08132022
Last updateபு, 02 மார் 2022 7pm

தோழர் சிவம் அவர்களை நினைவு கூருவோம். புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம் - தோழர்-பாலன்

 தோழர் மார்க் அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் லண்டன் வந்தபோது  என்னை சந்தித்து தோழர் சிவம் அவர்கள் கனடாவில் இருப்பதையும் அவர் தொடர்ந்தும் புரட்சிகரப் பணிகளை முன்னெடுத்து வருவதையும் தெரிவித்தபோது நான் உண்மையிலே மிகவும் மகிழ்வு கொண்டேன்.

அத்துடன் தோழர் சிவம் அவர்களின் தொடர்பை தான் ஏற்படுத்திக் கொடுப்பதாயும் நாங்கள் அனைவரும் சேர்ந்து ஒருமித்து செயற்படவேண்டும் என்று தோழர் மார்க் அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டபோது நான் மிகவும் உற்சாகத்துடன் சம்மதம் தெரிவித்தேன். அதன்படி தோழர் சிவம் அவர்களின் தொலைபேசி அழைப்பை ஆவலுடன் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.  தொலைபேசி அழைப்பு வந்தது. ஆனால் பேசியது தோழர் சிவம் அல்ல. மாறாக தோழர் மார்க் அவர்களின் மகன் அன்ரனி அவர்கள். அவர் தோழர் சிவம் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தியை தெரிவித்தபோது நான் மிகவும் ஏமாற்றமும் வேதனையும் அடைந்தேன். தோழர் சிவம் அவர்களுடன் சேர்ந்து புரட்சிகரப் பணிகளை மேற்கொள்ள எண்ணியிருந்தவேளையில்  அவருக்காக அஞ்சலிக் குறிப்புபொன்றை எழுதவேண்டிய துரதிருஸ்ட நிலை வரும் என நான் எதிர்பார்க்கவேயில்லை.

 

தோழர் சண்முகதாசன் அவர்கள் இலங்கையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர். இலங்கையில் புரட்சிகர இயக்கத்திற்கு அவர் செய்த பங்களிப்புகள் குறித்து அவர் வாழ்ந்த காலத்தில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதிலும் மாவோயிச இயக்கத்தை முன்னெடுத்து தலைமை தாங்கி வழி நடத்தியதில் அவர் ஆற்றிய முதன்மையான பங்களிப்புக் குறித்து எந்த விதமான மறு கருத்துக்கும் இடமிருக்கமுடியாது. அவர் ஏந்தவித விட்டுக் கொடுப்புகளுக்கும் இடங்கொடாமல் இறுதிவரை கொள்கையில் உறுதியுடன் செயற்பட்டவர். அவருடைய தலைமையில் செயற்பட்ட கம்யூனிஸ்ட்கட்சியில் சேர்ந்து புதிய ஜனநாயகப் புரட்சிக்காக அயராது உழைத்த பல தோழர்களில் தோழர் சிவமும் ஒருவர். இங்கு நாம் தோழர் சிவம் பற்றி உரையாடும் போது தோழர்கள் சிவராசா ரத்தினம் ஆகியோரை மறக்க முடியாது தவிர்க்கவும் முடியாது. மூவரும் கரவெட்டியை பிறப்பிடமாக கொண்டதோடு தோழர் சண்முகதாசன் வழிகாட்டலில் புதிய ஜனநாயகப் புரட்சிக்காக உழைத்தவர்கள். “மும்மூர்த்திகள்” என்று அழைக்கக்கூடிய அளவிற்கு எப்போதும் ஒன்றாகவே இருந்து ஒன்றாகவே செயற்பட்டார்கள்.

 

தோழர்; சண்முகதாசன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியானது சாதிப் போராட்டத்தை முன்னெடுத்தபோது தோழர்கள் சிவம் ரத்தினம் சிவராசா ஆகியோர் கட்சியின் வழிகாட்டலில் ஆற்றிய பங்கு மறக்க முடியாததாகும். குறிப்பாக கண்பொல்லை கிராமத்தில் நடந்த சாதிப்போராட்டத்தின்போது இந்த தோழர்கள் பல வழிகளில் ஆற்றிய பங்கை இப்போதும் அந்த மக்கள் நன்றியுடன் நினைவு கூருவதை நாம் காணலாம்.

