ஒரிசாவின் கலிங்கா நகர் வட்டாரத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள், போஸ்கோ மற்றும் டாடா நிறுவனங்களுக்கு எதிரான தங்களது தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் புதிய கலிங்கத்துப் பரணியை எழுதி வருகிறார்கள். பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு ஒரிசா மக்களின் போஸ்கோ எதிர்ப்புப் போராட்டம் பற்றிப் படர்ந்து வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய முதலீட்டுத் திட்டமான தென்கொரியாவின் போஸ்கோ எஃகு ஆலைத் திட்டத்திற்கு எதிராக, போஸ்கோ பிரதிரோத் சங்கராம் சமிதி (பி.பி.எஸ்.எஸ்) என்ற அமைப்பின் தலைமையில் ஒரிசாவின் ஜெகத்சிங்புர் மாவட்டத்திலுள்ள கலிங்கா நகர் வட்டார மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு கடந்த ஐந்தாண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த ஜனவரி 26-ஆம் தேதியிலிருந்து போஸ்கோ திட்டத்திற்கு எதிராகக் காலவரையற்ற "தர்ணா" போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகின்றனர்.
போஸ்கோ மற்றும் டாடாவின் எஃகு ஆலைத் திட்டங்களால் 11 கிராமங்களிலுள்ள 30,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ்விழந்து சொந்த மண்ணைவிட்டு வெளியேற்றப்படவுள்ளனர். இந்நிலப்பறிப்பை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்களை ஒடுக்க 25 பிளாட்டூன் (ஏறத்தாழ 900 பேர் கொண்ட) துணை இராணுவப் படைகள் இப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரியில் கலிங்கா நகர் தொழிற்பேட்டை பகுதியில் டாடா நிறுவனம் புதிதாகச் சாலை அமைப்பதை எதிர்த்துப் பழங்குடி மக்கள் போராடிய போது, போலீசார் ரப்பர் குண்டுகளைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டுப் பழங்குடியினர் 500 பேருக்கு மேல் வில், அம்பு, கோடரியுடன் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தபோது, அவர்களை விரட்ட போலீசு இத்தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்தனர். "பழங்குடியினருக்குச் சொந்தமான நிலத்தைச் சட்டவிரோதமாகப் பறித்துக் கொண்டு டாடாவுக்குத் தாரைவார்ப்பதையும், இதைத் தொழில் வளர்ச்சி என்று நியாயப்படுத்துவதையும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்கிறார் இச்சங்கத்தின் செயலாளரான ரவீந்திர ஜாரிகா.
2006-ஆம் ஆண்டு போஸ்கோவின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய 14 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதிலிருந்து கலிங்கா நகர் மக்களின் போராட்டங்கள் தொடர்கின்றன. இப்பகுதியில் மட்டும் 500 பேர் கொண்ட கூலிப்படையை வைத்துள்ள டாடா நிறுவனம், அதனைக் கொண்டு போராடும் மக்களை நேரடியாகவே தாக்கி வருகிறது. இதன் உச்சகட்டமாக கடந்த மார்ச் மாதம் 30-ஆம் தேதி டாடாவின் குண்டர் படை பாலிகோதா கிராமத்தில் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. காட்டு வேட்டைக்கெனக் கொண்டுவரப்பட்ட துணை இராணுவப் படைகள் டாடாவின் குண்டர்களுடன் இணைந்து கொண்டு மக்களின் வீடுகளைக் கொளுத்தி, கால்நடைகளைக் கொன்றதுடன், குடிநீர் கிணற்றில் பெட்ரோலை ஊற்றின. 2006-இல் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் நினைவிடங்களைச் சிதைத்துள்ளன.
ஜெகத்சிங்புர் மாவட்டத்தில் போஸ்கோ ஆலை அமையவுள்ள கிராமங்களுக்குச் செல்லும் பாதைகள் அனைத்தும் போலீசாராலும் குண்டர் படைகளாலும் முற்றுகையிடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மருத்துவ உதவிக்காகக் கூட யாரும் வெளியே செல்லவோ, மருத்துவர்கள் உள்ளே வரவோ அனுமதிக்கப்படவில்லை. இதன் விளைவாக பாலிகோதா கிராமத்தை சேர்ந்த கானசயம் காலுந்தியா என்பவர், முறையான மருத்துவ வசதி கிடைக்காததால் இறந்து விட்டார். இதே கிராமத்தில் ஏற்கனவே இரண்டு பேர் சரியான மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் உயிர் இழக்க நேரிட்டது. வெளியார் எவரும் அங்கே செல்லவிடாது தடுக்கப்பட்டனர். செல்ல முயன்ற பத்திரிகையாளர் களும் முன்னாள் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரும் தாக்கப்பட்டனர்.
