தூற்றுவதாலோ, திரிப்பதாலோ, திருத்துவதாலோ வர்க்கப் போராட்டங்கள் நின்று விடுவதில்லை
வரலாற்றின் உண்மைகளைக் கண்டுகொள்ள மறுப்பது, அதைத் திரிப்பதும், மார்க்;சியத்தை மறுப்பதில் போய் முடிகின்றது. மனிதகுலம் அடிமைப்படுத்தப்பட்டு, தன் விடுதலைக்கான குரல்களையே இழந்து நிற்கின்றது. இதைத்தான் இன்று ஜனநாயகம் என்கின்றனர். மனிதனை அடிமைப்படுத்துவதையும், அவர்கள் அடிமையாக இருத்தலும் தான், மனிதன் ஜனநாயக உரிமையாக காட்டப்படுகிறது.
இதற்கு எதிரான போராட்டத்தை மார்க்சியம் நெறிப்படுத்துகின்றது. மார்க்ஸ் "சாராம்சத்தில் விமர்சனக் கண்கொண்டு பார்ப்பவை புரட்சிகரமானவை" என்றார். இந்த நிலையில் மார்க்சியம் மீதான அவதூறுகள், சேறடிப்புக்களை சமுதாயத்தின் மாற்றாக காட்ட முற்படுகின்றனர்.
இப்படி கட்டமைக்கும் அரசியல் தளத்தில் தான் உலகமயமாதல் என்றுமில்லாத மனித அவலத்தை உலகமயமாக்கி வருகின்றது. இதை எதிர்த்த போராட்டத்தையும், சமுதாயத்தை மாற்றுவது பற்றிய எந்தவிதமான அக்கறையுமற்ற மாற்றையே, சமூக மாற்றத்தின் ஒரு போக்காக பூச்சூட்டுகின்றனர். இந்த வகையில் மார்க்சியத்தை திரித்தல், சேறடித்தல், மறுத்தல், இன்று முற்போக்காக காட்டப்படுகின்றது.
உலகமயமாதலை எதிர்த்து, உலகத்தை மாற்றி அமைக்கக் கோரும் ஒரேயொரு போராட்ட மார்க்கமான மார்க்சியத்தை எதிர்த்து நிற்கின்றனர். மார்க்சியத்தை கோணல்படுத்தி, தம்மை ஒரு "முற்போக்கு" அணியாக காட்ட முனைகின்றனர். இதன் மூலம் உலகமயமாக்கல் விரிவாக்கும் போக்குகளை உயர்த்திப் பாதுகாக்கின்றனர்.
இந்த "முற்போக்கு" கள், உலகமயமாக்கலுக்கு ஏற்ப தேசங்களை மறுக்கின்றனர். தேசங்கள் சார்ந்த மேற்கட்டுமான வடிவங்களுக்கும், உலகமயமாதல் திணிக்கும் மேற்கட்டுமானத்துக்குமான முரண்பாட்டில், தேசிய வடிவத்துக்கு எதிரானதையே முற்போக்கானதாக காட்டுகின்றனர். அடிக்கட்டுமானத்தை பூசி மொழுகி, மேற்கட்டுமானத்தில் நடக்கும் மாற்றங்களை புரட்சிகரமானதாக காட்டி, மார்க்சியத்துக்கு எதிரான ஒரு மாற்றாக அதை முன்தள்ளுகின்றனர்.
மார்க்சிய உண்மைகள் மீது அவதூறு செய்வதே இவர்களின் அரசியல் அடிப்படையாகும். மார்க்சியம் மீதான அவதூற்றை, பெரும்பாலும் ஸ்ராலின் மீதான அவதூறில் இருந்து தொடங்குகின்றனர். ஸ்ராலின் 1936-37 களில் நடத்திய உள்நாட்டு களையெடுப்பை அடிப்படையாகவும், தனிமனித உரிமை என்ற உள்ளடகத்தை அடிப்படையாகவும் கொண்டு, அனைத்தையும் மறுக்கின்றனர். ஸ்ராலின் காலத்தில் என்ன நடந்தது என்ற அடிப்படை ஆய்வு எதுவுமின்றி, ஏகாதிபத்தியம் எதை எல்லாம் அவதூறாக கட்டமைத்ததோ, அதை ஆதாரமாக கொண்டே தூற்றுவது ஒரு அரசியல் வடிவமாக தொடருகின்றது.
