Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கல்வியை இடைநிறுத்தியவர்கள் மூவரின் கருத்துகளை, 07.02.2010 வீரகேசரியில் வெளியிட்டிருந்தனர். "டசாலையை விட்டு இடை விலகிய மாணவர்களின் கருத்துகள் " என்ற தலைப்பில் குறிஞ்சி குணா என்பவர் எழுதியிருந்தார்.

இந்த நிலைமைக்கான காரணம் என்ன? அவர்களின் தனிப்பட்ட வாழ்வும் அது சார்ந்த சூழலுமா? இல்லை, நிச்சயமாக இல்லை. மாறாக  எமது சமூக பொருளாதார கட்டமைப்புதான் காரணமாகும். இதை மேய்க்கும் அரசு தான் இதற்கு முழுப் பொறுப்பாகும்;. இந்த சமூக அமைப்பு உருவாக்கியுள்ள அங்கங்கள் குழந்தைகளை வளர்ப்பதில், அவர்களை நலமடிக்கின்றன. இந்த வகையில் குழந்தைகளை வழிநடத்தத் தெரியாத ஆசிரியன் என்ற மேய்ப்பாளன், குடும்பம் என்ற வன்முறை கட்டமைப்பும் ஆணாதிக்க ஒருங்கமைப்பும், சமூகத்தை தீர்மானிக்கும் பணம் முதல் தனிநபர் புகழ் சார்ந்த குறுகிய வாழ்வியல் நெறி, வறுமை… இப்படி பல. இவையெல்லாம் குழந்தைகளின் உளவியலை சிதைத்து, அவர்களின் வாழ்வியலை அழிக்கின்றது.

1.புஸ்பராஜ்சின் நிலை என்ன? அவரின் குடும்பம் இலங்கையில் உழைத்து குடும்ப வாழ்க்கையை நடத்த முடியாத நிலையில், தாய் வெளிநாட்டுக்கு உழைக்கச் செல்கின்றாள். குடும்பத்தை வழிநடத்த வேண்டிய கணவன், மூன்று சிறு குழந்தைகளை கவனிப்பதை கைவிடுகின்றான். அவர்களுக்கு உணவைக் கூட சமைக்காது, படிப்படியாக குடிகாரனாகி திரிகின்றான். தன் இரு சிறு தங்கைகளுக்கும் சமைத்துக் கொடுக்கவென, அந்த சிறுவன்  பாடசாலை போவதையே நிறுத்துகின்றான். இடையிடை அவன் பாடசாலை சென்றபோது, ஏன் வரவில்லை என்று கேட்டு தண்டிக்கப்படுகின்றான். மூன்று வருட இறுதியில் தாய் திரும்பிவந்தபின், பாடசாலை செல்ல தாய் நிர்ப்பந்தித்த போதும் வயது கடந்து படிப்பது வெட்கத்துக்குரிய ஒன்றாக மாறிவிடுகின்றது. இப்படி வயது கடந்து படிப்பது, சக மாணவனினதும்; ஆசிரியனதும், சமூகத்தினதும் கேலிக்குரிய ஒன்றாகிவிடுகின்றது. குழந்தையின் கல்வி கருகி பட்டுப் போகின்றது.

இன்று இலங்கையில் 30 முதல் 40 லட்சம் பேர், நாட்டுக்கு வெளியில் சென்று உழைக்கும் நிலையில் உள்ளனர். இது மொத்த சனத்தொகையில் அண்ணளவாக 20 சதவீதம். இலங்கையின் பிரதான வெளிநாட்டு வருமானம் இவர்களின் உழைப்புதான். மனித உழைப்பு ஏற்றுமதியாகின்றது. மக்களை ஏற்றுமதி செய்து ஆள்வதுதான், இலங்கையின் இறையாண்மையாக மாறிவிட்டது. இதில் உள்ள அவலம் என்னவென்றால், இப்படி ஏற்றுமதியானவர்களில் பெரும் பகுதி பெண்கள். தங்கள் குழந்தைகளை ஆணாதிக்க சமூக அமைப்பில், அனாதையாக அநாதரவாக, கைவிட்டுச் செல்ல வேண்டிய நிலையில் இலங்கைப் பெண்கள் வாழ்கின்றனர்.

