Language Selection

சமர் - 2 - 1991
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எங்கள் குழந்தைகளை
வளர்ந்தவர்களாக்கிவிடும்.


ஒரு சிறிய குருவியினுடையதைப் போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஒவ்வொரு குருதிதோய்ந்த
முகமற்ற மனித உடலும்

உயிர்நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும்
காரணமாய்,
எங்களுடைய சிறவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்.

நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஒசை
எல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை
இல்லாதொழித்தது.

எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமங் கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்துபோனார்கள்.

அதன்பின்னர்
படலையை நேரத்துடன் சாத்திக் கொள்ளவும்
நாயின் வித்தியாசமான குரைப்பை இனம் காணவும்
கேள்விகேட்காதிருக்கவும்
கேட்ட கேள்விக்கு விடை இல்லாதபோது
மௌனமாகியிருக்கவம்,
மந்தைகள்போல எல்லாவற்றையும்
பழகிக்கொண்டனர்.

தும்பியின் இறக்கைகயைப் பிய்த்து எறிவதும்
தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக்கி
எதிரியாய் நினைத்து நண்பனைக் கொல்வதும்
எமது சிறுவரின் விளையாட்டானது.
யுத்தகால இரவுகளின் நெருக்குதலில்
எங்கள் குழந்தைகள்
“வளர்ந்தவர்” ஆயினர்


யுத்தகால
இரவொன்றின் நெருக்குதல்

மொத்தத்தில்
எல்லோரும் அவசரமாயுள்ளனர்.
என்னிடம்,
ஞாபங்கள் மட்டும் எஞ்சியுள்ளன.

வெளியே
பதற்றமற்று மௌனமாய் நிற்கும்
மரங்களின் நிழல்கள்
கீழே கிழிந்து போயுள்ளன.

தெருவில்
அவலமும் பதற்றமுமாய்
நாய்கள் குலைக்கும் போது
ப+ட்டப்பட்ட கதவுகளை
மீண்டும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு
எல்லோரும் தூங்கப் போகும் நேரத்தில்
நான்,
 நாளைக்குத் தோன்றுகிற சூரியன் பற்றி
எண்ணமுடியாது.

இரவு எனக்கு முக்கியமானது.
நேற்றுப்போல
மீண்டும் ஒரு நண்பன் தொலைந்து போகக்கூடிய
இந்த இருட்டு.
எனக்கு மிகவும் பெறுமதியானது.

சிவரமணி

நன்றி : சரிநகர்