06032023
Last updateபு, 02 மார் 2022 7pm

நம் இளைஞர் சமுதாயம் நாளைய சரித்திரம் படைக்குமா? - செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 19-08-2010

உலகமயமாதலில் உலகம் உள்ளங்கையளவு,

உள்ளங்கையான இவ்வுலகின்–நம் வடகிழக்கு?

நம் இளைஞர் சமுதாயம் நாளைய சரித்திரம் படைக்குமா?

ஆகஸ்ட் 12- சர்வதேச இளைஞர் ஆண்டு. வட-கிழக்கின் கடந்த 3-தசாப்தங்களை தமிழ் இளைஞர்களின் ‘எழுச்சிப் போராட்டக் காலமாக’ கொள்ளலாம். எம் இளைஞர் சமுதாயம், தமிழ்த்தேசியம் வைத்த தவறான கொள்கை-கோட்பாடுகளுக்குள் விபரம் புரியாமல் மூழ்கியது ஓர் புறமிருக்க, மறுபுறம் அச்சமுதாயத்தின் விடுதலைப் போராட்ட உணர்வை, தியாகங்களை நாம் இச்சர்வதேச தினத்தில் நினைவு கூர்ந்து மதிக்கவேண்டும்.

புலிகளின் போராட்டத் தோல்வி மாவிலாறிலிருந்து ஆரம்பித்தது!. முள்ளியவாய்க்காலுக்கு ஊடாக நந்திக்கடலுக்குள் போய் சங்கமமாகிற்று. 300-மீற்றருக்குள்ளும் பிரபாகரன் தன்னைக் காபாற்ற சர்வதேசத்துடன் பேச, அதை மறுத்து, இதையும் ஊடறுத்துச் செல்லலாம் என ஆலோசனை கூறிய இளைஞர் சமுதாயத்தின் பெரும்பான்மையான போராளிகள் இன்று சிறைகளில். இவர்களில் பெண் போராளிகளின் சிறை வாழ்வு மிகக் கொடியது. அவர்கள் தம் இளமை வாழ்வை இப் பெரும் போருக்கு அர்ப்பணித்தவர்கள். அவ்வகையில் அவர்கள் மாவீரர்கள் தான்! ஆனால் சமகால நிலையில் அவர்களை பெற்றெடுத்த அத் தாயகத்தின் நிலை அந்தோ பரிதாபம்! அத் தாயகத்திலிருந்து- எம் இளைஞர் சமுதாயத்திற்கு அங்கிருந்து வரும் வலம்புரி பத்திரிகையின் உருக்கமான வேண்டுகோள் பாரீர்:

தமிழ் இளைஞர்களிடம் ஓர் அன்பு வேண்டுகோள்!

அன்புசால் இளைஞர்களுக்கு! அவசரமாக இக் கடிதத்தை எழுத வேண்டிய கட்டாயம். தமிழினம் படும் துயர்பற்றி எழுதுவதாக நீங்கள் நினைக்கலாம். அதுபற்றி எல்லாம் எழுத விருப்பவில்லை. எழுதாக் குறைக்கு அழுதால் தீருமா என்ன? எல்லாம் நடந்து முடியட்டும். நீதிஇ தர்மம், அறம் இருக்குமாயின்-இறைபரம் பொருள் உள்ளதாயின், இந்த மண்ணில் என்றோ ஒருநாள் தமிழ் மக்கள் உரிமை பெற்று பிரவாகம் அடைவர். அப்போது இதனைத் தடுப்பதற்கு யாராலும் முடியாமல் போகும்.

அவ்வாறில்லை தமிழ் மக்களாகிய நாம் துன்பத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டும் எனில், அது நம் தலைவிதி என்று நினைத்து விட வேண்டியது தான். இவ்வாறு இருப்பது புத்திசாலித்தனமா? என்று நீங்கள் கேட்டால் மிகப் பெரும் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ளேயே காட்டிக் கொடுப்போர் இருந்தனர். அதுபோல தற்போதைய தமிழ் அரசியலுக்குள்ளும் எத்தனையோ விதமானவர்கள்.

