என் தோழர்களும், இந்திய தோழர்களின் கூற்றும்

என் தோழர்களில் பலர் இருபது வருடங்களுக்கு மேலாக, அனைத்து இடது சக்திகளையும் இணைத்து  மக்கள் விடுதலைக்கான முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். இம் முன்னெடுப்புகளும்; முயற்சிகளும் தேசத்திலும், புலத்திலும்  உருவாக்கப்பட்டது. இன்றுவரை இவை எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அளிக்கவில்லை.

"மக்கள் சார்ந்த  அரசியல்  போராட்டங்கள்  நடத்தியோ, அதை  ஒருங்கமைத்த அனுபவ பின்னணியோ, வரலாறோ ஈழ தமிழ் இடதுசாரிகளுக்கு கிடையாது. ஏன் பெரியாரிச சாதியெதிர்பு போராளிகளுக்கு இருக்கும் போராட்ட பாரம்பரியம் கூட இவர்களுக்கு கிடையாது. இந்நிலையில் இவர்களிடமிருந்து புலிகளின் பாசிச வலது அரசியலுக்கு எதிரான ஒழுங்குபடுத்தப்பட்ட  வலுவான இயங்குசக்திகளை எதிர்பார்ப்பது அபத்தமான விடயம்."  இவ் வசனங்கள்  ஏதோ ஒரு இந்திய இடதுசாரி  வெளியீட்டில் வாசித்ததாக நினைப்பு.         வினவு தளத்தில் கூட இருக்கலாம். இதை வாசித்தபோது எனக்கு ஆத்திரம் கலந்த, "இவங்கள் யாரு எங்கட இடதுசாரி வரலாற்றை விமர்சிக்க. எவ்வளவு உயிர்களை அர்ப்பணித்து போராடினார்கள் எம் தோழர்கள்" என்ற எரிச்சல் கலந்த உணர்வு எனக்குள் ஏற்பட்டது. ஆனால், நான் மேற்கூறியபடி, என் தோழர்களின் முயற்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அளிக்காமைக்கும், இந்திய இடதுசாரிகளின் கூற்றின் உள்ளடக்கத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகவே, சில நாட்களின் பின் எனக்குப்பட்டது.

அதாவது ஈழத்தமிழ் இடதுசாரிய பாரம்பரியம் என்ன? போராட்ட வரலாறு என்ன?      அவைகளால் ஏற்பட்ட விளைவுகள் எவை? என்ற கேள்விகளுக்கும், ஒரு மக்கள் நலம் சார்ந்த அரசியல் முன்னெடுப்பின் தோல்விகளுக்கும் சம்பந்தமுள்ளது. அந்த வகையில் இந்தியத் தோழர்களின் கருத்து சரியானதே.

ஈழத் தமிழ்  இடதுசாரி பாரம்பரியம்

இலங்கையின் இடதுசாரிய பாரம்பரியம், இலங்கையில் மேல்தட்டு வர்க்க பூர்சுவாக்களின் வரலாறோடு தொடர்புடையது. இலங்கை ஆங்கிலேய கொலனியாகவிருந்த காலத்தில்,  கல்வி கற்க ஐரோப்பா சென்ற இலங்கையர்களால், மார்க்சிச தத்துவமும், அமைப்புருவாக்கமும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.  ஆரம்பத்தில் தென் இலங்கையில் மட்டுமே இடதுசாரி அமைப்புகள் இயங்கின. தமிழ் பேசும் பகுதிகளுக்கு, இலங்கை சுதந்திரம் அடைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே தான் அறிமுகப்படுதப்பட்டது.

போலி சுதந்திரத்துக்குப் பின்னான இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாண மேல்தட்டு வெள்ளாளர்கள் பலர் கொம்யூனிஸ்ட் கட்சிகளில் இணைந்தனர். அவர்கள் பாட்டாளி வர்க்க விடுதலைக்காக போராடுவதற்காகவல்ல. மாறாக அக்கட்சிகள் மூலம் கல்வி உதவி பெற்று, அன்றைய சோவியத்திலும், கிழக்கு ஐரோப்பாவிலும் கல்விபயின்று தமது அந்தஸ்தை உயர்துவதற்காகத்தான். இதில் வெகுசிலர் விதிவிலக்காக இருக்கலாம்.

சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் கிழக்கு ஜெர்மனி முதல் சோவியத் வரை சென்று கல்வி கற்று விட்டு வந்தவர்கள், கூட்டடுறவு சங்கங்களுக்கு அதிகாரிகளாக பணியாற்றினர். இதன் போது இலஞ்சம் வாங்கியும், மக்கள் பணத்தை திருடியும் வயிறு வளர்த்தவர்கள் தான் பலர்.

பின்பு சண்முகதாசன் காலத்தில் பணம் சம்பாதிக்க முடியாவிட்டாலும், அவரின் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு எல்லாந்தெரிந்த "புத்திஜீவிகள்" என்ற "இமேச்" இருந்தது. இதை அவர்கள் தமது உரையாடும்முறை, அதன் உள்ளடக்கம், உடல்மொழி போன்றவை மூலம் கட்டமைத்தனர்.

இவர்களில் பலரும், மேற்கூறிய  யாழ்ப்பாண மேல்தட்டு வெள்ளாளர்களாகவே இருந்தனர். இச்சாதியைச் சேராதவர்கள் சண்முகதாசனின் கட்சியில் இருந்தாலும், அவர்களும் மேற்கூறிய சாதியின் குணாம்சத்தையே கொண்டிருந்ததால்;, யாழ்ப்பாண மேல்தட்டு வெள்ளாளர்களை விட நேர்மையானவர்களாய் அவர்களும் இருக்கவில்லை. எழுத்தாளர் டானியலின் கதைகளில் வரும் "போராளி" பாத்திரங்களை கவனமாக ஆராய்ந்தால், நான் மேற்கூறிய "புத்திஜீவிகள்"  என்ற "இமேச்" ஜ காணலாம். எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு சொல்பவனாக, மக்களுக்கு மேலான அறிவு ரீதியான மேலாதிக்கம் கொண்ட, தன்நிலை சார்ந்த ஆண்களாக அப் பாத்திரங்களை அவர் படைத்திருப்பார்.

இடதுசாரித்துவமும், தேசிய விடுதலை இயக்கங்களும்

இதற்கு பிற்பட்ட காலத்தில், அதாவது இயக்கங்கள் சமூக ஆதிக்கத்தை தமதாக்கிய எண்பதுகளில்; அனைத்து இயக்கங்களும் சோசலிசம் பேசின. புலி, டெலோ உட்பட அனைத்து இயக்கங்களும், சோசலிசமும், இடதுசாரிதுவமும் கொண்ட தமிழ் ஈழம் அமைப்பது  தமது வேலைத்திட்டமாக பிரச்சாரம் செய்தனர்.

இக் காலத்தில் பலர் தம்மை மார்க்சியவாதியாக காட்டிக்  கொள்வதும், இலக்கியம் தெரிந்த கவிஞனாகவும் கட்டமைப்பதும், தம்மை புத்திஜீவிகளாக மற்றவர்களுக்கு அறிமுகமாக்குவதற்கு பாவிக்கும் தந்திரோபாய மார்க்சியம் பேசினர்.

இந்த நபர்கள்; தமது அன்றாட வாழ்க்கையில் தமது சுயதேவைகளுக்காகவும், அதாவது, பாலியல் தேவை, பொருளாதார தேவை,  சமுதாய அந்தஸ்து, தனிமனிதர்கள் மேலான ஆளுமை செலுத்தல், சமுதாய அமைப்புக்கள் மீதான ஆளுமை செலுத்துதல், ஆகிய அனைத்துத்  தளத்திலும்  தமது ”மார்க்சிச”, இலக்கிய "இமேச்" அல்லது முகமூடியை  பாவிப்பதன் மூலம், தமது நலன்களைக் காத்துக் கொண்டனர். இந்த வகை "மார்க்சிய", இலக்கியவாதிகள் இயக்கங்களில் உறுப்பினர்களாக இருந்தது, மேற்படி அவர்களின் சுயதேவையை பூர்த்தி செய்வதற்கான முக்கிய காரணமாகும். ஆனால் அவர்களின் "அறிவு மேலாதிக்கமே", வெகு இலகுவாக இயக்கங்களில் பதவி பட்டங்களுடன், சுயதேவையை பூர்த்தி செய்வதற்கான அடிப்படைக் காரணிகளாகும்.