தங்கள் கிராமங்களிலிருந்து விவசாய வேலைக்காக வெளியே வரும் விவசாயிகளைப் போலீசார் கைது செய்கின்றனர். விவசாய சங்கத்தைச் சேர்ந்த முன்னணியாளர்கள் போலீசாராலும் டாடாவின் குண்டர் படைகளாலும் நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கப்படுகின்றனர். பாலிகோதா கிராமத்தில் அமின் பனாரா என்ற பழங்குடித் தலைவர் நள்ளிரவில் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவ்வட்டாரமெங்கும் பயபீதி நிலவுகிறது. போராட்ட அமைப்பினர், தாங்கள் மாவோயிஸ்டுகள் அல்ல என்றும், தாங்கள் வன்முறைப் பாதையை நம்புவதில்லை என்றும் அறிவித்துள்ள போதிலும், அவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வதைக்கப்படுகிறார்கள்.
கடந்த மே 6-ஆம் தேதியன்று சாந்தியா கிராமத்தில் போலீசு தடியடி நடத்தியது. பழங்குடி மக்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியது. இக்கொடுஞ் செயலை எதிர்த்து இவ்வட்டார மக்கள் தர்ணா போராட்டம் நடத்தியபோது, கடந்த மே 12-ஆம் நாளன்று கலிங்கா நகரின் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 23-ஆம் பிளாட்டூன் ஆயுதப் போலீசும் மாநிலப் போலீசும் சேர்ந்து ஏறத்தாழ 1500 பேர் கொண்ட போலீசுப் படை குவிக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டுவீச்சு, ரப்பர் தோட்டா துப்பாக்கிச் சூடு என அடுத்தடுத்து தாக்குதல்கள் நடந்தன.
லட்சுமண் ஜாமுடா என்ற பழங்குடியின முதியவர் போலீசு துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகியுள்ளார். பல பெண்கள் வயிற்றில் 5-6 குண்டுகள் பாய்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இம்மாவட்டம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வளவு அடக்குமுறைகளையும் மீறி அங்கே மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
போராடுபவர்கள் நக்சல்பாரி தீவிரவாதிகளோ, மாவோயிஸ்டு பயங்கரவாதிகளோ அல்ல. இவர்கள் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பழங்குடியின மக்கள். ஆனாலும், அவர்கள் பயங்கரவாதிகளாகவும் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்களாகவும் சித்தரிக்கப்பட்டு மிருகத்தனமாக ஒடுக்கப்படுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களும் தரகுப் பெரு முதலாளிகளும் இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்கு எதிராக யார் நின்றாலும் அவர்களை ஒடுக்குவதுதான் காட்டுவேட்டையின் நோக்கம் என்பதை இதன் மூலம் நாட்டு மக்களுக்கு உணர்த்தி வருகிறது, கொலைகார அரசு.
கலிங்காநகர் மக்களின் போராட்டம் தீவிரமானதும் வலது கம்யூனிஸ்டு கட்சி, இடது கம்யூனிஸ்டு கட்சி, புரட்சி சோசலிஸ்டு கட்சி, பார்வர்டு பிளாக், சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய 6 கட்சிகள் இப்போராட்டத்தை ஆதரிக்கின்றன. போஸ்கோ திட்டம் தொடங்கப்பட்டபோது, அதை நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம் என்று துதிபாடிய இக்கட்சிகள், இப்போது போராட்டம் தீவிரமானதும் அரசியல் ஆதாயத்துக்காக ஒரிசாவின் நவீன் பட்நாயக் அரசைச் சாடி சவடால் அடிக்கின்றன.
வலது கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலரான பரதன், போஸ்கோ திட்டத்தை இப்பகுதியிலிருந்து வெளியேற்றி, ஜெகத்சிங்புர் மாவட்டத்தின் வேறு பகுதியில் அல்லது அருகிலுள்ள பூரி மாவட்டத்தில் தொடங்கலாம் என்கிறார். வேறு பகுதியில் போஸ்கோ திட்டத்தை தொடங்குவதால், அது முற்போக்குத் திட்டமாகிவிடாது. பிரச்சினை, ஆலையை வேறிடத்தில் அமைப்பது அல்ல. சொந்த மண்ணை அந்நியனுக்குத் தாரைவார்க்கும் அயோக்கியத்தனத்துக்கு எதிரானது. அதைத் திசைதிருப்பி கலிங்கா நகர் மக்களின் போராட்டத்தை நீர்த்துப் போக வைக்கும் போலி கம்யூனிஸ்டுகளின் துரோகத்தனத்தை அம்பலப்படுத்தி முறியடிப்பதும், நாட்டையும் மக்களையும் சூறையாடும் மறுகாலனியாக்கத்திற்கு எதிரான போராட்டமாக ஒரிசா மக்களின் போஸ்கோ எதிர்ப்புப் போராட்டத்தை வளர்த்தெடுப்பதும்தான் புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் இன்றைய உடனடிக் கடமை.
*குமார்