தமிழினம் அழிவைச் சந்தித்தாலும் அது பற்றிக் கவலை கொள்ளாமல் தங்கள் சுய இலாபத்தை மட்டுமே கண்ணும் கருத்துமாகக் கொண்டிருக்கும் பிரகிருதிகள். நிலைமை இதுவாக இருக்கும் போது தமிழினத்தை மீட்டெடுப்பது எங்ஙனம்? ஆகையால் எல்லாம் நம் தலைவிதி என்று நினைப்பதை விட வேறு வழியேதும் இருக்கிறதா? உலக நாடுகள் உதவும் என நினைத்து நினைத்து ஏமாந்து அழிந்து போனதைத் தவிர வேறு எதனைக் கண்டோம்?

ஆக சொந்தக் காலில் நிற்போம். நாமே எங்கள் சுதந்திரத்திற்கும் பொறுப்பென்பதை உணர்வோம். எனினும் எங்கள் அரசியல் எதிர்காலம் பற்றிச் சிந்திப்பதற்கு முன்னதாக, தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி ஒரு கணம் சிந்திப்பதே சாலச் சிறப்புடையதாகும்.

அன்புக்குரிய இளைஞர்களே! நாங்கள் முதலில் எங்களை அறிய வேண்டும். சந்தியில் நிற்பதும், மது அருந்துவதும், கையடக்கத் தொலைபேசியும்தான் எங்கள் சீவியம் என்றால் இந்த மண்ணில் நிகழ்ந்த தியாகங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகும். தென்பகுதி இளைஞர்களை ஒருகணம் பாருங்கள். யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத்தை ஈட்டுவதில் அவர்கள் காட்டும் அக்கறை, எத்தனை வடிவங்களில் அவர்கள் நம் மண்ணுக்கு வந்து எங்கள் நிதித் தேட்டத்தை அள்ளிச் செல்கின்றனர்.

ஆனால் நாங்களோ! எதுபற்றியும் கவலையற்றவர்களாக, மோட்டார் சைக்கிளில் ஓடுவதும் கையடக்கத் தொலைபேசியில் உரையாடு வதும்…! எப்படி எங்கள் எதிர்காலம் அமையும். அன்புசால் இளைஞர்களே! உங்கள் கைகளில்தான் தமிழினத்தின் எதிர்காலம் தங்கியுள் ளது. சுவாமி விவேகானந்தர் காட்டிய இளை ஞர்களாக நீங்கள் மாறவேண்டும்.

அரசியலின் வகைமையைத் தீர்மானிக்க வேண்டும். அறிக்கை விடும் கோமாளிகளாக எங்கள் அரசியல் இருப்பதை மாற்றி ஆக்கபூர்வ மான செயற்பாட்டை அமுல்படுத்தும் அரசியல் கலாசாரத்தைத் தமிழனத்தில் உருவாக்க வேண்டும். வாருங்கள் என்னருமை இளைஞர்களே! அகிம்சைப் பாதையில் அறிவெனும் ஆயுதத் தோடு அரசியல் களத்தில் குதியுங்கள்.

எம் இளையோருக்கு ஏனிந்த நிலை? புலிகளின் ஓடுக்கலில் இருந்த ஓர் சமுதாயத்திற்கு, அவர்களின் அழிவின் ஊடாக ஏற்பட்ட வெற்றிடம், சரியான சமூக விஞ்ஞான அரசியல் தளம் கொண்டு நிரப்பப்படவில்லை! மறுபுறத்தில் நாடுகடந்த ‘மணிஓடர்’ வருவாய் அவர்களை, கையடக்கத் தொலைபேசிகளாக-கவலையில்லா மோட்டார் சவாரிகளாய் மட்டுமல்ல, மது-மாது, கொலை-கொள்ளைக்காரர்களான–ஓர் பொறுப்பற்ற ‘லும்பன்’ சமுதாயம் ஆக்கியுள்ளது. இந்த தன்னார்ந்தச் சீரழிவிற்கு அரசின் திட்டமிட்ட துணைபோதலும் ஓர் பெரும் காரணியே! அத்தோடு உலகமயமாதலில் இவ்வுலகமோ, உள்ளங் கையளவு. இவ்வளாக குறுக்கிய-சுருக்கியுள்ளது, உலக மேலாதிக்கம் இவ்வுலகின் அரசியல்-பொருளாதாரத்தை!, மனித வாழ்வியலின், கலாச்சாரததை சீரழிவின் உச்சகட்டத்திற்கே கொண்டு சென்றுள்ளது. இதன் தொங்கு தசையாகியுள்ள நம்மவர்கள் நிலையும் இப்படி இப்படித்தான்! இதற்காக ஓட்டு மொத்த இளைஞர் சமுதாயமும் அப்படியல்லவே! இவர்களுக்கூடாகவேனும் நாளைய அரசியல் வேலையை நகர்த்த முடியும்! சிறு பொறி பெரும் காட்டுத் தீயை மூட்டும்!

