Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வேத-ஆரிய சடங்குகளை பின்பற்றிய ஒரு பிரிவினர், (ஆரிய) பூசாரிகள் வடிவில் தான் சிதைந்த சமூகத்தில் நீடிக்க முடிந்தது. ஆனால் அவர்கள் ஆரியராகவோ, ஆரிய வேத மொழியை பேசுபவராகவோ இருக்கமுடியவில்லை. அதன் பெயரால், அவர்கள் தம்மைத் தாம் அடையாளப்படுத்திக் காட்டவும் கூட முடியவில்லை.

கொள்ளையடித்த வாழ்ந்தவர்கள், அந்த வாழ்வியல் முறையை இழந்து சிதைந்த போனார்கள். அவர்களில் பெரும்பகுதி, தாம் சிதைந்த சமுதாயத்தினுள் அடையாளம் காணமுடியாது போனார்கள். அதாவது உழைப்பில் பங்கு கொண்டதன் மூலம், கொள்;ளையடிக்கும் தம் வாழ்வின்  தனித்துவத்தை இழந்தனர். இதன் மூலம் பெரும்பான்மை ஆரியர், தம் முந்தைய வாழ்வியல் அடையளத்தையும், சடங்குசார் வாழ்வு முறையையே இழந்தனர். இப்படி இவர்கள் சமுதாயத்தில் தமது புதிய உழைப்பின் மூலம், ஒன்று கலந்துவிட்டனர். இதனால் அவர்களுக்கு பழைய சடங்குமுறைகள் அவசியமற்றதாகின்றது.

ஆனால் ஒரு சிறிய பகுதி தான் கொண்டிருந்த சொத்துடமையாலும், வழிபாட்டு முறை ஊடாகவும், அவர்கள் பராம்பரியமாக மனப்பாடம் செய்யும் வேதக் கல்வி முறையூடாகவும், அவர்கள் தம் சடங்கைப் தொடர்ந்தும் சலுகையூடாக பேண முடிந்தது. அதாவது இது அவர்கள் உழையாது சொகுசாக வாழ்வதற்கு ஏற்று, வசதியையும் வாய்ப்பையும் உருவாக்கியது. இதற்கு வெளியில், இவர்கள் உழைப்பில் ஈடுபட்டு வாழவேண்டிய தேவையை அவசியமற்றதாக்கியது.

உடல் உழைப்புடன் தொடர்புறாது, கொள்ளையடித்து வாழும் வாழ்வுசார் யுத்த புலம்பல் சடங்கை அதிகார வர்க்கத்தின் தயவில் தக்கவைக்க முடிந்தது. இதை தொடர்ச்சியாக மனப்பாடம் செய்து கொள்ள, உழைத்து வாழ அவசியமற்ற ஒரு ஓட்டூண்ணி சமூகப் பிரிவால் மட்டும்தான் சாத்தியமாகியது. இதைக் கொண்டு அவர்கள் வாழவும், இது அவர்களுக்கு இலகுவான சொகுசான வாழ்வையும் வருமானத்தை தருவதாக இருந்துள்ளது. மனித உழைப்பை அறியாத இந்த சமூகப் பிரிவு மூலம் தான், வெறும் வழிபாட்டுச் சடங்காக, ஓட்டூண்ணி வாழ்வியல் ஊடாக சமூகத்தில் ஆரிய அடையாளம் எஞ்சியது. இப்படி மனித உழைப்பின்றி சுரண்டி வாழும் தம் சொந்த வாழ்வியல் முறையால், இந்த சடங்குகள் சமுதாயத்தில் புகுத்தப்பட்டது.

மறுபக்கத்தில் தனிச்சொத்துரிமையிலான சமூக அமைப்பு, ஆணாதிக்க குடும்ப அலகை அடிப்படையாக கொண்டது. இந்த வகையில், ஆரம்ப உழைப்பு பிரிவினைகள், இயல்பாக பரம்பரைத் தன்மை கொண்டவையாகவே இருந்தது.

உற்பத்தி சாராத ஒட்டூண்ணி அறிவு, உற்பத்தி சார்ந்த அறிவு, உழைப்பு சார்ந்த நுட்பத்திறன், உழைப்பு பற்றிய கல்விமுறை என அனைத்தும், பெற்றோர் வழியாக குழந்தைக்கு சென்றது. குழந்தை பிறந்தது முதலே, இதுவே ஒரு வாழ்வாகியது. அதுவே அக் குழந்தையின் கல்வியாக மாறிவிடுகின்றது.

இந்த வகையில் ஆரிய-வேதச் சடங்குகளை, பூசாரிகள் தம் குழந்தைகள் ஊடாக பரம்பரை பரம்பரையாக தந்தை வழி சொத்துரிமையூடாக கடத்தப்பட்டது. ஆனாலும் இந்த பாரம்பரிய சடங்கை, வேத-ஆரிய மொழியில், அதன் சமூக நோக்கில், அதன் தொடர்ச்சியில், அந்த சமுதாயத்தினுள் செய்ய முடியவில்லை. அவர்கள் சார்ந்திருந்த சமூகத் தொடர்ச்சியும், வாழ்வியல் முறையும் முற்றாக மாறிவிடுகின்றது. இந்தச் சடங்கு மூலம், தொடர்ந்து கொள்ளை அடிக்கும் வகையில் ஆரிய சமூகத்தை வழிகாட்டமுடியாது. இதை வழிநடத்தும் சமுதாயத்தை, ஆரிய பூசாரிகள் இழந்து இருந்தனர். இதனால் புதிய நிலைமைக்கு ஏற்ப வெறும் மந்திரமாகவும், அதை புரிந்து கொள்ள அதற்குள்ளான ஒரு மொழியாகத்தான் சமஸ்கிருதம் உருவானது.

