10192021செ
Last updateச, 09 அக் 2021 9am

விமலேஸ்வரனின் இலட்சியம் – மக்கள் விரோத அரசியல் சூழலை மாற்றியமைப்பதே!! - குகன்

“எந்த மண்ணின் விடுதலைக்காக, எந்த மக்களின் சுதந்திரத்திற்காக இங்கு போராடத்துடங்கினோமோ, அந்த மக்களிற்கு ஜனநாயகம் மறுக்கப்படுகின்றது. அவர்களது அரசியல் உரிமைகள் கொச்சைப்படுத்தப்பட்டு நசுக்கப்படுகின்றன. கடந்தகால அடிமைத் தளையிலிருந்து மீளத் துடித்த எம் மக்களது வாய்களிலும் கரங்களிலும் பெரிய விலங்குகள் போடப்படுகின்றன. இது தவறு. இது நியாயமல்ல. இது நிறுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கின்றோம் நாங்கள்.”

***

 

“எமக்கு விடுதலை வேண்டும். எமது மக்களிற்கு சுதந்திரம் வேண்டும். ஆனால் அந்த விடுதலையும் சுதந்திரமும் எமக்குள்ளேயே அதிகாரத்தையும் அடக்கு முறையையும் செயல்படுத்திக்கொண்டே, அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுக் கொண்டே விடுதலை அடைவது சாத்தியமில்லையென்று குரல் கொடுக்கின்றோம்.”

***


“நாம் எமது மக்களின் விடுதலையை எதிர்க்கவில்லை. அவர்களின் போராட்டத்திற்கு துரோகம் நினைக்கவில்லை. மாறாக சரிநேர் சரியான பாதையில் வெற்றியை நோக்கி வீறு நடை போட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். அதனால் தான் பிழையான போக்குகளை எதிர்க்கின்றோம். தவறான நடவடிக்கைகளை தட்டிக் கேட்கின்றோம். தேசத்தையும் மக்களையும் அவர்களது விடுதலையையும் சுதந்திரத்தையும் மனதார நேசிக்கும் நாங்கள், அதற்காகவே அதன் குந்தகமாக அமையக் கூடிய அனைத்து அராஜகங்களையும் எதிர்த்து போராடத் துணிந்துவிட்டோம்.”

***


“விஜிதரன் என்று எமது நண்பன் ஒருவனது பிரச்சனையல்ல. இது எமது மாணவர்கள் அனைவரினதும் பிரச்சனை. இது எமது மக்கள் அனைவரினதும் பிரச்சனை. விஜிதரன் ஓரு பல்கலைக்கழக மாணவன் ஆகையால் அவன் கடத்தப்பட்ட விடயம் வெளியே தெரிய வந்தது. அராஜகத்திற்கெதிராக போர்க்குரல் கிளம்பியது.ஆனால் இது வேறு யாராவது ஓர் வெளியாராக இருந்தால், கேட்க நாதியற்று அராஜகத்திற்குப் பலியாகிப்போயிருக்க
வேண்டியது தான். எமது விடுதலைப் போராட்டத்திலே அப்படி அராஜகத்திற்குப் பலியானவர்கள் எத்தனைபேர்? புதைகுளிகட்குள் மூடப்பட்டவர்கள் எத்தனை பேர்? கண் காணாத இடத்தில் வைத்து கொல்லப்பட்டவர்கள் எத்தனைபேர்?
தெருவோரங்களிலும் வயல்வெளிகளிலும் மயானங்களிலும் கொன்று குவிக்கப்பட்வர்கள் எத்தனைபேர்?

