மக்களை அணிதிரட்ட மறுப்பது பம்மாத்து அரசியலாகும். அடையாள அரசியலும், பிரமுகர்தனமும் கொண்ட புலியல்லாத அரசியலோ, மக்கள் விரோதத் தன்மை கொண்டது. மக்களின் அரசியல் விழிப்புணர்வற்ற அரசியல் நிலைதான், அடையாள அரசியலுக்கும் பிரமுகர்த்தன அரசியலுக்குமான மூலதனமாகும். மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதை எதிர்ப்பதில், இவர்களின் எதிர்ப்புரட்சி அரசியல் பாத்திரம் இப்படி முதன்மை பெறுகின்றது.
புலிகள் இருந்தவரை, புலிகள் தான் தமது அரசியலுக்கு தடையென்றனர். தாம் போராடுவதற்கு ஜனநாயகம் வேண்டுமென்றனர். இப்படி ஜனநாயகம் வேண்டுமென்று சொன்னவர்கள், மக்களை அதன்பால் திரட்டும் அரசியலை நிராகரித்தபடியே இதைக் கோரினர். மக்களை ஜனநாயகத்தின் பின் அணிதிரட்டும் குறைந்தபட்ச அரசியலைக் கூட கைவிட்டு, மக்களை புலிகள் பின் தொடர்ந்து அணிதிரண்டு நிற்கக் கோரினர். அதேநேரம் தம்மை "முற்போக்குகள்", "இடதுசாரிகள்", "மார்க்சிஸ்ட்டுகள்" என்று காட்டிக்கொண்டு, தம்மை மூடிமறைக்க ஜனநாயகத்தை மூச்சுக்கு மூச்சுக்கு முன்நிறுத்தினர். இப்படி 20 வருடங்களாக மக்களை அணிதிரட்டும் அரசியலை மறுத்து, புலியல்லாத மாற்றுத் தளம் எதிர்ப்புரட்சி அரசியல்தளத்தில் பயணித்தது.
யுத்தம் தீவிரமாகி, புலியின் அழிவு தொடங்கியவுடன், பலர் தங்கள் சொந்த 20 வருட அரசியல் பம்மாத்தை அரசியல் ரீதியாக வெளிப்படுத்தத் தொடங்கினர்.
1.சிங்கள் பேரினவாத பாசிச அரசு புலியை அழிப்பதுதான், புலிப் பாசிச ஒழிப்பாகவும் ஜனநாயக மீட்பாகவும் கூறிக்கொண்ட ஒரு அரசு ஆதரவு எதிர்ப்புரட்சி கூட்டம் வெளிப்பட்டது.
2.சிங்களப் பேரினவாதம் தமிழ்மக்களை அழிக்கின்றது என்று கூறிக்கொண்டு, புலியை எதிர்க்காத அரசு எதிர்ப்பை முன்னிறுத்திய புலியாதரவு நிலையை மறைமுகமாக முன்னெடுத்தனர். குறிப்பாக மக்களை புலிக்கு வெளியில் தனியாக அணிதிரட்டுவதை அரசியல் ரீதியாக மறுத்தனர். மக்கள் என்று கூறிக்கொண்டு, புலிக்குப் பின்னால் நின்றனர்.
3.அரசு மற்றும் புலியெதிர்ப்பை அடையாள அரசியலாகக் கொண்டும், பிரமுகர் அரசியலாகக் கொண்டும் சிலர் மிதந்தனர். இப்படி சிலர் திடீர் அரசியல் பேசினர். மக்களை புலியல்லாத அரசியல் மூலம் அணிதிரட்டுவதை மறுத்து, "மார்க்சிய" பிரமுகர்தனத்தையும் லும்பன் முற்போக்குத்தனத்தையும் முன்னிறுத்தினர்.
இப்படி மூன்று போக்குகளும் மக்களை அணிதிரட்டும் அரசியலை முன்வைத்து, போராடுவதை மறுத்தனர். இவர்கள் சஞ்சிகைகளை நடத்தியவர்களாக, மக்கள் அரசியலை துறந்தோடியவர்களாக, தனிப்பட்ட வாழ்வில் மற்றவனை ஏமாற்றிப் பிழைக்கும் புத்திஜீவிகளாக, பிரமுகர்களாக, லும்பன்களாக, மக்களுக்கு வெளியில் அரசியல் பேசியபடி வாழ்ந்தனர். இப்படி தங்களைச் சுற்றி சில அடையாளங்களை முன்னிறுத்தி, மக்களுக்கு மேலானவர்களாக காட்டி பம்மாத்துகின்றனர்.