உண்மையில் வாழ்ந்த சமுதாயத்தில் நிலவிய மொழியில் இருந்து விலகி, அவை வெறும் சடங்குகளாக மந்திரமாக அவை சிதைந்து வெளிப்பட்டது. மனப்பாடம் ஆரிய வேத மூல மொழியிலும், சடங்கு சிதைந்த கலந்த கலப்பு மொழியிலும் நீடித்த சடங்கை, செம்மைப்படுத்திய மொழி தான் சமஸ்கிருதம்;. இப்படி வேத-ஆரிய மொழிச் சிதைவு கலந்த ஒரு மந்திரமாகவே, ஆரியம் எஞ்சியது. முந்தைய சடங்கு வடிவங்கள், சமூகம் புரியாத சமஸ்கிருத மொழியில் வெளிப்பட்டன.

இந்த சமஸ்கிருத மொழி மற்றவர்கள் புரியாத வெறும் மந்திரம் என்ற நிலையைக் கடந்து, அது ஒரு மொழியாக உருவாகியது. எப்படி மொழியாக முடிந்தது என்றால், அதற்கு இருக்கும் சுரண்டும் ஆற்றல் தான்;. ஆரிய வேத சடங்குக்கு இருந்த சுரண்டும் சமுதாய மதிப்புத்தான், சமஸ்கிருத மொழி உருவாகுவதற்கான அடிப்படைக் காரணமாகும்;. இப்படி சமஸ்கிருதம் ஒருபகுதி சுரண்டும் வர்க்கத்தின், சுரண்டும் மொழியாகியது. இதனால் இது சாதிய அமைப்பில், இரகசியமான சாதிய சுரண்டும் மொழியாகியது.

இந்த மொழி ஒரு மக்கள் கூட்டத்தால், அதன் உழைப்பு சார்ந்து மனித உறவுகளுக்குடாகப் பேசப்படவில்லை. மாறாக மற்றவர்களை ஏமாற்றி தொழில் செய்யும் ஒரு கூட்டத்தின், தொழிலுக்குரிய சுரண்டல் மொழியாகியது. இது கடவுளுடன் உரையாடும் மொழியாக பார்ப்பனர்கள் கூறியபோதே, அது மக்கள் புரிந்து கொள்ள முடியாத மொழியாகியது. இதனால் இதை கடவுளுடன் பேசும் மந்திரமாக காட்டி, மக்களை சாதி வரை கடவுளின் பெயரில் பிழந்துடன், இதன் மூலம் அவர்களை எமாற்றிப் பிழைக்கவும் முடிந்தது.

இப்படி இந்த சமஸ்கிருத மொழி, ஒரு பார்ப்பன பூசாரிகளின்; கூட்டத்தின் சுரண்டல் மொழியாகியது. இதற்கு இருந்த சுரண்டும் ஆற்றலும், சமூகதத்தை அடிமை கொள்ளும் திறனும், இந்த வேத-ஆரிய சடங்குகளை படிபடியாக சமுதாயமயமாக்கியது. அதாவது வேத-ஆரியரின் முன்னயை சடங்கு முறைகள், சமுதாயத்தில் மதவழிபாடாக ஆதிக்கம் பெற்றபோது, சமஸ்கிருதமே அந்தச் சடங்குக்குரிய மந்திர மொழியாகின்றது.

தொடரும்

பி.இரயாகரன்

9.ஏன் இந்திய சமூகத்தில் ஆரியர் சிதைந்தனர்? - சாதியம் குறித்து பாகம் - 09

8.ஆரிய பாடல்களோ கொள்ளையிட்டு வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது : சாதியம் குறித்து பாகம் - 08

 

7.சமஸ்கிருதம் பிழைப்பு மொழியானதால், அது சாதி மொழியாகியது :( சாதியம் குறித்து பாகம் - 07)உயிரற்ற ஆரிய சடங்கு

 

6.உயிரற்ற ஆரிய சடங்கு மந்திரமாக, அதுவே சமஸ்கிருத மொழியானது : சாதியம் குறித்து பாகம் - 06

 

 5. ஆரியர் யார்? பார்ப்பனர்கள் யார்? : சாதியம் குறித்து பாகம் - 05

 

4. முரண்பாடுகள் சாதிகளாகின, முரண்பாடுகள் சாதியை உருவாக்கவில்லை : சாதியம் குறித்து ... பாகம் - 04

 

3. எங்கே? எப்படி? ஏன்? ஆரிய மக்கள் வரலாற்றிலிருந்தும் மறைந்து போனார்கள்! : பாகம் - 03

 

2. பார்ப்பனிய இந்துத்துவத்தை முறியடிக்காமல், சாதிய–தீண்டாமையை ஒழிக்க முடியாது : பாகம் - 02

 

1. பார்ப்பனியம் மீதான போர் : ஆரியம் பார்ப்பனியமாக சிதைந்தது எப்படி? சாதியம் தோன்றியது எப்படி? : சாதியம் குறித்து… பாகம் - 01