Language Selection

கடந்த வருடத்தின் மே மாத நடுப் பகுதியை விடுதலைப் புலிகளின் அரசியலுக்கு, அரசியல் போராட்டத்திற்கு ஏற்பட்ட சுனாமி அரசியலாகப் பார்க்கலாம். ஏன் ஓர் பயங்கரவாத அமைப்பொன்றின் அஸ்தமன காலமாகவும் கணிக்கலாம். தமிழ்த் தேசியத் தலைமை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தேர்தல் வெற்றிக்கான எடுகோளாக எடுக்க, புலிகள் எவ்வித சமூக விஞ்ஞான அரசியல் ஆய்வுமின்றி அதைத் தம் கைகளில் எடுத்து ஓர் 30-வருட காலம் அரசியல் அரசோச்சினார்கள். புலிகளின் இவ்வரசியல் போராட்ட மார்க்கம் விடுதலைப் போருக்கான எப்பரிமாணத்தையும் எட்டாத பட்சத்தில், முள்ளிவாய்காலுக்கு ஊடாக நந்திக்கடலில் போய் சங்கமமாகியிற்று….

புலிகளின் இத் தவறான அரசியல் போக்கால், விடுதலைப் புலிகளின் ஏராளமான தலைமைப் போராளிகள் கொன்றொழிக்கப்பட்டனர். பிரபாகரன் கூட குறைந்த பட்சம் தன் கழுத்தில் தொங்கிய சயனைற் குப்பியைக் கடிக்காததன் விளைவு, அவர் ஓர் காட்டு விலங்காட்டம் அடித்துக் கொல்லப்பட்டார். வன்னி மக்களை கேடயமாக்கியதில் 40,000ற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். கிட்டத்தட்ட அதேயளவு மக்கள் அங்கவீனர்களும் ஆனார்கள். இவைகள் யாவும் புலிகளின் புரட்சிகர வெகுஜனப் போராட்ட மார்க்கமற்ற ஆயுத வழிபாட்டு அரசியலின் தொழிற்பாடும் வெளிப்பாடுமேயாகும்.

மறுபுறத்தில் இந்நிகழ்வின் ஓராண்டை, இன்னொரு புலியான மகிந்தப் பேரினவாத அரசு ஒருவார கால கொண்டாட்ட களியாட்ட நிகழ்சியாக்கியுள்ளது. பேரினவாதியான மகிந்த ராஜபக்ச புலிப் பயங்கரவாதத்தை இல்லாதாக்கிய கடந்த ஓராண்டு காலத்தில் இரு தேர்தல்களை நடாத்தி தன் குடும்ப அரசியல் நிறுவனத்தை மிகக் கெட்டியாக்கியுள்ளார். ஆனால். கடந்த மே 18-ன் பின் நாட்டை அச்சுறுத்திய பயங்கரவாதப் பிரச்சினையை இல்லாதாக்கியுள்ளோம். இனி அடுத்தகட்ட நடவடிக்கை தமிழ் மக்கள் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண்பதேயென்றார். ஆனால் தேசிய இனப்பிரச்சினைக்கு இது கால வரையில்  நம்பிக்கை தரக்கூடிய எத்தகைய நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை. அண்மைக் காலங்களிலாவது ஓர் அர்த்த புஸ்டியுள்ள நடவடிக்கைகளை மேற் கொண்டு விட்டு, பயங்கரவாதத்தை இல்லாதாக்கிய வாரமாக மேற்கொண்டிருந்தால், இதை தமிழ் மக்களும் வரவேற்றிருப்பார்கள்.

கடந்த வருட மே மாதத்தில் இல்லாதாக்கப்பட்டது, ஓர் பயங்கரவாத அரசியல் அமைப்பென்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது. ஆனால் அது உருவாகியதற்கான மூலப்பொருளின் செயலாக்கம் செயலற்று நின்று விடவில்லை. சுருங்கக் கூறின் தமிழ்மக்களின் சுயநிர்னய உரிமைக்கான விடுதலைப் போர் முற்றுப் பெறவில்லை. அது தற்காலிகமாக சரியான தலைமையற்ற வெற்றிடத்தில் உள்ளது. இது தற்காலிகமானதும், தவிர்க்க முடியாதததுமாகும். இதை வரலாற்றுக் கண்கொண்டு – இயங்கியலுக்கு ஊடாகப் பார்க்கவேண்டும்.

