Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அறிவுசார் "மார்க்சிய" விமர்சனங்கள் சமூகத்தை மாற்றுவது கிடையாது. அது மாற்றத்தைக் தன்னளவில் கூட கோருவதில்லை. சமூகமாற்றத்தை முன்வைத்து முன்னெடுக்கும் மார்க்சிய விமர்சனங்கள்; தான், நடைமுறையில் வர்க்கப் போராட்டமாக மாறி கம்யூனிஸமாக மாறுகின்றது. இந்த இடைவெளியை புரிந்து கொள்ளாத நிலையில், புரிந்துகொள்ள முடியாத வண்ணம், அதை அறிவுசார் புலமை மூலம் இலங்கையிலும் புலத்திலும் புரட்டுகின்றனர். இந்த புரட்டுக்கு எதிராக நாங்கள் பாரிய தடையாக இருக்கின்றோம் என்பதை, அவர்களின் எதிர்வினை காட்டுகின்றது.

அறிவுசார் பிரமுகர்களின் விமர்சனங்கள், அதுவும் "மார்க்சியம்" சார்ந்த விமர்சனங்கள், கட்சி அல்லாத கட்சி செயற்பாடல்லாத தளத்தில் வைக்கப்படுகின்றது. இது வர்க்கப் போராட்டத்தை முன்வைத்து செயற்படுவது கிடையாது. இதனால் இவை எதார்த்தத்தில் பச்சோந்தித் தனத்தையும், எதார்த்தம் கடந்;த நிலையில் திடீர் விமர்சனங்களாக பெரும்பாலும் வெளிவருகின்றது.

இன்று இலங்கையில் வர்க்கக் கட்சி, வர்க்க நடைமுறையுடன் இல்லாத நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் வர்க்க நடைமுறையுடன் அதைக் கோராத விமர்சனங்கள், தொடர்ந்து தன்னை இந்த நிலையில் தக்கவைக்க முனைகின்றது. மார்க்சியம் செயலுக்குரியதல்ல, அறிவு சார்ந்த விமர்சனத்துக்குரியதாக அதை மட்டுப்படுத்துகின்றனர். இந்த எல்லையில் தான், தங்கள் இருப்புக்கு ஏற்ற "மார்க்சியத்தை" முன்வைத்து வர்க்கப் போராட்டத்தையும் மறுதலிக்கின்றனர்.

இந்த வகையில் வர்க்கக் கட்சி நடைமுறையை மறுப்பதுதான், அறிவுத்துறையின் அரசியல் எல்லையாக இருக்கின்றது. கட்சி இல்லாத எந்த நிலையிலும், ஆளும் வர்க்கத்துக்கு எந்தக் கவலையும் கிடையாது. இதைத்தான் "மார்க்சிய" பிரமுகர்கள் செய்கின்றனர். நாம் இதை மறுப்பதாலும், இதை அம்பலப்படுத்துவதாலும், எமக்கு எதிராக மார்க்சிய அறிவுத்துறை கூச்சல் போடுகின்றது.

இதன் மூலம் செயலற்றதும், செயலுக்குரியதும் என எதுவுமில்லை என்ற மயக்கத்தை உருவாக்கி, வர்க்க அரசியலுக்குரிய நடைமுறையை அரசியல் நீக்கம் செய்கின்றனர். செயலுக்குரியதை "கொமிசார்" தனம் என்று கொச்சைப்படுத்துகின்றனர். இந்த விடையம் மக்களை அணிதிரட்டும் கட்சி இல்லாத சூழலில் அரங்கேறுகின்றது.  செயலற்றதும் செயலுக்குரியதும், இன்று விமர்சன அரசியல் எல்லைக்குள் இருக்கின்றது. இதைப் பயன்படுத்தி செயலற்ற அறிவுசார் விமர்சனம், செயலுக்குரியதானதாக வே~த்தைப் போடுகின்றது. இன்று மார்க்சியத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் தளத்தில், இது காணப்படுகின்றது. இதுவே அரசியல் முரண்பாடாக வெடிக்கின்றது.

குறிப்பாக இலங்கையில் புலிப் பாசிசமும் அரச பாசிசமும் அக்கம்பக்கமாக இயங்கிய போதும் சரி, இன்று அரச பாசிசம் புலிப்பாசிசத்தையும் தனதாக உள்வாங்கி இருக்கின்ற நிலையிலும் சரி, சமூகம் சார்ந்த மக்கள் அரசியல் எந்த வகையில் நகர்ந்து இருக்க வேண்டும்? கடந்த 30, 40 வருடத்தில், நாம் எந்த வகையான அரசியலை முன்னெடுத்து இருக்கவேண்டும்? இது பற்றி அக்காலத்தில் செயலாற்றியவர்களின் அரசியல் நிலைப்பாடு என்னவாக இருந்தது? இதுபற்றிய அரசியல் விமர்சனங்கள் தான் என்ன?

அறிவுசார் விமர்சனத்தை செய்கின்ற "மார்க்சிய" பிரமுகர்கள், இதை ஆய்வு செய்வது கிடையாது. தாங்கள் இதில் ஆற்றிய அரசியல் பங்கு என்ன, என்று எதையும் சொல்வது கிடையாது. மார்க்சியவாதிகள் நிலவும் எந்த பொது சூழலிலும் சரி, குறித்த சூழலிலும் சரி, இயங்கு அரசியல் தளம் எப்போதும் அனைவருக்கும் இருந்தது. இதை யார் செய்தனர்? எப்படிச் செய்தனர்? கொஞ்சம் திரும்பிப் பார்த்து  சொல்லுங்கள்.