யாருமே கேட்க நாதியற்றவர்களாக ஓரு அற்ப விலங்கை விடக் கேவலமான நிலையில் அராஜகத்திற்குப் பலியாகிப்போனார்கள். இது இன்னும் எத்தனை காலம் தொடர்வது. இப்படியே இதை விட்டுவைப்பதா? அராஜகத்தின் கரங்கள் நம் ஒவ்வொருவரதும் குரல்வளையை நெரிக்கும் வரையும் நாம் பேசாது
இருக்கப் போகின்றோமா? எப்போது ஜனநாயகத்திற்காக குரல்கொடுத்த ஒருவன் கடத்தப்பட்டானோ? எப்போது மக்களை நேசித்த மக்களின் விடுதலையை நேசித்த விஜிதரன் கடத்தப்பட்டானோ? அப்போது இது முழுத் தமிழீழ விடுதலையின்- மக்களின் பிரச்சனையாகி விட்டது.”

***


“அன்பான மக்களே எனதருமை மாணவ நண்பர்களே மாணவர்களை அரசியலில் ஈடுபடக்கூடாது என்கிறார்கள் சிலர். படிக்க வந்தால் படிச்சிட்டுப்போறதற்கு ஏன் இந்த தேவையில்லாதவேலை என்கிறார்கள் இன்னும் சிலர். ஆனால் துப்பாக்கிக் குண்டுகளாலும் மோட்டார் செல்களாலும் பிளந்துகிடக்கும் எமது பூமியில் யுத்த பீதியும் மரண ஓலமும் நிறைந்த தெருக்களில் மாணவர்களை அரசியலில் ஈடுபடாதே என்று சொல்லுவது, எப்படி நியாயமாகும். பாடசாலைகள் இன்று இராணுவ முகாமாக்கப்பட்டு மாணவர்கள்
கொல்லப்படுகின்ற சூழ்நிலையில் படி படியென்றால் படிக்கவா முடியும்?

தேசமும் மக்களும் விடுதலை இழந்து தவித்துக்கொண்டிருக்கையில் பிரித்தானிய ஆட்சிக்கால மகிமையும், சங்க இலக்கியத்தின் கவிநயத்தையும் மட்டுமே படித்துக்கொண்டு எப்படி வாழமுடியும்? மாணவர் இந்த மக்களிடமிருந்து வரவில்லையா? அவர்கள் இந்தச் சமூகத்தின் ஒரு அங்கமில்லையா? அப்படியானால் அவன் மட்டும் அரசியலில் ஈடுபடாமல் எப்படி இருக்கமுடியும்? அரசியலில் ஈடுபடாதே என்பதுவும், ஈடுபடாமல் இருப்பதுவும் கூட அரசியல்தான் என்றாகிவிட்ட காலம் இது.”

***


“இந்த ஜீவமரணப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் மாணவர்கள் என்ன நோக்கத்திற்காக, எந்த மக்களின் விடுதலையை நேசித்தார்களோ அந்த இலட்சியத்தை நீங்கள் பொறுப்பேற்பது தான் நீங்கள் அந்த மாணவர்கட்கு செய்யும் தியாகமேயொழிய கண்ணீர் சிந்துவதும் அஞ்சலிக்கூட்டங்கள் நடாத்துவதும் அல்ல”

***

மக்களை நேசித்து, அவர்களின் அரசியல் மற்றும் அனைத்து ஜனநாயக உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த போராளி (எமது இனிய நண்பன்) விமலேஸை, மக்களை விடவும் மூளையற்ற துப்பாக்கிகளை நேசித்த பாசிஸ்ட்டுக்கள் படு கொலை செய்து இன்றுடன் 22 வருடங்களாகின்றது.

 

 

தமிழீழப் போராட்ட வரலாற்றிலே மாணவர்களும், மக்களும் இணைந்து தமக்கு போராடும் இயக்கங்களினால் மறுக்கப்பட்ட அடிப்படை ஜனநாயக உரிமைகளிற்காக யாழ் பல்கலைக்கழகத்திலே நடாத்திய சாகும்வரை உண்ணவிரதப் போராட்டத்தின் முதல் நாள், கைலாசபதி அரங்கத்திலே நண்பன் தோழன் விமலேஸ் ஆற்றிய முக்கிய உரையின் சில பகுதிகளை மேலே பார்த்தீர்கள்.

