Language Selection

எல்லோரும் இந்நாட்டு மன்னர் உலகின் ஒவ்வொரு தேசமும் ‘இந்நாடு’ என்பதற்குரியது. யாரும் யாரையும் ஆளுகை செய்ய இயலாது. எந்தத் தேசமும் வேறெந்த நாட்டினாலும் ஆளப்படவோ மேலாதிக்கம் செய்யப்படவோ முடியாது. ஒவ்வொருவரும் முழு ஆளுமை பெற்றவராக பரிபூரணத்துவம் பெற இயலும். பொதுவுடைமைச் சமூகம் சிந்தித்து ஒருவர் எல்லோருக்கும் ஆக, எல்லோரும் ஒருவருக்காக என வாழும் உன்னத எதிர் காலத்துக்கான விடிவெள்ளி முளைவிட்ட ஒரு காலம் அது.

 

அந்த காலம் நூற்றாண்டைக் கொண்டாடுவதற்கு ஓரிரு வருடங்கள் தான் உள்ளன. இத்தகைய நம்பிக்கை துளிர்விட்ட காலத்தில் “இனியொரு விதி செய்வோம், அதை எந்நாளும் காப்போம்” என்ற பிரகடனம் எழுந்தது. “தனியொருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்பதே அந்தப் புதிய விதி.

ஒருவரேனும் பட்டினியில் வாடாத புத்துலகம் படைக்கும் புதிய விதியை எந்நாளும் காக்கும் வல்லமை வாய்க்கவில்லை. நல்ல உள்ளம் படைத்தவனின் வறுமையும் தீயவர்கள் பெற்றுள்ள வளவாழ்வும் “நினைக்கப்படும்” என்றும், இரந்துண்டு வாழும் அவல வாழ்வை வகுத்த அரசியல் நெறியாளர் “பரந்து கெடுக” என்றும், “இரு வேறு உலகத்து இயற்கைளை” தமிழர் சமூகம் (திருக்குறள் வாயிலாக) சிந்தித்து இரண்டாயிரம் ஆண்டுகள் கடக்கவும் சில தசாப்தங்களேயுள்ளன. பலரைப் பல்லக்குச் சுமக்க வைத்த பல்லக்கில் சவாரி செய்த அவ்விய நெஞ்சத்துச் சுரண்டல் கும்பல் தமது சுகபோக வாழ்வை இலகுவில் இழந்துவிடமாட்டார். பழைய சுரண்டல் அமைப்பை பேணும் அவர்களது பல்வேறு சதிகளினால் புத்துலகம் படைக்கும் புதியவிதியை தொடர்ந்து முன்னேற்றத் திசையில் எடுத்துச் செல்ல முடியவில்லை.

 


ஆக, அவ்வப்போது சில புதிய விதிகள் அவசியப்படுவன. மறைந்த எமது கவி முருகையனும் “இனிச் சில விதிகள் செய்வோம்”  எனப்பாட நேர்ந்தது. இங்கு நாமும் வகுத்தாக வேண்டிய புதியதொரு விதியைப் பற்றிப் பேசுவோம்.

 

தேசிய இனப்பிரச்சினை பற்றிய புதிய விதி அவசியம்!

எமக்கு உள்ள தேசிய இனப்பிரச்சனை பெற்றுள்ள திருப்புமுனையில் வகுத்தாக வேண்டிய புதிய விதி எத்தகையது என்பதையே இங்கு நாம் விவாதிக்க வேண்டியுள்ளது. அது பலரும் ஏறிய குதிரை, முதுகொடிய விழுந்தடித்த அனுபவம் பற்றி அறிந்தும் புதிய சக்கடத்தாராக முயற்சிக்கவில்லை. இனியொரு புதிய விதி அவசியம் என்ற புரிதலுடன், அதற்கான தேடலைத் தூண்டும் விவாதக் களமாயே இது அமையும்.

