Language Selection

அம்பாறையில் அவர் வெற்றி பெற்ற போது அந்தச்செய்தி எனக்கு கொஞ்சம் சுவாரசியமாகத்தான் இருந்தது.

அதற்கு மேலதிகமாக பியசேனவின் அரசியல் வரலாற்றையோ கொள்கை கோட்பாடுகளையோ நான் அறிய வெளிக்கிட்டதில்லை.

இந்தப் பியசேன பதினெட்டாவது திருத்தத்தை ஆதரிப்பதாகச் சொன்ன செய்தி வந்ததுமே அடுத்தடுத்து எப்படியான கருத்துக்கள் வரப்போகின்றன என்று ஊகிக்க முடிந்தது.

எனது ஊகத்தின் படி வந்து என் கண்ணில் பட்ட முதல் 

/தமிழர் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினரான சிங்களச் சகோதரர் திரு பொடியப்பு பியசேன, அரசுக்கு சார்பாக வாக்களித்தையிட்டு சிலர் ஏக்கமுற்றுள்ளார்கள். அப்படி திகைப்படைந்தவர்களுக்கு இன்னும் அரசியலில் முதிர்ச்சி போதாதே என்றே நாம் கருதலாம்./

என்ற இனிய வார்த்தைகளுடன் அறிவு முதிர்ச்சி, சிங்களவர் மீதான கனிவு முதிர்ச்சி எல்லாம் ஒருங்கே அமையப்பெற்றவராக எழுதத்தொடங்குகிறார் கட்டுரையாளர்.

கபடமும் காழ்ப்புணர்ச்சியும் இப்படிக் கனிவு முகமூடிதான் போட்டுக்கொள்ளும்.

/தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்களே அரசுக்கு ஆதரவாக இருக்கும் வேளையில், பியசேனவை அவரது தேசியத்தை காப்பாற்றும் ராஜபக்சாக்களுக்கு எதிராக வாக்களிக்குமாறு நாம் எதிர்பார்ப்பது மிகவும் குழந்தைப்பிள்ளைத் தனமாகும். /

 

என்று சொல்லி தெளிவாக விசயத்துக்கு வருகிறார். தமிழர்களே பேரினவாதத்துக்கு துணைபோகும் போது பியசேன எனும் சிங்களவர் போனது அதிசயமா என்கிறார்.

இங்கே கவனிக்க வேண்டியது, த.வி.பு தலைவர்கள் "அரசுக்கு" ஆதரவளிக்கிறார்கள் ஆனால் பியசேன "அவரது தேசியத்துக்கு" ஆதரவளிக்கிறார்.

இதில் சொல்ல வருவது என்னவென்றால், பேரினவாதம் = சிங்களவருடைய தேசியம் என்பதையே.


/தமிழர்களாகிய எம்மில் சிருக்கோ பலருக்கோ தமிழ் தேசியத்தில் அக்கறையில்லாது இருக்கலாம், ஆனால் பியசேன அவரது சிங்கள தேசியத்தை எதிர்த்து எம்முடன் நிற்க வேண்டுமென நாம் எதிர்பார்ப்பது ஜனநாயக பண்பாடுகளுக்கு புறம்பானது. /

 

என்று சொல்லி ராஜபக்சவின் நிகழ்ச்சிநிரல் = சிங்கள மக்களின் தேசியம் என்றும் சொல்லிவிடுகிறார் இந்த ஜனநாயகவாதி.

பேரினவாதம் = சிங்களவருடைய தேசியம்

ராஜபக்சவின் நிகழ்ச்சிநிரல் = சிங்கள மக்களின் தேசியம்

இந்த இரு சமன்பாடுகளும் மிகுந்த ஆபத்தான பொய்களாகும்.


சிங்கள மக்கள் பெருமளவில் ஏன் ராஜபக்சவை தேர்தல்களிலும் இன்றும் ஆதரிக்கின்றனர்?