இப்படி இவற்றை மறுக்கின்ற, மூடிமறைக்கின்ற, வரலாற்றைப் புதைக்கின்ற, எல்லாவற்றையும் புதிதாக காட்டி செய்யும் பித்தலாட்டங்கள், அடிக்கடி அரசியலில் இன்று அரங்கேறுகின்றது. எதுவும் நடவாத திடீர் விமர்சனங்கள் மூலம், தம்மை நிலை நிறுத்துகின்றனர். எதார்த்தத்தில் பச்சோந்தித்தனத்தையும், எதார்த்தம் கடந்த நிலையில் வர்க்கப் போராட்டத்தை மறுத்த, பண்பான, வர்க்கம் கடந்த விமர்சனங்கள் மூலம் தம்மை முன்னிறுத்துகின்றனர்.

விமர்சனத்தின் மொழிப் பண்பைக் கூட, அந்த விமர்சனம் வர்க்கப் போராட்டத்தை முன்வைக்கின்றதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கின்றது. எதார்த்தம் சார்ந்த இயங்குதளத்தில் விமர்சனம் வர்க்கப் போராட்டமாக மாறும் போது, எதிரிகள் சூழவே அது நடக்கின்றது. இங்கு மொழியின் பண்பு கூட, முரணாகவும் எதிராகவுந்தான் பயணிக்கின்றது.  விமர்சன மொழி முதல் அதன் பண்பு வரை, அனைத்து வர்க்கமும் ஏற்றுக்கொண்ட அரசியல் பண்புத் தளத்தில் நடப்பதில்லை. இதில் இரண்டில் ஒன்றைத் தீர்மானிக்கின்றது. வர்க்கப் போராட்டத்தை நடைமுறை அரசியலாக கொள்ளாத அறிவுசார் "மார்க்சிய" பிரமுகர்களின் விமர்சனத்தில் இருந்து இது வேறுபட்டது.

வர்க்கப் போராட்டத்தை கோரும், கோராத விமர்சனம், அதன் பண்பு மற்றும் மொழியியல் ரீதியாக கூட வேறுபட்டது. விமர்சன உலகில் உடனுக்குடன் விமர்சனம் செய்வது, வர்க்க போராட்ட நடைமுறையில் இருந்துதான். அதை காலம்கடந்து திடீர் ஆய்வு செய்வது, நடைமுறையில் இல்லாத அறிவுஜீவிகளின் குறுகிய அறிவுச் செயலாக உள்ளது. இந்த இடைவெளியை இல்லாதாக்கவே, அறிவுத்துறை இன்று தன்னை முன்னிறுத்துகின்றது.

மார்க்சியம் என்பது வர்க்கப் போராட்டத்தை செய்வதற்காகத்தான். ஒரு கட்சியைக் கட்டுவதற்காகத்தான். மக்களை அணிதிரட்டுவதற்காகத்தான். ஆளும் வர்க்கத்தை எதிர்த்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகத்தான். இதையா அன்றும் இன்றும் சிவசேகரம் போன்றவர்கள் செய்தனர்!? செய்கின்றனர்!? சொல்லுங்கள். நாம் இந்த வகையில் தான் மார்க்சியத்தைப் பயன்படுத்துகின்றோம். கடந்த 30 வருட வரலாற்றில், இந்த வகையில்தான் அதை பார்க்கின்றோம், கையாளுகின்றோம். முதல் பத்து வருடங்களில் மக்களை அணி திரட்டும் அரசியல் பணியில் நாம் ஈடுபட்டோம். ஆனால் அன்னிய சக்திகளின் உதவியுடன் வீங்கி வெம்பி உருவான புலிப் பாசிசத்தின் விளைவால் நாம் கொல்லப்பட, சிலர் நாட்டைவிட்டே தப்பியோட வேண்டிய நிலையேற்பட்டது. இப்படி மக்களுடன் அதன் போராட்ட நடைமுறை இருந்தநிலை, பாசிசத்தால் முடிவுக்கு வந்த போது மார்க்சியவாதிகளாகிய நாம் என்ன செய்திருக்கவேண்டும்? தொடர்ந்தும் மக்களுக்கான போராட்டத்தை முன்வைத்து, அதை கிளர்ச்சியாக கருத்தாக எடுத்துச் சென்று இருக்கவேண்டும். இந்த வகையில்தான் நாம் செயற்பட முற்பட்டோம். இதைத் தவிர, வேறு குறுக்குவழி எம்முன் கிடையாது. நடந்ததை, நடப்பதை உடனுக்குடன் விமர்சனம் செய்வதன் மூலம், மாற்றுச் சிந்தனையை நடைமுறை மீது முன்வைத்தோம்.

ஊடகவியல் முழுக்க பாசிசத்தை தொழுது போற்றிய நேரத்தில், அதையே தேசியமாக காட்டி கட்டி அழுத நேரத்தில், அதன் மீதான விமர்சனத்தை உடனுக்குடன் மார்க்சிய கண்ணோட்டத்தில் முன்வைத்தோம். புலத்தில் புலிக்கு மாற்றான, ஒரு மாற்று அரசியல் செயல்தளத்தை நாம் எப்போதும் கோரி வந்தோம். வர்க்க அரசியலை துறந்த பச்சோந்திகளால், இந்தப் போராட்டம் என்பது குழுவாகவும், தன்னம் தனியாகவும் நடத்த வேண்டியிருந்தது.

புலியல்லாத மாற்று அரசியல் தளத்தில் இது கேலிக்குரியதாக, சாத்தியமற்ற ஒன்றாகவே புறந்தள்ளப்பட்டது. ஒருபுறம் புலிப்பாசிசம், மறுபுறம் மாற்றுத்தளம் என்பது அரசியல் இல்லாத இலக்கியமாகியது. இதுவே படிப்படியாக புலியல்லாத இலங்கை இந்திய கூலிக் குழுக்கள் உள்ளடங்கிய சந்திப்பாக மாறியது. இறுதியாக இலங்கை அரசின் போரை ஆதரிக்கும், பாசிசக் கும்பலாக மாறியது. புலிப் பாசிசம் எப்படி சிதைந்ததோ, அதுபோல் புலத்து மாற்று அரசியல் தளம் புலியெதிர்ப்பாக மாறி அரசு சார்பாக சிதைந்தது. இப்படி அரசியலற்ற இலக்கியச் சந்திப்பை முன்னிறுத்தி பெரும்பான்மை மகிந்தவுடன் ஓட்டிக்கொண்டது. இது நடந்த முடிந்துபோன மறுக்க முடியாத உண்மைகள். இதற்கு எதிரான எமது தனித்துவமான போராட்டம் சரியாக இருந்ததை வரலாறும் உறுதிசெய்துள்ளது. ஆனால் அரசியலற்ற கொசிப்பை வழிநடத்தியதற்கான பொறுப்பை, யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை, யாரும் சுயவிமர்சனம் கூட செய்யவில்லை. எல்லோரும் புது வே~ம் போடுகின்றனர்.

