யூனியன் கார்பைடைக் கொண்டுவந்தவர் இந்திரா காந்தி ஆண்டர்சனை வழியனுப்பி வைத்தவர் ராஜீவ் காந்தி டௌ கெமிக்கல்ஸுக்கு காவல் நிற்கிறார் சோனியா காந்தி ........................... தயாராகிறார் ராகுல் காந்தி
போபால் விஷவாயுப் படுகொலை வழக்கை நீர்த்துப்போகச் செய்த துரோகத்தனத்தில் காங்கிரசின் பங்கு அலாதியானது. இன்று நேற்றல்ல, அமெரிக்கத் தேசங் கடந்த தொழிற்கழகமான யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனுக்குக் காவடி தூக்கும் வேலை காங்கிரசு கட்சிக்குள் இந்திரா காந்தி காலத்திலேயே தொடங்கிவிட்டது.
யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன், தனது இந்தியத் துணை நிறுவனமான யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் மூலம் ஸெவின் எனப்படும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையை 1969 ஆம் ஆண்டு போபாலில் நிறுவியது. இத்தொழிற்சாலை நிறுவப்பட்ட சமயத்தில் இப்பூச்சிக்கொல்லி மருந்தைத் தயாரிக்கப் பயன்படும் மெத்தில் ஐசோ சயனேட் என்ற இரசாயனப் பொருள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இதனை போபால் தொழிற்சாலையிலேயே தயாரிக்க முடிவு செய்த யூனியன் கார்பைடு நிறுவனம், அதற்கு அனுமதி கோரி ஜனவரி 1, 1970 அன்று இந்திய அரசிடம் விண்ணப்பித்தது.
யூனியன் கார்பைடு எதிர்பார்த்தது போல அனுமதி உடனடியாகக் கிடைக்கவில்லை. "யூனியன் கார்பைடு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யவுள்ள தொழில்நுட்பம் காலாவதியாகிப் போன ஒன்று; அமெரிக்காவிலேயே கைவிடப்பட்ட தொழில்நுட்பத்தை இந்தியாவில் கொட்டப் பார்க்கிறார்கள்" எனக் கூறி, தொழில் வளர்ச்சிக்கான அமைச்சக அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்து வந்தனர். எனினும், விண்ணப்பித்து ஐந்தாண்டுகள் கழித்து, அக்டோபர் 31, 1975 அன்று காலாவதியாகிப் போன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மூலப்பொருட்களைத் தயாரிக்கும் உரிமத்தை மைய அரசிடமிருந்து பெற்றுக் கொண்டது, யூனியன் கார்பைடு.
1970 களில் தொழில் வளர்ச்சி அமைச்சகத்தின் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்த ஆர்.கே.ஸஹி என்ற அதிகாரி, "யூனியன் கார்பைடு நிறுவனம் உரிமம் பெற முடிந்ததற்கு நெருக்கடி நிலை ஆட்சிதான் காரணம்" என்ற உண்மையைத் தற்பொழுது போட்டு உடைத்துவிட்டார். ஐந்தாண்டுகள் உரிமம் கிடைக்காமல் அல்லாடி வந்த யூனியன் கார்பைடு, இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் முடிவதற்குள்ளாகவே உரிமத்தைப் பெற்றுள்ளது.
இந்திரா காந்தி இந்தக் கொலைகார ஆலையை அமெரிக்காவில் இருந்து கொண்டுவர உதவினாரென்றால், அவரது தலைப்பிள்ளை ராஜீவ் காந்தி அவ்வாலையின் தலைவரைக் கொலை வழக்கு விசாரணையில் இருந்து காப்பாற்றி, அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தார்.
போபால் படுகொலை நடந்த நான்காம் நாள், டிசம்பர் 7, 1984 அன்று யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனின் தலைவர் வாரன் ஆண்டர்சன் அமெரிக்காவில் இருந்து போபாலுக்கு வந்தார். அன்றே அவரும், அவரின் இந்தியக் கூட்டாளிகளான கேஷுப் மஹிந்திரா, வி.பி.கோகலே ஆகியோரும் ம.பி. அரசால் கைது செய்யப்பட்டு கார்பைடு நிறுவனத்தின் விருந்தினர் மாளிகையில் ‘சிறை’ வைக்கப்பட்டனர். எனினும், அடுத்த சில மணி நேரத்திற்குள்ளாகவே வாரன் ஆண்டர்சனுக்குப் பிணை வழங்கப்பட்டது. வாரன் ஆண்டர்சன் அரசு விருந்தாளியைப் போல, ம.பி. அரசுக்குச் சொந்தமான விமானத்திலேயே டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்பு, அவர் டெல்லியில் வெளியுறவுச் செயலர் எம்.கே.ரஸ்கோத்ராவைச் சந்தித்துவிட்டு அமெரிக்காவுக்குத் திரும்பிப் போனார்.