இதை நுட்பமாக பார்த்தால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தூக்கியெறிய முயன்று தோற்றுப் போனவர்களைச் சார்ந்து நிற்கின்றனர். இவர்கள் யார் என்றால், சோவியத்தின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கவிழ்க்கும் சதிகளில் தோற்றுப் போன நிலையில் தண்டனைக்குள்ளானவர்கள். இந்த சதியாளர்கள் அக்காலத்தில் என்ன செய்தார்கள், எப்படி ஆட்சியை கவிழ்க்க முனைந்தார்கள், என்ற எந்த அடிப்படை உண்மையையும் ஸ்ராலினை தூற்றுவதற்காக கண்டு கொள்வதில்லை. இதன் மீதான நேர்மையான ஆய்வை, ஸ்ராலினை தூற்றுவோர் முன்னெடுப்பதில்லை. சதியாளர்கள் என்ன அரசியலை முன் வைத்தனர் என்பதைக் கண்டு கொள்வதில்லை. அதற்காக அவர்கள் என்ன வடிவங்களில் போராடினர்கள் என்பதை பற்றி அக்கறைப்படுவதில்லை. மார்க்சியத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்வோரும், மார்க்சியத்தை திருத்தச் சொல்லி மார்க்சியத்ததை தூற்றுவோர், இவற்றை திரும்பிக் கூட பார்ப்பதில்லை. மாறாக மார்க்சியத்தை தூற்றுவதே அவர்களின் மையக் குறிக்கோளாக உள்ளது.
அன்று சோவியத் மக்கள் எப்படி வாழ்ந்தனர். அடிப்படை தேவைகளான உணவு, இருப்பிடம், உடை போன்ற விடையங்கள் மீதான அரசின் கொள்கை என்ன? எதுவும் இவர்களுக்கு அவசியமற்றதாகவே உள்ளது. ஸ்ராலினை மறுத்து முதலாளித்துவ மீட்சி நடந்த பின்பு, அங்கு இருந்த சமூக வடிவங்களை அழித்து முதலாளித்துவ அமைப்பு உருவான பின்பு, அந்த மக்களின் வாழ்வுக்கு என்ன நடந்தது என்ற அடிப்படை விடையத்தைக் கூடக் கண்டு கொள்வதில்லை. தூற்றுவதற்கு மட்டும் இவர்கள் புலம்பவதும், அதைக்கொண்டு பிழைப்பதும் தொடர்கின்றது. ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலன் என்பதை விடவும், சிலரின் நலன்களில் தொங்குபவர்களாக இவர்கள் இருக்கின்றனர்.
இதில் மற்றொரு விடையம் இவர்களின் வாதங்கள் மறுப்புக்கு உள்ளாகும் போது, பதிலற்று கிடப்பதும் தூற்றுவதை தொடர்வதுமே பிழைப்பாகிவிடுகின்றது. கடுமையான முத்திரை குத்தல் ஊடாக சம்பந்தம் இல்லாத வகையில் அவதூறுகளை கட்டமைப்பதும், ஒரு நடைமுறையாகி விடுகின்றது. மார்க்சியத்தை உயர்த்தும் எல்லாப் பொதுவான தளத்திலும் இது நிகழ்கின்றது. இந்த போராட்டத்தில் கடுமையான தூற்றுதலை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்;. இந்த நிலையில் தனிமைப்படுத்தல், இருட்டடிப்பு போன்ற பல்வேறு புறநிலையான நிலைமையில், எதிர்நீச்சல் என்பதும் பல்துறை சார்ந்து கடுமையாகிவிடுகின்றது. மார்க்ஸ் கூறியது போல் "கண்டனத்துக்குரிய சமுதாயத்தின் ஏறுவரிசையில் ஓர் உயர்ந்த இடத்தைப் பிடிக்கிறவன் தான்|| உலகத்தின் உண்மைகளையும், சமுதாயத்தை மாற்றி அமைக்கும் ஒரு சிறந்த பணியையும் செய்ய முடிகின்றது. சமுதாயத்தின் சுற்றி வளைப்பிலான வலைப்பின்னல் கொண்ட கண்டனங்களை எதிர் கொண்ட நிலையில், இந்த சமுதாயத்தை தலைகீழாக்க ஒரு புரட்சிக்கரமான அறைகூவலை விடும் போது, கடுமையான நெருக்கடிகள் நேரடியாக முகத்துக்கு முன்னாலும், உளவியல் ரீதியாகவும் அச்சுறுத்துகின்றது. எதார்த்தம் மீதான விமர்சனம் கடுமையான அச்சுறுத்தலை விடுகின்றது. விமர்சனம் செய்ய மறுக்கும் போது, அந்த சமூகத்தின் முதுகில் குத்தி விடுவது நிகழ்கின்றது
எழுதுவதை நிறுத்தக் கோரும் வேண்டுகோள்கள் அடிக்கடி தொடர்ச்சியாக விடப்படுகின்றன. உனது உயிர் பறிக்கப்படும் என மிரட்டியும், மறுபுறத்தில் அன்பாகவும் விடப்படுகின்றது. இந்த மிரட்டலை நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்ச்சியாக நாள்தோறும் சந்திக்காமல், நாம் உயிர் வாழ்ந்துவிடவில்லை. இது ஒரு புறம் நிகழ அதற்கு உறுதுணையாக அக்கம்பக்கமாக கடுமையான அவதூறுகள் அன்றாடம் புனையப்படுகின்றது. அவற்றை எமது காதுகளுக்கு வந்தடையச் செய்கின்றனர்.