இது ஒரு புறமிருக்க, மறு புறத்தில் மகிந்தப் பேரினவாத அரசு தமிழ் மக்களின் அபிலாசைகளைப் கணக்கில் எடுக்காது, புலியைப் போன்று – பாசிச-சர்வாதிகார-எதேச் சதிகாரப் போக்கில், நான் நினைத்ததை தான் செய்வேன், இதை நீங்கள் ஏற்றாகவேண்டும், என்ற பாங்கிலேயே சகலதையும் செய்கின்றது. பயங்கரவாதத்தை இல்லாதாக்கிய இராணுவ வெற்றியை, மக்களுக்கு எடுத்துச் சொல்வது,  அதில் மரணித்தவர்களின், ஊனமுற்றவர்களின் தியாகங்களை மதிக்கும், தியாக நாளாக கணிப்பது, குறியிடுவது வேறு. பேரினவாத வெறி கொண்ட விழாவாக, களியாட்டக் கொண்டாட்டங்கள் ஆக்குவது வேறு. தமிழ் மக்கள் இன்றும் கறைபடிந்த அரசியலின் சோக வாழ்வையே வாழ்கின்றனர். இவ்வகையில் அரசின் ஒரு வார கால கொண்டாட்டம் என்பது திட்டமிட்ட பேரினவாத வெறி கொண்ட நடவடிக்கையே.

சென்ற ஆண்டில் மகிந்தப் பேரினவாதத்தின் வெறியாட்டத்தால்,  40,000–ற்கு மேற்பட்ட மக்கள் மாபெரும் மனிதப் படு கொலைகளுக்கும், இன்னும் பல்லாயிரக் கணக்கானேர்ர்கள் ஊனமாக்கப்பட்டும் உள்ளனர். காணாமல் போனோர் தொகையும், அழிக்கப்பட்ட சொத்துக்களின் தொகையும் இன்னமும் சரியாகக் கணிக்கப்படவில்லை. இவையெல்லாவற்றையும் இழந்து, அகதிகளாக வெறுங்கையுடன், முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ளோர் தொகை பல லட்சம். இந்நிலையில், மகிந்த அரசு இதைக் கணக்கில் கொள்ளாமலும், ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களை அரவணைத்துப் செல்லும், அரசியலை, அரசியல் தீர்வை வைக்காதவரை, இந் நடவடிக்கைகளை தமிழ் மக்கள் எதிர் நிலை கொண்ட நடவடிக்கைகளாகவே கணிப்பர்.

இன்றும் தமிழ் பேசும் மக்களின் பிரதான பிரச்சினையும், இலங்கையின் பிரதான முரண்பாடும் தேசிய இனப்பிரச்சினையே. அரசு தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லையென்பது போல், பாசாங்கு அரசியல் செய்கின்றது. அதன் அடிவருடிகளான ஜனநாயக நீரோட்டக் கூட்டம், விலாங்கு போன்று, தமிழ் மக்கள் பிரச்சினையில் செயற்படுகின்றது,  நாடு கடந்த சில தலித்தியர்களின்  “சாதிச் சங்கக் கடைக்காரர்கள்” சொல்வது போன்று,  தமிழ் மக்கள் பிரச்சினை என்பது வெறும் வெள்ளாளர் பிரச்சினை என்ற கோமாளித்தன அரசியலும் அல்ல. இவர்கள்  யாவரும் தமிழ் மக்களின் சுயநிர்னய உரிமை, விடுதலை பற்றிய புரிதலில் வெறும் வெங்காயங்களே. அத்துடன் மகிந்தஅரசு தமிழ்மக்களின் அபிலாசைகளை கணக்கில் எடுக்காது, தன் பேரினவாத அரசியலை தொடருமாயின், அரசு இயந்திரத்தின் இழப்பும் இது போன்ற கோமாளிக் கொண்டாட்டங்களும் தொடரவே செய்யும்.

பிரபாகரனின் தாயாருக்கு இருந்த வருத்தமும் குணமாகியிருக்கும்


பிரபாகரனின் தாயாருக்கு, தமிழினக் காவலரின் பரிந்துரைப்பால் சோனிய அம்மையாரின் அரசு வழங்கிய “சிறப்புப் பயங்கரவாத” விசாவின் சிறப்பம்சங்களை பாத்ததும், அந்தம்மாவிற்கு இருந்த வருத்தமும் பூரண குணமடைந்திருக்கும். சுத்த சுவாதீனமற்றவர்களின் விசாவானது, சிகிச்சை முடிந்ததும் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே திரும்புச் சென்று விட வேண்டும்,  அரசு சொல்லும் மருத்துவமனையில் அரசுச் செலவில் மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள், தடை செய்யப்பட்ட அமைப்பினர் எவரையும் சந்திக்கக் கூடாது. அரசியல் பேசக் கூடாது என்கிற ஏராளமான நிபந்தனைகளுடன் பார்வதியம்மாளுக்கு விசா வழங்க இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகள் யாரும் மாநில முதல்வர் கருணாநிதியால் பரிந்துரைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகும். இந்நிலையில் திருப்பி அனுப்பி அவமானப்படுத்திய பிறகு, முசிரியில் உள்ள தனது மகனிடம் கூட இருக்க அனுமதிக்காத நிபந்தனைகளுடன் கூடிய விசாவைப் பார்வதியம்மாளோ அவருடன் உள்ளவர்களோ விரும்பவில்லை எனத் தெரிகிறது.

