‘‘சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் மெட்ரிக் கல்வி வாரியத்தைக் கலைக்க மாட்டோம்; ஆங்கில வழிக் கல்வித் திட்டத்தைக் கைவிட மாட்டோம்; தமிழகத்தில் மையக் கல்வி வாரிய பாடத் திட்டத்தின் கீழ் (சி.பி.எஸ்.சி.) இயங்கும் பள்ளிகளில் சமச்சீர் கல்வித் திட்டம் அமலாகாது" - இப்படி பல சமரசங்களைச் செய்துகொண்டுதான் சமச்சீர் கல்வித் திட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது. ஆனாலும், மெட்ரிக் பள்ளி முதலாளிகள் சமச்சீர் கல்வித் திட்டத்தால் கல்வியின் தரம் தாழ்ந்துபோகும் என ஒப்பாரி வைத்து, இத்திட்டத்தைத் தடைசெய்யக் கோரி வழக்கு தொடுத்தார்கள். சென்னை உயர்நீதி மன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டாலும், தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தை மேலும் நீர்த்துப்போகச் செய்யும் வண்ணம் பல நிபந்தனைகளை விதித்திருக்கிறது.
* சமச்சீர் கல்வித் திட்டம் பொதுப் பாடங்களுக்கு மட்டுமே பொருந்துமே தவிர, துணைப் பாடத் திட்டங்களுக்குப் பொருந்தாது. மெட்ரிக் பள்ளிகள் தங்கள் விருப்பம் போல துணைப் பாடங்களைத் தெரிவு செய்து கொள்ளலாம்.
* சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழக அரசு வெளியிடும் பாட நூல்களைத்தான் மெட்ரிக் பள்ளிகள் வாங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தக் கூடாது. அரசு அங்கீகரித்துள்ள பாடத் திட்டத்தின்படி (Syllabus) தனியார் வெளியிடும் பாடநூல்களை வாங்கிக் கொள்ளும் உரிமை மெட்ரிக் பள்ளிகளுக்கு உண்டு. இந்த நிபந்தனை சமச்சீர் கல்வித் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சீர்குலைத்து விடுமென்றும், மெட்ரிக் பள்ளிகளின் நோட்டு-புத்தகக் கொள்ளைக்கு அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரம் என்றும் கல்வியாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
*சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழக அரசு வகுக்கும் அனைத்து விதிகளையும் மெட்ரிக் பள்ளிகள் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை; தங்களால் முடிந்த விதிகளை மட்டும் அப்பள்ளிகள் பின்பற்றலாம். விதிகளைப் பின்பற்றவில்லை என்ற காரணத்தைக் கூறி மெட்ரிக் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது.
_இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சமச்சீர் கல்வித் திட்டம் இந்தக் கல்வியாண்டு முதல் அமலாவதை விரும்பாத உயர்நீதி மன்ற நீதிபதிகள், அதனை அடுத்த கல்வியாண்டுக்கு ஒத்திப்போடும் நரித்தனத்தில் இறங்கினார்கள். தமிழக அரசு இக்கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே அமலாக்கவில்லையென்றால், பாடப் புத்தகங்களை அச்சிட்ட வகையில் அரசுக்குப் பல கோடி ரூபாய் நட்டமேற்படும் என வாதாடியது. இதனையடுத்து, சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டத்தையும், அக்கல்வித் திட்டத்திற்கான விதிமுறைகளையும் மே 15, 2010-க்குள் தங்களிடம் காட்டினால், இந்தக் கல்வியாண்டு முதல் அமல்படுத்த ஒப்புதல் அளிப்பதாக இறங்கி வந்துள்ளனர், ’நீதி’பதிகள்.