சிங்களப் பேரினவாதம் ஏன் வேரூன்ற முடிந்தது?


சிங்களப்பேரினவாதம் இலங்கையின் ஏனைய சிறுபான்மை இனங்கள் மீது புரியும் அடக்குமுறைகளை பெரும்பான்மைச் சிங்களமக்கள் பேசாமல் பார்த்துக்கொண்டிருப்பதன் காரணம் என்ன?

குறிப்பிட்டளவு சிங்களவர்கள் தமிழ் மக்களை அச்சத்துடனும் சந்தேகத்துடனும் பார்ப்பது ஏன்?

எனும் கேள்விகளுக்கெல்லாம், சிங்களவன் அப்படித்தான். சிங்களவனின் ஒரே நோக்கம் தமிழரை ஒழிப்பதுதான் தமிழரை ஒழிப்பதென்று வந்துவிட்டால் சிங்களவர் எல்லோரும் ஒன்றுபட்டு ஒருமித்து பணிபுரிவர் என்றெல்லாம் சொல்லி மிக இலகுவாக கேள்விகளை மழுப்பி விடுகிறார்கள்.

இந்த மழுப்பல் மூலம் இவர்கள் செய்வது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையின் ஆழ அகலங்களையும் மூலங்களையும் அடிப்படைகளையும் முற்றாகவே மக்களிடம் மறைத்து மூடிப் பூசி மெழுகி தமிழ் இனவாதத்தை வளர்த்து அதில் குளிர்காய்வதுதான்.

இதன் விரிவாகவே தமிழகத்தில் "இத்தாலியாள்" என்றபடியாற்தான் சோனியா தமிழர்களை அழித்தாள் என்றும், ஆரியப்பிசாசுகள் தமிழரை அழிக்கின்ற என்றும் மலையாளிகளால் தான் இந்தியா தமிழரை அழிக்கிறதென்றும் கோசமெழுப்பப்படுகிறது.


தாமரை கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு கவிதை எழுதி இருந்தார். இந்தியா ராஜபக்சவுக்கு உதவித் தமிழரை அழித்ததால் இந்திய மக்கள் அனைவரையும் (குழந்தைகளைத் தவிர்த்து) பலி எடுக்க வேண்டும் என்றும் அந்த நாட்டின் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்து போகவேண்டும் என்றும் கூக்குரலிட்டது அந்தக்கவிதை. தாமரை அடுத்த கண்ணகியாகவே அதன் பின்னர் போற்றித்தூக்கிப் புகழப்பட்டார்.

ஆனால் இந்த "இத்தாலியாள்" கதை தொடக்கம் "தாமரைக் கண்ணகியின்" கவிதை வரைக்கும் உருப்படியாய் செய்தது ஒரு வேலையைத்தான். அது இந்திய ஆளும் வர்க்கம், தன்னுடைய நலன்களோடு சம்பந்தப்பட்ட பிராந்திய மேலாதிக்கத்துக்காக ஈழத்தில் போர்புரிந்து இத்தனை அழிவுகளை உண்டாக்கியது என்பதை முற்றாகவே மக்களின் அவதானத்திலிருந்தும் அறிவிலிருந்தும் மறைத்துத் துடைத்து மெழுகிவிட்ட அரும் பணியாகும்.

இதேபோன்றுதான் பியசேனவை வைத்து எழுப்பப்படும் தமிழ் இனவாதக் கோசம், சிங்கள இனவாதம் எவரின் நலனுக்காக ஊதி வளர்க்கப்பட்டது, எவரின் நலனோடு அது பின்னிப்பிணைந்தது, எப்படி அது சிங்கள மக்களுக்கு ஊட்டி வளர்க்கப்படுகிறது, அதை எதிர்கொண்டு தோற்கடித்து இலங்கையில் நிலையான அமைதியையும் நல்வாழ்வினையும் இனங்களின் சுய நிர்ணய உரிமைகளையும் எப்படி கண்டடைவது என்பது பற்றிய தேடல்களை எல்லாம் பூசி மெழுகி சிங்கள-தமிழ் இனப்பகையை ஊட்டி, எவருக்கெல்லாம் இந்த இனப்பகை வாய்ப்பாக அமைந்து வந்ததோ அவருக்கெல்லாம் மேன்மேலும் வசதி செய்து கொடுக்கும் வேலையைச் செய்கிறது.


