08102022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

G.A.T.T காட், டங்கல் திட்டங்கள் மூன்றாம் உலக நாடுகளின் சுயசார்புக்கு சாவுமணி மேல்நிலை வல்லரசுகளின் மறுகாலனியாதிக்கம்

1930 களில் அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய பொருளாதார வல்லரசாக வளர்ந்து விட்டது. அது பிற காலனிய ஏகாதிபத்தியங்களிடமிருந்து உலகச் சந்தையை பகிர்ந்து கொள்ள விரும்பியது. அதற்காக உலக மேம்பாட்டிற்கும் சமாதானத்துக்கும் சுதந்திரமான உலகச் சந்தை அவசியம் என்ற கருத்தை முன் வைத்தது. அவ்வடிப்படையில் 1948 இல் 23 ஏகாதிபத்திய தொழில்வளமிக்க நாடுகளிடையே சிக்கலற்ற சீரான உலக வணிகத்திற்காக ஒரு பொதுஒப்பந்தம் ஹவானாவில் ஏற்பட்டது. உலக நாடுகளிடையே ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் மற்றும் சுங்கத்தீர்வை ஆகிய பிரச்சனைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் ஏற்பட்ட இந்த பொது ஒப்பந்த அமைப்பு தான் காட்.

பின்னர் இந்தியா போன்ற பின்தங்கிய ஏழைநாடுகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டன. உலகச்சந்தை வர்த்தகத்தின் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் சுங்கத்தீர்வையில் அவ்வவ்போது எழும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக காட் இல் பங்கேற்கும் நாடுகளின் மகாநாடு ஆண்டுக்கொருமுறை நடைபெறும். 1944 பிரிட்டன் உட்சில் நடந்த மகாநாட்டில் தான் உலகவங்கியும் சர்வதேச நிதிநிறுவனமும் உருவாகின.  பின்தங்கிய, ஏழைநாடுகள் பலவும் அவை போட்டுள்ள மூலதனப்பங்கிற்கு ஏற்பத்தான் வாக்குரிமை பெற்றுள்ளன. எனவே இந்த இரு நிதிநிறுவனங்களும் அமெரிக்கா, ஜரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகிய மேலாதிக்க மேல்நிலை வல்லரசுகள் மற்றும் அவற்றின் தேசங்கடந்த பன்னாட்டு பகாசூரத் தொழிற்கழகங்களுக்குச் சாதகமாகவே செயற்படுகின்றன. பின்தங்கிய ஏழைநாடுகளின் கைகளை முறுக்கி காரியங்களைச் சாதிக்கின்றன. காட் இல் ஒவ்வொரு உறுப்பு நாடுகளுக்கும் ஒரு வாக்கு உண்டு என்பதால் அது ஒரு ஜனநாயக அமைப்பு போல தோற்றமளிக்கிறது.  ஆனால் ஜந்து நட்சத்திர விடுதிகள் ஆடம்பர மாளிகைகளின் விருந்து மண்டபங்களில் நடக்கும் இரகசிய பேரங்களில் பின்தங்கிய ஏழைநாடுகளின் துரோகிகளான தரகு அதிகார முதலாளிகள் அதிகாரிகள் அரசுத்தலைவர்கள் விலைபோகின்றனர்.

 

அத்தோடு மேலாதிக்க மேல்நிலை வல்லரசுக்கள்தாம் பொது ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிவுகளை நிர்ணயிக்கும் சக்திவாய்ந்தவையாக உள்ளன. தமது நிபந்தனைகள் கட்டளைகளை ஏற்கும்படி பின்தங்கிய ஏழைநாடுகளை நிர்ப்பந்திக்கக் கூடிய ஆயுதங்களை அவை பெற்றுள்ளன. மேல்நிலை வல்லரசுகளின் நிபந்தனைகளை கட்டளைகளை ஏற்க மறுக்கும் நாடுகளுக்கு எதிராக அவை பொருளாதார தடைகளை விதிக்க முடியும். குறிப்பாக உருகுவே சுற்றுப் பேச்சுவார்த்தை தனக்கு சாதகமாகவும் விரைவாகவும் முடியவில்லை என்பதால் அமெரிக்கா சர்வதேச வர்த்தகத்தில் தனது ஆதிக்க நிலையை உறுதிப்படுத்துவதற்காக சில அதிரடி அடாவடிச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