இச்சதியில் ராஜீவிற்குப் பங்கு இருப்பது குறித்த விவாகாரம் மீண்டும் சந்தி சிரிக்கத் தொடங்கியிருக்கிறது. ராஜீவின் ‘நற்பெயரை’க் காக்க வேண்டி, தற்பொழுது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு, "ஆண்டர்சன் இந்தியாவுக்கு வந்து போனதும்; ஆண்டர்சன் பத்திரமாக அமெரிக்காவுக்குத் திருப்பியனுப்பப்படுவார் எனக் கொடுக்கப்பட்ட உறுதிமொழி பற்றியும் ராஜீவுக்குத் தெரியாது; அரசின் சார்பாக யார் இந்த உறுதிமொழியைக் கொடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை; ஆண்டர்சன் இந்தியாவிற்கு வந்து போனது தொடர்பாக அரசிடம் - குறிப்பாக, வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் எவ்விதமான ஆவணங்களும் இல்லை. இது தொடர்பான விவரங்களுக்கு நாங்கள் பத்திரிகைகளில் தற்பொழுது வெளிவரும் செய்திகளைத்தான் சார்ந்திருக்கிறோம்; ஆண்டர்சனுக்குப் பிணை வழங்கி, அவரை அமெரிக்காவுக்குத் திருப்பியனுப்பியதில் ராஜீவுக்கு எந்தத் தொடர்புமில்லை எனப் பத்திரிகைகளே எழுதி வருகின்றன" என அறிவித்திருக்கிறது.
நாம் கொஞ்சம் ஏமாந்தால், அமைச்சர்கள் குழு என்ற இந்த அமெரிக்க அடிவருடிகளின் கூட்டம் போபால் படுகொலையைக்கூட அரசாங்கத்தின் ஆவணங்களில் இருந்து அழித்துவிடக் கூடும். ஆண்டர்சனுக்குப் பிணை வழங்கி அவரை அமெரிக்காவுக்குத் திருப்பியனுப்பியது, அப்போதைய ம.பி. முதல்வர் அர்ஜுன் சிங்கின் சொந்த முடிவு எனக் காட்டுவதற்காக அமைச்சர்கள் குழு கூச்சநாச்சமின்றிக் கட்டுக்கட்டான பொய்களை அவிழ்த்துவிட்டு வருகிறது என்பதை நிரூபிப்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
ராஜீவ் அரசில் வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த எம்.கே.ரஸ்கோத்ரா, போபால் தீர்ப்பு வெளியான பின் சி.என்.என்.-ஐ.பி.என். என்ற தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில், "இந்தியாவுக்கு வரும் ஆண்டர்சன் பத்திரமாக அமெரிக்காவுக்குத் திருப்பு அனுப்பப்படுவார் என இந்திய அரசு கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையில்தான் அவர் அமெரிக்காவில் இருந்து போபாலுக்கு வந்ததாக"க் கூறியிருக்கிறார். அப்பொழுது உள்துறை அமைச்சராக இருந்த பி.வி.நரசிம்ம ராவ் இந்த உறுதிமொழியை, அமெரிக்கத் தூதரகத்தில் துணைத் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய கார்டன் ஸ்ட்ரீப் மூலம் அளித்ததாக அந்நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முடிவு பின்னர் ராஜீவுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், அதற்கு அவர் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லையென்றும் ரஸ்கோத்ரா தெளிவுபடுத்தியுள்ளார்.