அந்த உண்ணாவிரதப் போராட்டம் எந்தவிதமான ஊசலாட்ங்களிற்கோ, விட்டுக் கொடுப்புகளிற்கோ இடமின்றி மிக உறுதியாக முன்னணியிலிருந்த மாணவர்களாலும், பின்னணியிலிருந்த இயக்கங்கள் (NLFT, EPRLF தாஸ்-செழியன் குழு) மற்றும் ஜனநாயகத்தினை நேசித்த சக்திகளினால் முன்னெடுக்கப்பட்டது.

இதன் காரணமாக எழுந்த மாணவர்கள் மற்றும் மக்களின் கிளர்ச்சினை கண்டு தினறிய இயக்கங்கள், மாணவர்களின் கோரிக்கைகளுக்கு எழுத்து மூலமான போலியான ஒப்புதலை வழங்கி உண்ணாவிரதத்தினை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

ஆனால் நடந்ததோ வேறு கதை. மாணவர்களும், மக்களும் கோரிய ஜனநாயக உரிமைகள் அனைத்தும் குழி தோண்டி புதைக்கப்பட்டன. மக்களுக்காக போராடியவர்களும், மாற்று இயக்கத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏனையோர் கொலை செய்யப்படுவதிலிருந்து தப்பி தெற்கிற்கும், அந்நிய தேசங்களிற்கு ஓடினோம்.

அனைத்து ஜனநாயகங்களும் மறுக்கப்பட்ட வெறும் மனித ஜயடங்களே, மூளையற்ற துப்பாக்கிகளை நேசித்த அராஜயகவாதிகளுடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டன. இதன் முழு விளைவையும் இறுதியாக முள்ளிவாய்க்காலில் இன்று நாம் அனைவரும் கண்டுகொண்டோம்.

தமிழ் சழூகத்தில் ஜனநாயக மறுப்புக்களையும், பாசிசத்தையும் கடந்த 30 வருடங்களிற்கு மேலாக வளர்த்தவர்களில் பெரும்பான்மையினர் அழிந்து போயிருப்பினும், இவை எமது சழூகத்தினுள் மிக ஆழமாக வேருண்டிவிட்டன.

இத்தகைய படு மோசமான நிலைமையிலிருந்து எமது சழூகம் மீட்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகவும், அவசியமானதாகவும் உள்ளது.

இதனை செய்வதற்கு முன் நிபந்தனையாக எமது கடந்த பல பத்தாண்டு கால அரசியலை கேள்விக்களுக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்க வேண்டியுள்ளது. இதனை மறுப்பதும், புதிய தொடக்கம் என அழைப்பதும், பழையனவற்றினைப் பற்றி கதைப்பது- எழுதுவது தேவையற்றது, இன்று பேச -எழுத நிகழ்கால சம்பவங்கள் நிறையவே உள்ளன என்பதெல்லாமே, சாராம்சத்தில் கடந்த கால மக்கள் விரோத பாசிச அரசியலை தொடர்வதும் அதனை அரியணையில் வைப்பதுவுமே ஆகும்.

இனிஒருவில் வெளி வருகின்ற ஜயரின் “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” தமிழ் அரங்கத்தில் வெளிவருகின்ற சீலனின் “புளட்டில் நான்” மற்றும் இரயாகரனின் “பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு” போன்றவை கடந்த கால மக்கள் விரோத பாசிச அரசியலை மீளாய்வுக்கு உட்படுத்துவதற்கான  முன் முயற்சிகள் என்றே கூறலாம்.

 

தோழன் விமலேஸின் நினைவு தினமான இன்று பரந்து பட்ட மக்களின் விடுதலையினை நேசிக்கும் நாங்கள் அனைவரும் “கடந்த கால மக்கள் விரோத அரசியல் சூழலை மாற்றியமைக்க உழைப்போம்” என உறுதி கொண்டு செயலாற்றுவதே , நாம் அவனுக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

*குகன்*

http://www.ndpfront.com/?p=8151