 

சூப்பர் 301. ஒம்னிபஸ் வர்த்தக மற்றும் போட்டிச் சட்டம் ஆகியவை அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கும் அமெரிக்க அதிபருக்கும் எல்லையற்ற அதிகாரம் தருகிறது. இதைப் பயன்படுத்தி இந்தியா, சீனா போன்ற நாடுகளை அமெரிக்கா அடிக்கடி பயமுறுத்தி வருகிறது. அதே சமயம் ஜரோப்பிய சந்தைச் சங்கம் வட அமெரிக்க சுதந்திர வர்த்தப்பகுதி உடன்படிக்கை ஏழு நாடுகள் (ஜீ.7) ஒப்பந்தம் ஆகிய வல்லரசுகள் தமக்குள் போட்டுக்கொள்ளும் பலதரப்பு இரு தரப்பு ஒப்பந்தங்களை காட் கட்டுப்படுத்துகின்றது. உறுப்பு நாடுகளை சமமாக பாவிப்பதாக காட் பீற்றிக் கொள்கிறது. காலனி ஏகாதிபத்திய சுரண்டலால் கொழுத்துப்போன வல்லரசுகளும் அதனாலேயே பின்தங்கிய ஏழைநாடுகளுமாக ஏற்றத்தாழ்வான உலகில் எல்லாவற்றையும் எப்படி ஒரு சமமாக பாவிக்க முடியும்? ஆகவே காட் அமைப்பு எப்போதுமே ஏகாதிபத்திய வல்லரசுக்களுக்கும் அவற்றின் ஏகபோக தேசங்கடந்த பன்னாட்டுத் தொழிற் கழகங்களுக்குமே சாதகமாக இருந்தது.

 

பின்தங்கிய ஏழை நாடுகளுக்கு பாதகமான சுங்கவரி மற்றும் கட்டுப்பாடுகளை தாம் விதித்தது. உருகுவே சுற்றுப்பேச்சுவார்த்தை (1986)வரை பின்தங்கிய ஏழைநாடுகளின் முக்கியமான ஜவுளி, மற்றும் விவசாயம் ஆகிய இரண்டு துறைகள் காட் அமைப்பின் கீழ் இருந்தன. 1974இல் இருந்து ஜவுளி வியாபாரத்துக்கான தனி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதற்கு முன்பிருந்த பல்வேறு ஒப்பந்தங்கள் ரத்துச் செய்யப்பட்டன. புது ஒப்பந்தப்படி ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு ஜவுளி ஏற்றுமதிக்கு அளவு நிர்ணயம்(கோட்டா) விதிக்கப்பட்டது. காட் அமைப்பு விதிமுறைகளை மீறக்கூடிய இந்த ஜவுளி ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதற்கு ஏகாதிபத்திய வல்லரசுக்கள் மறுத்துவந்தன. இதே போல் அமெரிக்கா தனது விவசாயத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில் விவசாய பொருட்கள் இறக்குமதிக்கும் 1955இல் பல கட்டுப்பாடுகளைப் போட்டது. அமெரிக்காவோடு ஜரோப்பாவும் காட் விதிமுறைகளை அப்பட்டமாக மீறி உணவுசேமிப்பையும் மானியங்களையும் அதிகமாக்கின. திடிரென்று உலகச் சந்தையில் மலிவான விலையில் கொண்டு வந்து கொட்டின. இதனால் உலக மொத்த தானிய இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கை கைப்பற்றிய அமெரிக்கா உணவை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் வலிமை பெற்றது. இதே போன்று சர்க்கரை, கோப்பி, தேக்கு, கொக்கோ, ரப்பர் உற்பத்தியிலும்  விற்பனையிலும் பன்னாட்டு தேசங்கடந்த தொழிற்கழகங்களின் ஆதிக்கமும் பின்தங்கிய ஏழைநாடுகளின் வீழ்ச்சியும் ஏற்பட்டது.

