Language Selection

சமர் - 11 : 06/06 -1994
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கிழக்கை வடக்குடன் இணைப்பதை ஒரு வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க முனையும் இனவாதிகள் அதன் ஒத்திகையாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தினர். வடக்குடன் கிழக்கை இணைப்பதா என்பதை கிழக்கு மாகாண மக்களிடம் மட்டும் வாக்கெடுப்பை நடத்த முயல்வதன் ஊடாக வடக்கை இணைக்க யாரும் கோரவில்லை . ஏன் வடக்கிலும் வாக்கெடுப்பை கோரலாமே. வடக்கு அரசியல் ஆதிக்கம் கொண்டது என்று விடயங்கள் உள்ளனவே.

ஆனால் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தோரை பிரிக்க முனையும் இனவாதிகள் அவர்களின் தந்திரங்களையும் எல்லா வழிகளையும் கைக்கொள்கின்றனர். மாதிரிக்கான தேர்தல் கிழக்கு வாக்காளர்களை பரீட்சார்த்தமாக பரிசோதித்த இனவாதிகள் தமது வெற்றியை நிறுவ பல வழிகளைக் கையாண்டனர். வேட்பாளர்களே அற்ற இவர்கள் தெருநாயாக அலைந்தபடி கண்டவர்களையெல்லாம் கடித்து தமது வேட்பாளராக மாற்றினர். கட்டாயப்படுத்தப்பட்ட பல வேட்பாளர்கள் தேர்தலில் நிறுத்தப்பட்டனர். சிலர் கொழும்பு தப்பி வந்து வேட்பாளர்கள் பட்டியலிருந்து தம்மை வெளியேற்றும்படி பத்திரிகைகள் ஊடாக கதறி அழும் அளவுக்கு யூ.என்.பி யின் ஜனநாயக முகமூடி வெளுத்துப்போனது.

 

இவைகளைச் செய்ய இராணுவம் முதல் பொலிஸ் மற்றும் அரச நிர்வாகங்கள் முழுமையாகப் பயன்படுத்திய பலர் வாக்களிப்பின் போது வாக்காளர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து கட்டுக்கட்டாக வாக்குகளை யூ.என்.பிக்கு பெட்டிகளில் போட்டனர். தேர்தல் மோசடியின் உச்ச நிலையில் தேர்தல் அதிகாரியே வெறுத்துப்போய் ஒரு பகுதியை கள்ள வோட்டுக்களென எண்ணுவதைக் கூட நிராகரித்தார். இதனால் தேர்தல் திணைக்களத்தின் மீது இராணுவமும் அரசும் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

 

யூ.என்.பி போதாததற்கு போட்டியிட்ட துரோகக்குழுக்கள் தாங்களும் யூ.என்.பிக்கு போட்டியாக அவர்களும் வேட்பாளர்களை தேடியலைந்தனர். சிலருக்கு வேட்பாளர் கிடைக்காமல் விட்டதால் ஏன் வவுனியாவில் போட்டியிடுகிறோம் ஏன் மட்டக்களப்பில் போட்டியிடவில்லை என அறிக்கை விட்டு ஒரு இடத்தில் தனியாகவும் சில இடத்தில் ஒன்றை ஒன்று எதிர்த்தும் போட்டியிட்டனர்.

 

வேட்பாளர்களை தேடியலைந்து ஒரே வேட்பாளரை இரு கட்சிகள் தமது வேட்பாளராக நிறுத்தி அவர் தேர்தலில் போட்டியிட முடியாது போனது. இந்த வகையில் மோசடிகளையும், மிரட்டல்களையும் பயன்படுத்தினர். சுற்றிவளைப்புக்களை நடத்தியும், காணாமல் போனவர்களின் பட்டியலைத் தயாரித்தும்(இவர்களால் தான் காணாமல் போனார்கள்); புலிப்பெயரில் மாற்றுக்கட்சியினருக்கு எச்சரிக்கைவிட்டு--- எண்ணற்ற மோசடி ஊடாக வெல்ல முற்பட்டனர்.

 

மோசடிகள் மூலம் வென்றவர்கள் பல இலட்சம் பணத்தாலும், பஜிரோ ஜீப்புக்கு விலைபோகும் நிலையுடன் கட்சி மாறியும் தமது அரசியல் விபச்சாரத்தை நடத்தினர். குமார் பொன்னம்பலம் முதல் ஈ-பி-ஆர்-எல்-எவ் வரை தேர்தலை பகிஸ்கரிக்கக் கோரியவர்கள் வாக்குச்சீட்டுக்களை பழுதாக்கி விடக் கோரினர். இத் தேர்தல் மீதான இவ் அமைப்பில் நம்பிக்கை ஊட்டியபடி வாக்குகளை பழுதாக்கவும் கோரி தமது அரசியல் இதுதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிறுவிக் கொண்டனர். ஈ-பி யோ பகிஸ்கரிக்கக் கோரும் அதே காரணம் அன்று அவர்கள் மாகாணசபைத் தேர்தலில் ஈடுபட்டபோது இருந்தவையே. இந்தியாவின் காலை நக்கிய நாய்களான ஈ-பி க்கு இலங்கையில் தமது கால்களை பதிக்க முடியாமல் இருந்தமையால் தேர்தலைப் பகிஸ்கரிக்க கோரினர். இந்திய இராணுவம் இதே இடத்தில் இருந்திருப்பின் ஈ-பி தேர்தல் ஆண்டாகக் கொண்டாடியிருப்பார். தமிழ் மக்கள் பெற்றது என்பது அடக்குமுறையும் முடிவற்ற தேர்தல் பேச்சுக்களுமே. எத்தனை தேர்தல்கள் இதுபோல் வந்தன. எத்தனை வாக்குறுதிகள். ஆனால் மக்கள் கண்டது எதுவும் இல்லை. அதே நிலை அதே வாழ்வு மேலும் தொடரும் அடக்குமுறையும், அடிமை வாழ்வுமே. தேர்தல்கள் எதுவுமே மக்களுக்கு விடிவைப் பெற்றுத்தராது என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளன. நாம் செய்யவேணடியது இத் தேர்தல் முறைகளை மாற்றி அமைக்க மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதே. அதற்காக இத் தேர்தல் முறைகளை நிராகரித்து எம் கைகளில் அதிகாரத்தைப் பெறப் போராடுவதே ஒரே வழியாகும்.