Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1983 இனக்கலவரம் தான், இந்தியாவின் திட்டமிட்ட இனவழிப்பாக மாறியது. உடனடியாக பேரினவாதத்தால் இனம் சூறையாடப்பட்டது ஒருபுறம், நீண்டகால அடிப்படையில் இந்தியாவால் திட்டமிட்டு சூறையாடப்பட்டது மற்றது.

1983 யூலை இனப்படுகொலை என்பது, 1983ம் ஆண்டு மீண்டும் நடந்த ஒரு இனக்கலவரம். 1977, 1981 க்கு பின், பேரினவாதம் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்கும் இனக்கலவரத்தை, மீண்டும் தமிழ் மக்கள் மேல் அரசு ஏவியது. சிறைக்கைதிகள் முதல் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்ந்த தமிழ் மக்களை, தமிழன் என்ற ஓரே காரணத்தினால் பல தளத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். ஆம் ஒரு படுகொலை. எந்த நீதி விசாரணைக்கும் உள்ளாகாத படுகொலை.

ஒரு இனத்தின் மேல் நடந்த கொடுமையான, கொடூரமான இனவழிப்புக்காக, எந்தச் சட்டமும் யாரையும் தண்டிக்கவில்லை. குற்றவாளிக் கூண்டில், அவர்கள் யாரையும் முன்னிறுத்தவில்லை. இப்படி குற்றவாளிகள், கொலைகாரர்கள் நடத்தும் இனவாத ஆட்சிதான், இன்று வரை நாட்டின் ஜனநாயக ஆட்சியாக தொடருகின்றது. 2009 இல் முள்ளிவாய்க்காலில் நடத்திய இனப் படுகொலை கூடத்தான், சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்ட நீதி விசாரணைக்கு உள்ளாகவில்லை. இதன் பின்பும் இரகசியமான சட்டவிரோதமான அமைப்புமுறை மூலம், தமிழ்மக்களை பல வடிவத்தில் ஒடுக்குகின்றனர். தமிழ் மக்கள் இன்று இலங்கையின் சட்ட ஆட்சிக்குள் ஒரு நீதியை கோரவோ, பெறவோ முடியாது. இதுதான் நாட்டின் நிலைமை.

இனப் படுகொலைகள், கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள், பொருளாதார அழிப்புகள், நிலச் சூறையாடல், இனவழிப்புகள்… என்பது தமிழ் மக்களின் கடந்தகால வாழ்வு என்றால், அதுதான் இன்றுவரையான அழிக்க முடியாத சொத்தாகும். இப்படி தமிழனுக்கு எதிரான  குற்றத்தில் பத்தாயிரத்தில் ஒன்று கூட, சட்டத்தின் முன் விசாரணைக்கு வந்தது கிடையாது. இதை வரவிடாது பாதுகாப்பது தான், இலங்கைப் பேரினவாத சட்ட ஆட்சி முறையாகும். இதைத்தான் அவர்கள் ஜனநாயகத்தின் ஆட்சி என்கின்றனர். குற்றவாளிகளைப் பாதுகாத்து, அவர்களின் ஆட்சியை நிலைநிறுத்துவதே, "பயங்கரவாதத்துக்கு" எதிரான ஜனநாயகம் என்றனர்.

1983 நடந்த இனக்கலவரத்தையும், இனப்படுகொலையையும் அடுத்து இந்தியா அதில் வெளிப்படையாக தலையிட்டதன் மூலம், இது இனத்தை சிறுகச்சிறுக அழித்தது. இந்தியா தன் நலனை இலங்கையில் அடையவும், தமிழ் மக்களின் சுயமான மக்கள் போராட்டம் வளர்ந்துவிடாது தடுக்கவும் இதில் தீவிரமாக தலையிட்டது. பயிற்சியையும், ஆயுதத்தையும், பணத்தையும் கொடுத்து கூலிப்பட்டாளத்தை உருவாக்கியதன் மூலம், ஒரு பின்தளத்தை உருவாக்கியது. மக்களை வெறுப்பது, மக்களை ஒடுக்குவது, அதிகாரத்தை மக்கள் மேல் நிறுவுவது, மக்களை நேசிப்பவர்களைக் கொல்வதையே, இந்தியா தன் கூலிப்படைகளின் அரசியலாக்கியது. இதை இந்தியா கற்றுக்கொடுத்தது. பேரினவாதத்துக்கு நிகராக தமிழ் மக்களை ஒடுக்கவும், அவர்களை அடிமைப்படுத்தவும், இந்தியா வழிகாட்டியது. பல குழுக்களை சீராட்டி வளர்த்த இந்தியா, அவர்களை மோதவும் வைத்தது. புலிகளுக்கு பணம் கொடுத்து அனுராதபுர அப்பாவி சிங்கள மக்கள் மேலான படுகொலைகளைக் கூட நடத்துமளவுக்கு, தன் கூலிப்பட்டாளங்கள் கொண்ட போராட்டத்தையே தமிழர் போராட்டமாக்கியது. சீக்கிய போராட்டம், வங்கதேச போராட்டங்களை இப்படித்;தான் இந்தியா தலையிட்டு சிதைத்து அழித்தது.