 

இப்போது ஜவுளித்தொழிலில் செயற்கையிழை மற்றும் அதற்கு தேவையான இரசாயன மூலப் பொருட்கள் உற்பத்தியில் பன்னாட்டு, தேசங்கடந்த தொழிற்கழகங்கள் ஏகபோக நிலையை எட்டிவிட்டன. விவசாயப் பொருட்களுக்கான குறிப்பாக உணவுதானியங்கள், எண்ணெய் வித்துக்கான உலகசந்தையில் இதுவரை பெரும்பான்மை பங்கை வகித்த அமெரிக்கா திடீரென்று ஜரோப்பிய சமூக நாடுகளுடனான போட்டியில் சிக்கிக் கொண்டது. அதன் ஏகபோகம் பறிபோகக் கூடிய ஆபத்து வந்து விட்டது. எனவே தான் இது வரை பொது ஒப்பந்த விதிமுறைகளின் கீழ் கொண்டுவராமல் இருந்த ஜவுளி மற்றும் விவசாயத்தை காட் அமைப்பில் நுழைக்கும் முயற்சியில் அமெரிக்கா வெறியோடு இறங்கியுள்ளது. பன்னாட்டு தேசங்கடந்த தொழிற்கழகங்களின் மேலாதிக்கம், உலகசந்தையில் ஏகபோக நிலைபெற அவை செய்யும் அபாயகரமான சதிச்செயல்கள் ஆகியவை பற்றி இந்த காட் கண்டு கொள்வதே கிடையாது. அந்த தொழிற்கழகங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் அத்துமீறல்களை கண்காணிப்பதற்கும் அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் காட் அமைப்பில் எந்தவித விதிமுறைகளும் இல்லை. அந்த நிறுவனங்களின் மின்னணுத்துறை மருத்துவம் போன்றவற்றின் விலைகளை ஒழுங்குபடுத்தும் ஒரு அமைப்போ கொள்ளை லாபத்தை தாய்நாட்டிற்கு அள்ளிச்செல்வதை முறைப்படுத்தும் விதிமுறைகளோ கிடையாது. உலகச்சந்தையின் வியாபரத்தில் 25முதல் 50 சதவீதம் வரை நடத்தும் இந்த தேசங்கடந்த பன்னாட்டுத் தொழிற்கழகங்களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் கொண்டுவர காட் மறுத்தே வருகிறது.

 

ஆனால் ஏகாதிபத்திய வல்லரசுகளும் அவற்றின் தேசங்கடந்த பன்னாட்டு தொழிற்கழகங்களின் நலனுக்காக பின்தங்கிய ஏழைநாடுகளை வரம்பின்றி சுரண்ட கட்டுப்பாடற்ற சுதந்திர சந்தையை நிறுவுவதற்காகவே காட் அமைப்பின் உருகுவே சுற்றுப் பேச்சுவார்த்தை திட்டமிட்டு முடுக்கி விடப்பட்டுள்ளது. காட்டின் உருகுவே சுற்றுப்பேச்சுவார்த்தை வல்லரசுகள் சுரண்டலை விரிவுபடுத்தும் முயற்சி. வழக்கமாக உலகப்பொருள் வர்த்தகத்தை முறைப்படுத்துவது, சுங்கவரி தீர்வைகளை வரையறுப்பது ஆகியவற்றுக்காக காட் சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நடக்கும், ஆனால் இந்த உருகுவே சுற்றுப்பேச்சுவார்த்தைகள் அவற்றையும் தாண்டி பலநாடுகளின் சமூகப்பொருளாதாரக் கொள்கைகள் மீது விவாதம் நடத்தக் கோருகிறது. இதன் மூலம் பின்தங்கிய ஏழைநாடுகளின் பெயரளவிலான சுதந்திரத்தையும், சுயாதிபத்தியத்தையும் பறித்து அவை ஈட்டியுள்ள பொருளாதார வளர்ச்சியையும் பின்னடையச் செய்து தேசங்கடந்த பன்னாட்டு தொழிற்கழகங்களுக்குள்ள கட்டுப்பாடுகளை நீக்கி மேல்நிலை வல்லரசுக்கள் நேரடியாக மறுகாலனியாதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு புதிய உலக ஒழுங்கு முறையைக் கொண்டு வரமுயலுகின்றன.

