இது ஒன்றும் கற்பனையல்ல. நிஜம். அண்மையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இந்திய பொலிசார் பிடித்த குகநாதனை விடுவிக்க, சபா நாவலன் அவரிடம் இந்திய ரூபா 30 இலட்சத்தைக் கோரினார். நடந்த சம்பவம் உண்மை. கைது, பேரம், ஊழல், இலஞ்சம் … இதில் சபா நாவலன் சம்மந்தப்பட்டது எல்லாம் உண்மை. இதன் பின்னணியில் உலவும் தகவல்கள் பல. பொய், புரட்டு, உண்மை, மூடிமறைப்பு என்று அனைத்தும் கலந்த தகவல்கள் வெளிவருகின்றது. அதைத்தான் இங்கு நாம் தொகுத்துத் தர முனைகின்றோம்.
கைது, கடத்தல், மிரட்டல், கட்டைப் பஞ்சாயத்து … மூலம் பல இலட்சங்கள் சம்பாதிப்பது, இலங்கை அரசியலில் ஒரு அம்சமாகிவிட்டது. இதற்குள் மாமா வேலை பார்த்து அரசியல் செய்வது, கட்டைப் பஞ்சாயத்து செய்து பணம் பண்ணுவது என்று, இடைத்தரகுத் தொழில்களும் புரட்சி அரசியலும் கூடத்தான் செழிக்கின்றது. இதைத்தான் சபா நாவலன் செய்தார். கடந்தகாலத்தில் இதை, பல தளத்தில் தொழிலாக செய்தவர் தான். நாம் அறிய முதன் முதலில் ஒரு நபரை பிடித்து வைத்துக்கொண்டு, அவரை விடுவிக்க கட்டைப் பஞ்சாயத்தை செய்த தகவல் இதுதான். தன்னுடன் அரசியலில் இருப்பவர்களுக்கு இதை நியாயப்படுத்த, மார்க்சியத்தை கையில் எடுத்து அவர் கூறிய விளக்கங்கள் வேறு. அது என்ன என்பதையும் பார்க்க முன், இதன் பின்னணியில் என்ன நடந்தது என்று முதலில் பார்ப்போம்.
முன்னாள் பாரிஸ் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியரும், முதல் ஜரோப்பிய தமிழ் தொலைக் காட்சியான ரீ.ரீ.என் நிறுவனத்தை நடத்தியவரும், இன்று டான் தொலைக்காட்சியை இலங்கையில் நடத்துபவருமான குகநாதனை, இந்தியாவில் பொலிசாரின் துணையுடன் சிலர் அவரை பிடித்து வைத்திருந்தனர். ஒருபுறத்தில் இதை கைது என்றும் கூறலாம். கட்டைப் பஞ்சாயத்து சார்ந்த, பொலிஸ் நடத்தும் இரகசிய மாபியாத் தொழில் என்றும் சொல்;லாம். 30 இலட்சம் தந்தால் விடமுடியும் என்று நாவலன் தொடர்பு கொண்ட குகநாதனின் முதல் ஜரோப்பிய தொலைக்காட்சியான ரீ.ரீ.என் யை, வழமை போல் புலிகள் மாபியா வழிகள் மூலம் கைப்பற்றியது முதல் பின்னர் எல்லாளன் படைப்பிரிவால் துரோகி என்று துண்டுபிரசுரமும் வெளியிட்டு அவரைத் துரோகியாக்கினர். இது போன்று பல கதைகள் உண்டு. புலிகள் வழமை போல் தாம் அல்லாதவரை துரோகியாக காட்டும் வரை, இவரும் பலரைப் போல் புலிக்கு ஆதரவாகத்தான் வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையை நடத்தி வந்தார். புலிகள் அவரைத் துரோகியாக்கிவுடன், அவரை தனிமைப்படுத்தி இந்த துறையில் இருந்தும் திட்டமிட்டு ஒதுக்கினர். இதன் பின் இன்று இலங்கையில் டான் தொலைக்காட்சியை அவர் நடத்துகின்றார். இப்படி இதற்கு நீண்ட அரசியல், உள்ளீடாக உள்ளது.