இதன் பின்னணியில் குழுக்களுக்கு இடையிலான மோதல்களை பயன்படுத்தி, அமெரிக்கா தலையிட்டது. ஆயுதத்தையும் பணத்தையும், புலிக்கு அமெரிக்கா வாரி வழங்கியது. எம்.ஐp.ஆர். ஒரு அமெரிக்க ஏஜண்டாகவே செயல்பட்டான். இதனால் மற்றவர்களை விட, புலி வீங்கத் தொடங்கியது. அமெரிக்காவின் உலக ஆதிக்கம் போல், புலியின் ஆதிக்கமும் இப்படித்தான் எம்மண்ணில் வித்திடப்பட்டது. உலகம் தளுவிய அமெரிக்காவின் கொடுமைகளும் கொடூரங்களும் போல், புலிகளின் கொடுமைகளும் கொடூரங்களும் உருவானது. அமெரிக்காவின் உள்ளுர் ரவுடிகளாக ஏஜண்டாக மாறிய புலிகள், இந்திய சார்பு குழுக்களை அழித்தது. அது மட்டுமின்றி, சொந்த மக்களையும் அமெரிக்கா போல் ஒடுக்கத் தொடங்கியது.

போராட்டம் சீரழிந்து. அன்னியர் தயவில் வீங்கி வெம்பிய அதிகாரங்கள் மூலம், ஒடுக்கப்பட்ட தமிழ் இனம் புதிய ஒடுக்குமுறையையே சந்தித்தனர். மக்கள் பேரினவாதத்துக்கு எதிராக போராடும் உரிமைகள் அனைத்தையும், இந்த புலிக் கூலிப்பட்டாளத்திடம் இழந்தனர். புலிகள் அமெரிக்க நலனை கொண்ட கூலிப்படையாக இயங்கிய நிலையில் தான், இந்தியத் தலையீடு புலியுடனான யுத்தமாக வெடித்தது. இப்படி புலி - இந்திய யுத்தம், அமெரிக்கா பிரேமதாசவின் ஊடாக எடுத்த இந்தியாவுக்கு எதிரான அதன் நிலைப்பாட்டுடன் முடிவுக்கு வந்தது.

1983ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தில் இந்திய தலையீடு, 1985-1991 களில் இந்தியா-அமெரிக்கா நலன் சார்ந்த அரசியல் நகர்வாகியது. இதன் பின்னணியில் புலிகள், அமெரிக்க கூலிப்படையாகவே இயங்கியது. எந்த மக்கள் நலன் சார்ந்த அரசியலையும், அது மக்களுடன் சேர்ந்து முன்னெடுக்கவில்லை.

ஆயுதம், பணம், அதிகாரம் மூலம் மாபியாத்தனத்தை முன்தள்ளிய புலிகள், மக்களை அடக்கியொடுக்கி அவர்களை தமக்கு அடிபணிய வைக்கும் வண்ணம் பாசிசத்தை அவர்கள் மேல் ஏவினர். அவர்கள் இதையே பேரினவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் ஒரு அம்சம் என்றனர். பேரினவாதத்துடன் மோதிக் கொண்டு, மக்களை நாயிலும் கீழாக ஒடுக்கினர். மக்களை ஒடுக்குவதற்காகவே, அவர்களை சுரண்டுவதற்காக, அவர்கள் உரிமைகளை பறிப்பதற்காக, பேரினவாதத்துடன் புலிகள் போராட வேண்டியிருந்தது. இதன் மூலம் தான்,  தங்கள் சுயரூபத்தை மூடிமறைக்க முடிந்தது.

