Language Selection

தேவன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

துப்பாக்கிகள் மௌனித்து ஓராண்டினை நெருங்கியும் தமிழ் மக்களினது மௌனம் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. சிறிய கூடாரங்களுக்குள் ஒரு குறுகிய நிலப்பரப்பினுள் எந்தவித அடிப்படை வசதியுமின்றி குழந்தைகள், வயோதிபர், கர்ப்பிணிகள் என்று பல தமிழ் மக்களுடைய அன்றாட வாழ்க்கை முடக்கப்பட்டு மௌனமாக்கப்பட்டுவிட்டது.

பாசிசம் அவர்கள் வாய்களைப் பூட்டுப் போட்டு இறுகப் பூட்டிவிட்டது. வீடுகளை நிலங்களை இழந்து, தொழிலை இழந்து, கணவன்.. மனைவி.. பிள்ளைகளை இழந்து வேதனையோடு வாழுகின்ற இந்த மக்களுடைய வாழ்க்கை தொடர்ந்து கேள்விக் குறியாகவேயுள்ளது. தனிப்பட்ட முறையிலே உதிரிகளாக சிறுசிறு உதவிகள் சிலருக்கு கிடைத்தாலும், நிரந்தர உதவியை, இழந்து போன பழைய வாழ்க்கையோ திருப்பிக் கிடைப்பதாக இல்லை. அதற்கான எந்த வேலைத்திட்டத்தையும் செயற்படுத்தாமல் இழுத்தடித்து காலப்போக்கில் முழு நிலத்தையும் அபகரிப்பது தான் அரசின் நோக்கமாகத் தெரிகிறது. தமிழ் மக்களுடைய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்த விவசாயப் பெருநிலம் அன்று புலிகளாலே பாதி அழிக்கப்பட்டது, மிகுதி பேரினவாத அரசின் குண்டு வீச்சினால் அழிக்கப்பட்டது இப்போது மொத்த நிலப்பரப்பும் அந்த மக்களுக்கு சொந்தமில்லை என்றாகும் நிலைதான் காணப்படுகிறது. தமிழ் கட்சிகளோ அமைப்புக்களோ இதைப் பற்றி சிந்திப்பதாகவில்லை. தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளிலும், பாராளுமன்ற கதிரைப் போட்டியிலும் தான் தங்கள் அரசியலை ஓட்டுகிறார்கள். இந்த சூழ்நிலையில் புலிகளின் வெற்றிடத்தை நிரப்புவதற்காக சில மக்கள்விரோதக் கும்பல்கள் மீண்டும் அந்த அப்பாவி மக்களைக் குழப்பிவிடக் கூடிய அபாயமுண்டு. சரியான அரசியலோ, தலைமைத்துவமோ, வழிகாட்டலோ இல்லாமல் தமிழ் மக்கள் அனைவரும்  அனாதைகளாக்கப்பட்டு எதற்குமே நாதி அற்றவர்களாய் துரோகக்கும்பல்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஏலம் போட்டு விற்கும் சந்தைப் பொருளாக தமிழ் மக்களின் வாழ்க்கை மாற்றப்பட்டுவிட்டது.

 

 

 

 

 

புலிகளோ தங்களையே தமிழினத்தின் விடிவெள்ளியாக காட்டி அந்த மக்களை சுரண்டி அடக்கியொடுக்கி அந்த மக்களின்  கற்பனைகளையும், எதிர்பார்ப்புக்களையும் தவிடு பொடியாக்கி, பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைப் பலி கொடுத்து  ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையினை முகாம்களுக்குள் முடக்கிவிட்டு தாங்களும் மௌனமாக அழிந்து போயினர். தமிழினத்திற்கு புலிகள் செய்த மாபெரும் துரோகமிது. ஆனால் மழை விட்டும் தூவானம் நில்லாதது போல, மக்களை தொடர்ந்து மந்தைகளாக வைத்திருக்க வெளிநாடுகளில் மீண்டும் சில அரசியல் முன்னெடுப்புக்களை ஆரம்பித்து இன்று நாடுகடந்த தமிழீழத்திற்கான தேர்தலில் வந்து நிற்கின்றது. இன்னுமொரு இருபது வருசத்திற்கு மக்களைச் சுரண்ட இது போதும்.