புலியிடம் தப்பி கொழும்பு போன்ற பிரதேசத்தில் தங்கி இருந்தவர்கள், படிப்படியாக மார்க்சிய  அரசியலைக் கைவிட்டனர். ஊடகவியலாளராக மாறி, இறுதியில் புலியின் வாலாக மாறினர். மார்க்சியத்துக்கு வெளியில் தேசியத்தைப் பற்றி அவர்கள் நிலைப்பாடு, புலிசார்பு நிலைப்பாடாக மாறியது.

இதற்கு வெளியில் மார்க்சியம் பேசிய கட்சி, 30, 35 வருடமாக வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டு, பிரமுகர் கட்சியாகவே நீடித்தது. பல்வேறு பாசிச நெருக்கடிக்குள்ளான  தேசியப் பிரச்சனைக்கு அப்பால், மலையகத்தில் கூட அவர்கள் வர்க்கப் போராட்ட அரசியலை  முன்னெடுக்கவில்லை.

இப்படியான பொதுநிலை எங்கும் காணப்பட்டது. பாசிசம் செயலூக்கமுள்ளதாக, தன் அமைப்புகளைக் கட்டிவந்தது. இந்தப்போக்குக்கு எதிரான எமது நிலை என்பது, வர்க்கப் போராட்டத்தை அரசியல் ஆணையில் வைத்தது. எமது விமர்சன அணுகுமுறை என்பது, வர்க்கப் போராட்டத்தைக் கோருவதை அடிப்படையாக கொண்டிருந்தது. இந்த வகையில்தான் சம காலம் பற்றிய விமர்சனத்தை மையப்படுத்தி வந்தோம்.

இதை யாரும் செய்யவில்லை, கோரவில்லை. இதுதான் மார்க்சியத்தை உச்சரிக்கும் மற்றவர்களுடான எமது முரண்பாடுகளில் ஒன்றாகும். நாங்கள் மார்க்சியத்தை அடிப்படையாக கொண்ட விமர்சனம் மூலம், பிரமுகராக இருப்பதை அரசியல் ரீதியாக மறுத்து வந்திருக்கின்றோம். பிரமுகராக இருக்கக் கூடியவர்கள், தம்மை ஓத்த மற்றவர்களுடன் இயல்பாக கொள்ளக் கூடிய சந்தர்ப்பவாதத்துடன் கூடிய மூடிமறைத்த அணுகுமுறையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இப்படி எமது போராட்டம் தனித்து, தனித்தன்மை வாய்ந்ததாக மாறியது. இதனால் எமக்கு எதிரான அரசியலே, மாற்று அரசியலின் அரசியல் உள்ளடக்கமாக இருந்தது. நாம் மட்டும் தான், புலியை மட்டுமல்ல புலியல்லாத மாற்று அரசியல் தளத்தில் பிற்போக்கு அரசியலையும் விமர்சிப்பவராக மாறினோம். இது அன்று மட்டுமல்ல, இன்றும் கூடத்தான்.

இதுவே எமக்கு எதிரான இன்றைய அரசியலாக உள்ளது. புலிக்கு வெளியில் கடந்த காலத்தில் நடந்ததை சரியாக அரசியல் ரீதியாக மதிப்பிடாமல், அதை சுயவிமர்சனம் செய்யாமல், யாரும் நேர்மையாக ஒருக்காலும் செயல்பட முடியாது. மூடிமறைத்த சந்தர்ப்பவாதம், புதிய சூழலுக்குள் தம்மை மூடிமறைத்து நிலை நிறுத்திவிட, எம்மை தொடர்ச்சியாகவே எதிரியாக காட்டுகின்றனர். இதைத்தான் அன்று முதல் இன்று வரை தொடர்ந்தும் சிவசேகரம் செய்கின்றார்.

சரி சிவசேகரம், சிவத்தம்பியின் விமர்சனங்கள் சமூகத்திடம் எதைக் கோருகின்றது?

எதையுமல்ல. தாம் சமூக மாற்றத்துக்காக முன்னின்று போராடாத வரை, அதை சமூகத்திடம் அவர்கள் கோர முடியாது. இந்த நிலையில், மார்க்சியம் கோரும் வர்க்கப் போராட்டத்தை மறுக்கின்றனர். ஆம் மார்க்சியத்தை மறுக்கின்றனர். மாறாக அறிவாக, தம் பிரமுகர்தன இருப்புக்கு ஏற்ப "மார்க்சியத்தைப்" பயன்படுத்துகின்றனர்.  

ஒரு கேள்வியாக உங்களிடம் கேட்கின்றோம். இவர்கள் அறிவுசார் "மார்க்சியத்தை" அடிப்படையாக கொண்ட விமர்சகர்களா!? அல்லது வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் கம்ய+னிஸ்ட்களா!? சொல்லுங்கள். இவர்கள் தாம் வைக்கும் கருத்தை, தம் சொந்த நடைமுறையிலும், மக்களை அணிதிரட்டும் போராட்டத்திலும், தம்மைத்தாம் ஈடுபடுத்துபவர்களா!? இல்லையா!? வர்க்கப்போராட்டத்தை முன்னெடுக்க விரும்பும் நீங்கள் சொல்லுங்கள். வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் நடைமுறைரீதியான கம்யூனிஸ்ட்டுகளல்ல இவர்கள். இங்கு மார்க்சியத்தை இவர்கள் பயன்படுத்தும் நோக்கம்தான் என்ன? அதைச் சொல்லுங்கள். வர்க்கப் போராட்டத்தைக் கோரும் எம்மை எதிர்ப்பது தான் ஏன்? சொல்லுங்கள்.

