Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வலதுசாரிய அரசியல், கடந்தகாலத்தில் தான் அல்லாத அனைத்தையும் அழித்து எம்சமூகத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டது. வலதுசாரி சித்தாந்தம் தான், எங்கும் எதிலும் இன்றும் ஆளுமை செலுத்;துகின்றது. இதற்கெதிரான போராட்டமும், கடமைகளும் செய்வாரின்றி எம்முன் குவிந்து கிடக்கின்றது.

இந்த நிலையில் என்ன செய்வது என்று சிலர் கூறுவது கேட்கின்றது. நாங்கள் வேலைகளை குவித்து வைத்துக்கொண்டு திண்டாடுகின்றோம். எங்கும் இப்படி ஒரு முரண்பாடு.

 

நடந்ததை விளக்குவதல்ல இன்றைய வேலை. சமூகத்தை மாற்றுவதுதான் எம் வேலை. இதற்காகத்தான் எதையும் விளக்கவேண்டும். நாங்கள் அறிவுஜீவிகள் என்று நிறுவுவதற்காக அல்ல, எமது அறிவு. சமூகத்தை மாற்ற, நாம் அறிவை ஒன்றிணைத்து போராட வேண்டும்;. எமது எந்த முயற்சியும் இதற்காக மட்டும் தான், என்று உறுதியுடன் செயல்பட வேண்டும்.
 
தனிமனித சிந்தனை முறை தன்னை குறுக்கி, சமூகத்தைப் பார்க்க மறுக்கின்றது. அமைப்பாவதை நிராகரிக்கின்றது. சின்ன சின்ன வேலைகள் தான், பெரிய சக்தியாக மாறுகின்றது என்பதை நிராகரிக்கின்ற போக்கே, இன்று பொதுத் தளத்தில் காணப்டுகின்றது. சிறிய தீ தான் மாபெரும் காட்டு தீயை உருவாக்குகின்றது என்பதை காண மறுக்கின்றனர். இந்த உண்மையை நிராகரித்தால், வரலாற்றில் நாம் எதையும் செய்ய முடியாதவர்களாவோம்.

 

மக்களை அணிதிரட்ட, நாம் எம்மை அமைப்பாக்காமல் இருக்கும் வரை, ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை ஏற்காத வரை, அதை உணர்வு பூர்வமாக முன்னெடுத்து செல்லாதவரை, கூட்டாக வேலை செய்வதை மறுக்கும் வரை, எம்மால் எதையும் செய்ய முடியாது. இது அனைத்தையும் மறுப்பதில் போய் முடியும். வேலைகளை இனம் காணவும், வேலைகளை இனம் காட்டவும் முடியாது போகும். இந்தப் பண்பு என்றும் கூட்டாக செயல்பட முடியாதவாறு, தனிநபர் சீரழிவாக மாறிவிடுகின்றது.

  

சிலர் என்ன செய்கின்றனர். தனிநபர்களையும், திட்டத்தில் ஒரு அம்சத்தையும் காட்டி அமைப்பு வேலைக்கு உடன்பட மறுக்கின்றனர். முரண்பாட்டை மறுக்கின்ற வாதங்கள். முரண்பாட்டின் அடைப்படையிலானது தான் அனைத்தும்; என்பதை மறுக்கின்றது. எந்த தனிநபரும் அமைப்புக்கும் அதன் திட்டத்துக்கும் உட்பட்டவர்கள்தான். அமைப்புத்தான் முதன்மையானது. திட்டத்தில் போதாமை அல்லது திருத்தங்கள், மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கும் பட்சத்தில், அவைகளை அமைப்பு தன் ஜனநாயக மத்தியத்துவத்தின் மூலம் என்றும் ஏற்றுக்கொள்ளும். எதுவும் முடிந்த முடிபுகளாகவும், இறுதியானதும் அறுதியானதுமானதல்ல. 

    

அனைத்தையும் விமர்சன ரீதியாக அணுகி அதை செழுமைப்படுத்தி முன்னேறுவது தான், முரண்பாட்டின் ஒரு அம்சமாகும்;. தனிநபர்கள், திட்டங்கள், வேலைகள்… அனைத்தும் அமைப்புக்கு உட்பட்டது. அதுதான் அதை தீர்மானிக்கின்றது. இப்படியிருக்க இதை முரண்பாடாக்குவது, அமைப்புக்கு உட்பட்டு வேலை செய்வதை மறுக்கும் அரசியல் பித்தலாட்டமாகும். ஒருவரில் இருந்து 10 பேராக நாம் மாற முடிகின்றது என்றால், அந்த 10 பேர் 100 பேராவது சாத்தியமானது. இது நடக்கும் போது, பொதுமை தளுவி மாற்றம் எங்கும் இலகுவானதாகிவிடும். 

