Language Selection

புதிய ஜனநாயகம் 2010

கடந்த 2007-ஆம் ஆண்டில் அரியானாவைச் சேர்ந்த 23 வயதான மனோஜ் மற்றும் 19 வயதான பாப்லி ஆகியோர் தமது குடும்பத்தினரை எதிர்த்துக் காதல் திருமணம் செய்ததால், அவர்கள் பாப்லி குடும்பத்தினரால் கொல்லப்பட்டனர். அவர்கள் காதல் திருமணம் செய்ததற்காக மட்டுமல்ல, ஜாட் சாதியின் உட்பிரிவாகிய ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்ற சாதியக் கட்டுப்பாட்டை அவர்கள் மீறிவிட்டதற்காக - அதாவது, ஜாட் சாதிக் கௌரவத்தைக் கீழறத்துச் சிறுமைப்படுத்திவிட்ட ‘மாபெரும் குற்றத்திற்காக’ அவர்கள் கொல்லப்பட்டனர். பேருந்தில் அவர்கள் தப்பிச் சென்றபோது, அவர்களை வெளியே இழுத்துப் போட்டு பாப்லியின் குடும்பத்தினர் வெட்டிக் கொன்று, தமது ஜாட் சாதிக் கௌரவத்தைப் ‘பெருமையுடன்’ நிலைநாட்டினர்.

கடந்த மார்ச் மாதத்தில், அரியானாவின் கர்னால் நீதிமன்றம், ஜாட் சாதி கௌரவத்திற்காக இக் காட்டுமிராண்டித்தனமான கொலைகளைச் செய்த ஐந்து பேரில் ஒருவருக்கு மரணதண்டனையும் மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஜாட் சாதியினர் இந்திய அரசியல் சட்டத்தை எதிர்த்து வெளிப்படையாக மிரட்டல்களை விடுத்துள்ளனர். "ஜாட் சாதியின் உட்பிரிவில் (கோத்திரம்) உள்ள ஒரு ஆணும் பெண்ணும் சகோதர-சகோதரிகளாவர். இவர்கள் திருமணம் செய்யக் கூடாது. ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவர் வேறொரு கோத்திரத்தில்தான் திருமணம் செய்ய வேண்டும். இது நீண்டகால ஜாட் சாதியப் பாரம்பரியம். இதில் சட்டமோ, நீதியோ, போலீசோ தலையிடக்கூடாது. இதற்கேற்ப இந்து திருமணச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்" என்பதுதான் அவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை. கடந்த மே 2-ஆம் தேதியன்று குருசேத்திரத்தில் ஜாட் சாதியின் "மகா பஞ்சாயத்தில்" முடிவு செய்யப்பட்ட இந்தக் கோரிக்கையை, இச்சாதியைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரிப்பதாக ஒரு மாதத்திற்குள் அறிவிக்க வேண்டும் என்றும், இல்லையேல் அவர்களைச் சமூகப் புறக்கணிப்பு செய்வோம் என்றும் வெளிப்படையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பின்னரும், சாதிவெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட மனோஜின் குடும்பத்தினர் இன்னமும் அச்சத்திலேயே உள்ளனர். தங்களது குடும்பத்தாரை சாதி வெறியர்கள் மிரட்டுவதாகவும், இலட்சக்கணக்கில் பணம் தருவதாகக் கூறி வழக்கைத் திரும்பப் பெறுமாறு அச்சுறுத்துவதாகவும் மனோஜின் சகோதரி சீமா கூறுகிறார்.

உண்மையில், ஒரே கோத்திரத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கு எதிரானதாக மட்டும் இந்த சாதிப் பஞ்சாயத்து தீர்ப்புகள் இல்லை. இப்படியொரு முகாந்திரத்தை வைத்து எல்லா விவகாரங்களையும் தமது கட்டுப்பாட்டில் நடத்த வேண்டும் என்பதே சாதியப் பஞ்சாயத்துகளின் உண்மையான நோக்கமாக உள்ளது. ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவரது தாயின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவரது பாட்டியின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தம்பதிகளாகத் திருமணம் செய்யக் கூடாது; ஒரே கிராமத்திலோ அல்லது அருகிலுள்ள கிராமங்களிலோ திருமணம் செய்யக் கூடாது என்றெல்லாம் இக்கட்டப் பஞ்சாயத்துகளின் தீர்ப்புகள் வெவ்வேறு அவதாரங்களை எடுக்கின்றன. சாதியப் பஞ்சாயத்துகளின் தீர்ப்பை எதிர்ப்போரும் விமர்சிப்போரும் சமூகப் புறக்கணிப்பு செய்யப்படுகின்றனர்.

அண்மையில் ஜவுந்தி, அசான்தா, தாரணா, சிங்வால், ஹதாவ்தி, லுடானா மற்றும் பிற கிராமங்களில் சாதிய கட்டப்பஞ்சாயத்துகள் அளித்துள்ள தீர்ப்புகளே இந்த உண்மையை நிரூபித்துக் காட்டுகின்றன. ஒரே கோத்திரத்தில் நடந்த திருமணங்களே அல்ல என்ற போதிலும், இக்கிராமங்களைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகளைச் சகோதர-சகோதரிகள்தான் என்று தீர்ப்பளித்து, ஜாட் பஞ்சாயத்துகள் அக்குடும்பங்களைச் சமூகப் புறக்கணிப்பு செய்துள்ளன.