**********

இலங்கை முஸ்லிம் மக்களின் ‘சிகப்பு ஆகஸ்ட்’?

இலங்கை முஸ்லிம் மக்கள் புலிகளால் தாங்கள் வெளியேற்றப்பட்டதை, படுகொலை செய்யப்பட்டதை ‘சிகப்பு ஆகஸ்ட்’ என அழைத்து நினைவு கூர்கின்றனர். தமிழ்த்தேசியத்தின் “கறுப்பு யூலை’போல் இவர்களின் ‘சிகப்பு ஆகஸ்ட்’.

1990–ஆகஸ்ட்- 01 அக்கரைபற்று 8 முஸ்லிம்கள் படுகொலை
ஆகஸ்ட்- 03 காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை
ஆகஸ்ட்- 05 அம்பாறை முல்லியன்காடு 17 முஸ்லிம் விவசாய்கள் படுகொலை
ஆகஸ்ட்- 06 அம்பாற 33முஸ்லிம் விவசாய்கள் படுகொலை
ஆகஸ்ட் -12 சமாந்துரை 4 முஸ்லிம் விவசாய்கள் படுகொலை
ஆகஸ்ட்- 12 ஏறாவூர் 116 பேர் முஸ்லிம் கிராம படுகொலை
ஆகஸ்ட்- 13 வவுனியா 9 முஸ்லிம்கள் படுகொலை

2006 ஆகஸ்ட் 01- மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம்

புலிகள் செய்த காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலைக்குசம்பந்தனின் மன்னிப்புக் கோரல்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் சுமார் 300 இற்கும் அதிகமானோர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் 1990 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இருபது வருடங்களுக்குப் பின் மன்னிப்புக் கோரி உள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோரி உள்ளார்.அவர் இது குறித்து முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:-

”இது ஒரு தவறுதான். 20 வருடத்துக்கு முன் இடம்பெற்ற இத்தவறுக்காக முஸ்லிம் சகோதரகளிடம் மன்னிபுக் கோருகின்றமையில் எமக்கு எவ்விதமான தயக்கமும் இல்லை.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சில நடவடிக்கைகள் விளங்கிக் கொள்ள முடியாதவை. அப்படியான ஒன்றாகத்தான் இப்படுகொலை உள்ளது.

ஆகா… அதுவும் 20-வருடத்திற்குப் பிறகு ஓர் மன்னிப்புக் கோரல். அதுக்கும் புலிகளுக்கு ஓர் அப்புக்காத்து வக்காலத்து வாங்கல். புலிகளின் நடவடிக்கைகள் உங்களால் விளங்கிக்கொள்ள முடியாதவைகள்தான்? குறுந்தேசிய இனவெறி அரசியலாளர்களுக்கு மற்றைய தேசிய இனங்களின் சுயநிர்ணயம்-அபிலாசைகள் விளங்கிக்கொள்ள முடியாத ஓன்றுதான்! தேர்தல் என்ற ஓன்று வந்திட்டால் சகலதையும் விளக்கமாக்குவீர்களே!