ஓய்வாக வீட்டிலிருந்து அரசியல் கதைக்கும் தமிழர் முதல் இணையத்தில் எழுதும் தமிழர்வரைக்கும் மெல்வதற்கு இந்த பியசேன அவலையும் அதற்கொரு இனவாத உள்ளடக்கத்தையும் தமிழ் இனவாதிகள் வழங்க வெளிக்கிடுகிறார்கள்.

பியசேன தாவல்: சிங்களவன் எல்லாம் கொலைகாரன்.

ஹக்கீம் தாவல்: முஸ்லிம் எல்லாம் தொப்பி பிரட்டி.


என்று இந்த அவல் இனவாதச் சுவை ஊட்டப்பட்டுக் காலகாலமாக வழங்கப்பட்டு வந்தது போல் வழங்கப்படும்.


எத்தனையோ சிங்களவர்களும் முஸ்லிம்களும் தமிழரது சுயநிர்ணய உரிமையை ஆதரித்து நிற்பதும்


பதினெட்டாவது திருத்தம் இலங்கையில் எல்லா இனங்களும் இணைந்து எதிர்க்கும், போராடும் விடயமாக மாறியிருப்பதும்


சிங்களப் பேரினவாதம் பேசிக்கொண்டிருந்தவர்களே அதிர்ந்துபோய் நிற்கும் அடுத்த கட்ட பாசிச நிலையாகி நிற்பதும்


காட்டுப்புலியடித்த நாட்டுராஜாவின் நோக்கங்கள் மெல்ல மெல்ல மூளைச்சலவை செய்யப்பட்ட சிங்கள மக்கள் மத்தியிலேயே வெளுத்து வருவதும்


பேசிய தேசியமும், வாய்ச்சவடால் ஏகாதிபத்திய எதிர்ப்பும், பக்திப்பழமாகித் தூக்கியாடிய பவுத்தக் காவலன் பிம்பமும் புலியடித்ததும் எலிபிடித்ததும் எல்லாம் மெல்ல மெல்லக்கரைந்து உண்மை முகம் அதிகார வேட்கையே என்ற தகவல் மெல்ல மெல்ல இனபேதமின்றி கசிய ஆரம்பிப்பதும்


பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த ஆட்கள் என்னவெல்லாம் கூத்தாடுவார்கள் என்பது இன்னொருமுறை வெளிச்சத்துக்கு வருவதும்


இந்தியா அமெரிக்கா சீனா முதலான ஏகாதிபத்தியங்களின் கைகள் இந்த அதிகார வேட்கையோடு தம்மை எப்படி பிணைத்துக்கொண்டுள்ளன என்பது பற்றி சனங்கள் யோசிக்கப்பார்ப்பதும் 


எதுவும் மக்களின் கண்களுக்குத் தெரிந்துவிடக்கூடாதென்பதில் இருபக்க இனவாதிகளும் கவனமாகவே இருக்கின்றனர்.

 உண்மையான காரணம் இருக்கும் இடத்தை மறைத்து வேறொரு இடத்துக்கு பொய்யான எதிர்ப்பையும் கோசங்களையும் எறிவதன் மூலம் மிகத்திறமையாக மக்களை ஏமாற்றுகிறார்கள் சுயநலவாதிகள்.

தவறான அரசியல் பாதை என்பது மக்களிடம் பொய் சொல்வதிலிருந்தே ஆரம்பிக்கிறது. மக்களிடம் பொய் சொல்லிச்சொல்லியே பயணிக்கிறது.