வேத்பால்மோன் என்ற இளைஞர் தனது மனைவியை மாமனார் குடும்பத்தினர் அடைத்து வைத்திருப்பதிலிருந்து மீட்டுவர முயன்றார். அவர் ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்தவரோ, ஒரே கிராமத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்தவரோ அல்ல. இருப்பினும், அவர் சாதியப் பஞ்சாயத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மணப்பெண்ணின் மூலம் தந்தைவழிச் சொத்து கைமாறிவிடக் கூடாது என்பதற்காகவே, அந்த இளைஞர் கடந்த ஆண்டில் அடித்துக் கொல்லப்பட்டார்.

வேறு கோத்திரத்தில், வேறு கிராமத்தில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்திருந்த போதிலும், கேதிமேகம் கிராமத்தில் சாதியப் பஞ்சாயத்தின் கட்டளையை மீறிவிட்டதற்காக, புதிதாக மணம் முடித்த இளைஞனின் தந்தையை வாயில் செருப்பைக் கவ்விக் கொண்டு கிராமம் முழுக்கச் சுற்றிவருமாறு அவமானப்படுத்தித் தண்டிக்கப்பட்டுள்ளார்.

அரியானாவின் முன்னாள் முதலமைச்சரான ஹுக்கம் சிங் இச்சாதிய கட்டப்பஞ்சாயத்து கூட்டங்களில் பங்கேற்றுத் தீர்ப்பளிக்கிறார். முன்னாள் போலீசு தலைமை இயக்குனர் இக்காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறார். இந்த ‘முன்னாள்’கள் மட்டுமின்றி, தரகுப் பெருமுதலாளியும் காங்கிரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான நவீன் ஜிண்டால் வெளிப்படையாகவே சாதியப் பஞ்சாயத்துகளையும், அவற்றின் காட்டுமிராண்டித்தனமான தீர்ப்புகளையும் ஆதரிக்கிறார். ஷாடிலால் பத்ரா எனும் மற்றொரு காங்கிரசு எம்.பி., ஒரே சாதியின் உட்பிரிவில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்வதைத் தடைசெய்யக் கோரி நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார். எதிர்க் கட்சியான ஓம்பிரகாஷ் சௌதாலாவின் இந்திய தேசிய லோக்தளமும் ஜாட் சாதியக் கட்டப் பஞ்சாயத்துகளின் கோரிக்கையை ஆதரித்துள்ளது.

மனோஜ்-பாப்லி தம்பதிகளின் கொலை, வகைமாதிரிக்கு ஒரு உதாரணம்தான். டெல்லி, அரியானா, ராஜஸ்தான், உ.பி. மாநிலங்களில் ஜாட் சாதிய கட்டப் பஞ்சாயத்துகளால் ஆண்டுதோறும் ஏறத்தாழ 100 இளம் தம்பதிகள் கொல்லப்படுகின்றனர். இம்மாநிலங்களில் மட்டுமல்ல, தமிழ்நாடு உள்ளிட்டு பல மாநிலங்களில் இன்னமும் சாதி கௌரவக் கொலைகள் தொடர்கின்றன. 2003-ஆம் ஆண்டில் விருத்தாசலத்துக்கு அருகே, முருகேசன் - கண்ணகி தம்பதிகள் வன்னிய சாதி வெறியர்களால் கோரமாகக் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் தமிழகத்தின் அவமானமாக நீடிக்கிறது.

தாலிபான் பாணியிலான இச்சட்டவிரோத சாதியப் பஞ்சாயத்துகள் வெளிப்படையாகவே இந்திய சட்டத்தை மீறுகின்றன. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், அதாவது "ஊபா" சட்டம் இத்தகைய சட்டவிரோத சாதியக் கட்டப் பஞ்சாயத்துகள் மீது பாய்வதில்லையே, அது ஏன்?

புரையோடிப்போன சாதியக் கட்டுமானத்தைத் தாங்கிப்பிடிக்கும் இந்துமதம், பொருளாதாரத்திலும் அரசியல் அதிகாரத்திலும் செல்வாக்கு செலுத்தும் ஆதிக்க சாதிகள், பெயரளவில் இவற்றை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு நடைமுறையில் இக்காட்டுமிராண்டித்தனத்துக்கு அனுசரணையாக நிற்கும் இந்திய அரசியலமைப்புமுறை, பக்கமேளம் வாசிக்கும் ஓட்டுப் பொறுக்கிகள்
ஆகிய இவையனைத்தும் இத்தகைய சாதி ஆதிக்க வெறித்தனம் நீடிக்க அடிப்படைகளாக உள்ளன. ஆதிக்க சாதிவெறிக்கு இந்திய அரசியலமைப்பு முறை அனுசரணையாக நிற்பதால்தான், மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னரும், சாதி கௌரவக் கொலைகளை இச்சட்டவிரோத சாதியப் பஞ்சாயத்துகள் எவ்வித அச்சமுமின்றி இன்னமும் நடத்திக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய ஆதிக்கசாதி கட்டப் பஞ்சாயத்துகளுக்கு எதிராக, உழைக்கும் மக்கள் தமது விடுதலைக்கான போராட்டங்களினூடாகத் தங்களது ஜனநாயகத்துக்கும் உரிமைக்கும் அதிகாரத்துக்குமான பஞ்சாயத்துகளைக் கட்டியமைக்க வேண்டும். இத்தகைய உழைக்கும் மக்களின் சர்வாதிகாரத்தை நிலைநாட்டும் மன்றங்கள்தான், சாதி ஆதிக்கத்தைத் தகர்க்கும் உண்மையான விடுதலைக்கான பஞ்சாயத்துகளாக அமையும்.
*தனபால்