10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

1 மே 2010

நாளைக்கும் வந்து நீ வேலை செய்தால் 50 வீத வரிவிலக்குடன் உனக்கு சம்பளம் தருவேன் என்று எனது முதலாளி 30 ஆம் திகதி ஏப்ரம் மாதம் சொன்னான். 50 வீத வரிவிலக்கையும், சம்பளத்தையும் நிராகரித்துவிட்டு வீட்டில் நிம்மதியாகத் தூங்கினேன்.

*

ஒரே வேலை செய்யும் எனது சக தொழிலாளியைப் போல எனக்கும் சம்பளம் கூட்டித் தருமாறு முதலாளியிடம் கேட்டேன். அவன் படித்திருப்பதாகவும், சான்றிதழ்கள் வைத்திருப்பதாகவும், அதனாலேயே அவனுக்கு என்னை விட சம்பளம் கூட என்றும் முதலாளி சொன்னான. நானும் அவனும் ஒன்றாகத்தான் குப்பை பொறுக்குகின்றோம். நான் பத்தாம் வகுப்புடன் படிப்பதை நிறுத்தி விட்டேன்.

*

அண்மைக் காலத்தில் வேலை அதிகரித்திருப்பதை கூறி உழைப்புக்கேற்ப ஊதியம் தரும்படி முதலாளியிடம் கேட்டேன்.  தொழில் போட்டி இருப்பதால் வேலை அதிகரித்திருப்பது சாதாரணம் என்றும், வேலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஊதியம் பற்றிக் கதைக்காதே என்றும் கூறிவிட்டான. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமையினால் ஊதியத்திற்கேற்ற உழைப்பாக ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு தடவை கக்கூசுக்குப் போய் நிதானமாக இருக்கின்றேன்.

*

மேதின ஊர்வலங்களில் தூக்கப்படும் கொடிகளையும், எழுப்பப்படும் கோசங்களையும் பார்க்கையில்/ கேட்கையில் வீட்டிற்குள் இருந்து உழைக்கும் எனது அம்மா, பாட்டி, அக்கா..  இவர்களையெல்லாம் பிரதிநிதித்துவப்படுத்துவதுபோல் தெரியவில்லை.

*

வெளியில் போய் உழைத்த அப்பா, வீட்டில் உழைத்த அம்மா என்று இவர்களின் நிழலில் கட்டாக்காலியாகத் திரிந்தபோது மே தினம் என்றால் 1 ரூபாவிற்கு தியேட்டரில் படம் பார்க்கலாம் என்பதே மே தினம் பற்றிய எனதுஅறிதலாக இருந்தது. இந்த நாளில் 30ஆம் திகதி வரை ஓடிய படங்களை எல்லாம் நிறுத்திவிட்டு எம்.ஜி.ஆரின் அரசிளங்குமரியையும், முத்தக் காட்சி கூட இல்லாமல் தொடர்ந்து கதைத்துக் கொண்டேயிருக்கும் ஆங்கிலப் படங்களையும்தான் போட்டார்கள்.

*

எல்லைகளைத் தாண்டி தொழிளாளர்கள் சர்வதேச ரீதியாக ஒண்றிணைய வேண்டும் என்பது தொழிலாள பிரதிநிதிகளின் கோசமாக/கோரிக்கையாக/அழைப்பாக இருக்கிறது. ஆனால் எதார்த்தத்தில் முதலாளித்துவம்தான் எல்லைகளைத் தாண்டுகிறது – சர்வதேசரீதியாக தொழிலாளர்களைச் சுரண்டுவதில்! ஒரு கண்டத்தில் தொழிலாளர்களின் வேலைகளைப் பறித்து அவர்களைக் குடும்பத்துடன் தெருவுக்கு அனுப்புகிறது. இவர்களிடம் பறித்த தொழிலை இவர்களை விட குறைந்த ஊதியத்திலும், காப்புறுதிகளோ, பாதுகாப்போ எதுவும் இல்லாமலும் இன்னொரு கண்டத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கு கொடுத்து அவர்களைக் கசக்கிப் பிழிகிறது. சர்வதேசியம் பற்றி சுரண்டுபவர்கள்தான் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

*

அப்பாவி மக்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழிக்கும்போது சர்வதேசத்தைக் கவனத்திலெடுக்காத மகிந்தவும், மகிந்த குடும்பவும் இப்போது சர்வதேசத்தை நோக்கித் தமது கவனத்தைத் திருப்பியுள்ளனர். மனித உரிமை நிறுவனங்களுக்கும், ஊடகங்களுக்கும் கதைவை அடைத்த மகிந்த குடும்பம் இப்போது சர்வதேச தொழிலாளர்களுக்கு கதவை அகலத் திறக்கவுள்ளது. சர்வதேசத்திலிருந்தும் பாலியல் தொழிலாளர்களை வருக வருக என மகிந்த குடும்பம் சட்டரீதியாக வரவேற்க உள்ளதாக கொழும்பிலிருந்து நண்பர் தெரிவித்தார்.

*

மே தின வெளியீடாக இளைய தளபதியின் சுறா வெளியாகியிருக்கிறது. தமன்னாவின் காற்சட்டையில் அவதானமாகவிருக்கும் சுறாவுக்கும் மே தினத்திற்கும் என்ன தொடர்பு என்பதைவிட மீனவத் தொழிலாளர்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று தெரிந்தவர்கள் சொல்லலாம். மீனவ நண்பன் என்று சினிமா காட்டிய எம்.ஜி.ஆர் பின்னர் முதலமைச்சராக இருந்தபோதுதான் மெரினாவை அழகுபடுத்துவதற்காக ஏழை மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டு, அவர்களின் குடிசைகள் அழிக்கப்பட்டன.

*

இம் முறை யாருக்கு மேதின வாழ்த்தை தெரிவிக்கலாம் என்று குழப்பமாக இருக்கிறது.

சினிமாவுக்குப் பின்னாலும் தொழிலாளர்கள் காலம் காலமாக இருந்தாலும், கடந்த சில மாதங்களாக அவர்களின் மீது உலகத்தின் மொத்தப் பார்வையைத் திருப்பிய, பல்வேறான/முரண்படுகின்ற பல கருத்தியல் தளங்களையும் ஒன்றாக இந்தத் தொழிலாளர்களுக்காகக் ஒருமித்து குரல் கொடுக்க வைத்த லீனா மணிமேகலைக்கும், ஷோபாசக்திக்கும் எனது மேதின வாழ்த்துகள்.


http://porukki.weblogs.us/

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்