10172021ஞா
Last updateச, 09 அக் 2021 9am

புலியோடு வாழ்ந்த சனம்………

ஏறிகணைகள் இடிமுழங்க மடி எரியும்
விடியலற்ற  பொழுதுகளாய் விழிகருகும்
வழி நெடுக அழுகுரலால் வான்கலங்கும்
இறுதிவரை பிள்ளைதேடி வெறுமையானோம்

 

 

புலியோடு வாழ்ந்த சனங்களின் இதயம்
தினமும் இழந்தோரின் துயரோடு கடந்தது
அழிவினுள்ளும் வலியோடு தாங்கியது
வாழ்வை வெல்லும் கனவோடு நடந்தது

கனவுகள் சுமந்த தாய்மையின் தவிப்பு
நீதியின் காவலர் நெஞ்சினை உதைக்குமா
எஞ்சிய மகளைத் தேடிடும் துடிப்பு
இரணியர் உள்ளத்தே ஈரத்தை ஏற்றுமா

புகலிடப் போலிகள் மூட்டிய நெருப்பு
முளைகளை கருக்கி மூர்க்கமாய் எரித்தது
கருவினில் ஊறிய வீரியம் நிலையுறும்
தெருவினில் எறிந்த சதியினை தோலுரிக்கும்…..

பேரழிவோடு முடிந்தெழுந்தது பாரேன்
ராஜபக்ச குடும்பப் பேயாட்சி
மாறா வடுவோடு வீழ்ந்த சனம்
வேரிடும் விழுதெறியும் போரிடும் நீதிக்காய்……

வெறியோடு பாய்ந்த படைகளின் நகர்வு
இனவாதத் திமிரோடு எகிறியது– மாறித்
தேர்தலோடு வெல்லும் நரியாகிப் பதுங்கியும்
மக்களிடம் எறிவாங்கி ஊளையிடும் கதியாகிப்போகும்

வெடியொலி தின்ற உறவுகள் துயரம்
இடியென முழங்கும் மானுடம் நிமிரும்
அடியொடு கிளறும் ஆருடம் பொய்க்கும்
விடிதலில் மிளிரும் கிளையுறும் பூக்கும்


எனது மகளை கண்டடையும்
வரை  எனக்கு எந்த வருடமும்
புதுவருடமில்லை


 

http://www.psminaiyam.com/?p=4602