இந்தம்மாவிற்கு கொடுக்கப்பட்டது வைத்தியத்திற்கான வீசாவோ, அல்லது தமிழகத்திலுள்ள சிறையொன்றில் அடைத்து வைப்பதறகான வீசாவோ? முதலில் இலங்கைப் பிரசையான இவவை, மலேசியாவிற்கு அனுப்பி, அங்கிருந்து பிரயாணத்தை மேற் கொள்ள, இது இந்திய தரப்பிற்கு சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்த கதைபோல் ஆகிற்று. பின்பு இதில் கலைஞர் குளம்பிய குட்டையில் மீன்பிடித்தார். இதன் விளைவே இந்த விபரீத வீசா. இதில் மத்திய அரசு, மாநில அரசு, புலனாய்வத்துறை அதீத (சித்த சுவாதீனமற்று) பெரும் பணி ஆற்றிற்று. மொத்த்தில் இந்திய மத்திய மாநில அரசுகளுக்கு இலங்கை தமிழர்கள் என்றால், முஸ்லீம்களுக்கு பன்றி பார்த்தால் எப்படியோ அதே நிலைதான் நமக்கும். இந்த லட்சனத்தில் இப்படியொரு வீசாவும், வைத்தியமும் இந்தம்மாவிற்கு தேவையோ?

94 அரச நிறுவனங்களை ராஜபக்ஷ குடும்பத்தினர் கட்டுப்படுத்துகின்றனர்


முக்கியமான 94 அரச நிறுவனங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினருடைய  கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள விடயம் தற்போது வெளிவந்துள்ளது. அமைச்சுக்களின் துறைகள் தொடர்பில் அண்மையில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானியின் மூலமே இந்த விடயம் புலனாகியுள்ளது. 42 அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் அதன் கீழ் வரும் நிறுவனங்கள்  தொடர்பில் 51 பக்கங்களைக் கொண்ட நீண்ட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு அமைச்சினதும் முக்கிய பொறுப்புக்களும், ஒவ்வொரு அமைச்சரினதும் கீழ்  வரும் அரச நிறுவனங்கள் பற்றிய விபரங்களும் குறித்துக் காட்டப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் அரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்களை கட்டுப்படுத்துவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. மிகவும் பலம் பொருந்திய மற்றும் சிறப்பு மிக்க அமைச்சுப் பொறுக்கள் அனைத்தும் ராஜபக்ஷ சகோதாரர்களின் கட்டுப்பாட்டின் கீழேயே கொண்டு வரப்பட்டுள்ளன.பாதுகாப்பு அமைச்சு, நிதி அமைச்சு, துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு போன்ற முக்கிய அமைச்சுக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.நிதியமைச்சு 46க்கும் குறையாத அரசாங்க திணைக்களங்களைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுள்ளது. எல்லா முக்கியமான அரச வங்கிகளும் அதனுள் அடக்கம். விமான கப்பல் துறை அமைச்சு வெறுமனே நாட்டின் துறைமுகங்களை மட்டுமன்றி சிறிலங்கன் எயர்லைன்ஸ், மிஹின் எயார் என்பவற்றையும் தனக்குள் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு மகிந்த ராஜிபக்சவின் இளைய சகோதரரான கோட்டபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டின் கீழேயே உள்ளது. ஜனாதிபதியிடம் உள்ளவை போக எஞ்சிய முக்கியமான விடயங்கள் அனைத்தும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு எனும் புதிய அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டு அவருடைய இன்னொரு சகோதரான  பசில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டின் சகல பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களும் பசில் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின் கீழேயே கொண்டு வரப்பட்டுள்ளன.
எவ்வகையிலேனும் முக்கியமான விடயங்கள் அனைத்தும் மகிந்த ராஜபச்ச  குடும்பத்துள்ளேயே வருமாறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உதாரணமாகப் பாதுகாப்பு அமைச்சு, தற்போது நகர அபிவிருத்தி அதிகாரசபையை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.


குறித்த இரண்டு அமைச்சுக்களுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்ற போதிலும்இ அதிகாரத்தை தம் வசம் வைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது புலனாகிறது.
பசில் ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு விலங்கியல் பிராந்தியம் முதல் முதல் சுற்றுலா அபிவிருத்தி சபை உட்பட  வரை சகலவற்றையும் கட்டுப்படுத்தும் வகையில் அமையப் பெற்றுள்ளது. அத்தோடு சகல பிராந்திய அபிவிருத்திகளும் பசில் ராஜபக்சவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட வடக்கின் வசந்தமும் இதன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ராஜபக்ஷ குடும்பத்தைச் சேராதவர்களுக்கு சாதாரணமான அமைச்சுப் பொறுப்புக்களே வழங்கப்பட்டுள்ளன.