இந்த நிலையில் தனிப்பட்ட இருவருக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் தொடர்பான விடையத்தில் தான், குகநாதனை இந்திய பொலிஸ் பிடித்து வைத்துக் கொண்டனர். இப்படி இந்திய பொலிசாரின் துணையுடன், ஒரு மாதத்துக்கு முன் இந்த பணப் பேரம் நடந்தது. கைது என்பதன் பின்னணியில் பணப்பேரமாக இருந்ததால், இது கைதல்ல. இது கட்டைப் பஞ்சாயத்தாக பரிணாமத்தைப் பெற்று, மற்றொரு அரசியலாகின்றது. இதன் பின்னணியில் தமிழக புலியாதரவு பிழைப்புவாத தமிழ்தேசியக் கும்பல் இருந்துள்ளது. இவருடன் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஈடுபட்ட நபரின் தம்பி, சபா நாவலனின் இனியொரு இணையத்தில் "முற்போக்காக" (பெயர் தவிர்க்கப்படுகின்றது) தமிழ் தேசியம் பற்றி தொடர்ச்சியாக எழுதுபவர். இப்படி இதன் பின்னணியில் புலிசார்பு தமிழ்தேசியம் சார்ந்த சில வழக்கறிஞர்களும் தலையிட்டு, பணப்பேரத்தை நடத்தினர்.
இப்படி திடீரென பொலிசார் மூலம் பிடித்துவைத்துக் கொண்ட பின்னணியில் வழக்கறிஞர்கள், பொலிஸ் என்று ஒரு கூட்டு களவாணிக் கும்பல், திரைமறைவான பணப் பேரங்கள் நடத்தியிருக்கின்றது. இந்தக் கைது நடந்த அடுத்த ஒரு சில மணி நேரத்தில், அவருடன் சபா நாவலன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, 30 இலட்சம் தந்தால் உடன் விடுவிக்க முடியும் என்ற பேரத்தை நடத்துகின்றார். பாரிசில் உள்ள ஒருவரின் பெயரைக் (பெயர் தவிர்க்கப்படுகின்றது) குறிப்பிட்டு, அவர் பொறுப்பு நின்றால் உடன் அவரை விடுவிக்க முடியும் என்று பேரத்தை நடத்துகின்றார். இப்படி இந்த விவகாரத்தில் சபா நாவலன் மாமா வேலை பார்க்கின்றார். பல போட்டி மாமாக்கள் இந்த தொழிலில் இருப்பதால், இதன் பின் என்ன நடந்தது என்பதும், இது எப்படி முடிவுற்றது என்பதும் வௌ;வேறு கதைகள்.
இங்கு பொலிஸ், தமிழினவாதிகள் கூட்டாக பணப் பேரத்தை நடத்தினர். அதன் மாமாக்களில் ஒருவராக சபா நாவலனும் செயல்பட்டார். இந்த மாமா வேலைக்கு சிலர் தொழில் என்றும், சிலர் உதவி என்றும் கூட, ஆளுக்காள் விளக்கம் கொடுக்கலாம்.
இந்த விளக்கத்தைத் தாண்டியும் சபா நாவலன் இதற்கு ஒரு விளக்கத்தை, தன்னுடன் அரசியல் செய்வோருக்கு மத்தியில் கொடுத்துள்ளார். அதைத்தான் குறிப்பாக ஆராயத் தூண்டுகின்றது.
குகநாதன் குடும்பம் தான் தன்னை இதில் தலையிடக் கோரியதாக கூறியுள்ளார். இது ஒரு பொய். இவரை பொலிசின் துணையுடன் பிடித்து வைத்திருந்தவர்கள், இவரின் அரசியல் நண்பர்கள்.
குகநாதன் தான் இவரைக் கோரினார் என்று கூறிய சபா நாவலன், இதில் ஏன் தன்னை தலையிடக் கோரினர் என்றால், கடத்தியது மார்க்சிய இயக்கம் என்பதால்தான் என்றார். இப்படி இதை இனம் தெரியாத கடத்தல் என்று புதுக்கதையைப் புனைந்துள்ளார். இப்படி அவர் கூறிய தகவல்கள், யார் என்று எம்மை ஆச்சரியப்பட வைத்;தது.
குகநாதனை தமிழகத்தில் உள்ள மார்க்சிய இயக்கத்தில் ஒன்றுதான் கடத்தியதாகவும், தனக்கு இந்திய மற்றும் சர்வதேசிய மார்க்சிய இயக்கத்துடன் தொடர்புகள் இருப்பதால், தன்னை அடையாளம் கண்டு குகநாதன் தன்னை இதில் தலையிட்டு விடுவிக்கக் கோரியதாக கதை கூறியுள்ளார். அவர்களுடன் கதைத்து விடுவிக்கவே, தான் தலையிட்டதாக கூறியுள்ளார்.
