Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நீண்ட ஒரு அரசியல் வேலையூடாக தான், யாழ்பல்கலைக்கழக மாணவர் போராட்டம் அரசியல் மயமானது. இதற்கு மாறாக திடீரென்று அரசியல் அற்புதங்கள் நடப்பதில்லை. அன்று போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக் குழுவின் பெரும்பான்மை, அரசியலற்ற சாதாரண மாணவர்களைக் கொண்டதாகவே இருந்தது. இதைச் சுற்றி இயங்கியவர்கள், அரசியலில் முன்னேறிய பிரிவாகும். இவர்களின்றி, இந்த அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து இருக்க முடியாது. 

இந்த வகையில் முக்கியமாக இந்த அரசியல் மயமாக்கலில், புளட்டில் இருந்து ஓதுங்கியிருந்த பலரே இதன் முன்னோடிகளாவர். புளட்டில் இருந்து முதல் முதலில் அரசியல் ரீதியாக ஒதுங்கியவர்களும் இவர்கள் தான். இவர்கள் அரசியல் ரீதியாக முன்னேறியவர்களாக இருந்தனர். ராக்கிங்குக்கு எதிரான எனது போராட்டத்துடன், இயல்பாகவே தம்மை இணைத்துக் கொண்டவர்கள். இப்படி உதிரியாக இருந்த இவர்களை, எனது அன்ரி ராக்கிங் போராட்டம் அரசியல் ரீதியாக ஒன்றிணைத்தது. இப்படிப் பரந்த அன்ரி ராக்கிங் குழு உருவானது. இருந்த போதும், இவர்கள்  எம் அமைப்புடன் இணையவில்லை. இதற்கு என்.எல்.எவ்.ரி.யால் நிலவும் பாசிச சூழலை நடைமுறையில் மாற்றி அமைக்க முடியுமா என்ற நம்பிகையீனம் தான், இதற்கான அடிப்படைக் காரணமாக இருந்தது. இந்த காரணம் தான், பரந்த தளத்தில் காணப்பட்டது. பலர் எம்முடன், எம் அரசியல் நிலையுடன் நின்றனர். ஆனால் ஓரே அமைப்பாகவில்லை. பாசிசத்தை முறியடிக்கும் நடைமுறை சார்ந்த ஒன்றுதான், அவர்களை அமைப்பாக்கும் என்ற எதார்த்தம் சார்ந்த உண்மை இங்கு இருந்தது. ஆனால் நெருக்கமான அரசியல் உறவு இருந்தது. வேலைகளை கூட்டாக செய்யும் முறை, பரஸ்பர உதவி,  இயல்பாகவே எங்கும் உருவாகியிருந்தது. ஒரு அரசியல் சார்ந்த தோழமை உறவு, ஒரு அமைப்பாகாமல் உயர்ந்த பட்சத்தில் எம்மை அமைப்பாக இணைத்தது.       

அக்காலத்தில் விரல்விட்டு எம் அமைப்புடன் இணைந்தவர்களில், விமலேஸ்வரன் ஒருவன். அவன் எமது அமைப்பின் உறுப்பினரானான். விமலேஸ்சுக்கும் எனக்குமான உறவு நீண்டது. நான் படித்த, படிப்பித்த, விடுதி ஆசிரியனாக இருந்த பாடசாலை விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்ற காலம் முதல் நான் அவனை அறிவேன். பல்கலைக்கழகத்தில் மீள சந்தித்தது முதல், அவனின் அரசியலே எமது அரசியலாக இருந்ததால், இயல்பாக எம்முடன் இணைந்து கொண்டான். 

சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த என்.எல்.எவ்.ரி. யின் மூன்று உறுப்பினர்கள் (குகன், அவ்வை, விமலேஸ்), மற்றொரு நபரான செல்வநாயகம் கூட என்.எல்.எவ்.ரி. தொடர்பில் இருந்தவர்தான்.  என்னுடன் ஊர்வலத்தில் முன்னின்ற ரவி (பார்க்க ஊர்வலத்தை)

"1987 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் புலிகளால் கடத்தப்படட விஜிதரனுக்காக நடந்திய ஊர்வலம் மற்றும் ஆவணங்கள்" 

(இன்று இந்த ரவி புலி). இவர் என்.எல்.எவ்.ரி. யின் முந்தைய தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி கமிட்டி உறுப்பினர்.  இப்படி என்.எல்.எவ்.ரி. இதில் முழு மூச்சுடன் பங்காற்றியது

இப்படி விமலேஸ்வரன் என்.எல்.எவ்.ரி. இருந்த காலத்தில், அதன் மாணவர் அமைப்புக் குழுவின் கமிட்டி உறுப்பினராக இருந்தான். இந்த நிலையில் யாழ் பல்கலைக்கழக    மாணவர் அமைப்புக் குழுவில் முக்கியமான அரசியல் முடிவுகளையும், இதன் அரசியல் திசைவழிகளையும் தீர்மானித்தான். அவனுடன் என்.எல்.எவ்.ரி.யும் மற்றும் புளட்டில் இருந்து ஒதுங்கியிருந்த பலர் ஒருமித்து நின்றனர்.