ஆம் இப்படி 1983ம் ஆண்டு இந்தியா மக்களுக்கு எதிராக விதைத்த விதை மரமாகியது. இது மக்களையும், மண்ணையும் சார்ந்து வளரவில்லை. அவர்களுக்கு எதிராக வளர்ந்தது. சர்வதேச நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட மாற்றங்கள், அமெரிக்கா இந்திய உறவு, சர்வதேச ரீதியாக "பயங்கரவாதம்" பற்றிய புதிய வரையறைகள், புலியை கூலிப்பட்டாளமாக வைத்து அரசியல் செய்யும் அத்தியாயத்தை முடித்துவைத்தது.

இப்படி எஜமானர்களால் கைவிடப்பட்ட புலிகள் தம்பின்னால் குவித்து வைத்திருந்த ஆயுதங்கள், மாபியாத்தனங்கள் மூலம் திரட்டிய பணம் எவையும், அவர்களை காப்பாற்றவில்லை. அதாவது இதன் பின் மக்கள் இருக்கவில்லை. மக்கள் மௌனமாகவே போராட்டத்தில் இருந்து ஒதுங்கி, புலிகளை முற்றாக தோற்கடித்து இருந்தனர்.

புலிகளிடம் இருந்த துப்பாக்கியோ உணர்ச்சியற்ற இரும்பு. புலிகளின் பணமோ வெறும் காகிதம். புலிகளின் அதிகாரமோ, அவர்கள் மேலான அச்சத்தின் பிரதிபலிப்பு. இந்த நிலையில் புலிகள் வெறும் கோதுதான். இங்கு எந்த போராட்ட உணர்வும் கிடையாது. மாபியாதனமும், கூலிக்கு கொலை செய்யும் கொலைக்காரத்தனமும் தான், மக்களை கிலிகொள்ள வைத்து, அவர்களை அச்சத்தில் உறையவைத்திருந்தது. அச்சம், மந்தைத்தனத்தில் பிரதிபலித்தது.

1983ம் ஆண்டு இனக்கலவரம் இதைத்தான் வித்திட்டது. இந்தியா அதற்கு நீர் ஊற்றி வளர்த்தது. போராட்டத்தை, கூலிக்கும்பல்களின் அடாவடித்தனமான கொலைகாரர்களின் போராட்டமாக்கியது.

இப்படி இதை உருவாக்கியவர்கள், மக்களிடமிருந்து அன்னியமாகி வெற்றுக் கோதாகினர். இதன்பின் தான், இந்தியா அதை ஊதிப் பெருப்பித்து அழித்துவிட்டனர். 1983 இனக்கலவரம் ஏற்படுத்திய நீண்டகால விளைவு இதுதான். ஒரு இனம், அந்த இனத்தைக் கொண்டு அழிக்கப்பட்டது. இதைத்தான் இந்தியா செய்து முடித்துள்ளது.

சொந்த இனத்தின் மேலான புலிகளின் கொடுமைகளும் கொடூரங்களின் மேல்தான், முள்ளிவாய்க்காலில் பேரினவாதம் இனப்படுகொலைகளையும் இனவழிப்பையும் நடத்தி முடித்துள்ளது. இங்கு இப்படி இரண்டு பக்கத்திலும் இந்தியாவே இருந்ததுடன், இனப்படுகொலை செய்து முடித்துள்ளது. இவை எவையும் எந்த சட்டத்துக்கும், நீதி விசாரணைக்கும் உள்ளளாகவில்லை. குற்றங்கள் மனித குலத்தின் நீதியாக, அதுவே பேரினவாத சட்ட ஒழுங்காகவும், ஜனநாயகத்தின் மகுடமாகவும் மாறிவிட்டது. இலங்கை இப்படித்தான் காட்சியளிக்கின்றது. பேரினவாத ஆட்சி பாசிசமயமாகி, மக்கள் மேலான காட்டுத்தர்பாரை நடத்துகின்றது.

பி.இரயாகரன்
24.07.2010