     

எதையும் செய்தோம் எதைக் கவிழ்த்தோம் என்பதல்ல இன்றைய வேலை முறை. எம்மால் சாத்தியமான வேலைகளை செய்வது தான் அது. இன்று எம்முன் வேலைகள் குவிந்து கிடக்கின்றது. ஒரு புதிய சமுதாயத்தைப் படைக்கின்ற அரசியல் பணி என்பது, விரிந்த அரசியல் வெற்றிடத்தில் எங்கும் காணப்படுகின்றது. இங்கு இதை செய்ய முன்வராது, வெட்டித் தனமாக தொடர்ந்து பேசிக்கொண்டு இருப்பதில் எந்த அர்த்தமுமில்லை. இன்று வேலைகளை கூட்டாக செய்வது அவசியமானது. இதுதான் மாற்றத்தின் முன்நிபந்தனை. இது புரிந்து கொண்டு செயல்படும் அரசியல் கல்வி உடன் அவசியமாகின்றது. அதை விரைவில் தொடர்ச்சியாக நாம் கொண்டுவர உள்ளோம். குவிந்து கிடக்கும் வேலைகளில் சிலவற்றை இங்கு சுட்டிக்காட்ட முற்படுகின்றோம்.

 

1.நாம் புதிய சமுதாயத்தை படைக்கும் பணி என்பது, பல தளத்தில் போராட்டத்தை கோருகின்றது. வலதுசாரிய சிந்தாந்த சிந்தனை முறையை முழுமையாக உடைத்தெறிய வேண்டியுள்ளது.

 

2.நாங்கள் அமைப்பாவதும், மக்களை அணிதிரட்டுவதும் எம்முன்னுள்ள உடனடியான அரசியல்  பணியாகும்.

 

3.மக்களைத் தொடர்பு கொள்ளக் கூடிய இணையங்கள், பத்திரிகைகள்.. மூலம் மக்களை அணுகுவது. மக்களை நேரடியாக அணுகும் புதிய வழிமுறைகளை இனம் காண்பது, அதை உருவாக்குவது.

 

4. அமைப்பாக இணைந்து செயல்படுபவர்களை அரசியல் மயப்படுத்துவதும் அவசியமாகின்றது.   மக்களை சென்று அணுகும் வண்ணம், கிளர்ச்சியை பிரச்சாரத்தை செய்யும் வண்ணம், அரசியல் கல்வியை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

 

5.வலதுசாரிய இனவாத தமிழ் தேசிய பாசிச அரசியலை முழுமையாக, அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. 

 

6.சிங்கள முன்னணி பிரிவுடனும், மக்களுடனும் ஒரு தொடர்ச்சியான உரையாடலை நடத்த வேண்டியுள்ளது. அவர்களுக்கு தொடர்பு கொள்ளும் வண்ணம், எங்கள் கருத்துக்கள் அவர்களை சென்று அடையும் வண்ணம்,  ஊடகங்களை உருவாக்கவேணடியுள்ளது.

 

7. ஐரோப்பாவின் ஏதோ ஒரு மொழியில் எமது கருத்தைக் கொண்டு வருவதன் மூலம், அனைத்து மொழிக்கும் தானியங்கி மொழியாக்கம் மூலம் அதை கொண்டு செல்லவேண்டியுள்ளது. ஆங்கிலம் மூலம், சிங்கள மக்களை சென்றடைய முடியும்.    

  

8.கடந்தகால முழு ஆவணத்தையும் ஆவணப்பபடுத்த வேண்டியுள்ளது. இதை மூலமாகவும், அடிப்படையாகவும் கொண்டு, அதை பல சிறப்பு பகுதிகளாக பிரிக்க வேண்டியுள்ளது.

 

9.கடந்த காலத்தில் படுகொலைகள், கடத்தல்கள் அனைத்தையும் தனித்தனியாக ஆவணப்படுத்தி, அதை யார் செய்தனர் என்பதை துல்லியமாக வகைப்படுத்த வேண்டும்.   