இவர்கள் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலை, தன் அரசியலாக கொண்ட கம்யூனிஸ்ட்டுகள் அல்ல. மாறாக மார்க்சியத்தை அறிவுசார் நிலையில், பிரமுகர் எல்லைக்குள் குறுக்கி, தம் குறுகிய நிலையில் முன்னிறுத்துபவர்கள்.

இருந்தபோதும் சிவசேகரத்தின் எழுத்துகள் நிராகரிப்படக் கூடியவையல்ல. எப்படி சிவத்தம்பியின் எழுத்தை நாம் நிராகரிக்க முடியாதோ, அது போன்றுதான் சிவசேகரத்தின் எழுத்தும். சிவத்தம்பி திரிபுவாத ருசிய மார்க்சியம் சார்ந்து, கடந்து போன சமூகம் பற்றிய விமர்சனத்தை, அறிவு சார்ந்த எல்லையில் எழுதியதை நாம் நிராகரிக்க முடியாது. இது போல்தான் கைலாசபதி சண்ணின் புரட்சிகர கட்சியை சார்ந்து எழுதிய எழுத்துகள், மற்றொரு பரிணாமத்தை தருகின்றது. அது போல்தான் சிவசேகரம் மார்க்சியம் சார்ந்த எழுத்தும். இவை சமூகம் பற்றிய ஒரு பக்கத்தை மூடிமறைத்துத் தருகின்றது. இந்தியாவில் கோ.கேசவன் விமர்சனம் போன்று. இதற்கு வெளியில் அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை போன்றோரின் எழுத்தையும் கூட நாம் நிராகரிக்க முடியாது. ஏனென்றால் இவை எல்லாம் சமூகம் பற்றிப் பேசுகின்றது. இதனால் நிராகரிக்க முடியாது.

ஆனால் இவை சமூகமாற்றத்தைப் பற்றிப் பேசவில்லை. அதாவது சமூக மாற்றத்தை தங்கள் கொள்கையாக நடைமுறையாக கொண்டு, அவர்கள் செயற்படவில்லை. மாறாக சமூகத்தை வியாக்கியானம் செய்கின்றனர். இந்த வகையில் அறிவு சார் எல்லைக்குள், இதை நிராகரிக்க முடியாதவையாகின்றது. எதார்த்தத்தில் இவர்கள் பெரும்பாலும் நிலவும் பிற்போக்கின் பின் நிற்பார்கள் அல்லது அதை எதிர்த்துப் போராடாது இருப்பதன் மூலம் அதற்கு உதவுவார்கள். உண்மையான வர்க்கப் போராட்டம் இவர்களுக்கு வெளியில் தான் எப்போதும் நடக்கின்றது.

இப்படி சமூகமாற்றத்தை முன்வைத்து செயற்படாத விமர்சன வியாக்கியானம் தான், இவர்களின் அரசியல் எல்லை. இயல்பில் அதன் செயற்படாத தன்மைக்கு ஏற்ப, எதார்த்தத்தை சந்தர்ப்பவாத எல்லைக்குள் நின்று அணுகுவதன் மூலம் அதை புதைக்கின்றனர்.  எதார்த்தம் என்பது, எப்போதும் எங்கும் வர்க்க மோதலைக் கொண்டது. பல்வேறு சக்திகள் இதில் முட்டி மோதுகின்றனர். இதில் இவர்கள் தம்மை அனுமதிப்பதில்லை. அதை பூசி மெழுகி வியாக்கியானம் செய்வார்கள். தாம் ஒரு வர்க்கத்தின் அணியில் நின்று, மற்றைய வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதில்லை. கவுரமான, மென்மையான, மதிப்புக்குரிய அறிவுசார் பிரஜைகளாக, மாற்றத்தை புரட்சியாக கோராது எதிரி முன் பவனி வருவார்கள்;. எதிரி வர்க்கம் போராடும் பாட்டாளி வர்க்கத்தைப் பார்த்துக் கூறும், அவர்களைப் போல் இணக்கமாக பண்பாக போராடும்படி. இன்றும் அதுதான் நடக்கின்றது.

சமூகமாற்றத்தை தனது அரசியலாக கொள்ளாத வியாக்கியான விமர்சனம், எதார்த்தத்தில் முரண்பட்ட வர்க்க பிரிவுகளை வியாக்கியானம் செய்யவோ விமர்சனம் செய்யவோ முன்வருவதில்லை. அதைச் சந்தர்ப்பவாதம் மூலமே எப்போதும் அணுகுகின்றது. சமூக மாற்றத்தைக் கோராத பிரமுகர்தனம் சார்ந்த இருப்பு, எப்போதும் எங்கும் சர்ந்தர்ப்பவாதத்தை அடிப்படையாக கொண்டது. அது மக்களைச் சார்ந்து நிற்பதில்லை. எதிரி பிரமுகர்களைச் சார்ந்து தான், தன்னை நிலைநிறுத்துகின்றது.