இவர்களில் பலர் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் போன்ற அமைப்புக்களில் உறுப்பினராகவோ, அல்லது அனுதாபிகளாகவோ செயற்பட்டனர். இந்த காலத்தில் தான் இந்த நபர்களில் சிலருக்கு தாடியும், ஜோல்னா பையும், கண்ணாடியும் இவர்களின் வெளி அடையாளங்களாக இருந்தது.

இவர்களே அரசியல் ஆலோசகர்களாகவும், தத்துவ வழிகாட்டிகளாகவும் மாறி, தம்மை இயக்கங்களில் தகவமைத்தனர். இதன் அடிப்படையில் இயக்கங்களின் கொலைகள், அரசியல் புரள்வுகள், மக்கள் நலனுக்கு எதிரான சதிகள் என்பவற்றை தமது சொந்தநலனின் அடிப்படையிலும், தமக்கே உரித்தான சந்தர்ப்பவாத குள்ளநரித்தனத்தாலும் நியாயப்படுத்தினர். இதனால் இயக்கங்களின் உட்படுகொலைகள், ஜனநாயக மீறல்கள், தவறான அரசியல் நடவடிக்கைகள் பலவற்றிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமானவர்கள் இவர்கள் தான். இவர்களை குறைந்தது மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

மூன்று வகை "இடதுசாரிகள்"

முதலாவது பிரிவினர்

தங்களை ஒருவகை முற்போக்கு தேசியவாதிகளாகவும், பிரமுகர்களாகவும் சமூகத்தில் வலம் வந்தபடி புலிகளின் ஆஸ்தான துதிபாடும் வித்துவான்களானவர்கள்.  இவர்கள் சமூக அரங்கில் தங்களை தாங்களே அம்பலப்படுத்திக்கொண்டு சீரழிந்து போனவர்கள். ஜெயபாலன், சேரன், சிவராம் வகையறாக்கள் இதற்கு நல்ல உதாரணம்.

இரண்டாவது வகையினர்.

தமது புலிஎதிர்ப்பு காரணமாக அரச அடிவருடிகளாக செயற்படுகின்றனர். ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைக்கு ஏற்றவாறு, குறிப்பாக இந்திய இடதுசாரிகளை சந்திக்கும் வேளையில், தம்மை அதிகாரத்திற்கு  எதிரானவர்களாக காட்டிக்கொள்வார்கள். தேவை ஏற்பட்டால் தான் ஒரு கொம்யூனிஸ்ட் என்றும் அறிக்கை விடுவார்கள். இன்று பல இந்திய பதிப்பகங்கள் இவர்களால் தான் பணம் சம்பாதித்து இயங்க முடிகிறது. குமுதத்திற்கும், மனு~;யபுத்திரனின் உயிர்மை பதிப்பகத்திற்கும், கருப்புப் பிரதிகள் பிரசுரத்தினருக்கும் முன்னாள் புலிகளை ஆள்பிடித்து கொடுப்பது இவர்கள் தான்.