இம்முடிவு பின்னர் ராஜீவுக்குத் தெரிவிக்கப்பட்டது என்பதை அமைச்சர்கள் குழு, "ஆண்டர்சன் இந்தியாவிற்கு வந்து அமெரிக்காவுக்குத் திரும்பிய பிறகுதான் தெரிவிக்கப்பட்டதாக’’த் திரித்துப் புரட்டியிருக்கிறது. ஆண்டர்சன் கைது தொடர்பாக இந்து பத்திரிகை தனது நாளிதழில் டிசம்பர் 8, 1984 அன்று வெளியான செய்திக் கட்டுரையை மறுபதிப்பு செய்து, ஜூன் 26, 2010 அன்று வெளியிட்டுள்ளது. அதில், "ஆண்டர்சன் போபாலுக்கு வந்து சேர்ந்த அதே நாளில் பிரதமர் ராஜீவ் காந்தி மத்தியப் பிரதேசத்திலுள்ள சாகர் என்ற ஊரில் தங்கியிருந்தார்; அப்பொழுதே, ஆண்டர்சன் பிணையில் விடுவிக்கப்படுவதற்கு முன்பாகவே, பிரதமரின் முதன்மைச் செயலர் பி.சி. அலெக்சாண்டர் ராஜீவ் காந்தியிடம் ஆண்டர்சனுக்கு உறுதிமொழி அளிக்கப்பட்டது தொடர்பான எல்லா விவரங்களையும் தெரிவித்து விட்டார். அதன் பிறகுதான், மைய அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு, ஆண்டர்சனைப் பிணையில் விடுவித்து, அவரை போபாலில் இருந்து டெல்லிக்கு வழியனுப்பி வைத்தது. அர்ஜுன் சிங், சாகரில் தங்கியிருந்த ராஜீவ் காந்திக்குத் தெரிவிக்காமலேயே ஆண்டர்சனுக்குப் பிணை வழங்கும் முடிவை எடுத்திருப்பார் என்பது நம்பும்படியாக இல்லை" எனக் கூறப்பட்டுள்ளது.
போபால் விஷவாயுப் படுகொலை நடந்தபொழுது, பிரதமர் பதவி மட்டுமல்ல, வெளியுறவுத் துறை பொறுப்பும் ராஜீவிடம்தான் இருந்தது. எனவே, ராஜீவிடம் கலந்து ஆலோசிக்காமல், ஆண்டர்சனைப் பத்திரமாகத் திருப்பியனுப்புவோம் என்ற உறுதிமொழியை உள்துறை அமைச்சராக இருந்த நரசிம்மராவ் மட்டுமே எடுத்திருப்பார் என்பதும் நம்பக்கூடியதாக இல்லை. இதற்கு காங்கிரசு கும்பல் மட்டுமல்ல, இந்து நாளிதழும், "ராஜீவ் தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளி மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதால், அவருக்கு இந்த உறுதிமொழி பற்றித் தெரியாது" எனக் குறிப்பிட்டுள்ளது.
இது உண்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ராஜீவ் காந்தி பரிசுத்தவானாக இருந்திருந்தால், இந்த உண்மைகளைத் தன்னிடம் அலெக்ஸாண்டர் கூறிய பிறகாவது இந்த அநீயைத் தடுத்து நிறுத்தியிருக்கலாமே? இதனைத் தடுத்து நிறுத்தாததோடு, "ஆண்டர்சனைப் பிணையில் வெளிவர முடியாத வழக்குகளில் கைது செய்யவில்லை; மக்களின் கோபத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக அவரைத் தடுப்புக் காவலில்தான் வைத்திருந்தோம்" எனப் புளுகியது மைய அரசு. கொலைகாரன் ஆண்டர்சனை மக்களின் கோபத்தில் இருந்து காப்பாற்றுவதுதான் ராஜீவின் நோக்கமாக இருந்திருந்தால், அவரை அமெரிக்காவுக்கு அனுப்பியிருக்க வேண்டியதில்லையே, டெல்லி திகார் சிறைக்கு அனுப்பிக்கூட அவரைக் காப்பாற்றியிருக்க முடியமே!
உண்மையில் வாரன் ஆண்டர்சன், ஆயுள் தண்டனை வரை அளிக்கக்கூடிய சதி, கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றம் (culpable homicide) உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். இவற்றுள் சில பிரிவுகள் பிணையில் வெளிவர முடியாத வழக்குகள். எனினும், ம.பி. மாநில போலீசாரே, ஆண்டர்சனுக்குச் சட்டவிரோதமான முறையில் பிணை வழங்கி, அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தனர். ம.பி.மாநில போலீசாரின் இந்த அத்துமீறல்களுக்கு எதிராக அப்பொழுதே விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக வழக்குகள் தொடுக்கப்பட்டன.