சமூகமாற்றத்தைக் கோராத பிரமுகர்தனம், பெரும்பாலும் தங்கள் வாழ்ந்த கால எதார்த்தம் பற்றிய விமர்சனத்தை, எதார்த்தம் கடந்த ஒரு காலகட்டத்தில் விமர்சனம் செய்கின்றது. மாறாக எதார்த்தத்தில் அல்ல. எதார்த்தத்தில் நடைமுறைவாதிகளாக, மக்களிடம் இவர்கள் செல்வதில்லை. இவர்கள் மக்கள் முன் பிரமுகராகவே இருக்கின்றனர். இன்று புலி பற்றிய விமர்சனத்தை, சிவத்தம்பியும் திடீரென செய்யமுடியும்;. இதைத்தான் சிவசேகரமும் செய்கின்றார். இன்று பலரும் செய்கின்றனர். இன்று மகிந்த குடும்ப பாசிசத்தைப் பற்றி, அதன் பண்பு  பற்றி வாய் திறக்கமாட்டார்கள். அப்படி திறந்தால் பட்டும்படாமல் பூசி மெழுகுவார்கள்.   இப்படி செய்வதன் மூலம் தான், தங்கள் கடந்தகால எதார்த்தத்தை மூடிமறைத்து சோக்குகாட்ட முடிகின்றது. இன்று நடந்து கொண்டு இருப்பது இதுதான்;.

புலத்தில் சிவசேகரம் என்ன செய்தார்? உண்மையான மார்க்சியவாதி என்ன செய்திருக்க வேண்டும்?

உண்மையான மார்க்சியவாதி புலத்து புலி வலதுசாரிய அமைப்புக்கு எதிராக, புலத்து மக்களைச் சார்ந்து மாற்று அமைப்பைக் கட்டியிருக்கவேண்டும். இதையா சிவசேகரம் செய்தார்? இல்லை.  இதற்கு எதிராக மார்க்சியமல்லாத புலத்து பிரமுகர்களைச் சார்ந்து நின்று, அதற்கு குழிபறித்தவர் தான் இந்த மார்க்சிய பேராசிரியர்.

இயக்க உள்முரண்பாடு, புலிகளின் இயக்க அழிப்பு, இந்திய தலையீடு என்று தொடர்ச்சியாக, சமூகத்துக்கு எதிரான எதிர்ப்புரட்சி போக்குகள் வளர்ச்சியுற்றது. இது பாசிச நிலை எடுத்த போது, மக்கள் சார்ந்த அரசியல் செயற்பாடு படிப்படியாக முடிவுக்கு வந்தது. அங்கு போராடியவர்களில் மரணித்தவர்கள் போக, எஞ்சியவர்கள் கொழும்பு மற்றும் புலத்தை நோக்கி புலம்பெயர்ந்தனர். அங்கு மக்கள் பக்கம் நின்று இயக்கங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள் தான், புலத்தில் இயக்கங்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை தொடங்கினர். பெருமளவில் புளட் உறுப்பினர்கள் இதில் ஈடுபட்டனர். இதுவே சிறு சஞ்சிகைகள் மூலம் மாற்று அரசியல் தளத்தை உருவாக்கியது.

மார்க்சியம் பற்றிய புரிதலை அரையும்குறையுமாக கொண்ட, அனுபவம் சார்ந்த முற்போக்கு பாத்திரத்தையே அவர்கள் தமது அரசியலாக்கினர். அவர்களின் நோக்கம் எங்கள் மக்களுக்கு இயக்கம் சார்ந்து நடக்கும் எதிர்ப்புரட்சியைப் பற்றி பேசுவதும், அந்த மக்கள் விடிவிற்கான புரட்சிகரமான மாற்றுப் பாதையை உருவாக்குவதும் தான். இதற்கு வெளியில் எந்த குறுகிய உள் நோக்கமும் அவர்களிடமிருக்கவில்லை.

ஆனால் இறுதியில் இதற்கு எதிராகவே, மாற்றுத் தளம் மாறியது. புலிகளின் இறுதி யுத்தத்தின் போது, மாற்று மக்கள் கோசத்தை வைத்து போராட தனிமனிதன் கூட மாற்று (இலக்கிய) தளத்தில் எஞ்சவில்லை. இது நடந்து முடிந்த உண்மை வரலாறு. ஏன் இப்படி நடந்தது. இதில் ஓட்டிக்கொண்டு, இதன் முன்னணி பிரமுகராக இருந்த சிவசேகரத்தின் அரசியல் பாத்திரம் என்னவாக இருந்தது?

புலத்தில் மாற்று அரசியல் செயற்தளம் தொடங்கிய முதல் பத்தாண்டுகளில், சிவசேகரம் இதனுடன் பயணித்தவர். இந்த மாற்றுத் தளத்தில் முக்கிய பிரமுகராக இருந்தவர். உண்மையில் மக்களுக்காக போராடியவர்கள், அதை முன்வைத்து உருவானதுதான் மாற்று அரசியல் தளம். ஏற்கனவே "மார்க்சிய" பிரமுகராக இருந்த சிவசேகரம் போன்றவர்கள் அதற்குள் ஓட்டுண்ணிகளாக ஓட்டிக்கொண்டு, தாம் பிரமுகர்தனமாக இருத்தலையே மாற்று  அரசியலாக்கினர். இதைத்தான் சிவசேகரத்தின் "மார்க்சியம்" அன்று புலத்தில் செய்தது.