**********

தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஜெனரல் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்த இராணுவ குற்றவியல் நீதிமன்றின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளமுடியாது என ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இத் தீர்பினை இலங்கை அரசாங்கம் நேர்மையான விசாரணைகளுக்கு இடமளிக்காது ஒரு தலைப்பட்சமாக வழங்கியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெனரல் பொன்சேகா தரப்பு வழக்கறிஞர்கள் விடுமுறையில் உள்ளபோது இவ் வழக்கின் சாட்சியங்கள் பதியப்பட்டு அவசர அவசரமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்டவற்றை ஊடகவியலாளர் மாநாடொன்றில் தெரிவித்த அவர் வழக்கறிஞர்கள் விடுமுறையில் உள்ளபோது இலங்கை சட்டதரணிகள் சங்க விடுமுறைகளை பொருட்படுத்தாது மேற்கொள்ளப்பட்ட இவ்விடயம் தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கம் தனது பார்வையை திருப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் அங்கு பேசுகையில் கடந்த சில தினங்களாக நடந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இத் தீர்ப்பு திட்டமிட்ட வகையில் வழங்கப்பட்டுள்ளதாகவும், வழங்கறிஞர்கள் விடுமுறையில் உள்ளபோது ஜெனரல் தரப்பு வழக்கறிஞர்களின் பிரசன்னம் இன்றி சாட்சியங்கள் பதிவு செய்யபட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இரு நாட்களுக்கு முன்னர் இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய பா.உ அனுரகுமார திஸாநாயக்க இராணுவ நீதிமன்றினை காட்டு நீதிமன்று என வர்ணித்திருந்தார்.

நீங்கள் இதிலை வேறை, வழக்கறிஞர்கள இல்லாத் தீர்ப்பு, காட்டு நீதிமன்றம் என்கிறீர்கள், மகிந்தா எம் எதிர்கால இலங்கை எப்படியிருக்கப் போகின்றது எனச் சொல்கினறார் பாருங்கள்:

எமது தாயகம் இனிமேல் வெளிநாடுகளின் குப்பைகளை கொட்டும் இடமாக இருக்காது. மாறாக “மேட் இன் ஸ்ரீலங்கா” என்ற நாமத்தை உலகம் பூராவும் பறைசாற்றும் உற்பத்திகளை உருவாக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்!

உண்மையில் எதிர்கால இலங்கையில் இவரின் கம்பனியின் (“மேட் இன் ஸ்ரீலங்கா” ) தயாரிப்புக்கள்:

பாசிச சர்வாதிகாரத்தை நோக்கிய குடும்ப ஆட்சி, அதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கான ஆட்சேர்ப்பு. இதைக் கணக்கில் கொண்டு நிறை வேற்று அதிகாரப் பிரதமர்! நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சியென ரணிலுடன் (காதில் பூ வைப்பு) பேச்சுவார்த்தை, திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு, இதை நோக்கிய நவீனப் பேரினவாத உத்திகள், உற்பத்திகள் போன்றவைகளும், ஏற்கனவே வெளிநாடுகளால் கொட்டப்பட்ட குப்பை கூளக் கழிவூலங்களை, அப்புறப்படுத்தாமல் (எப்படி அப்புறப்படுத்துவது?) தற்போதைய இலங்கையை. அதி நவீன விபச்சார (அரசியல்-பொருளாதாரத்தில்) விடுதியாக்குவதறகான் கம்பனிகளின் உருவாக்கமே அவரின் “Made in srilanka”

**********

புதிய ஜனநாயகக் கட்சிப் பத்திரிகையின் ‘கொஞ்சுண்டு’ச் சமாச்சாரம்!

புதிய ஜனநாயகக் கட்சி, தற்போது மா.லெ. கட்சியாகியும் அதன் புதியபூமிப் பத்திரிகை, கோடம்பாக்க (கிசு-கிசு) சினிமாப் பத்திரிகை ‘றேஞ்சிற்கு’ வந்துள்ளது. பின் நவீனத்துவத்தை தவறான தலித்தியப்- பெண்ணிய அரசியலை விமர்சிப்பதில் தவறில்லை. அதை விடுத்து அதன் “வீஷேட நிருபர்” என்றெர்ருவர் ‘கொஞ்சுண்டு கற்பனையென’ ஏதேதோ புலம்புகிறார். அவர் கற்பனையில் பேசப்படும் பெரும் பொருள் தலித்தியம்-பின்நவீனத்துவம் பேசும் அ.மார்க்ஸை கிண்டலடிப்பதும், அவருக்கு ரவீந்திரன் (அறிஞர்) ‘பெட்டி தூக்கினார்’ என காழ்ப்புணர்வுடன் நக்கல் தொனி கலந்திட்ட எழுத்துமே! இதற்கு ஆதவன் தீட்சண்யாவின் அமைப்பை சேர்ந்த சில சி.பி.எம். முக்கியஸ்தர்கள் இப்படிக் கேட்கின்றார்கள்:

“கடந்தகாலங்களில் புதிய ஜனநாயகக் கட்சியின் தோழர்கள், அவர்களின் சொந்த-பந்த உறவுகள் தமிழகம் வரும்போது, அவர்களின் பெட்டிகளைத் தூக்கியதுமல்லாமல், அவர்களுக்கு தொண்டுழியச் சேவைகள் கூட செய்துள்ளோம். பொதுச்செயலாளர் செந்திவேல் கூட வந்து வைத்தியம் செய்த போது கூட நாம் எங்களுக்குள் இருந்த அரசியல்-தத்துவார்த்த முரண்பாடுகளை அப்புறம் வைத்து விட்டு தான், தோழமை உணர்வுடன் தான் உதவிகள் செய்தோம்”. இந் நோக்கில் தானே ரவியும் உதவி செய்தார் என்கின்றார்கள். இதில் புதியபூமி கண்டுபடித்துள்ள ‘புதிய ஜனநாயக’ அரசியல் தவறுதான் என்னவோ எனவும் வினவுகின்றார்கள்.

ஓர் தலித்தியப் பின்நவீனத்துவவாதி இப்படிச் சொல்கின்றார்:

டானியலையும் அ. மார்க்ஸையும் பார்ப்போம். டானியலின் கலை-இலக்கிய-அரசியலில் நுர்று வீதம் உடன்பாடு கொண்டவரல்ல மார்க்ஸ்., ஆனால் உங்களால் நிராகரிக்கப்பட்ட டானியலின் இறுதிக்கால (நிறைவான குடும்பம், செல்வம் போன்ற சகல வசதிகள் இருந்தும்) வாழ்வும்-மரணமும் அவருடன் இருந்தே நிறைவெய்தியது. பெரும், பொருளாதாரக் கஸ்டம், -வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும், மனம் கோணாது அப்பெரும் தொண்டுழீயத்தை தோழமை உணர்வுகொண்டு செய்து முடித்தார். ஆனால் நீங்களோ டானியலின் மறைவிற்கு ஓர் நேர்மையான அஞ்சலி கூட செய்யவில்லை. இதுதான் சண்முகதாசனுக்கும், கார்த்திகேசனுக்கும் நடந்தது. ஆனால் காலப்போக்கில் ‘புதிய அரசியல் ஞானம்’ கொண்டு அவர்களின் அரங்குகளில் தேசிய-சர்வதேச ரீதியில் மாபெரும் சொற்பொழிவுகள். இவையெல்லாம் முரண்பாடுகளின் சர்வவியாபகத் தன்மைகள் கொண்ட பெறுபேறுகள் எனச் சொல்லலாம் தானே? இந்நிலையில் ஏன் இந்த பெட்டி தூக்கும் ‘அடிமை குடிமை’ விமர்சனங்கள் என!

புதிய ஜனநாயகக் கட்சிக்காரர்களுக்கு இப்போ எல்லோரும் போய், ரவிதான் பிரதான எதிரியோ? ரவி அரசியலில், அரசியல் கருத்துகளில் தவறிழைத்தால் ஓர் இடதுசாரிக் கட்சி நடைமுறையைப் பின்பற்றலாம்தானே? ஏன் இப்படி தரம் தாழ்ந்த விமர்சனங்கள் என கே.ஏ. சுப்பிரமணியத்தின் குடும்பத்தினர் கவலையுடன் கேட்கின்றார்கள். ரவி தவறான தலித்தியத்திற்கு, பின்நவீனத்திற்கு எதிராக எழுதியுள்ளதைப் படிக்கவில்வையோ எனவும் கேட்கின்றார்கள்?. இப்படி இன்னும் பல….

கண்ணாடி வீட்டிற்குள் இருந்துகொண்டு, ஏன் இந்த கல்லெறிகின்ற வேலை!