 

1983ம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலை இயக்கங்கள் வேகமாக வளர்ச்சி கண்டபோது அவ் இயக்கங்களில் இணைந்து கொண்ட பல போராளிகள் மார்க்சிய அறிவை பெறவும் மார்க்சிய பாதையை தேர்ந்தெடுக்கவும் தோழர்கள் சிவம் ரத்தினம் சிவராசா ஆகியோர் காரணமாக இருந்திருக்கின்றனர். குறிப்பாக ரெலோவில் போராளிகள் தாஸ் மற்றும் பலரின் நல்ல மாற்றங்களுக்கு இவர்களே பின்னனியில் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரம் கொண்ட “பொபி” பிரிவினர் இவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என எச்சரித்திருந்தனர். அதன் பின்னர் நெல்லியடியில் புலிகளுக்கு பொறுப்பாக இருந்த சுக்ளா என்பவரால் புலிகளை விமர்சித்தார்கள் என்று குற்றம்சாட்டி தோழர்கள் ரத்தினம் சிவராசா ஆகியோர் கைது செய்யப்பட்டு அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்களை படுகொலை செய்ய திட்டமிட்ட வேளை அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இவ்வாறு பல சித்திரவதைகள் மற்றும் கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இத் தோழர்கள் தங்கள் புரட்சிகரப் பணிகளில் இருந்து ஒதுங்கவில்லை. மாறாக கிடைக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் பயன்படுத்தி தங்களால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வந்தார்கள். சில இயக்கங்களால் இவர்களுக்கு அச்சுறுத்தல்கள் இருந்த வேளையிலும் இயக்க தலைமைகளுடன் முரண்பட்டு பாதுகாப்பு தேடிவந்த பல போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களைக் காப்பாற்றியதை இன்றும் அந்த போராளிகள் மறக்காமல் நன்றியுடன் நினைவு கூறுவதை நாம் காணமுடியும்.

 

தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை இயக்கத்தைச் சேர்ந்த நானும் மற்ற தோழர்களும் மாக்சிய அறிவைப் பெறுவதற்கு தோழர்கள் சண்முகதாசன் டானியல் சின்னத்தம்பி இக்பால் ஆகியோரை அழைத்து வந்து அரசியல் வகுப்பெடுக்க வைத்த தோழர்கள் சிவம் ரத்தினம் சிவராசா ஆகியோரின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக தமிழீழம் சிறந்த தீர்வு அல்லாதது மட்டுமன்றி சாத்தியமற்ற தீர்வு என்றும் இந்திய அரசு நண்பன் அல்ல அது எதிரி என்பதையும் தோழர் சண் அன்று மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துரைத்தது இன்று நடைமுறயில் நிருபனமாகியுள்ளது. அதுமட்டுமன்றி தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை இயக்கமும் தோழர் சண் அவர்களின் கம்யுனிஸ்ட் கட்சியின் வடபகுதிப் பிரிவும் சேர்ந்து “கீழைக்காற்று “ என்னும் பத்திரிகையை வெளியிட்டன. இதற்குரிய பணிகளில் தோழர்கள் சிவம் ரத்தினம் சிவராசா ஆகியோரின் பங்களிப்புகள் அளப்பரியன.

 

தோழர் சண்முகதாசன் அவர்கள் எழுதிய “ஒரு கம்யூனிச போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் அவருடைய சுயசரித நூலின் தமிழ்பதிப்பை நானும் இந்திய நக்சலைட் தோழர்களும் சேர்ந்து அச்சிட்டு வெளியிட்டோம். இதற்கு அப்போது இந்தியாவில் தங்கியிருந்த தோழர் ரத்தினம் அவர்கள் கொடுத்த ஊக்கமும் ஆதரவுமே முக்கிய காரணமாகும். மேலும் தோழர் சண்முகதாசன் அவர்களை சந்தித்து இதற்கான சம்மதத்தையும் மூலப்பிரதியையும் நான் பெற்றுக் கொள்வதற்கு அப்போது கொழும்பில் தங்கியிருந்த தோழர் சிவராசா பெரிதும் உதவினார். இந்த நூலின் ஆங்கில பதிப்பின் முன்னுரையில் தோழர் சண்முகதாசன் அவர்கள் “1983 யூலைக்குப் பின்னர் மேலை நாடுகளுக்கு அகதிகளாக சென்று சில்லறை வேலைகளைப் பார்க்கும் தமிழ்த் தோழர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். இவ் நூலின் பிரசுரச் செலவில் பெரும் பகுதியை அவர்களே ஏற்றுக்கொண்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இந்த தோழர்கள் எங்கு சென்றாலும் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் தங்களால் இயன்ற பணிகளை செய்து கொண்டிருந்தார்கள் என்பதையே அவர்களது வரலாறு முழுவதும் எமக்கு எடுத்துக் காட்டுகிறது.

 

தோழர் சிவம் அவர்கள் கனடாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர் மாற்றுக் கருத்துக்காகவும் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்காகவும் ஒரு ஸ்தாபனத்தின் தேவையை வலியுறுத்தி தேடகத்தை ஆரம்பிப்பதில் முன்னின்று உழைத்து இறக்கும் இறுதித்தறுவாய் வரை அதன் நோக்கத்திற்காக உழைத்தவர் என்றும் அண்மைக்காலமாக நிலவி வந்த அரசியல் மந்த நிலையை உடைத்து மீண்டும் புத்தெழுச்சியுடன் தேடகம் செயற்பட உந்தியவர் என்றும் தேடகம் அமைப்பு தோழர் சிவம் பற்றிய தனது குறிப்பில் தெரிவித்துள்ளது. இது தோழர் சிவம் அவர்கள் கனடாவில் செய்த பணிகளுக்கு சாட்சியாக இருப்பதோடு அவர் இறக்கும் வரை தனது கொள்கைகளில் உறுதியாக இருந்து தன்னால் இயன்ற பணிகளை செய்துள்ளார் என்பதையும் எடுத்தியம்புகிறது. அதேபோல் இந்தியாவில் மரணமடைந்த தோழர் ரத்தினம் அவர்களும் இலங்கையில் மரணமடைந்த தோழர் சிவராசா அவர்களும் இறுதிவரை தமது கொள்கைளில் உறுதியாக இருந்ததையும் தமது நெருக்கடியான வேளைகளிலும் அவர்கள் தங்களால் இயன்ற பணிகளை மேற்கொண்டதையும் நாம் காணமுடியும்.