ஆத்திரமூட்டும் அவதூறை வெவ்வேறு நபர்களுடன் தொடர்புபடுத்தி, வன்முறை ஒன்றை புனையவும், அதில் குளிர்காயும் முயற்சிகளையும் செய்கின்றனர். அவதூறுகளுக்கு கை கால் பொருத்தி, வாயில் வந்த மாதிரி புனைகின்றனர். நீ தாக்கப்படுவாய் என்ற மிரட்டல்கள் சொல்லியனுப்பப்படுகின்றது. ஜனநாயக விரோத செயல்கள் மீதான எமது விமர்சனங்கள் கூர்மையாக அவர்களை அம்பலப்படுத்தும் போது, இந்த அவதூறுகள் அவர்களின் அரசியலாகிவிடுகின்றது.
இவர்கள் கடந்தகாலத்தில் வௌ;வேறு இயக்கங்களில் இருந்த போது, ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு விமர்சித்தவர்களை அவதூறுகள் மூலம் அழித்தொழித்தவர்கள். அதற்கு வக்காலத்து வாங்கி உறுதுணையாக நின்றவர்கள்;. இன்று அவதூறுடன் கூடிய மிரட்டல்கள் அனைத்தும், அனைத்து தரப்பினரிடமிருந்தும் தொடர்ந்து வருகின்றது. அவர்கள் தமக்கு இடையில் இதுபற்றி ஒன்று கூடி கதைக்கவும், வம்பளக்கவும் படுகின்றது. இது அனைத்து மட்டத்திலும், அனைத்து தரப்பிலும் இருந்து விடப்படுகின்றது.
சமுதாயத்தின் பொதுப்போக்கில் இருந்து அதை விமர்சித்து, அதற்கு முரணாக தனிமைப்பட்ட நிலையில் போராடும் போது, எதிர் கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள் கடந்தே எம்மால் எழுத முடிகின்றது.
இந்த எதார்த்தம் ஒருபுறம்; எம்மை போhராடத் தூண்டுகின்றது. இந்த நிலையில் ஸ்ராலின் விடையம் மீதான பரஸ்பரம் அனைத்து தொடர்பு விதிகளையும் அடிப்படையாக கொண்டு, ஸ்ராலினை பார்க்க முனைகின்றேன். சோசலிச அரசுகள் உருவான போது பழைய சமுதாயத்தின் எதிர்ப்பு மிகக் கடுமையானதாக மாறிவிடுகின்றது. மீண்டும் பழைய சமுதாயத்தை நோக்கிச் செல்ல, அந்த சமுதாயத்தில் நிலவிய உயர்ந்த வாய்ப்பையும் வசதியையும் பெற்ற பிரிவு தொடர்ந்து போராடத் தொடங்குகின்றது. இது சோசலிச சமூகத்தில் மட்டுமல்ல, எல்லாப் புரட்சிகளிலும் இது பொருந்தும். இது சோசலிச சமுகத்தில் மிக கடுமையானதாக மாறிவிடுகின்றது. மற்றைய எல்லா சமூக முரண்பாடுகளையும் விட, பாட்டாளி வர்க்க சமுதாயத்தில் முரண்பாடு கூர்மையான வடிவில் வெடிக்கின்றது. இதை கையாள்வதில் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் அதன் மேல் கையாளுகின்றது. எந்த சமுதாயத்தையும் விட, பரந்துபட்ட மக்களின் நலன்களை பாதுகாப்பதில் உயர்ந்தபட்ச நிலையைப் பேணுகின்றது. இதை யாரும் நிராகரித்து விட முடியாது. இதன் போது தவறுகள் முன் அனுபவமின்மையில் ஏற்படுவது நிகழ்கின்றது. லெனி;ன் கூறியது போல் " .. விசயத்தின் சாராம்சத்தை எடுத்துக் கொண்டோமானால், ஒரு புதிய உற்பத்திமுறை, தொடர்ந்து பின்னடைவுகளையும், தவறுகளையும், தோல்விகளையும் சந்திக்காமல் உடனே வேர் பிடித்து நிலை பெற்றதாக வரலாறு உண்டா?|| என்றார். நாம் புதிய அனுபவமற்ற விடையங்களில் முன்னேறும் போது, அதில் தவறுகளை இனம் காணும் போது, அதை களைந்து முன்னேறுவதே பாட்டாளி வர்க்கத்தின் இயங்கியலாகும்.