தமது சொந்த வெளியீடாக கவிதை என்றும், சிறுகதை என்றும் இவர்கள் தமது, கிறுக்கல்களை புத்தகமாக வெளியிடுகின்றனர். பெரும்பாலானவை சமுதாய முன்னோக்கிற்கான உள்ளடக்கத்தை கொண்டவையல்ல. தன்னலம் சார்ந்த, சுயவிருப்பை மற்றவர்களும், சமுதாய அரங்கிற்கும் பறைசாற்றுவதற்காக, குறியீட்டு அரசியலை உள்ளடக்கமாக கொண்டவை இவர்களின் எழுத்துக்கள். சரி உள்ளடக்கத்தை விடுவோம். தங்களை இவர்கள் பின் நவீனத்துவவாதிகளாகவும், தலித்தியர்களாகவும், பெண்ணியவாதிகள் என்றும் தம்மை முன்னிறுத்துவதால் உள்ளடக்கத்தை விட்டுவிடுவோம். அழகியலிலும், வடிவத்திலாவது இவர்களின் வெளியீடுகள் துலங்கும் என்றால் அதுவும் இல்லை. இதற்கு ஒரு காரணம்  இந்திய போலி இடதுகளான அ.மார்க்ஸ் போன்ற "பேராசான்கள்" ஆங்கிலத்திலிருந்து, அரை குறையாக உல்டா  பண்ணி தமது பெயரில் வெளியிட்ட புத்தகங்கள் மூலம் இவர்கள் பின்நவீனத்துவம், பெண்ணியம், போன்றவற்றை தெரிந்து கொள்ள முயன்றது ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் தான் இலக்கியமும், தலித்தியமும் கதைத்தபடி மகிந்த சேவை செய்ய சிறிலங்கா தேசியகீதத்தை பாடியபடி, விளக்குமாற்றை நிகழ்வின் மேடையில் வைத்தும், இலக்கிய-அரசியல் கூட்டம் நடத்துவதென்பதுவும் பின்நவீனத்துவமென வாதிடுகின்றனர். அதேபோல் தொழில் செய்யாமல், அரச உதவியில் (பிச்சை சம்பளத்தில்) சீவிப்பது, உடலியல் இச்சையின் புரள்வினால், அடுத்தவர் மனைவியை பாலியல் உறவுக்கு இணங்க வைப்பதென்ற போர்வையில் பெண்கள் மீதாக நடாத்தப்ப்படும் மறைமுகமான பலாத்கார வக்கிரங்களை கட்டுடைப்பு என்று கூறி புளகாங்கிதம் அடைகிறது இந்த கும்பல்.

பெண்ணியம் கதைப்பவர்களை எடுத்து கொண்டால், இவர்கள் முன்கூறியவர்களை போல் சுயதம்பட்டதிற்காகவும், தமது சமுக அங்கீகாரத்திற்குமான அடையாளமாகவும் பெண்ணியத்தை பயன்படுத்துகின்றனர். இவர்கள் முதலாளித்துவ பெண்ணிய கோரிக்கைகளின் சீரழிந்த கோசங்கள் பலவற்றை தமது அரசியல் கோரிக்கையாக முன் வைக்கின்றனர். முன்பு சிலர் இத்தளத்தில் கூறியது போல்; விபச்சாரத்தை தொழிலாக அங்கீகரிக்க கோருகின்றனர்.   இன்று யுத்தத்தின் பின் பல சிங்கள, தமிழ் சிறுமியரும் பெண்களும் வயிற்றை கழுவுவதற்காக விபச்சாரத்தில் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக கிழக்கில் விபச்சாரம் பெருகி வருகின்றது. சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்பட்டுள்ள சிங்கள, தமிழ் சிறுமியரையும், பெண்களையும் "பால்வினை தொழிலாளர்கள் " என இவர்கள் அழைப்பார்களா என்பது இவர்கள் முன் வைக்கும் கேள்வியாகும்.

மேலும், இந்திய கவிதாயினியினர் சிலர் பெண்ணியம் கதைத்தபடி, பாலியல் அனுபவங்களையும், தமது பாலியல் உறுப்புகளையும் பாடுபொருளாகக் கொண்டு  கவிதையாக்குவது தற்போது, "பிரபலமானதாகவுள்ளது". இது இப்போது ஈழத்தமிழ் பெண்ணிய கவிதாயினியினர் மத்தியிலும் பிரபலமடைந்த வண்ணம் உள்ளது. கலவியின் உச்சநிலையில் சோர்ந்து சூம்பிக் கிடக்கும் ஆண்குறியும், துவைத்துப் காயபோட்ட மாதவிடாய் துண்டு போன்றவையும் இவர்களின் பாடுபொருளாகவும், "ஆத்தாட சீலைக்க போய்ப்பாரு" "ஆச்சியட்ட கேட்டா கிழப்பிக்காட்டுவா"  "உங்காத்தமாரட சீலயக் கிழப்பிப் பாருங்கோடா"  போன்ற சொல்லாடல் பிரயோகிப்பும் இவர்களின் கவிதைகளின் உள்ளடக்கமாகவுள்ளது.

சொல்லிமாளா அவலங்கள்  எம்பெண்களுக்கு நடந்த பின்பும், இவர்களுக்கு பாடுபொருள்  இல்லாமல் இந்திய கழிசடைகளிடம் பெயர் வாங்க அவர்களை பின்பற்றுகின்றனர் இவர்கள்.