முடிவுக்கு வந்த ஆயுதப்போராட்டம் முப்பது வருடங்களின் முன்னர் தொடங்கிய போது அதன் ஈர்ப்பில் எடுபட்ட நண்பர்களுடன் விவாதித்த நினைவுகள் உண்டு. முதற்கோணல் முற்றிலும் கோணல், ஈழ முன்னெடுப்பின் ஆரம்பத்தில் வெளிப்பட்ட கோட்பாட்டு நடைமுறை ஆகியவற்றின் கோணல் மாணல்களிலேயே இன்றைய வீழ்ச்சியின் அறிகுறிகள் வெளிப்பட்டன. அவற்றின் தவறுகள் குறித்து ஒரு எல்லைக்குள் விவாதிக்க முடிந்தது. கரணந்தப்பினால் மரணம். துரோகிப் பட்டத்துடன் வெடி விழாத விளிம்பு நிலை அறிந்தே பேச வேண்டும். தடி எடுத்தவன் (துப்பாக்கி தூக்கியவர்) முன் பக்தியுடன் பேச மக்கள் பழக்கப்பட்டிருந்தனர். பிறகு எங்கே விமர்சனங்களுக்கு இடம், தவறான திசையில் சவாரி செய்து முடங்கிப் போன நிலையில் இனியேனும் சரியான மார்க்கத்தை கண்டடைய ஏற்றவகையில் சுதந்திரமாக விவாதிக்க முடியும்.

இப்போதும் பட்டம் பதவிகள் சார்ந்து வாயடைக்கச் செய்வது இருப்பினும் பேசவேண்டியவற்றை பேசித்தான் ஆக வேண்டும். கேட்கத்தயாரில்லை எனில் பேசுவதில் பயனில்லையே தவிர, மண்டையில் போடுகிற நெருக்கடி தீர்ந்துள்ளதால் இப்போது சொல்வதைச் சொல்லிட முடியும்.

இப்படி பேசுவது போராட்டத்தை கொச்சைப்படுவதற்கல்ல. இன்றைய அவலநிலைக்கு இயக்கங்கள் வெளிப்படுத்திய சண்டித்தனமும் பல காரணங்களில் ஒன்றாக இருந்தது என்பது இரகசியமானதல்ல. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடாத்திய சர்வதேச தமிழ்ச்சிறுகதைப்  போட்டியில் முதற்பரிசு பெற்ற எஸ்.ரஞ்சகுமாரின் “நலகண்டம்”  சிறுகதை இந்தப் பேசுபொருளுக்கு உகந்த ஒரு எடுத்துக்காட்டு. முப்பது வருடங்களின் முன்னர் இயக்கங்கள் சமூக விரோதி என தந்திக்கம்பத்தில் கட்டி மரண தண்டனை தீர்த்த காலத்துக்குரிய ஒரு வீரன் (கிராமத்து சண்டியன்) பற்றிய கதை “நல கண்டம்” அப்போது அவனுக்கு முப்பது வயது. அந்தவகையில் கிராமச் சண்டியன் உருவாகும். முப்பது வருட வரலாறு கதையாகிறது.

“பழங்காலத்தில் முதல் களப்பலி கொடுக்கப்படுபவரின் துண்டிக்கப்பட்ட தலை” என, கதை முடிவுக்குப் பிந்திய குறிப்பாக நலகண்டத்தை எடுத்துக் காட்டியுள்ளார் சிறுகதையாசிரியர் ரஞ்சகுமார். அந்த வீரனின் (ஆசிரியர் அவ்வாறு கையாள்கின்றார்) முண்டம் ஓரிடத்திலும் தலை வேறொரிடத்திலுமாக  கொலையுண்டதைக் கதை காட்டியிருந்தது.

இந்த முதல் களப்பலியை ஏற்படுத்தியவர்கள் மக்கள் நலன் சார்ந்து, மக்களின் விடுதலைக்காக போராடினார்களா? மக்களை மந்தைகளாக மதித்து தமது சண்டித்தனத்தையே தேசியப் போராட்டத்தின் பேரில் துப்பாக்கி ஏந்தியவர்கள் நடாத்தி வீழ்ச்சியை வரித்துக் கொண்டார்கள். அந்தக் கிராமத்துச் சண்டியனின் களப்பலிக்குப் பிந்திய போக்கு என்ன?  “அதற்குப் பிறகு முப்பது வருடங்களாக நடந்தவை புதிதாக வேறு ஒன்றுமில்லை. ஏறத்தாழ எல்லாமே இதுவரை கூறியவற்றின் விஸ்வரூபங்கள் தான் என ஒரு வரியில் சொல்லிடலாம்” என “நவ கண்டம்”  கதை காட்டியிருப்பதை பொய் என்று சொல்ல  முடியுமா? அதுவரை இருந்த அந்த வீரன் ஒர கிராமத்தின் சண்டியன் அவனுக்குப் பிந்திய முப்பது வருடங்களின் விஸ்வரூபம், துப்பாக்கிச் சண்டியன் முழு உலகாளும் வல்லபத்துடன் நர்த்தனமாடி மா வீரப்பட்டத்துடன் களப்பலி ஆகும். சர்வலியாபக பயங்கரவாதமாய் இருந்தது.