இப்படி ஒரு மாதத்துக்கு முன் நடந்த இந்த விவகாரத்தின் பின்னனணயில்
1. என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளவும், அட யார் அந்த மார்க்சிய இயக்கம், அதுவும் தமிழகத்தில் என்று தகவல்களை நாம் திரட்ட வேண்டியிருந்தது.
2. ம.க.இ.க. வுடன் ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தை, சபாநாவலன் உள்ளடங்கிய குழு அறிவித்தும் இருந்தது. இந்த நேரம் இதை நடுச்சந்திக்கு நாம் கொண்டு வந்தால், அதைக் குழப்பவே இந்நடவடிக்கை என்று திரிப்பார்கள் என்பதால், இதைப்பற்றி எழுதுவதை நாம் பிற்போட்டோம். அந்த ஒருங்கிணைந்த போராட்டம் தொடர்பாக, நாம் அபிப்பிராயம் கூட சொன்னது கிடையாது. ஆனால் நாம் ம.க.இ.க. உடன் தொடர்பு கொண்டு, இதை அவர்கள் ஊடாக நிறுத்த முயன்றதாக, அவதூறு பொய்ப் பிரச்சாரம் வேறு இன்று செய்கின்றனர். இந்த ஒருங்கிணைந்த போராட்டத்தில், இலண்டன் போராட்டம் வீம்புக்கு நடத்திய விளம்பர போராட்டம் என்பது எமது அபிப்பிராயம். அந்தக் கோசங்கள் எவையும் சமூகத்தின் முன் கொண்டு சென்று, கிளர்ச்சி பிரச்சாரம் செய்து நடத்திய போராட்டமல்ல. வெறும் விளம்பர போராட்டம் என்பது எமது அபிப்பிராயம்.
3. பணம் கோரியது யார்? கடத்தியது யார் என்ற விடை எமக்கு தெரிய வேண்டியிருந்தது.
4. குகநாதனுடன் இது பற்றி உரையாடும் சூழலும் கிடைத்தது.
இப்படி இதன் பின்னணி தேடிய போதுதான், புலிப்பினாமி மாமாக்கள் தான் பொலிசின் துணையுடன் பிடித்து பணப்பேரத்தை நடத்தியது எமக்கு தெரியவந்தது.
இதில் ஈடுபட்ட சபா நாவலன் தன் மாமா தனம் மூலம் பொலிஸ் பிடித்து வைத்திருந்தவரிடம் பணத்தைக் கறக்க முனைந்ததை மூடிமறைக்க, தமிழகத்து மார்க்சிய இயக்கத்தை இழிவுபடுத்தி தன்னை நியாயப்படுத்துகின்றார். ம.க.இ.க. வின் தொடர்பு மூலம் நடத்துகின்ற அரசியல் ஒருபுறம், இதன் பின்னணியில் மார்க்சிய இயக்கத்தை சம்பந்தப்படுத்தி காட்டிய போது நாம் அதிர்ந்துதான் போனோம். "இனியொரு" மற்றும் "புதிய திசைகள்" முதலான அரசியல் பொதுத்தளத்தில், தன் "மார்க்சிய" அரசியலை தக்கவைக்க, இதற்கு இப்படி ஒரு முடிச்சு மாற்றித்தனமான மாமா கதையை அவிழ்த்துவிட்டுள்ளார்.
இதுதான் நாம் அறிந்ததும், இதில் தெரிந்து கொண்டதுமாகும். இதை அவர் மறுக்கலாம்! அவருடன் அரசியல் செய்பவர்கள் கூட மறுக்கலாம்! இதை நீங்கள் தனிநபர் அவதூறு என்று கூறலாம்! இதைப் பேசுவது அரசியல் நாகரீகம் அல்ல என்றும் கூறலாம்! சரி எதுவாக இருந்தாலும், இது தவறான வாதம் என்றால், சரி என்ன நடந்தது என்று நீங்களாவது கூறுங்கள். நாங்களும் அதைத் தெரிந்து கொள்ள தயாராக உள்ளோம்.
பி.இரயாகரன்
02.09.2010