"மார்க்சியவாதியாக" தன்னை அடையாளப்படுத்தும் சிவசேகரம், இதைத்தான் செய்தார். மக்களுக்காக ஏதோ செய்ய வேண்டும் என்று உண்மையான நோக்குடன் அரைகுறை மார்க்சியத்தை புரிந்து கொண்டு வந்த இளைஞர்களை, அறிவூட்டி வழிகாட்ட வேண்டிய சிவசேகரம், அவர்களையும் பிரமுகராக மாற்றும் சீரழிவுப் பாதையில் தள்ளினார். இந்த வகையில் சண்முகரத்தினம் (சமுத்திரன்) செயல்பட்டார். இருவரும் மார்க்சியத்தை பேசிக் கொண்டு, வலதுசாரியத்தை இடதுசாரியமாக நக்கிக் காட்டித் திரித்த மு.நித்தியானந்தன், வ.ஐ.ச.ஜெயபாலன் சேர்ந்து அரசியலற்ற பிரமுகர்களின் இலக்கிய சந்திப்பாக புலியல்லாத அரசியல் தளத்ததை சீரழித்தனர். இவர்கள் அதன் முக்கிய பிரமுகராக இருந்ததுடன், அரசியல் நீக்கம் செய்த இலக்கிய சந்திப்பு, வர்க்கம் சார்ந்த மார்க்சியத்தை முதலில் துறந்தது. இப்படி புலியல்லாத மாற்று அரசியல் தளத்தை புலம்பெயர் சமூகம் இழந்தது. இறுதியில் மாற்று என்றால், இலங்கை அரசை ஆதரித்து புலியை அழித்தலாக மாறி எதிர்ப்புரட்சி கூறாகியது. இது வரலாறாகிவிட்டது. இதன் பின்னணியில், குறைந்தது முதல் பத்து வருடங்கள் சிவசேகரம், சண்முகரத்தினம் போன்ற பிரமுகர்கள், தம் பிரமுகர்த்தன "மார்க்சிய" அறிவால் தம் சந்தர்ப்பவாதத்தால் அதைக் குட்டிச் சுவராக்கினார். புலிகளின் இறுதி அழிவின்போது, மக்களை சரியாக வழிநடத்த, ஒரு மாற்று அமைப்புக் கூட கிடையாது. இதைத்தான் சிவசேகரம் புலத்தில் முன்னின்று செய்தவர்.

நாங்கள் புலம் பெயர்ந்த ஆரம்பம் முதலே, இந்தப் போக்குக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வந்தோம். மார்க்சிய சிவசேகரம் தம் பிரமுகர்தனத்தைப் பாதுகாக்க, எம்முடன் அன்று முதல் மூட்டி மோதினார். அக்காலகட்டத்தில் அவர் அதனுடன் சேர்ந்த பயணித்ததுடன், சீரழிவை வழிநடத்தியவர். மாற்று என்பது மார்க்சியமல்லாத பிரமுகர்களை தக்கவைத்தல் என்ற நிலையையே உருவாக்கினார்கள். அரசியலைக் கைவிட்டு செல்லும் போக்கை ஊக்குவித்த அதை வழிநடத்தினர். இதையெல்லாம் எங்கே, எப்போது நேர்மையாக விமர்சனம் செய்துள்ளனர்?

இறுதியில் அவர் அவர் தன் கருத்தை முன்வைப்பதை அடிப்படையாக கொண்ட கும்பல் போக்கே, மாற்றாகியது. இங்கு கருத்தல்ல என்ற அரசியல் பரிணாமத்தை அது பெற்றது. எதிர்ப்புரட்சிக் கருத்தை முன்வைக்கும் உரிமை முதல் இலங்கை இந்திய கூலிக் குழுக்களும் தங்கள் கருத்தை இதற்குள் வைக்கும் உரிமை வரை, அதுவே மாற்றாக வளர்ச்சிபெற்றது. புலியெதிர்ப்பு இதன் அடிப்படையான அரசியல் கொள்கையாகியது. மார்க்சியம் பேசிய பிரமுகர்களின் சந்தர்ப்பவாதிகளின் இருத்தல் உடன் தான், இது புளுத்தது. உதாரணமாக அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்குச்சீட்டில் படம் கீறக் கோரிய பிரமுகர் மார்க்சியம், அடுத்த மாதம் நடந்த தேர்தலில் வாக்குச்சீட்டில் புள்ளடிபோடக் கோரியது. இப்படித்தான் கடந்த 40 வருடமாக புரட்சி செய்ய வழிகாட்டினர்.

புலிகளின் பாலசிங்கம் போல் தான், சிவசேகரம் மா.லெ.பு.ஜ.க.யின் கட்சியின் பிரமுகர். சிவசேகரம் இலங்கை செல்லும் வரை, புலத்து மாற்றுத்தளத்தில் இயங்கியவர், எந்த கட்டத்திலும் அதை விமர்சனம் செய்யவில்லை. ஏன் சுயவிமர்சனமும் கூட செய்யவில்லை. அதன் முன்னணி பிரமுகர்களையும், அதன் பிற்போக்கான வர்க்க கூறுகளையும் கூட விமர்சனம் செய்யவில்லை. அப்பட்டமாக அதில் கூடிக் கும்மியடித்து, மார்க்சியத்தை மறுத்தபடி மார்க்சியம் பேசிய சந்தர்ப்பவாதியாகவே அதனுடன் பயணித்தவர். இலக்கிய சந்திப்பில் தொடர்ந்து தங்கள் பிரமுகர்தனத்தை தக்கவைக்கும், சந்தர்ப்பவாத அரசியலை தன் சொந்த எதார்த்தம் மீது வைத்தவர், மார்க்சியத்தை அதன் எதார்த்தத்துக்கு வெளியில், எதார்த்தத்தில் யாரும் புண்படாத வண்ணம் பண்பாக பேசிக்கொண்டு சமூகத்துக்கு குழி பறித்தார். தன்னை ஓத்த பிரமுகர்களுடன் கூடி, கும்மியடித்தபடி பண்பாக நாகரிகமாக நடந்துகொண்டவர், சொந்த மக்களுக்கு சவக்குழி பறித்தார். மக்களின் அவலத்துக்கு மாற்றாக, அவர்களுக்கு ஒரு வழியைக் காட்ட முனையவில்லை. ஒரு மனிதனாக மக்களுடன் நின்று அவர்களுக்காக போராடாதவர், பிரமுகர்களுடன் கூடிக்குலாவி மார்க்சியத்தைக் கூவினர்.