 

முன்பு உற்பத்தி செய்த பொருட்களின் உலகச் சந்தை வர்த்தகத்தில் மட்டுமே கவனம் செலுத்திய காட் இல் இப்போது சேவைத்துறையும் விவசாயத்துறையும் சேர்க்கப்படவேண்டும், முதலீட்டிற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படவேண்டும் என பின்தங்கிய நாடுகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன.  இன்றைய உலக வர்த்தகத்தில் சேவைத்துறைகளான வங்கி, காப்பீடு, போக்குவரத்து, தொலைத்தொடர்பு சாதனங்கள் ஆகியவை வேகமாக வளர்ந்து வருகின்றன. இச்சேவைத்துறையில் ஜ.பி.எம் போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள்தாம் ஆதிக்கம் வகிக்கின்றன. அடுத்து காட் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பெறுவது அறிவுச் சொத்து என்பது ஒரு பொருள் அல்லது தொழில்நுட்ப கண்டுபிடிப்பாகும். உரிமை என்பது அதைக் கண்டுபிடித்தவருக்கு ஒட்டுமொத்தமாக வழங்கப்படும் உரிமைத் தொகைக்கான (  ) அங்கீகாரமாகும்.

 

இப்போது ஒவ்வொருநாட்டிலும் அதனதன் நலன்களை ஒட்டி அறிவுச் சொத்துரிமை சட்டங்கள் உள்ளன. ஆனால் பின்தங்கிய ஏழைநாடுகளில் உள்ள இச்சட்டங்கள் புதிய கண்டுபிடிப்புக்களை ஊக்குவிப்பதாக இல்லை. புதிய முதலீடுகளுக்கும் தடையாக உள்ளன. ஆகவே எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியான சட்டங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று மேல்நிலை வல்லரசுகள் கோருகின்றன. உண்மையில் இதன் நோக்கம் தங்களது தொழில்நுட்பங்களை  பின்தங்கிய ஏழைநாடுகளில் பதிவு செய்து கொண்டு அந்நாடுகள்  அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை தடுத்துவிடும் அதே சமயம் அந்நாடுகளில் தமது சரக்குகளுக்கான சந்தையை பன்னாட்டு தேசங்கடந்த பகாசூர கம்பனிகள் உறுதிப்படுத்திக் கொள்ளுவது தான். டூபாண்ட், பிஜ்ஜார், மான்கண்டா, கார்க்கில் போன்ற வேளாண் வேதிதொழில் நிறுவனங்கள் அறிவுச் சொத்துரிமை கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு உருகுவே சுற்றுப்போச்சுவார்த்தையை தமது நலன்களுக்காக முடுக்கிவிடுகின்றன. இதுவரை வெப்பமண்டல விவசாயப் பொருட்களின் வியாபாரம் பற்றி மட்டுமே சில ஒப்பந்தங்கள் காட் இல் இருந்தன.

