வுகள்
புல்லரிக்க வைக்கும் புதுப் புதுத் தேடல்கள்
ஜயகோ செத்துப்பிளைத்த நாம்
மீளவும் சாகடிக்கப்படுகிறோம்……

பொத்தி வளர்த்த பிஞ்சுகளை
பொசுக்கி விற்றுத் தின்றவர் போய் முடிய
சுத்தி வளைத்து சுதந்திரத் தமிழீழத்தீ
மூட்டுவதாய்
இன்னம் எமை விற்றுப் புழைப்புக்காய்
புலியை விட
புத்தியில் வல்லவராம் குத்திக்கிழிக்கிறார்கள்….

பாரதத்து வளர்ப்புக் குஞ்சுகள்
இறக்கை முளைத்தும்
பறக்கமுடியா அடிமைகளாய் கட்டுண்டுபோயினர்…..
இந்திய நலன்
இராஜபக்சயிடம் தோற்கும்போது
இரத்தக்களரிக்காய் வளர்க்கப்படுகிறார்கள்

இடதுகளாம் இவர்கள்
ஏன் இனம் அழிந்தது
இனங்களின் ஜக்கியம் எப்படிச் சிதைந்தது
எதிரியை மறந்தனர்–இன்னம்
இடுப்பினுள் செருவிய நினைவுகளோடு
புலத்து வனப்பினுள் செழித்தபடியே
தட்டியெழுப்பும் அணிகட்குள்ளும் ஊடுருவி
மானுடம் பேச எப்படி முடிந்தது

ஊடக தர்மம் பேசும் உத்தமர்கள்
கொமிசார் டொன்கிஹோட்டே என்று
குதூகலித்து பதிவிட்டு
பின்னூட்டமிட்ட பெரும்தலைக்கு வயிற்றை குமட்டுகிறதாம்
நெஞ்சத்து அழுக்குகள் நீங்கும் வரை
வாந்தியெழுதி முடிந்தால் மனிதனாய் மீளுக…..

எஞ்சிய சிறுபொறிகளில்
மிஞ்சிய நம்பிக்கையும் தவிடுபொடியாய்
அஞ்சிய வாழ்வே அடுத்த தலைமுறைக்கும்
வாழ்க தோழமை……………………………

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்