புலிப் பாசிசத்தை எதிர்கொண்டு போராடக் கூடிய நிலைமை புலத்தில் காணப்பட்டது. அதை இந்தக் கும்பல் நிராகரித்து, அறிவுசார் பிரமுகர்தனத்தையே தக்கவைக்க, தங்கள் சந்தர்ப்பவாதம் மூலம் வர்க்கம் கடந்து எல்லோரும் எல்லோருக்கும் நல்லவராக பவனி வந்தனர். புலத்தில் மாற்று மக்கள் அரசியலை முன்வைக்கவும், அதனடிப்படையில் புலத்து மக்களை அணிதிரட்டும் நடைமுறை சார்ந்து மார்க்சியத்தை முன்வைக்கவில்லை. இதற்கு மாறாக புலிகள் இவ்விரண்டையும் செய்தனர். செய்யவேண்டியதை அரசியல் ரீதியாக செய்ய மறுப்பதன் மூலம், புலிக்கு உதவினர். அரசுக்கும் உதவினர். இது எதிர்ப்புரட்சி அரசியலில் உள்ள அம்சமாகும். எதிரியும் இதைத்தான் கோருகின்றான். பிரமுகர்கள் தாங்களாகவே முன்னின்று அதைச் செய்கின்றனர். அதாவது எதார்த்தத்தை மாற்றாது, அதில் தலையிடாது திசைதிருப்பி இயங்குதல் பிரமுகர்களின் அறிவுசார் கலையாக உள்ளது. இதன் மூலம் எதிரிகளுக்கு உதவுவது இவர்கள் அரசியலாக உள்ளது. இந்த உதவி என்பது தங்கள் பிரமுகர்தனத்தை தக்கவைக்கும்; சந்தர்ப்பவாத அரசியல் மூலம், புலிக்கு எதிரான மாற்றுத்தளத்தை புலத்தில் இல்லாதாக்கினர். இப்படி அரசியல் ரீதியாக செய்ததன் மூலம், மாற்றுத் தளத்தை இலங்கை அரசின் எடுபிடி ஆள்காட்டி கூலிகும்பல்களின் அமைப்பாக்கினர். நாங்கள் இதை ஆரம்பம் முதல் எதிர்த்துப் போராடியதால், தன்னம் தனியாக எஞ்சினோம். மக்கள் பற்றிப் பேசுபவர்கள், நாங்கள் மட்டும் என்ற நிலை உருவானது.

இலங்கையில் மார்க்சியம் பேசிய சிவசேகரம் என்ன செய்தார்?

வர்க்கப் போராட்டத்தையா முன்னெடுத்தார்? கட்சியைத்தான் கட்டினாரா? அவருடைய மார்க்சியம் என்னதான் செய்தது? சொல்லுங்கள்.

அவருடைய மார்க்சியம் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதையும், கட்சியைக் கட்டுவதையும் மறுத்தது. குறிப்பாக தன்னளவில் தனக்கு உள்ள வர்க்க கடமையை மறுக்கும் போது, அவரின் கருத்துகள் அதைப் பொதுத்தளத்தில் அதைக் கோர மறுக்கின்றது. கட்சியைக் கட்டும் மார்க்சியத்தை தன்னளவில் தனக்கு மறுக்கும் போது, மார்க்சியத்தை அதன் புரட்சிகர உள்ளடக்கதில் மறுப்பது அரசியலாகி விடுகின்றது. இதை மற்றவர்கள் செய்வதை அவர் கோரவும் முடியாது. இதனால் தான் மார்க்சியத்தை தன் இருப்புக்கு ஏற்ப கோணலாக்கி விடுகின்றனர்.

மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை அணிதிரட்டும் வர்க்கக் கடமையில் ஈடுபடாமல் இருக்கும் பிரமுகர்கள், இதை மற்றவனைக் கோர முடியாது. இதனால் எதார்த்தத்தை விமர்சனம் செய்வதில் இருந்து, சந்தர்ப்பவாதமாக விலகுகின்றனர். இதனால்தான் சிவசேகரம் போன்றவர்கள் புரட்சி செய்யாத ஒரு கட்சியின் பிரமுகராக பவனி வருகின்றார். இந்தக் கட்சியில் இணையவோ அல்லது ஒரு வர்க்கக் கட்சியை உருவாக்கவோ அவர் தயாராகவில்லை. மா.லெ.பு.ஐ.கட்சியின் இயல்பு, தன் பிரமுகர்தனத்தின் இயல்புக்கு ஏற்ப இருப்பதால் தான், அதனுடன் தன்னை ஒட்டிக்கொள்ளும் சந்தர்ப்பவாதியாக இருக்கின்றனர்.

புலிப்பாசிசம் நிலவிய காலத்தில் நாங்கள் புலத்தில் இருந்து சொல்வது சுகம் என்ற வாதம் சார்ந்த எதார்த்தத்தை, நாம் கருத்தில் கொண்டுதான் இதைக் கூறுகின்றோம். மா.லெ.பு.ஐ.க. முக்கிய நபர்களை, நாம் பரிசில் சந்தித்தபோது வடக்குகிழக்கில் அல்லது தேசிய பிரச்சனையில் வர்க்க நிலையெடுத்து போராட முடியாவிட்டாலும், மலையகத்திலும் மற்றைய பிரதேசத்திலும் பல்வேறு விடையங்களிலும் வர்க்கப் போராட்டத்தை புரட்சிகரமாக முன்னெடுக்கக் கோரினோம்.

இதைச் செய்யாத ஒரு கட்சியின், பிரமுகர்தான் சிவசேகரம். புலத்தில் செய்யவேண்டியதை செய்யாத மார்க்சிய அறிவுசார் சந்தர்ப்பவாத பிரமுகர், அதையே மண்ணிலும் செய்கின்றார். மார்க்சியத்தை அறிவாகக் கொண்டு, காலம் கடந்த நிலையில் அதை வியாக்கியானம் செய்கின்றனர். அதை மாற்ற முனையாது, எதார்த்தத்திலோ முழுமையான சந்தர்ப்பவாதிகளாக இருக்கின்றனர்.

எதார்த்தம் மீது உடனுக்குடன் அதை விமர்சனம் செய்வதில்லை. அதைச் செய்யவேண்டிய அவசியம், மார்ச்சியம் பேசும் அறிவுசார் பிரமுகர்களுக்கு கிடையாது. வர்க்கப் போராட்டத்தை தன் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலாக கொண்டால்தான், உடனுக்குடன் எதார்த்தத்தை விமர்சனம் செய்யவேண்டிய கம்யூனிஸ்ட்டுக்குரிய வர்க்க நிலை உருவாகின்றது.