அடுத்து தலித்திய கும்பல். இக்கும்பல் மேற்கூறிய, தமிழ் தேசிய இனத்துக்கு ஏற்பட்ட அழிவுக்கு மகிந்தாவின் பாசிச அரசுடன் தோள் நின்று உழைத்தவர்கள். நான் மேற்கூறியது போல இவர்களின் அரசியலற்ற வெறும் புலியெதிர்ப்பே இதற்கு காரணம்.

பாசிச மகிந்தாவுக்காக, இந்தியாவில் பிரச்சாரம் செய்தவர்கள். சிலர் இந்தியாவில் மட்டும், பிரமுகர்களைச் சார்ந்து  அரசியல் செய்கின்றனர். முன்றாந்தர லும்பன்களாக இவர்கள் பலர் இன்று புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் சீவிக்கின்றனர். அந்நாடுகளில் இவர்கள் சிலர் எந்தவிதமான உடல் உழைப்பிலும் ஈடுபடுவதில்லை. அங்கு வழங்கப்படும் பிச்சை சம்பளத்திலோ அல்லது தமது மனைவியின் உழைப்பிலேயே வாழ்கின்றனர்.

தலித்தியம் கதைக்கும் இவர்களில் பலர் யாழ்-வெள்ளாள சாதியின் ஆதிக்க குணாம்சத்தை  விட படுபயங்கரமான ஆதிக்க வெறிபிடித்தவர்கள். ஒரு அடிமை ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பைப் பெறும்போது, சரியான தத்துவ வழிகாட்டல் இல்லாத போது எப்படி நடந்து கொள்வானோ, அவ்வாறே இவர்களின் நடத்தையும். தமிழ்தேசிய எதிர்ப்பாளர்களாக, தமிழ்மக்கள் மீது இலங்கை பாசிச அரசால் நடத்தப்படும் கொலைகளை, கொடுமைகளை, சாதி ஒடுக்குமுறையால் ஏற்பட்ட பாதிப்பிற்கான பழிவாங்கலாக இவர்கள் அதை நியாயப்படுத்துகின்றனர். நான் முதல் வகையினரின் பெயர் குறிப்பிட்டதுபோல இவர்கள் பெயர் இங்கு குறிப்பிட இடம் காணாது. ஏனெனில், இவர்கள் பல நூற்றுக்கணக்கானவர்கள்.

"முக்கியமான" மூன்றாம் வகை ”தமிழ் இடதுசாரிகள்”

இவர்கள் தமிழ் இடதுசாரிகள், தம்மை புத்திஜீவிகளாகவும், எழுத்தாளர்களாகவும், தத்துவம், வரலாறு, பொருளாதாரம், சமூகவியல், மானுடவியல், உளவியல், இலக்கியம், மொழியியல் என ஒரு பல்கலைக்கழகத்தின் அரைவாசிக்கும் மேலான கற்கைகளின், விற்பன்னர்களாக தம்மை காட்டிக்கொள்வதில் சுய இன்பம் காண்பவர்கள்.  இவர்களில் பலர் இன்று தேசத்தில் இல்லை. புலம் பெயர்ந்து வாழ்கின்றனர்.

இவர்களையும் இரண்டு வகைப்படுத்தலாம்.

1.முதலாவது வகையினர், சந்தர்ப்பவாத இடதுசாரிகள். மக்கள் நலம் சார்ந்த சரியான அரசியல் பார்வை இவர்களுக்கு இருந்தாலும், நடைமுறையில் அவ்வரசியலை முன்னெடுக்க முடியாத நிலையிலுள்ளனர் இவர்கள். தமது பூர்சுவா வர்க்க குணாம்சத்திற்கேற்ப, எல்லோருக்கும் நல்லவர்களாகவும், உறவாகவும் தாம் இருக்க வேண்டும் என்ற இவர்களின் சுயதேவை காரணமாய்  சந்தர்ப்பவாதிகளாய் வாழ்பவர்கள். எல்லோருடனும் நட்பு பாராட்டுவதால், கறாரான  மக்கள் நலம் சார்ந்த சரியான அரசியலை முன்னெடுக்க இவர்களால் முடியாது. டக்ளஸ் தேவானந்ததாவிலிருந்து, அ.மார்க்ஸ், பரந்தன்ராஜன், கிழக்கின் விடிவெள்ளி கருணா, பிள்ளையான், அவரின் ஆலோசகர் ஞானம் என எல்லோருடனும் இவர்களுக்கு நட்பு உண்டு. தேவை என்றால் தம்மை ஸ்டாலினிஸ்ட்டுகளாகவும் காட்டுவார்கள், அதேவேளை இன்னொரு சந்தர்ப்பத்தில் திரோட்ஸ்கிசவாதிகளாகவும் தம்மை நிலைநிறுத்துவாரகள்;. இப்படி அங்கிடுதத்திகளாக உள்ளனர் இவர்கள். குறிப்பாக இனியொரு இணையத்தையும், அதை இயக்குபவர்களையும், இந்த வகையை சேர்ந்தவர்களுக்கு உதாரணமாக கூறலாம்.