இந்த நிலையில் இவர்களின் பெண் குழந்தைகள், குடும்ப உறுப்பினராலேயே பாலியல் ரீதியாக மேயப்படுகின்ற நிலை அதிகரித்துள்ளது. ஆண்கள் வேறு பெண்களுடன் தொடர்பு முதல் குடியும் கூத்துமாக மாறிவிடுகின்ற அவலம் பொதுவான ஒன்றாக மாறிவருகின்றது. இப்படி பல சமூக அவலத்தை, அந்தக் குடும்பம் சந்திக்கின்றது. குடும்பத்தின் மற்றைய உறுப்பினர்கள் வாழ்வுக்காக அற்ப கூலியுடன் உழைத்து வந்தவர்கள் கூட, தாம் செய்து வந்த தொழிலை கைவிடுகின்றனர். உழைப்பில் ஈடுபடாது வெளிநாட்டு பணத்தை கொண்டு வாழும் போக்கில், நுகர்வு ஆடம்பரமும் கூட இணைந்து விடுகின்றது. இவர்களின் குழந்தைகளின் கல்வி முதல் அவர்களின் சமூக பண்பாட்டு பழக்கவழக்கங்கள் என அனைத்தும் சீரழிகின்றது.

இந்த நிலைக்கு காரணம் என்ன? ஒரு அரசு, சொந்த நாட்டில் மக்களை வாழவைக்க முடியாது, வக்கற்றுக் கிடக்கின்றது. மக்கள் அன்னிய நாட்டுக்கு சென்று உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம். அவர்கள் அங்கு பெறும் கூலி இலங்கை பணத்தில் 10000 முதல் 15000 ரூபாதான். இலங்கை மத்தியதர வர்க்க வாழ்க்கைக்குரிய அடிமட்டத் தொகை. இதைக் கூட இன்று இலங்கையில் உழைத்து வாழமுடியாத நிலையில், இலங்கை வாழ் மக்கள் உள்ளனர்.  இதனால் குடும்பத்தை பிரிந்து உழைப்பதற்காக வெளிநாடு செல்லுகின்றனர்.

இங்கு இலங்கை அரசு என்னதான் செய்கின்றது. மாமா வேலை தான் பார்க்கின்றது. மக்களை வாழ வைக்க வக்கற்று, மக்களை பிளந்து அவர்களை மோதவிட்டு தப்பிக்கின்றது.

இனங்களை பிளந்து சண்டைகளை திணித்து, மக்களை பரதேசி கூட்டமாக்கிவிடுகின்றது. சொந்த இன மக்களை, இரண்டு தரம் பாரிய அளவில் பலி கொண்டது. சமூக பிரச்சனைகளைத்  தீர்க்காது, அவர்களை பிளந்து மோதவிடுவதும், அவர்களைக் கொன்று குவிப்பதும் தான், இலங்கை அரசின் வேலையாகிவிட்டது. தம்மை பாதுகாக்க பாசிச பயங்கரவாதத்தையும், மனிதவிரோத  சட்டங்களையும் கொண்டு மக்களை அடக்கியாளுகின்றது. இதே நேரம், எம்மக்களை நாடு கடத்தி மாமா வேலை செய்வதையே நாட்டு அபிவிருத்தி என்கின்றனர். இப்படி அன்னியநாட்டு பணக்கார கும்பலுக்கு, மனித உழைப்பு முதல் நாட்டின் செல்வத்தையே தாரை வார்த்து வருகின்றது.

இந்த நிலையில்தான் குடும்பங்கள் பிரிந்து, பிழைப்புத் தேடி அன்னியநாட்டுக்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் எந்த சட்ட பாதுகாப்பும், தொழில் உரிமைகளும் கூட கிடையாது. உலக பணக்கார கும்பலுக்கு சேவை செய்வதன் மூலம், தங்கள் வயிற்றுக்குரிய கஞ்சி பெறுவதற்கு ஏற்பாடு செய்வதற்காகத்தான் அரசு இருக்கின்றது. இந்த மாமா வேலையைத்தான், வேலைவாய்ப்பு என்கின்றது.

இதனால் ஏற்படும் குடும்பங்களின் பிரிவு, குடும்ப சிதைவாக மாறுகின்றது. அவர்களிடம் இருந்த மகிழ்ச்சியை, இது அழிக்கின்றது. தவறான உறவுகள், தவறான நடத்தைகள் முதல் அடிப்படைக் கல்வியை இழப்பது வரை அரங்கேறுகின்றது. இதில் இருந்து மீள வழிக்காட்டக் கூடிய, எந்த சமூக போக்கும் இன்று இலங்கையில் கிடையாது. வாழ்வதற்காக சமூகத்துடன் கூடிப் போராடுவது என்பது மறுக்கப்பட்டு, தனிநபராக தீர்வு காணும் குறுக்குவழியிலான சீரழிவுகள் குடும்பத்தில் புகுத்தப்படுகின்றது. இதுதான் இந்தக் குழந்தை அவலமாக, நரகல் வாழ்வாக மாறிவிடுகின்றது.