இந்தப்பொய்களை உரித்து உண்மையான எதிரி இருக்குமிடத்தை தேடியறியவும் இனங்காணவும் நாம் அனைவரும் உழைக்காமற்போனால்

தொடர்ந்தும் சிங்களவன் கொலைகாரனாகவும் முஸ்லிம் தொப்பி பிரட்டியாகவும் தமிழன் குள்ளநரியாகவும் பயங்கரவாதியாகவும் சந்ததி சந்ததியாக இந்த நாட்டில் நாசமாக வேண்டியிருக்கும்.

கட்டுரை தமிழ் வின் தளத்தில் வெளியாகியுள்ளது. 

இனிச் சொல்லி வேலையில்ல, தமிழ்தேசியத்தை இறுகப்பற்றியபடி சிங்களவன் கொலைகாரன், 2500 ஆண்டு இராஜதந்திரப்பாரம்பரியத்தின் வழி எம் தாயும் தனிப்பெரும் காவல் தெய்வமுமான இந்தியாவையே மயக்கி வைத்திருப்பவன், கண்டால் தமிழனைக் கடித்துத் தின்றுவிடுபவன், சிங்களவனும் தமிழனும் ஒன்றாய் வாழ முடியுமா, சிங்களவன் பிறகு வந்த குடியம்மா, சிங்களவன் எப்போதும் சிங்களவனே என்று வறுத்துக்கொட்டப்போகிறார்கள்.

இவ்வளவு காலமும் சோரம் போன சிங்கள இடதுசாரிகளை மட்டுமே உதாரணம் காட்டி வந்த இவர்கள் இனி இந்தப்பட்டியலில் பியசேனவையும் சேர்த்துக்கொள்ளப்போகிறார்கள்.

இந்தப்பியசேன காசுக்கு ஆசைப்பட்டோ என்ன கண்றாவிக்கு ஆசைப்பட்டோ அல்லது வெருட்டுண்டோ இவர்கள் வாய்க்கு நல்ல அவலாக மாறி அநியாயம் புரிந்துள்ளார் என்பதுதான் உண்மை.

"தமிழர்களும் சிங்களவர்களும் இலங்கையில் சேர்ந்து வாழ முடியாது. சிங்களவர்கள் தமிழர்களை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள்"

என்பது இந்தத்தேசியவாதிகளின் அடிப்படையான தாரக மந்திரம். இந்த மந்திரத்தைச்சொல்லியே தமிழ் இனவாதத்தை இவர்களால் திறம்படக் கட்டியெழுப்ப முடியும்.

இந்த மந்திரத்தைக்கொண்டே தமிழ் மக்களை மூளைச்சலவை செய்து வாக்குகளை அறுவடை செய்து சுகபோகமாக வாழ்ந்துகொண்டதோடு மட்டுமில்லாமல் விடுதலைப்புலிகள் போன்ற அமைப்புக்களின் தடம் பிறழ்வுக்கும் காரணமாக அமைந்து முள்ளிவாய்க்கால் வரைக்கும் கொண்டுவந்து விட்டு அதற்கு அப்பாலும் வண்டியை ஓட்டிச்செல்ல முனைகிறார்கள்.

தமிழகத்திலும் இதே மந்திரத்தை ஓதிப் பலர் அதி நாயகர்களாக ஆகிவருவதுடன் காலகாலமாக இதே மந்திரத்தை ஓதியே இந்தியாவின் பிராந்திய ஏகாதிபத்திய நலன்களுக்கும் துணைபோயினர்.


தமிழ் வின் தளத்தில் வந்துள்ள இந்தக்கட்டுரை இவர்களது மனநிலையையும் நிகழ்ச்சிநிரலையும் அபாயத்தையும் புரிந்துகொள்ள அருமையானதோர் எடுத்துக்காட்டு.

 http://mauran.blogspot.com/