பெண் விடுதலை என்ற உலகலாவிய பெண்கள் கோரிக்கையை இன்று அரசுகளும் அதன் அடிவருடிப் பெண்களும், அதன் மீட்பாளர்களாக மாறியதே சீனாவின் இரு பெண்கள் மாநாட்டுக் கூத்தடிப்புகளாகும்.

பெண் விடுதலை என்ற பெயரால் மேல் தட்டு ஆளும் வர்க்கப் பெண்கள் தனியாகவும், அதற்கு சேவை செய்யும் பெண்கள் தனியாகவும் கூடி பெண் விடுதலையை கேலி செய்துள்ளனர். வரலாற்றில்  மே தினத்தை தொழிலாளர் கொண்டாடுவதற்குப் பதில் இன்று அரசுகளே கொண்டாடுவது போல பெண் ஒடுக்கு முறையின் அச்சுயந்திர அரசே கொண்டாடுவதால அதன் தார்ப்பரியத்தை எவரும் இலேசில் புரிந்து கொள்ள முடியும்.

கம்யூனிசத்தை குப்பைத் தொட்டியில் வீசிய டெங் முதலாளித்துவக் கும்பல், சீனாவில் பத்து லட்சம் பெண் சிசுக்களை வருடா வருடம் கொன்றழிக்க ஒத்துழைக்கும் டெங் கும்பல், பெண்களை விபச்சாரிகளாகவும் டெங் அரசு இம் மாநாட்டை நடாத்த உதவியது. வரலாற்றில் பெண் விடுதலையை கொச்சைப் படுத்தி கேலி செய்து வருவதையே காட்டி நிற்கின்றது.

அங்கு கூடிய மேற்கு நாட்டு சீரழிவு பெண் நிலை வாதிகளும், வெள்ளை இனப் பெண்நிலை வாதிகளும் மூன்றாம் உலக மற்றும் கறுப்பின பெண் நிலைவாதிகளது குரல்களை அடக்கியபடி தமது சீரழிவுக்கு அங்கீகாரம் கோருகின்றனர். சரியான பெண் விடுதலையின் பால் குறைந்த பட்சக் கோரிக்கை மூன்றாம் உலக நாட்டுப் பெண்கள் சிலரால் எழுப்பப்பட்டன. அதை வறட்டு வாதம் எனவும், பின் தங்கிய கலாச்சாரம் எனவும் அவர்கள் குரல்கள் ஒதுக்கப்பட்டு, ஏகாதிபத்திய கலாசாரச் சீரழிவை பெண் விடுதலையென மாநாடு போற்றியது.

இன்று உலகில் சரியான பெண் நிலை வாதக் கருத்துகள் மூன்றாம் உலக நாடுகளில் இருந்தே (மாநாட்டில் கலந்து கொண்ட பெண் அமைப்பாளர்களிடம் அல்ல) வர முடியும் என்பது, இந்த ஏகாதிபத்தியக் கலாச்சாரப் பின்னணியில் அதிகமாகவே உணர்த்திவிட்ட இம்மாநாடு.