ஒருபுறம் வாரன் ஆண்டர்சனைப் பத்திரமாகத் திருப்பி அனுப்பி வைப்போம் என்ற உறுதிமொழியை அமெரிக்காவுக்குக் கொடுத்துவிட்டு, இன்னொருபுறம் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு ஆண்டர்சனைக் கைது செய்யும் நாடகத்தையும் திறம்பட நடத்தியிருக்கிறார், ராஜீவ். அமெரிக்க உளவு நிறுவனமும் தனது அறிக்கையில், தேர்தலுக்காகத்தான் இந்தக் கைது நாடகம் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. ஆண்டர்சனைத் தப்ப வைத்த குற்றத்திற்காக இந்திய மக்களிடம் மன்னிப்புக் கேட்காத ராஜீவ், ஆண்டர்சனை சில மணி நேரங்கள் கைது செய்ய வேண்டியிருந்த துர்பாக்கியத்துக்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
ஆண்டர்சனைக் காப்பாற்றி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்ததோடு ராஜீவ்-காங்கிரசு கும்பலின் துரோகம் முடிந்துவிடவில்லை.
* மார்ச் 29. 1985 அன்று போபால் வாயு கசிவு பேரழிவு சட்டத்தைக் கொண்டு வந்து, அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தாம் விரும்பும்பட்சத்தில் தனியாக யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் மீது வழக்குத் தொடுக்கும் உரிமை, அதிக நட்டஈடு கோரும் உரிமை ஆகியவற்றைத் தட்டிப் பறித்தார், ராஜீவ்.
* யூனியன் கார்பைடிடம் தொடக்கத்தில் 300 கோடி அமெரிக்க டாலர்கள் (தற்போதைய மதிப்புப்படி ஏறத்தாழ 15,000 கோடி ரூபாய்) நட்ட ஈடாகத் தர வேண்டும் எனக் கோரி வந்த இந்திய அரசு, இடையில் என்ன பேரம் நடந்ததோ, யூனியன் கார்பைடின் விருப்பப்படி 47 கோடி அமெரிக்க டாலர்களை (2,350 கோடி ரூபாய்) நட்ட ஈடாகப் பெற்றுக் கொண்டதோடு, யூனியன் கார்பைடின் மீதான சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்தது. பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் போராடியதையடுத்து, யூனியன் கார்பைடு மீதான கிரிமினல் வழக்குகள் மட்டும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
* நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபொழுது, "வாரன் ஆண்டர்சனை இந்தியாவிற்குக் கொண்டுவரும் வழக்கில் வேகம் காட்ட வேண்டாம்" என வெளியுறவுத் துறை அமைச்சகம் மையப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு வாய்வழி உத்தரவு போட்டது. இதனை, அச்சமயத்தில் போபால் வழக்கு விசாரணை அதிகாரியாக இருந்துவந்த பி.ஆர்.லால் தற்பொழுது அம்பலப்படுத்தியுள்ளார்.
* ராஜீவும், ராவும் யூனியன் கார்பைடைக் காப்பாற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தினார்கள் என்றால், தற்பொழுது பிரதமராக உள்ள மன்மோகன் சிங் யூனியன் கார்பைடு நிறுவனத்தைக் கையகப்படுத்தியுள்ள டௌ கெமிக்கல்ஸைக் காப்பாற்றும் திருப்பணியைச் செய்து வருகிறார். ப.சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழு இதனை நைச்சியமாகச் செய்து வருகிறது.
காங்கிரசின் இத்துரோகப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது; ஆனால் அவர்களோ, இத்துரோகங்களை அமெரிக்க முதலீட்டைக் கவரச் செய்யப்பட்ட ராஜதந்திரமாகச் சித்தரிக்கிறார்கள். ஒருசில அமெரிக்க டாலர்களுக்காக ஏழை மக்களைப் பலி கொடுக்கலாம் என்ற இந்த அயோக்கயத்தனத்தை மன்மோகன் சிங், "போபால்கள் நேரலாம்; ஆனாலும் நாடு முன்னேறித்தான் ஆக வேண்டும்" எனக் கவிதையைப் போலக் கூறிவருகிறார்.
*திப்பு