மார்க்ஸ் சுட்டிக்காட்டியவாறு அரசு என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கும் கருவியாகும். அரசின் பிரதான பணி சுரண்டலைப் பாதுகாப்பதும் அடக்கப்பட்ட வர்க்கங்கள் சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராக எழுவதைத் தடுப்பதும் ஆகும்.

அரசின் காவல் நாய்களான ஆயுதப் படைகளின் கரங்களில் துப்பாக்கி இல்லாவிட்டால் சுரண்டல் ஒரு கணமேனும் நீடித்திருக்க முடியாது. ஆகவே மக்கள் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்றால் தம்மை ஒடுக்கி வைத்திருக்கும் அரசு இயந்திரத்தை ஆயுதப் பலங்கொண்டு உடைத்தெறிய வேண்டும். அதாவது அவர்கள் புரட்சியை நடத்தி அடக்குமுறையான முதலாளித்துவ அரசு இயந்திரத்தின் இடத்தில் தொழிலாளி வர்க்கத்தின் அரசு இயந்திரத்தை அமைக்க வேண்டும். இதனை மார்க்ஸ் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று அழைத்தார்.
 
பாராளுமன்றப் பாதையின் மூலம் சமாதான மாற்றத்தால் இதனைச் செய்ய முடியாது. புரட்சியின் மூலம்தான் செய்ய முடியும். பாராளுமன்றம் என்பது மூலதனத்தின் நிர்வாணமான சர்வாதிகாரத்தை அலங்கரிக்கவும் தொழிலாளர்களின் வர்க்க உணர்வை மழுங்கடிக்கவும் அவர்களை குழப்பியடித்து முட்டாளாக்கவும் ஆயுதப் படைகள் என்ற உண்மையான அதிகார ஆசனத்திலிருந்து அவர்களை திசைதிருப்பி விடவும் பிற்போக்கு வாதிகள் கண்டுபிடித்த ஒரு கருவியாகும். இது ஆயுதப் போராட்டத்திற்குப் பதிலாக வார்த்தைப் போராட்டத்தை வைக்கும் ஒரு முயற்சியாகும். எனவே பாராளுமன்றப் பாதையை உறுதியாக நிராகரித்து அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரேயொரு விமோசனப்பாதையாக புரட்சிப் பாதையை மேற்கொள்ள வேண்டும்.
 
இந்தக் கருத்துக்களை மேற்கொள்பவர்கள் புரட்சிவாதிகள். இவற்றை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது எதிர்ப்பவர்கள் திரிபுவாதிகள் அல்லது சீர்திருத்தவாதிகள். புரட்சிவாதிகளுக்கும் திரிபுவாதிகளுக்கும் இடையில் உள்ள அடிப்படை வித்தியாசம் இதுவாகும்.
 
தோழர்.சண்முகதாசன்