 

மிகவும் நெருக்கடியான இக் காலகட்டத்தில் இத் தோழர்கள் எம் மத்தியில் இல்லாதது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். இத் தோழர்கள் இன்று எம் மத்தியில் இல்லாவிடினும் அவர்கள் விட்டுச்சென்ற அனுபவங்களும் படிப்பனைகளும் எம் முன்னால் உள்ளன. அவர்கள் இன ஒடுக்கு முறைக்கு எதிராக தரகு முதலாளியத்திற்கு எதிராக அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்தார்கள். மாக்சிய லெனிச மாவோசியத்தை தத்துவ வழிகாட்டியாக கொண்டிருந்தார்கள். அவர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணம் செய்து புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்பதே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

 

இலங்கை ஒரு சிறிய தீவாக இருந்தாலும் கூட இலங்கை மக்கள் ஒரு வீரம் செறிந்த போராட்ட குணாம்ச வரலாற்றை உடையவர்கள். அவர்கள் அரசர்களுக்கு எதிராக மட்டுமல்ல போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் ஆகியோரின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராடினார்கள். எவர்களையும் நீண்ட காலம் ஆள இலங்கை மக்கள் அனுமதிக்கவில்லை என்பதை வரலாற்றில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் தலைமைகளின் துரோகத்தினால் எமது மக்களின் போராட்டம் இன்றுவரை வெற்றி பெறவில்லை. எனினும் மாபெரும் ஆசான் தோழர் கார் மாக்ஸ் அவர்கள் கம்யுனிஸ்ட் அறிக்கையில் சுட்டிக்காட்டியது போல் எம்மால் வெல்லப்படுவதற்கு ஒரு உலகம் காத்திருக்கிறது. இறுதி வெற்றி உறுதி எமக்கு.

 

ஏவ்வளவு நல்ல தோழர்களாக இருந்தாலும் அவர்கள் தனிப்பட்ட முறையில் எவ்வளவு சிறந்த பணிகளை செய்தாலும் ஒரு பலமான கட்சியின் அங்கமாக ஆதாரமாக இல்லாவிடின் அவையாவும் பயன் உள்ளவையாக அமையமாட்டா. தோழர்கள் சிவம் ரத்தினம் சிவராசா ஆகியோரின் அனுபவங்களை உற்று நோக்கும் போது இதனை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. எனவே இனியும் இதுபோன்ற நிலை அமையாவண்ணம் ஒரு புரட்சிகர கட்சியை கட்டும் பணியில் அக்கறை உள்ள தோழர்கள் ஈடுபட வேண்டும்.

 

இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். பல பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். பல கோடி ருபா பெறுமதியாக சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வளவற்றையும் செய்த இலங்கை இனவெறி அரசும் அதற்கு துணை புரிகின்ற இந்திய விரிவாதிக்க அரசும் மக்களின் போராட்டத்தை அடக்கிவிட்டதாக எக்காளமிடுகின்றன. கொன்று குவித்த மக்களின் புதைகுழிகளின் மேல் நின்று கொக்கரிக்கின்றன. அவர்களுக்கு தோழர் செரபண்டாஜியின் வரிகளை பதிலாக முன்வைக்க விரும்புகிறேன்.

 

நாம் புதைக்கப்படுவதில்லை.
விதைக்கப்படுவர்கள்.-எனவே
மீண்டும் முளைத்து வருவோம்.
ஏம்மை துண்டு துண்டாய் வெட்டி
ஆழ்கடலில் வீசி எறிந்தாலும் -நாம்
பொங்கும் கடல் அலைபோல்
மீண்டும் மீண்டும் எழுந்து வருவோம்.
                                                                                   (நன்றி-தோழர்.செரபண்டாஜி)

 

தோழர் சிவம் ரத்தினம் சிவராசா ஆகியோரை என்றும் நினைவில் கொள்வோம். அவர்களின் பாதையில் தொடர்ந்து செல்ல திட சங்கற்பம் பூணுவோம். இதுவே நாம் அவர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்.

 

தோழர்கள் சிவம் ரத்தினம் சிவராசா புகழ் ஓங்குக.
மாக்சிய லெனிச மாவோசிச வழிகாட்டலில் தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியத்தின் மூலம் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்.


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்