தவறு என்பது தவறிச் செய்வது! தப்பு என்பது தெரிந்து செய்வது!

தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்! தப்பு செய்தவன்…! குறைந்தது சுயவிமர்சனமாவது செய்யுங்களேன்!

**********

ஈராக்கில் அதிகளவில் யுரேனியம் பாவித்ததை ஒப்புகொள்ளும்

UK Defense Secretary Liam Fox

S.M.அப்துல்லாஹ்

ஈராக்கில் ஐதான யுரேனியத்தை -depleted uranium-கொண்ட ஆயுதங்களை அமெரிக்காவும், பிரிட்டனும் பாவித்தமையை பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ்- Liam Fox- ஒத்துக்கொண்டுள்ளார். “UK forces used about 1.9 metric tons of depleted uranium ammunition in the Iraq war in 2003,” UK Defense Secretary Liam Fox said in a written reply to the House of Commons on Thursday, the Kuwait News Agency reported.

அதிகரித்துள்ள கேன்சர், பிறக்கும் குழந்தைகளின் ஊனம் போன்ற நோய்களுக்கான காரணங்களை உலக சுகாதார அமைப்பு- The World Health Organization- ஆராய தொடங்கியுள்ளது ஈராக்கில் 2000 டன் ஐதான யுரேனியம் அமெரிக்க, பிரிட்டன் ஆக்கிரமிப்பு படைகளால் பயன் படுத்த பட்டுள்ளது என்று அறிக்கைகள் கூறுகின்றன. ஈராக்கின் பலுஜா போன்ற பயங்கர அமெரிக்க தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களில் உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. அமெரிக்கா படு பயங்க இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே பிறக்கும் குழந்தைகளில் அதிகமானது உடற் குறைபாடுகளுடன் பிறப்பதாகத் ஈராக் மருத்துவ செய்திகள் கூறிவருகின்றது. இதில் குறிப்பாக அதிகமாக ஐதான யுரேனியம் பயன் படுத்தபட்டுள்ளது விரிவாக பார்க்க:

ஐதான யுரேனியம் அணு ஆயுதங்களுக்கும் அணு ஆலைக்கான எரிபொருள் தயாரிப்புக்கும் பயன்படுத்தும் யுரேனியம் பதப்படுத்தப்படும் போது விளையும் உபவிளைவாகும். காரீயத்தை விட 1.7 மடங்கு பாரமான ஐதான யுரேனியமானது பலமான தடைகளை ஊடறுத்து செல்வதற்கு உரிய ஆயுதங்களுக்கு சேர்க்கப்படுகின்றது. இது கதிரியக்கமுள்ள ஆவிமண்டலமான யுரேனியம் ஒக்சைட்டை உருவாக்குவதுடன்இ இது சுவாசிக்கப்பட கூடியதும் காற்றினால் கொண்டு செல்லப்பட்டு மண் இரசாயன தாக்கமுற்று உணவுத்தொடரிலும் பரவுதலுக்கான சாத்தியம் உள்ளது என்று .

பல டன் ஐதான யுரேனியம் அமெரிக்க, பிரிட்டன் ஆக்கிரமிப்பு படைகளால் குறிப்பாக பலுஜா பகுதியில் மிகவும் செறிவாக பயன்படுத்த பட்டுள்ளது ஐதான யுரேனிய ஆயுதத்தின் அபாயம் தொடர்பாகவும் அதிலிருந்து தம்மை பாதுகாப்பது தொடர்பாகவும் அமெரிக்க படைகள் நன்கு அறிந்திருந்தமையால் அவர்களுக்கு இந்த பாதிப்புகள் ஏற்படவில்லை.