நாம் தொடர்ந்து குறிப்பிடுவதுபோல் இலங்கை மக்களின் அரசியல் பணி கடந்த பாராளுமன்றத் தேர்தலுடன் முடிவடைந்து விட்டது. எதிர்காலத்தில், முழு முதற் கடவுளும், துஸ்ட-நிக்ர-சிஸ்ட பரிபாலகரும் அவரே. இலங்கை மக்களாகிய நாம், அந்த ஈசனின் அடி போற்றி, எந்தையடி போற்றி,  பாசிச-சர்வாதிகாரத்தின்-சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ்வோம்.


என் உணவில் மருந்து கலக்க சிறை காவலர்கள் முயற்சி: நளினி புகார்

”என் உணவில் மருந்து கலக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது” என்று சிறைத்துறை தலைவருக்கு வேலூர் சிறையில் இருக்கும் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி நளினி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் சிறைத்துறை தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த புதன்கிழமையில் இருந்து புது குற்றவாளி தொகுதியில் இருந்த எல்லா விசாரணை கைதிகளையும் பழைய குற்றவாளி தொகுதிக்கு மாற்றிவிட்டனர்.

தற்போது புது குற்றவாளி தொகுதிகள் 2, 3, 4, 5, 7, 8 ஆகியவற்றில் 200 பேர் அடைக்கக்கூடிய இடம் காலியாக உள்ளது. இதில் 6வது தொகுதியில் நான் மட்டுமே இருக்கிறேன். எனக்கு ‘ஏ’ வகுப்பு இருப்பதால் ஒரு உதவியாளர் உண்டு. எனக்கு அது மறுக்கப்பட்டு உள்ளது. ஆனால் புது குற்றவாளி தொகுதியை கடந்த 21.4.2010 முதல் பெருக்கவோ, சுத்தம் செய்யவோ யாரையும் அனுமதிப்பதில்லை. அந்த தொகுதிக்கான வார்டர் முதல் தளத்துக்கு வரவோ, அங்குள்ள வேலைகளை செய்யவோ தடை செய்யப்பட்டு உள்ளது.

இது தவிர காலை, மாலை என்று என்னுடனே சமையல் அறையிலும், தொகுதியிலும் பணியில் இருக்கும் பெண் காவலர்கள் என் உணவில் மருந்து கலக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. என் உணவை காப்பாற்ற நான் கடும் முயற்சி செய்தும் பலன் ஒன்றும் இல்லை.

இரவில் கே.சி.லட்சுமி என்ற உதவி ஜெயிலர் 27.4.2010 இரவு வருகிறார். இவர்களாக எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து என் தொகுதியில் போட்டு விட்டு என்னை சோதனை செய்து எடுத்ததாக சொல்ல நிறைய வாய்ப்புகள் உண்டு என்று நளினி எழுதியுள்ளார்.

முன்பு கருக்கலைப்பு முயற்சி. இப்போ நஞ்சுக் கலப்பு முயற்சியோ?  என் செய்வது “காந்திய தேசத்தின் அகிலாளும் அகிலாண்ட வெறி, தனி ஒருவரில் இருந்து, ஒட்டு மொத்த தமிழின அழிப்பாக இருந்தது, இருக்கின்றது. தற்போதைய புலிகளின் தடையும், அதற்கு சொல்லும் காரணங்களும், நளினி போன்றவர்களின் சிறை வாழ்வை தொடரவும், திட்டமிட்ட சிறைக் கொடூர வேலைகளை கர்ச்சிதமாக செய்யவும் வலுச் சேர்க்கின்றன. இவர்களுக்கு தேவை இப்படியான சம்பவங்களும் நிகழ்வுகளுமே. அத்துடன்  இலங்கையில் தமிழ்-சிங்கள மக்ககளுக்கிடையில், பிளவுற்ற, அரசியல் அமைதியற்ற நிலையும், அதில் குரங்கு அப்பம் பறித்த கதை போன்ற நிலைமையும் இவர்களுக்கு இருந்தால் போதுமானதே. இதை வைத்து, இலங்கையில் தங்கள் தொழிலை தொடரலாம்தானே,  “இந்தியக் குரங்கை, அதன் குரங்குச் சேட்டையை” தமிழ் சிங்கள மக்கள் எப்போ இனங்கண்டு அடித்துத் கலைக்கின்றார்களோ, அப்போது தான் இலங்கை மக்களுக்கு நிரந்தர விடிவு.