இந்த வகையில் ஸ்ராலின் கால சரிகளையும், தவறுகளையும் ஒரு மார்க்சிய ஆய்வாக எடுத்துரைக்க முனைகின்றேன். எதிர்தரப்பின் நிலைப்பாட்டை, அவர்கள் அக்காலத்தில் என்ன செய்தார்கள், அதை அவர்கள் இன்று எப்படி நியாயப்படுத்துகின்றனர் என்ற அடிப்படையான ஆதாரங்களுடன், இந்த விடையத்தை ஆராய முனைகின்றேன். குருச்சேவ் ஸ்ராலினை மறுத்த போது, உண்மையில் எதை மறுத்தான் என்பதை ஆதாரப+ர்வமாக முன்வைக்க வேண்டியிருகின்றது. ஸ்ராலின் எதை பாதுகாக்க முனைந்தார் என்பதை, இதன் அடிப்படை உள்ளடகத்தின் மீது எடுத்துரைக்க வேண்டியிருக்கின்;றது. குருச்சேவ் என்ன செய்தான், டிட்டோ என்ன செய்தான் என்ற அடிப்படை உண்மை கூட தெரிந்து கொள்ள முனையாத நிலையில், ஸ்ராலின் தூற்றப்படுகின்றார். இதை எடுத்துக் காட்டவும், பாட்டாளி வர்க்கத்தின் சரியான அடிப்படைகளை உயர்த்தி பாதுகாக்கவும், ஆதாரபூர்வமாக விமர்சனத்தை உள்ளடக்கி தர்க்க ரீதியாக நாம் போராட வேண்டியிருக்கின்றது.
ஸ்ராலின் மீதான குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு எழுப்பும் அவதூறுகளும், கடந்த கால புள்ளிவிபரங்கள் அனைத்தும் தவறானவை என்பதை இக்கட்டுரை ஆதாரபூர்வமாக தகர்க்கின்றது. இன்று ஏகாதிபத்தியங்களின் பொய்யும் புரட்டுடனும் கூடிய, புதியதொரு புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளனர். இக்கட்டுரையில் அது முழுமையாக உள்ளடங்கியுள்ளது. இது முன்னைய புள்ளிவிபரங்களின் கற்பனையான கண்டுபிடிப்புகளையும், இதன் அத்திவாரத்துடன் தகர்த்துவிடுகின்றது. ஸ்ராலினால் கொல்லப்பட்டவர்கள் என்று முன்னைய அவதூறுகளின் எண்ணிக்கையை விட, இன்று 100 மடங்கு குறைவாகவே அண்மையில் ஏகாதிபத்தியங்கள் தொகுத்து வெளியிட்டதை இக்கட்டுரை மூலம் அம்பலத்துக்கு கொண்டு வர முனைகின்றேன். இன்றைய ஏகாதிபத்தியப் புள்ளிவிபரங்கள் 1920 முதல் 1950 வரையிலான காலத்தை முழுமையாக கொண்டு வெளிவந்துள்ளது. உளவாளிகள், சமூக விரோதிகள், பாசிட்டுகள், கொலைகாரர்கள் என மொத்தமாக 1921 முதல் 1953 முடிய 799473 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக ஏகாதிபத்திய புள்ளிவிபரம் இன்று அறிவிக்கின்றது.
கடந்தகால பொய்கள் புரட்டுகள் கூட இன்று அம்பலமாகி வரும் நிலையில், மார்க்சியத்தின் சரியான ஆய்வுரைகளை ஆதாரபூர்வமாக தர முனைகின்றது. அத்துடன் இதை ஆழமாகவும், விரிவாகவும் புரிந்து கொள்ள மாபெரும் விவாதம், இரு முக்கிய முடிவுகள், மாபெரும் சதி, மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை, இயங்கியல் பிரச்சனை பற்றி, லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள் போன்ற நூல்களை படிப்பதை கோருகின்றது.
தொடரும்
பி.இரயாகரன்