வெளிநாடுகளில் தேர்தல் வைத்து வாக்களிப்பதால் தமிழர் பிரச்சனை தீர்ந்து விடுமா…? ஐரோப்பாவா, அமெரிக்காவா, ரசியாவா…, எந்த நாடு எங்கள் பிரச்சனையினைத் தீர்த்து வைக்கப் போகிறது. எந்த ஏகாதிபத்திய நாடுகளோ, முதலாளித்துவ நாடுகளோ சிறுபான்மையின மக்களின் தேசியஇனப் பிரச்சனையை ஓரு போதும் அங்கீகரிக்கப் போவதுமில்லை தீர்த்துவைக்கப் போவதுமில்லை. தனது இலாபம் கருதி ஒருசில வாக்குறுதிகளைத் தருவார்களே ஒழிய மக்களுக்காக எதையுமே செய்ய மாட்டார்கள். புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள அந்த நாட்டு அரசியல்வாதிகளும் தமிழ் மக்களுடைய வாக்குகள் தங்களுக்கோ, தங்கள் கட்சிக்கோ தேவை என்பதற்காக பல வாக்குறுதிகளை அள்ளி வழங்குவார்கள். நாங்களும் திரைப்படங்களைப் பார்த்து விசில் அடிப்பது போல கைதட்டி விசில் அடித்து திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியது தான். இதைக் காரணம் காட்டி விளம்பரப்படுத்தியே எங்கள் தமிழ் அரசியல்வாதிகளும் தங்களுடைய பிழைப்பை ஓட்டிக் கொள்கிறார்கள்.


அன்று கூட்டணியினர் இந்தியாவையும், கருணாநிதியையும், எம்.ஜி.ஆரையும் சொல்லி மேடைக்குமேடை முழங்கியது போல இன்று புலம்பெயர் நாட்டு அரசியல்வாதிகள் ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் சொல்லி ரீல் விடுகிறார்கள். தமிழ் ஊடகங்களிலே நகைக்கடைக்கு விளம்பரம் செய்தது போல தங்களைத் தாங்களே விளம்பரம் செய்து வாக்குப் பிச்சை கேட்கிறார்கள். ஊடகங்களும் தங்கள் பிழைப்பிற்காக சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். இந்த ஊடகங்கள் தான் அன்று விடுதலைப் புலிகள்… தேசியத் தலைவர் என்று ரீவியிலும், றேடியோவிலும் வாய் ஓய்யாமல் கத்திக் கொண்டிருந்தவர்கள். இன்று அதை மாற்றி தங்கள் நலனுக்காக மீண்டும் மக்கள் மனதைக் குழப்பி இன்னொரு  தவறான அரசியலுக்கு இட்டுச் செல்ல வழி காட்டுகிறார்கள்.  பொதுமக்களாகிய நாங்கள் தான் ஏமாற்றப்படுகிறோம். எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக்கொண்டு ஒன்றும் தெரியாத மந்தைகளாகவே காலத்தை ஓட்டுகிறோம். பொறுமையாக சிந்தித்துப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

 

 

 

 

 

உண்மையில் நாங்கள் மக்களை நேசிப்பவர்களாக இருந்தால் இந்த தவறான அரசியற் போக்கை, கடந்தகாலத் தவறுகளை விமர்சிப்பவர்களை… ஒருமாற்று  அரசியலை… அதற்கான திட்டத்தை முன் வைப்பவர்களை எதிரிகளாகப் பார்க்காது அவர்களின் கருத்துக்களை அறிய முயற்சி செய்யுங்கள். உங்கள் முரண்பாடுகளை, எதிர் கருத்துக்களை முன்வையுங்கள். மற்றவர் கொள்கையினை கருத்துக்களை உதாசீனம் செய்வதால் நாங்கள் சரியென்றாகிவிடாது.

 

இதே தவறைத் தான் புலிகளும் செய்தார்கள். எந்தமாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதில்லை. முற்போக்காளர்கள், சமூக சிந்தனையாளர்கள் ஏதாவது சொன்னால் எதையும் உள்வாங்கிக் கொள்வதில்லை, கருத்துக்களையும், விமர்சனங்களை விஷமாகப் பார்க்கும் போக்குத்தான் புலிகளோடு இருந்தது.

 
தமிழ் மக்களின் பிரச்சனைக்கு என்ன முடிவு…?


இது எங்கள் எல்லோரோடும் இருக்கும் பொதுவான கேள்வி.

 
வெறும் பிரிவினைவாதத்தால் ஒரு சிறுபான்மை இனத்தின் பிரச்சனை தீர்ந்து விடுமா? எங்களோடு இருப்பது இனப்பிரச்சனை மட்டும் தானா? எங்களோடு இருக்கும் அனைத்து ஒடுக்குமுறைகளையும் களையாமல் அதற்கான திட்டமோ தீர்வோ எதையுமோ முன்வைக்காமல்  தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது சாத்தியமற்றது. இலங்கை அரசோ எந்த முதலாளித்துவ நாடுகளோ தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்கப் போவதில்லை. ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறையினை, சுரண்டல் அதிகாரக் கட்டுமானங்களை அது தகர்த்தெறிந்து விடும். எங்கள் உரிமையினை நாங்கள் தான் போராடிப் பெற்றுக் கொள்ள வேண்டும். பெரும்பான்மையின மக்களின் ஆதரவோடு மக்களை ஒன்று திரட்டி வர்க்கப் போராட்டத்தினை முன்னெடுப்பதின் மூலமே சிறுபான்மை மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

http://www.psminaiyam.com/?p=5423