மறுதளத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். வழியை நிராகரித்த, ஆனால் தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எவ். இல் இருந்த செழியன் - தாஸ் பிரிவைச் சேர்ந்த சோதிலிங்கம், அமைப்புக் குழு தலைவராக இருந்தார். இவரும் இந்த அரசியல் திசைவழியை முன்வைப்பதிலும், போராடுவதிவும் தன் உறுதியை வெளிப்படுத்தினார். ஆனால் மாறும் பொது நிலைமையுடன், ஊசலாடும் தன்மை கொண்டவராக இருந்தார். (இவர் 2000 பிந்தைய "அமைதிக்" காலத்தில் ஆய்வாளராக வெளிப்பட்ட இவர், புலிக்கு சார்பாக புலி வானொலிகளில் வக்காலத்து வாங்கியவர்.) 

இதைவிட ஈ.பி.ஆர்.எல்.எவ். ஜச் சேர்ந்தவர்கள், இந்தப் போராட்டத்தை ஆதரித்து உற்சாகமாக ஈடுபட்டனர். இதைவிட ரெலோவில் இருந்து விலகி பாசறையில் இருந்த நாவலன், அமைப்புக்குழுவில் தீவிரமாக இயங்கிய பகுதியுடன் இயங்கினார்.

மற்றும் புலியால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட ஜனநாயகவாதிகள் முன்னணியில் செயல்பட்டனர். இப்படி நடந்த போராட்டத்துக்கு, இது போன்று பல்கலைக்கழகத்துக்கு வெளியில் இருந்தவர்களும் முனைப்பாக தம்மை இணைத்துக் கொண்டனர்.

மக்களின் பொதுவான அரசியல் கண்ணோட்டம் இதற்கு ஏற்ப இருந்தது. இந்த வகையில் இதை சரியாக வழிநடத்தும் பொறுப்பு, முன்னேறிய அரசியல் பிரிவின் அரசியல் கடமையாக இருந்தது.

இயல்பான அரசியல் கூட்டு மனப்பாங்குடன், அரசியல் ஒருமைப்பாட்டுடன் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதை முன்னெடுத்து வழிநடத்திய பலர், ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டு விட்டுக்கொடுக்காத தங்கள் தலைமையையும் நேர்மையையும் நிறுவியிருந்தனர். சட்டவரம்புக்குள் போராட்டத்தை முன்னெடுத்தது அமைப்புக்கு குழு தான். ஆனால் முன்னேறிய அரசியல் பிரிவுதான் உண்மையில் இதை வழிநடத்தியது.

இதன் வெளிப்பாடாக, குறிப்பாக இறுதி முடிவுகளை எடுக்கும் நிலைக்குள், நானும் - நாவலனும் இருந்தோம். சட்டவரம்புக்குள் முடிவை எடுக்கவேண்டிய தருணம் வந்த போதுதான், நாம் இருவரும் ஒரு பகிரங்க பொதுக் கூட்டத்தில் அமைப்புக் குழுவில் இணைக்கப்பட்டோம். இது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துவதற்கு முதல் நாள் நடந்தது. இதை அடுத்து புலிப் பினாமியான சிவத்தம்பியின் புலி நிபந்தனைகளை உள்ளடக்கிய முடிவுகளை நிராகரித்து, அந்தப் பேச்சு வார்த்தையை நாங்கள் முறித்தோம். இதை அடுத்து, புலிகள் துண்டுபிரசுரம் மூலம் பதிலளித்தனர். இப்போராட்டம் புலிகளை அரசியல் அனாதையாக்கும் போராட்டம் என்று கூறி

"தமிழீழ விடுதலைப் புலிகள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு.."

 என்று கூறி பல்கலைக்கழகத்தில் துண்டுப்பிரசுரத்தை விநியோகித்தனர்.

இப்படிப் புலிகளை அரசியல் அனாதையாக்கும் போராட்டம் என்று புலிகளே துண்டுப்பிரசுரம் மூலம் கூறுமளவுக்கு நடந்த இந்தப் போராட்டம், எப்படி வழிநடத்தப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

தொடரும்

பி.இரயாகரன்
15.07.2010

8. "தன்னெழுச்சியானது" என்று திரித்து சாமியாடும் பித்தலாட்ட அரசியல் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 08)

7. சமூக மாற்றத்தைக் கோராமல் சமூகத்தை திரிக்கும் பம்மாத்து அரசியல் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 07)     

6. போராடினால் மரணம், இதுதான் புலியின் மொழியாக நாம் தொடர்ந்து போராடினோம்; (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 06)

5. ராக்கிங்கை அரசியல் ரீதியாக கைவிடுவதை தடுக்க, புலிகள் ஏவிய வன்முறை (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 5)

4. ராக்கிங்கை அரசியல் ரீதியாக கைவிடுவதை தடுக்க, புலிகள் ஏவிய வன்முறை (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 4)

3.  ராக்கிங் நிலைப்பாடு பல்கலைக்கழகத்தைப் பிளந்தது, புலிகளைத் தனிமைப்படுத்தியது (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 3)

2. ராக்கிங்குக்கு எதிராக மாணவர்களை அணிதிரட்டுவதைத் தடுக்கவே, ராக்கிங்குக்கு எதிராக புலிகள் வன்முறையை ஏவினர் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி - 2)

 1. விஜிதரனின் அரசியலை மறுப்பதன் மூலம், சமூக மாற்றத்துக்கான போராட்டத்தை மறுத்தல் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 1)