ஈராக் அதிகரிக்கும் நோய்களுக்கும் ஐதான யுரேனியத்திற்கும் உள்ள தொடர்பை அண்மைக்காலம் வரை அமெரிக்கா மறுத்து வருகின்றது . பென்டகன் பேச்சாளரான கெனத் பெக்கன் வளைகுடா யுத்தத்தின் போது பாவித்த ஆயுதங்கள் குறித்து பரந்த ஆய்வை செய்துள்ளதாகவும், புற்று நோய்க்கான அல்லது வேறு உடல் நலக்கேடுக்கான அறிகுறிகளுக்கான சாட்சியங்கள் கண்டுபிடிக்கப் படவில்லை என குறிப்பிட்டுள்ளார். ஆனால் அமெரிக்க இராணுவ சுற்றாடல் கொள்கைகளுக்கான அமைப்பு 12 வருடங்களுக்கு முன்னர் வெளிவிட்ட அறிக்கையில் ” ஐதான யுரேனியம் உடலினுள் புகுந்தால் அது மருத்துவ விளைவுகளை உருவாக்கும் தன்மைகளை கொண்டுள்ளதாகவும், அதனுடன் தொடர்பாக இரசாயன கதிரியக்க அபாயம் இணைந்துள்ளதாகவும், ஐதான யுரேனியம் அண்மையிலுள்ள நபர்களுக்கு முக்கிய பாதுகாப்பின்மையை உருவாக்கும்” என குறிப்பிட்டுள்ளது.

விஞ்ஞானிகளும், சுற்றுசூழல் பாதுகாப்புவாதிகளும் நீண்ட காலமாக ஐதான யுரேனியம் உள்ளடங்கிய ஆயுதங்களை பாவிப்பதற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளதுடன், எதிர்கால சமுகம் மீதான கணிப்பிடமுடியாத அதன் விளைவுகள் தொடர்பாகவும் எச்சரித்துள்ளனர். 1999 இல் லண்டனில் நடந்த மகாநாடு ஒன்றில் பிரித்தானிய உயிரியலாளரான ரொஜர் கொக்கில் வளைகுடா யுத்தத்திலும், சேர்பியாவுக்கு எதிராகவும் அமெரிக்க, பிரித்தானிய படைகளால் பாவிக்கப்பட்டதால் 10.000 மோசமான புற்று நோயாளிகளை உருவாக்கியிருக்கும் என்ற தலைப்பில் கலந்துரையாட வேண்டும் என தெரிவித்திருந்தார் என்பது குறிபிட தக்கது.

**********


மன்மோகன், சோனியா, கருணாநிதியிடமும் இலங்கை போர்க்குற்ற விசாரணை வேண்டும்: பினாங்கு துணை முதல்வர் வலியுறுத்து

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அதிபர் மற்றும் அவரது தம்பிகள் தவிர இந்தியத் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங் , காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரும் சர்வதேச அரங்கில் விசாரிக்கப்பட வேண்டும் என்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி வலியுறுத்தினார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மலேசிய ஜனநாயக நடவடிக்கைக் கட்சியின் தலைவரும், பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வருமான பேராசிரியர் பி. இராமசாமி கூறியதாவது:

இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தின், இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழந்தனர். சர்வதேச போர் நெறிமுறைகளை காலில் போட்டு நசுக்கிவிட்டு தமிழர்களை இனப் படுகொலை செய்தது இலங்கை இராணுவம். இதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவத்தால் அங்கு நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு, இந்தியாவே உறுதுணையாக இருந்துள்ளது. இந்தியாவின் விரலசைவுக்கு ஏற்பவே இந்தப் போர்க்குற்றங்கள் அரங்கேறியுள்ளன. இதனை ராஜபக்சேவே கூறியுள்ளார்.

எனவே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் சிதம்பரம் , தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரது பங்களிப்பும் இதில் இருப்பது உறுதியாகிறது. எனவே இவர்களுக்கு எதிராகவும் போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், ஐ.நா. செயலர் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் இந்தியத் தலைவர்கள் மீதான போர்க் குற்றங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்றார்.

நியாயாமான கோரிக்கைதான்! தமிழகத் தமிழ் உணர்வாளர்கள், தங்களுக்கு ஏன் இப்படியொரு யோசனை வரவில்லையென மண்டையைப் போட்டு உடைக்கப்போகின்றார்கள். உண்மையில் பூரண விசாரணையொன்று நடைபெற்றால் இவர்களும் அதற்குள் அகப்படாமல் போகமாட்டார்கள். வீடு கொழுத்திய ராசாவிற்கு கொள்ளிக்கட்டை தூக்கிக் கொடுத்தவர்கள் இவர்களல்லவா?


 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்