 

இப்போது விவசாயத்தை முழுவதும் காட் இன் கீழ் கொண்டுவர அமெரிக்கா, ஜரோப்பிய சமூக நாடுகள், ஜப்பான் ஆகியவை விரும்புகின்றன. ஏனென்றால் அவற்றின் தேசங்கடந்த, பன்னாட்டுத் தொழிற்கழகங்களின் பேராசை பின்தங்கிய ஏழைநாடுகளின் விவசாயத்தின் மீது விழுந்துள்ளன. அதனால் தான் இந்நாடுகள் விவசாயத்துக்கான அரசு கடன்கள், மானியங்களை நீக்கிவிட வேண்டும். குறைந்தபட்ச இறக்குமதியை ஏற்க வேண்டும். உணவுதானிய சேமிப்பைக் குறைக்கவேண்டும். வேளாண் -உயிர்ப்பொருட்கள் அறிவுச் சொத்துரிமையை அங்கீகரிக்க வேண்டும். வேளாண் தொழில்களில் அந்நிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டுமென மேல்நிலை வல்லரசுகள் கோருகின்றன. காட் இன் உருகுவே சுற்றுப்பேச்சுவார்த்தை துவங்கி ஜந்தாண்டுகளாகியும் உலக நாடுகளிடையே உடன்பாடு காணமுடியாமல் போனது. எனவே காட் அமைப்பின் பொது இயக்குனர் சர் ஆர்தர் டங்கல் ஒரு ஒப்பந்த நகலறிக்கை தயாரித்து 1991 டிசம்பரில் வெளியிட்டு 15 நாட்களுக்குள் அதை ஏற்க வேண்டுமென கட்டளையிட்டார். கூடவே அமெரிக்கா முதலிய ஏகாதிபத்திய வல்லரசுகளும் உலகவங்கி, சர்வதேச நிதிநிறுவனமும் கழுத்தை நெருக்கின. இந்தியா போன்ற பின்தங்கிய ஏழைநாடுகளின் துரோக அரசுகளும் கள்ளத்தனமாக அதை ஏற்பதற்கான சதி செய்தன.

 

ஆனால் தேச பக்த ஜனநாயக சக்திகள், குறிப்பாக  விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த டங்கல் நகலறிக்கை முறைப்படி ஏற்கப்படாமல் இருந்தது. ஆனால் இந்தியா போன்ற துரோக அரசுகள் படிப்படியாக டங்கல் அறிக்கையை அமுல்படுத்த தொடங்கியதன் மூலம் ஏறத்தாழ இதை ஏற்றுக்கொண்டு விட்டன. டங்கல் அறிக்கையின் சாரம்

 

(1) விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குள்ள கட்டுப்பாடுகளை நீக்கி விடவேண்டும். உள்நாட்டில் பயன்படும் உணவு தானியங்களில் இரண்டு அல்லது மூன்று சதவிகிதம் அளவு கட்டாயம் இறக்குமதி செய்ய வேண்டும். வறிய பின்தங்கிய நாடுகளில் இப்படி உணவு தானியத்தை இறக்குமதி செய்வது பல கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையையே நாசமாக்கி விடும். உணவு சுயதேவை என்பதற்கு முடிவு கட்டி அன்னிய நாடுகளைச் சார்ந்து நிற்கும்படி செய்து விடும்.

 

(2)விதை, உரம், நுண்ணுயிர், ஊட்டச்சத்து, மின்சாரம் போன்ற விவசாய உள்ளீடுகளுக்கும், ஏற்றுமதிகளுக்கும் அரசு வழங்கும் கடன் மானியங்கள் நிறுத்தப்படவேண்டும்.  இதனால் விவசாயப் பொருட்களின் உற்பத்திச் செலவு பன்மடங்கு பெருகும். சிறிய நடுத்தர விவசாயிகள் விவசாயமே செய்ய முடியாமல் நசிந்து போவார்கள்.

 

(3)விவசாயப்பொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை, பின்தங்கிய ஏழைநாடுகளின் அரசாங்கங்கள் இழந்து விடும். ஏற்கனவே சர்வதேச சந்தையில் சர்வாதிகாரம் செலுத்தும் 10 வேளாண்-தொழில் கழகங்கள் தான் விவசாயத்தை தீர்மானிப்பவைகளாக இருக்கும்.