இந்த அரசியல் கடமையை கோரும் மார்க்சியத்தை தன்னளவில் தனக்கு மறுக்கும் போது, பிரமுகருக்குரிய சந்தர்ப்பவாதத்துடன் தான் காலம்கடந்து வியாக்கியானம் செய்கின்றனர். எதார்த்தத்தில் எதிர்வினையாற்றி போராடாத போது, எதார்த்தத்தில் நிலவும் பிற்போக்கு அரசியல் ரீதியாக உதவி செய்கின்றது. இப்படி புலிப் பாசிசத்துக்கும் உதவினர்.

இதையெல்லாம் மூடிமறைத்தபடி, நடைமுறையில் எதார்த்தம் மீது சமூகத்தை அணிதிரட்டாத  காலம் கடந்த மார்க்சிய விமர்சனத்தை முன்னிறுத்துகின்றனர். இப்படி எதார்த்தத்தில் சந்தர்ப்பவாதியாக இருத்தல் தான், மார்க்சியவாதிகளின் நடைமுறை என்று சிவசேகரம் தன்னை முன்னிறுத்துகின்றார். தங்கள் எதார்த்தத்தை காலம் கடந்த விமர்சனம் மூலம், வியக்கியானம் செய்வது தான் மார்க்சியம் என்கின்றனர். தன்னையொத்த அறிவுசார் பிரமுகர்த்தன செயற்பாடு தான், வர்க்கப்போராட்டம் என்ற அரசியல் நிலையை தொடர்ந்து புகுத்துகின்றார். சந்தர்ப்பவாத பிரமுகர்களின் அறிவுசார் பிழைப்புத்தனத்தை, மார்க்சியவாதியின் அரசியல் நடைமுறையாக முன்வைக்கின்றார்.

இலங்கையில் புதிதாக மார்க்சிய அரசியலில் நுழைந்த இளம் தலைமுறையினர் பலர், இந்த பிரமுகர்தன மார்க்சியத்தை தமது அரசியல் வழியாக தேர்ந்தெடுத்திருக்கின்றனர். புலத்தில் 1990 களில் சிவசேகரம் போன்றவர்கள் புலத்தில் அறிவுசார் பிரமுகர்தனத்தை மாற்றாக முன்வைத்தது போல, இன்று இலங்கையில் மார்க்சியத்தை பேசும் புதிய தலைமுறையை தன் சந்தர்ப்பவாத வழிபோல் பிரமுகராக இருக்க வழிகாட்டுகின்றார். பிரமுகராக மார்க்சியத்தை பேசுதல் தான், மார்க்சியம் என்ற நிலைக்குள் ஒரு புதிய தலைமுறை வீழ்ந்துள்ளது. இப்படி இலங்கை அரச பாசிசத்துக்கு மறைமுகமாக உதவுகின்றனர். ஒரு கம்யூனிஸ்டுக்குரிய கடமையை மறுத்து, மக்களை அணிதிரட்டும் மார்க்சியத்தை மறுத்து, அறிவுசார் மார்க்சியமாக இலங்கை பாசிச அரசுக்கு உதவும் வண்ணம் மார்க்சியம் சீரழிக்கப்படுகின்றது.

இப்படி மார்க்சியம் அறிவின் எல்லைக்குள், வியாக்கியானம் செய்யும் பிரமுகர்தனத்தின் மேட்டிமைக்குள் புதைக்கின்றனர். மார்க்சியம் மக்களை புரட்சியின்பால் அணிதிரட்டுதற்காகவல்ல என்ற எல்லையில் நிறுத்தி, சமூகத்தை வியாக்கியானம் செய்கின்ற அறிவின் எல்லையில் நிறுத்தி அதை சேறடிக்கின்றனர்.

நாங்கள் இதனுடன் முரண்படுவதால், இதை அம்பலப்படுத்துவதால் "இணையத்தளபதிகள்", "கொமிசார்" என்ற தங்கள் இருப்பு சார்ந்த நிலையை தக்கவைக்க வசைபாடுகின்றார். "கொமிசார்" என்ற அரசியல் பதத்தை, கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்க்கும் மார்க்சிய எதிர்ப்பு அறிவுசார் பிரமுகர் அரசியல் நிலையில் நின்று இழிவாடுகின்றனர்.

வர்க்கப் போராட்டத்தை ஆணையில் வைக்காத, அதை நடைமுறையில் முன்னெடுக்காத அனைத்து மார்க்சிய சந்தர்ப்பவாதமும், அம்பலப்படுத்தப்பட வேண்டியவை. நாங்கள் மார்க்சியத்தை சமூகத்தை மாற்றி அதை தலைகீழாக்கும் நடைமுறையின் மேல்தான் முன்னிறுத்துகின்றோம். இதை எதார்த்தத்தின் எல்லைக்கு எதிர்வினையாற்றியபடிதான்,  முன்வைக்கின்றோம், அதைக் கோருகின்றோம். வெறுமனே விமர்சனம், வியாக்கியானம்  செய்வதற்கல்ல. இதனால் தான் நாம் பல்லைக்காட்டும், சந்தர்ப்பாத பிரமுகராக இல்லாமல் இருக்கின்றோம். புலத்தில் நாம் இருந்தாலும், இதுதான் எமது நிலை. இதனால்தான் எம்முடன், மார்க்சியம் பேசும் அறிவுசார் பிரமுகர்களுடனான முரண்பாடுகள் தொடருகின்றது.

இல்லை என்று இதை நீங்கள் மறுத்தால், பாட்டாளி வர்க்கக் கட்சியைக் கட்டுங்கள், அதன் உறுப்பினராகுங்கள். மக்களை அணிதிரட்டி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுங்கள்.

பி.இரயாகரன்
12.08.2010