2.இரண்டாவது  வகையினர் மேற்கூறியவர்கள் போல் அல்லாமல்; மக்கள் நலம் சார்ந்த சரியான அரசியல் கண்ணோட்டத்தை கொண்ட இயங்குசக்திகள். இடதுசாரிய தத்துவ நடைமுறை ரீதியாக அனுபவமுள்ளவர்கள். இந் நிலையை கொண்டவர்களை குறிப்பிடுவதானால், இன்று புலம்பெயர்ந்துள்ள முன்னாள் சரிநிகர் குழுவினரில் ஒரு பகுதி,   மே 18  இயக்கத்தைச் சேர்த்தவர்கள், மற்றும்  புதியதிசைகள் போன்ற அரசியல்சக்திகளை குறிப்பிடலாம்.

இவர்களில் மே 18  இயக்கத்தை சேர்த்தவர்கள் பற்றியும், அவர்களின் அரசியல் முனைப்பு பற்றியும் இத்தளத்திலும், வேறு வெளியீடுகளிலும், மக்கள் சக்திகளால் காரசாரமான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றது. ஆகவே, இவர்கள் மீதான நீண்ட விமர்சனத்தை தவிர்த்து, சுருக்கமாக கூறினால்,  மே 18  இயக்கத்தை சேர்த்தவர்கள், கடந்தகாலம் சம்பந்தமான தமது சுயவிமர்சனத்தையும்; தமது அரசியல் பிரகடனத்தையும், அரசியல் திட்டத்தையும்  உடனடியாக  பகிரங்கமாக முன் வைக்கவேண்டும். இதன் மூலமே இவர்கள் மீதான விமர்சனத்தையும், அதனால் ஏற்படுத்தப்படும் சந்தேகங்கள், அத்துடன், மிக முக்கியமான  நேச சக்திகளை எதிரணிக்கு தள்ளுவதையும் இவர்களால் தடுக்கமுடியும்.

இறுதியாக,

இதில் நான் எழுதிய ஒன்றும் புதிதல்ல. இது ஒருவகையில்; எனக்கு நானே இடதுசாரிசக்திகள் பற்றிய ஒரு தெளிவுக்கு வருவதற்காகவும், எழுதியதென்று கூட கூறலாம். அந்தவகையில் என்னைப்  போன்ற பல தோழமை சக்திகளுக்கும் இடதுசாரி சக்திகள் பற்றி சிறு தெளிவையாவது இப்ப பதிவு ஏற்படுதும் என எதிர்பார்க்கிறேன்.

நாட்டு நிலைமையையும், மக்களின் அவலங்களையும் கண்டு,  ஏதாவது செய்ய வேண்டும் என்று இடதுசாரி என்று சொல்லியபடி தன்னலம் சார்ந்த குறியீட்டு அரசியல் நடத்தும் சக்திகளை அம்பலமாக்கி தோழமை சக்திகளை  இனம் காண்பதற்கான சிறுமுயற்சியே இப்பதிவு.

மேலும் நான் ஆரம்பத்தில் கூறியது போல்  என்தோழர்களில்  பலர் இருபது வருடங்களுக்கு மேலாக, மக்கள் விடுதலைக்கான அனைத்து இடது சக்திகளையும் இணைத்து  மக்கள் விடுதலைக்கான முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்றுவரை இவை எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அளிக்கவில்லை. இருந்த போதும் இடதுசக்திகள் யார் என்ற கேள்விக்கு பதில் காண்பதன் மூலமே, சரியான சக்திகளுடன் மக்கள் விடுதலைக்காக இணையமுடியும்.