 

(4) தாவரங்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் விதைகள், குட்டிகள், குஞ்சுகள் வரை அனைத்து உயிரினங்களுக்கும் அறிவுச் சொத்துரிமை-வடிவுரிமை பதிவு செய்யப்பட வேண்டும். டங்கல் திட்டப்படி விதைகள், கன்றுகள், குஞ்சுகள், குட்டிகள் வளர்ப்பதோ, மாற்றம் செய்வதோ, விற்பதோ, பயன்படுத்துவதோ கூட தடைசெய்யப்படும். அன்னிய வேளாண்-தொழில் கழகங்கள் நிர்ணயிக்கும் அதியுயர்ந்த விலையில் அவற்றிடமிருந்துதான் ஒவ்வொரு முறையும் வாங்கிடவேண்டும்.

 

பின்தங்கிய, ஏழை மூன்றாம் உலகநாடுகளில் மறுகாலனி ஆதிக்க முயற்சி.

 

மேலும் டங்கல் அறிக்கையில் பல முனை வணிக அமைப்பு என தனிப்பிரிவு ஒன்றுள்ளது. டங்கல் திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் நாடுகள் அதை ஒழுங்காக பின்பற்றுகின்றனவா என்று கண்காணிப்பது தான் இந்த கங்காணி அமைப்பின் வேலையாகும். டங்கல் அறிக்கையின் ஒப்பந்தங்கள் யோசனைகள் கட்டுப்பாடுகளை மீறும் நாடுகள் மீது ஏகாதிபத்திய நாடுகள் பொருளாதாரத்தடை முற்றுகை போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதாவது பின்தங்கிய ஏழைநாடுகள் பெற்றுள்ள பெயரளவிலான சுதந்திரத்தையும் ஒழித்து ஏகாதிபத்திய வல்லரசுகள் குறிப்பாக அமெரிக்காவின் மறுகாலனியாக்கும் நோக்கத்தை டங்கல் திட்டம் கொண்டுள்ளது.

 

இறுதியாக காட் எனப்படும் சர்வதேச வணிக மற்றும் வரிக்கான பொது ஒப்பந்தத்தில் மார்கழி-15ம் திகதிக்குள் கையெழுத்திடாத நாடுகள் சாவதேச வாணிபத்தில் புறக்கணிக்கப்படும் என்று ஏகாதிபத்தியங்கள் மிரட்டியதைத் தொடர்ந்து 117 நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் ஏழைநாடுகளின் பெயரளவிலான சுதந்திரத்தையும் சுயாதிபத்தியத்தையும் பறித்து மேல்நிலை வல்லரசுகள் நேரடியாக மறுகாலனியாதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு புதிய உலக ஒழுங்குமுறையை கொண்டுவந்து விட்டன. டங்கல் ஒப்பந்ததால் ஏற்படும் பாதிப்புக்களை உணர்ந்து ஏழை நாடுகளின் மக்கள் இதை எதிர்த்து போர்க்குணத்தோடு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தென்கொரியா, பொலிவியா, தைவான், பிலிப்பைன்ஸ், பிரேசில் முதலான நாடுகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு அமெரிக்க எதிர்ப்பு ஆhப்;பாட்டங்களையும் ஒப்பந்த எதிர்ப்பு போராட்டங்களையும் நிகழ்த்தியுள்ளனர். இந்தியாவில் கர்நாடக மாநில விவசாயிகள் அந்நிய கார்க்கில் விதைக்கம்பனி அலுவலகத்தை அடித்து நொருக்கி ஆவணங்களுக்கும் தீ வைத்துள்ளனர். பின்தங்கிய ஏழைநாடுகளின் கோடிக்கணக்காண மக்களின் விவசாயிகளின் வாழ்வையே நாசமாக்கும், அந்நாடுகளை காலனியாக்க முயற்சிக்கும் மேல்நிலை வல்லரசுகளின் இச் சதி ஒப்பந்தங்களுக்கு எதிரான தீ பற்றிப்படரட்டும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போர் உக்கிரம் பெறட்டும்.

 

நன்றி விவசாயிகள் விடுதலை முன்னணி. தமிழ்நாடு

 


பி.இரயாகரன் - சமர்