   

10. யுத்த இழப்புகள், அனாதைக் குழந்தைகள், அங்கவீனமானர்கள், விதவைகள்.. என்று அனைத்து யுத்த விளைவுகளையும் ஆவணப்படுத்தி, அதை யார் எப்படி எந்த நிலையில் செய்தனர் என்ற முழு விபரத்தையும் வகைப்படுத்த வேண்டும். 

 

11.இறுதியாக நடந்த போர்க்குற்ற ஆவணத்தை முழுமையாக தொகுத்து, அதை வகைப்படுத்தி, சாட்சியங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.

 

12.வலதுசாரிய போராட்டம் எப்படி தேசிய போராட்டத்தை அழித்தது என்பதை முழுமையாக வகைப்படுத்தி, ஆவணமாக்க வேண்டும்.

 

13.பேரினவாத குற்றங்கள், அதன் படுகொலைகள் அனைத்தையும் வரலாற்று ரீதியாக ஆவணமாக்கி, அதை வகைப்படுத்த வேண்டும்.

 

இப்படி தொடராக எம்முன் பற்பல வேலைகள் உண்டு. இதன் மூலம் தான் ஒரு அரசியல் கல்வியை மக்கள் மத்தியில் முன்னெடுத்து செல்லமுடியும். பு.சி.மை ஊடாக ஒரு திட்டத்தின் கீழ் இணைந்து சிலர், இதை சிறியளவில் கடும் உழைப்புடன் தொடங்கியுள்ளனர். இதனுடன் இணைந்து பங்காற்றவும், செய்யவேண்டிய வேலைகளை இனம்கண்டு இணைத்துக் கொள்ளவும், எம்முடன் ஒரு அமைப்பாக இணைவதும் செயல்படுவதும் ஒரு அரசியல் நடைமுறையாகும். சிறியளவில் செய்யத் தொடங்கிய ஒரு உதாரணத்தை பார்ப்போம். மிகக் குறுகிய காலத்தில் ஆவணப்பகுதியில் நாம் 1500க்கு மேற்பட்ட அரிய ஆவணங்களை இணைத்துள்ளோம். இதற்கு பலர் தாமாக முன்வந்து உதவுகின்றனர். ஏன் ஆவணங்களைத் தாங்களாகவே தந்து உதவுகின்றனர். ஆனால் இந்த ஆவணப்படுத்தும் உழைப்பை செய்ய முன்வருவது தான், இந்த அமைப்புகளில் உள்ள குறிப்பான நெருக்;கடி. இப்படித்தான் முழுவேலைகளிலும் இன்று காணப்படுகின்றது. அகலக் காலை வைக்காமல், நிதானமாக காலடிகளை எடுத்து வைக்கின்றோம். எம் பலத்தில் எது சாத்தியமோ, அதை செய்கின்றோம்.

    

எமது திட்டம் அமைப்பாவதை உடன் கோருகின்றது. திட்டத்தில் உடன்பாடு இல்லை என்றால், அது என்ன என்பதைக் கோருகின்றது. உங்களுக்கு உடன்பாடற்ற எமது திட்டம், உங்கள் பங்களிப்பை என்றும் நிராகரிக்கவில்லை. எமது அரசியல் பணிக்கான உங்கள் பங்களிப்பை, செய்யக் கோருகின்றது. உங்களால் என்ன செய்ய முடியுமோ, அந்தப் பங்களிப்பை மனப்பூர்வமாக செய்ய முன்வாருங்கள். வேலை செய்ய ஆர்வம் இருந்தால், தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் ஆலோசனைகளை எங்களுக்கும் பகிருங்கள். அதை எமக்கு கற்றுத்தாருங்கள். இதைக் கூட்டாக எம்முடன் செய்வதன் மூலம், எங்களை நீங்கள் புரிந்துகொள்ளவும், உங்களை நாங்கள் புரிந்து கொள்ளவும் முடியும். எம்முடன் அமைப்பாகாதவர்கள், எம்முடன் கூட்டு வேலைமுறைக்குள் வருவதன் மூலம், எம்மை நாம் புரிந்து கொண்டு மக்களுக்காக போராட முடியும்;. அமைப்பாவதும், கூட்டு வேலைமுறையை முன்னெடுப்பதும் தான், சமூகத்தை மாற்றும் பணியில் இன்று முதன்மையானது. இதற்கு உட்பட்டு வேலை செய்யவும், வேலையை முன்னெடுக்கவும் முன்வராத எவரும், சமூகத்துக்காக எதையும் செய்ய முடியாது. 

       

பி.இரயாகரன்
21.05.2010