இனவெறி அரசின் கோர முகங்களுக்குள் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்கள், எந்தவித அற்ப சலுகைகளைக் கூட கேட்டுப் பெறமுடியாது என்பதை நாம் கடந்த சமர் இதழ்களில் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டினோம். இனவெறி அரசு பலாத்கார வழிகளின் மூலம் தமிழ் மக்களை கொன்று தேசிய இன அடையாளத்தை இல்லாது ஒழிக்க முனையும் வரை, அதைத் தமிழ்த் தேசிய இனம் தவிர்க்கமுடியாது ஆயுதம் ஏந்துவதன் மூலம் போராட நிற்பந்தித்து வருவதும் கண்கூடு, இவ்வாறான நிலைமைகளில் கடந்துபோன பேச்சு வார்த்தைகளை ஒட்டி நாம் இவ்வாறான பேச்சுக்கள் சாத்தியமில்லை, தமிழ் மக்களை ஏமாற்றும் மோசடி நிகழ்ச்சி - இது என்பதையும் சுட்டி காட்டினோம். தம்மை முற்போக்கு என அழைத்த பலரும் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பேச்சு வார்த்தையின் போலித்தனத்தை அம்பலப்படுத்தத் தவறி, சமாதானம் பற்றிய சிறிலங்கா அரசின் இனவெறியின் பொய் முகங்களின் பின் தம்மை மறந்து இழுப்பட்டுச்சென்றவாறே இருந்தனர்.
பேச்சு வார்த்தைகள் தொடர்பாக புலிகள் ஓரளவு அம்பலப்படுத்தலைச் செய்த போதிலும், அவர்களின் அரசியல் ரீதியான தவறு பேச்சு வார்த்தையிலும், அதன் கோரிக்கையிலும் பிரதிபலித்தன. அதன் விளைவு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் சந்திரிகா அரசுபற்றி அம்பலப்படுத்தலை சரிவர செய்யத் தவறியதும். யூ என் பி.சுதந்திர கட்சி இரண்டும் ஒரே இனவாத அடிப்படையில் உருவான போதும் அதன் முகங்கள காலம், இடம் சூழலுடன் மாறுபட்டு நிற்பதை புலிகள் காணத்தவறினவர். பிரேமதாசாவையும், சந்திரிக்காவையும் ஒரே தட்டில் எடுத்த எடுப்பில் வைக்கமுனைந்தது. பாரிய அரசியற் தவறை செய்ததுடன், தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஓரே மூச்சில் பின்தள்ளும் வகையிலும் நகர்ந்துள்ளது.
சந்திரிகா அரசு இன்னமும் முற்போக்கு முகமூடி அணிந்த இனவாதியாக உள்ள அதேநேரம், போலி ஜனநாயக மகுடி ஊதியபடியே புலிகளை அம்பலப்படுத்த அனைத்து வழிவகைளையும் செய்யும் அதேநேரம், தமிழ் மக்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கவும் திட்டம் தீட்டிச் செயற்படுகிறது. புலிகளின் ராணுவ ரீதியிலான முன்னேறிய தாக்குதல் சரியானதா? ஏன்ற கேள்விக்கு. இல்லையென்பதே ஒரு சரியான அரசியல் முடிவாகும். இராணுவ ரீதியிலான முன்னேறிய தாக்குதல் சரியானதா? என்ற கேள்விக்கு இல்லையென்பதே ஒரு சரியான அரசியல் முடிவாகும். இராணுவ ரீதியிலான முன்னேறிய தாக்குதல், மற்றும் வெற்றிகள் மட்டும் சந்திரிகா அரசை நிலைகுலைய வைத்துவிடாது. முhறாக அரசியல் ரீதியிலான வெற்றிகளே எப்பொழுதும் முதன்மையானதும் தீர்க்கமானதுமாகும்.
அரசியற் தீர்வொன்றை முதன்மையாக வைக்கக்கோரி அரசை அம்பலப்படுத்தி தமிழ், சிங்கள, சர்வதேசத்தோரை தமிழ் தேசத்தின் பின் அணி திரட்டியிருத்தல் வேண்டும். ஆனால் நடந்தவைகளோ எதிர்மறை முன்னேறிய தாக்குதல் மூலம் முழுமையான தமிழ் மக்களையும், சிங்கள, சர்வதேசத்தையும் மௌனமாகியுள்ளது. உலக பிற்போக்கு அரசுகள். விதிவிலக்கின்றி சிங்கள இனவெறியர்களும், தமிழ்த் துரோகக் குழுக்களும் தமிழ் தேசவிடுதலைக்கு எதிராக இத் தாக்குதல் மூலம் குரல் கொடுத்ததை காணமுடிகிறது. விடுதலையின் பால் ஆர்வமுள்ள குரல்கள் எல்லாம் இதற்குள் கேட்கமுடியாது அடங்கிப் போய்விட்டதையும் காணமுடியும்.
இனி உள்நாட்டிலும் சர்வதேசங்களிலும் புலிகள் பல பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் புலிகளிடம் சர்வதேச ரீதியில் கேட்கப்படும் புலிகளுக்கு எதிரான கேள்விகள் ஜனநாயக மீறல்கள், கைதுகள், போன்றவை தொடர்பாகவே இருந்துவந்தன. ஆனால் எதிர் காலத்தில் முக்கியமாக சமாதானத்தை குளப்புபவர்கள் என்ற அடிப்படையில் கேள்விகளை எதிர்நோக்கும் வகையில் நகர்ந்துள்ளது. இது தமிழ்த் தேசிய விடுதலையை கேள்விக்கு உள்ளாக்கிவிடும். இதை பிபிசி பிரபாகரனிடம் பேட்டி கண்டபோது மீண்டும் மீண்டும் இதற்குள்ளேயே கேள்விகள் கேட்கப்பட்டதில் காணமுடியும். இதன் மூலம் புலிகள் எதைச் சொன்னாலும் புலிகளை அம்பலப்படுத்துவதில் இக்கேள்விகள் அமைகின்றன. இது சர்வதேச அபிப்பிராயத்தை சந்திரிகா என்ற போலி முகமூடியின் பின்னால் அணிதிரட்டவே அடிப்படையாக அமைகின்றது.
சந்திரிகா அரசானது தாக்குதலின் பின் கூட யுத்தப் பிரகடனம் செய்யாது. சமாதானம் பற்றி வாய்ப்பந்தல் போட்டுக் கொள்வது சர்வதேச உலகம் முழுவதையும்தன் கருத்தின் பின்னால் இழுத்து வைக்கும் ஒரு முக்கிய முன்முயர்ச்சியாகும். இராணுவத் தாக்குதலில் முந்துவது என்பது சரியான நேரத்தில் சர்வதேச அனுதாபத்தை தமிழ் தேசியத்தின் பின்னால் அணிதிரட்டலில் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்றைய நிலை தமிழ்த் தேசிய விடுதலை போராட்டத்தை மேலும் ஓர் அடி பின்தள்ள வைத்துள்ளது. இதைப் புலிகளின் தவறான அரசியலில் உள்ள பிரச்சினையாக இருப்பதை நாம் காணமுடியும். இது வெறும் புலிகளின் பிரச்சனைக்குள்ளும் நின்றுவிடாது மொத்த தமிழ் சமுகத்தையும் பிரதிபலிக்கும் என்பதையும் நாம் காணத் தவறக் கூடாது.