2.வாசுகியின் நிலை என்ன? சமூகம் சார்ந்து கல்வியில் ஏற்படும் தடங்கல்கள், தொடர்ந்து கற்பதை மறுக்கின்றது. வயது மற்றும் கல்வியின் தரம் சார்ந்த ஒன்று, கேலிக்குரியதாகவும், அதுவே அவமானத்குரியதாகவும் மாறிவிடுகின்றது. இப்படி கல்வி கற்பது தண்டனைக்குரிய ஒன்றாக, தண்டிப்புக்கு உள்ளாகின்றது.

ஆசிரியன் என்ற மந்தை இதைத்தான் செய்கின்றான். இதற்கான பொறுப்பை ஆசிரியன் ஏற்று, குழந்தைகளை வழி நடத்துவது கிடையாது. மாறாக அதை கேலிக்குரியதாக்கி, அதை மெச்சுகின்ற போக்குத்தான், தன் தொழிலுக்குரிய மகிமையாக்கப்படுகின்றது. குழந்தையின் சமூகம் சார்ந்த சூழல், கல்வியில் பின் தங்குவதற்கான குறிப்பான காரணங்களை ஆராயாது, கேலி செய்வதும் தண்டிப்பதும் பொதுவான ஒன்றாக இன்று உள்ளது. மந்தைகளை மேய்ப்பதற்கு அப்பால், சமூகத்தின் ஏற்றத்தாழ்வான வாழ்க்கையின் முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு அணுகுவதன் மூலம், மாணவனை வழிகாட்டுவதும் கிடையாது. அரசு எப்படியோ, அப்படித்தான் ஆசிரியன். மக்களை அடக்கியாளும் சட்டங்கள் முதல் வன்முறைகளை கொண்டுள்ள அரசு போல், ஆசிரியன் ஒரு மந்தையாகவே இயங்குகின்றான். இங்குதான் இந்தக் குழந்தை உற்பத்தியாகின்றது.

3.யுரேந்திரன் நிலை என்ன? இந்த சமூக அமைப்பின் வெட்டுமுகம் இது. கதாநாயகத் தனமும், பணமும் ஒரு சமூகமாகும் போது, சமூக கண்ணோட்டமாகும் போது, அதில் வீங்கி வெம்பும் குழந்தைகளின் கதையிது. ஆடம்பரமாக, கூடிக் கூத்தாடி, அனைத்து சமூக விழுமியங்களையும் மறுத்து வாழ்வதுதான் உன்னதமான வாழ்க்கை என்கின்ற பொது உலகக் கண்ணோட்டம். இதையே தொலைக்காட்சிகள் முதல் சினிமாவரை, மீளமீள கூறுகின்றது. பணக்காரக் கும்பலினதும், அதிகார வர்க்கத்தினதும் வாழ்க்கை முறையே இதுதான்.  பணக்கார சீமான்களும் சீமாட்டிகளும் போடுகின்ற கூத்தை நம்பி, கருகிப் போனவர்களின் கதை தான் இது.

இதில் இருந்து குழந்தையை மீட்க, பெற்றோர் ஆசிரியர் தண்டனைமுறை மூலம் தான் அணுகுகின்றனர். இது எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றது. தன் கீரோ உலகத்தில், தனக்கு ஏற்பட்ட அவமானமாக இதை கருதுகின்றது. ஆத்திரம், பழிவாங்கும் உணர்வாகி எதிர்மறையாகவே பயணிக்கின்றது. பெற்றோர் இந்த ஆடம்பரம் வாழ்வின் நாசகரமானது என்பதை விளக்கி, அதை ஏற்க வைத்து ஒரு புது வாழ்க்கை முறையை ஏற்படுத்தும் நவீன அறிவை தெரிந்து கொண்டிருப்பதில்லை. இதை எப்படி கையாள்வது என்பதை, சமூகம் வழிகாட்டுவதில்லை. உண்மையில் சமூகத்தின் கூட்டான சமூக செயல்கள் இல்லாத போது, தனிப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் எதையும் சரியாக கையாள முடிவதில்லை. அவர்கள் தமக்கு சரி என்று பட்டதை செய்யும்போது, எதிர்மறையான பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றது.

சமூகத்தின் கூட்டு பங்களிப்பும், வழிகாட்டும் பொது விவாதங்களும் அவசியமானதாக உள்ளது. சமூகம் தன்னைத்தான் அமைப்பாக்குவதன் மூலம்தான், இவை போன்றவைகளை சரியாக முன்னெடுத்து வழிநடத்த முடியும்.

பி.இரயாகரன்
24.05.2010