பயங்கரவாதங்கள் ஒருபோதும் அதிகாரங்களைத் தகர்த்ததில்லை!

ஒரு புறம் சுரண்டும் கும்பல் தமது ஆட்சியைப் பழம்பொய்கள் கொண்டே நடாத்த முடியாத நெருக்கடி நிலையில் அரச பயங்கரவாதம், மறுபுறம் அதனை முறியடிக்கும் மக்கள் போராட்டங்களை எழவெட்டாதவாறு செய்யும் சண்டித்தன விஸ்வரூப பயங்கரவாதங்கள். பயங்கவாதங்கள் ஒருபோதும் அதிகாரங்களைத் தகர்த்ததில்லை, அவை ஏற்படுத்தும் மேட்டிமைத்தன அதிகாரம் மக்கள் மேல் மேலும் ஒரு சுமையாகும், அவ்வளவே!

எமது போராட்டம் தேசிய விடுதலைப் போராட்டமாக இருந்ததா? இருந்தது எனக் கருதி, மேற்படி ‘பயங்கரவாதம்’ எனச்சொல்வதை ஏற்க முடியாமல் குய்யோ முறையோ எனக்கூப்பாடு போடுகிறவர்கள் இருக்கிறார்கள். இனப்பற்றினால் எமது பக்க தவறுகளை மூடிக்கட்டி, எதிரியின் அடடூழியங்களை பேசினால் போதும் என்கிற அரசியலற்ற தரப்பினர் அவ்வாறு கூறுவதை விட்டுத் தள்ள  முடியும். தம்மை பெரும் புரட்சியாளர்கள் என வேடம் கட்டிய நாகரிகக் கோமாளிகளும் அப்படிச் சொல்வதுதான் வேடிக்கை.

தேசியப் போராட்டத்தை வலது சாரி அமெரிக்க மேலாதிக்கவாத சார்பு – பாஸிஸ புலிகள் கையகப்படுத்திய பின்னர், இடதுசாரி உணர்வு கொண்ட இயக்கங்கள் தவிர்க்கவியலாமல் தெற்கில் தஞ்சம் புகுந்தன. அவர்கள் பங்குக்கும் பல தவறுகள் இருந்த போதிலும், போராட்டத்தை பிற்போக்கான திசைக்கு இட்டுச் சென்ற புலிகளின் மக்கள் விரோதத்துடன் ஒப்பிடும் போது இரண்டாம் பட்சமானது. ஆயினும் ஆயுத வழிபாட்டு அதிப் புரட்சிவாதிகள் அவர்களை துரோகிகள் என முத்திரை குத்தி, என்ன இருந்தாலும் புலிகள் தேசிய இன விடுதலைக்காக போராடினார்கள் என்பதாகப் பார்க்கும் தவறைச் செய்கிறார்கள்.

இனி முன்னெடுக்கப்பட வேண்டிய தேசிய விடுதலை மற்றும் மக்கள் விடுதலைச் செயற்பாடுகளுக்கான மார்க்கத்தை வகுப்பதற்கு விடுதலைச் செயற்பாடுகளுக்கான மார்க்கத்தை வகுப்பதற்கு கடந்தகாலம் குறித்த தெளிவான கணிப்பு அவசியம். தேசியப்போராட்டம் என்பதாலேயே மக்கள் விடுதலைக்குரியதாக இருந்து விடுகிறதா என்ன? ஆண்ட பரம்பரையின் தேசியமும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் தேசியமும் ஒரே தன்மையானதா?

(தொடரும்)

http://www.ndpfront.com