யுத்தம் முடிந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. புலிகளின் பிடியில் இருந்த மக்களை மாற்று அரசியல் தளத்தில் வழிநடத்தும் அரசியல் முன்னெடுப்புகள், தொடர்ந்து இவர்களால் மறுக்கப்படுகின்றது. மக்கள் முன் மாற்று அரசியல் இல்லாத நிலையில், தொடர்ந்தும் புலிகள்தான் அமைப்பு ரீதியாக அரசியல் ரீதியாக மக்களை வழிநடத்துகின்றனர்.
புலத்தில் புலிகள் என்ற வலதுசாரியமும், மண்ணில் கூட்டமைப்பு என்ற வலதுசாரியத்தின் அரசியல் எல்லையைத் தாண்டி, மக்களை அணிதிரட்டும் ஒரு மாற்று அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்வைத்து போராடும் நிலையில் அரசியல் பேசுவோர் இல்லை. மண்ணில் புதிய ஜனநாயகக் கட்சி, பிரமுகர் கட்சி என்ற எல்லையைத் தாண்டி எதையும் செய்யவில்லை, செய்யப்போவதில்லை. அது மக்களை அணிதிரட்டாத, பிரமுகர்களை தக்கவைக்கும் கடந்தகால பாதையில் அது பயணிக்கின்றது. புலத்தில் புலியல்லாத மாற்றுத் தளத்தில் உருவான பிரமுகர்கள், விமர்சகர்கள், இலக்கிய ஜாம்பவான்கள் தங்களை தக்கவைக்கும் பாதையில் முன்னேறுகின்றனர்.
புலியல்லாத மாற்று அரசியல் தளத்தில், மக்களுக்கான அரசியல் கொள்கை கோட்பாட்டை முன்வைத்து, மக்களை அதன்பால் அணிதிரட்ட வேண்டும் என்ற சீரிய அரசியல் பணியை நிராகரிக்கின்ற அரசியலை தொடர்ந்து நகர்த்துகின்றனர். மக்களுக்கு எதிரான, மக்களை புலிக்கு வெளியில் அணிதிரட்டுவதற்கு தடையான, மிகவும் ஆபத்தான எதிர்ப்புரட்சி அரசியலாக மாறி இதுவும் புலிக்கு சமாந்தரமாகவே பயணிக்கின்றது.
தன்னை இடதுசாரியம் என்றும், முற்போக்கு என்றும் காட்டிக்கொள்ளும் அடையாள மற்றும் பிரமுகர்தன இருப்பு அரசியல், மக்களை அணிதிரட்டுவதை மறுக்கின்றது. அதை மற்றவர்கள் செய்வதையும், எதிர்த்து அது செயல்படுகின்றது. அறிவு சார்ந்த பிரமுகத்தனத்தையும், லும்பன்தனத்தையும் தக்கவைக்கும், அரசியலை முன்னிறுத்தி, அதையே மாற்றாக காட்ட முனைகின்றது.
மக்களை அணிதிரட்டாத, அதை அரசியல் நடைமுறையாக முன்னெடுக்காத, அதற்காக கிளர்ச்சி செய்யாத அனைத்தும், மக்கள் பற்றி எந்த அக்கறையுமற்றது. மக்கள் மேலான ஒடுக்குமுறைக்கு அது ஆதரவானது. புலிகளின் நிகழ்ச்சி நிரலின் பின், தங்கள் அடையாள அரசியல் மூலம் பிரமுகர்தனத்தை காப்பற்றிக் கொள்ளும் ஒரு எதிர்ப்புரட்சி அரசியலாகும்.
மக்கள் தான் வரலாற்றை தீர்மானிப்பவர்கள். அதற்காக உழைக்காத, போராடாத, வழிகாட்டாத அனைத்தும், பம்மாத்துதான். சாராம்சத்தில் அது மக்கள் விரோதத்தன்மை கொண்ட, அரசியல் பிழைப்புவாதம். இதை இனம் காண்பதன் மூலம் தான், மாற்றத்தை உருவாக்க முடியும்;. உண்மையாகவும், நேர்மையாகவும், மக்களுக்கான அர்ப்பணிப்புடன் உழைக்க முடியும்.
பி.இரயாகரன்
15.06.2010