Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பாராளுமன்றத்தை நோக்கி செல்லும் ஒவ்வொரு புதுக்கட்சியும், இதுவரை பாராளுமன்றம் செல்ல முடியாதவனும், கூறுவது என்ன? தங்கள் தங்கள் இறுதி இலட்சியத்தை அடையத்தான், பாராளுமன்ற வழியை பயன்படுத்துகின்றோம் என்கின்றனர். நாங்கள் நேர்மையானவர்கள், சமூக அக்கறை உள்ளவர்கள், படித்தவர்கள் என்று இவர்கள் அனைவருமே கூறுகின்றனர்.

அப்படி முன்பு கூறியவர்கள் தான், இன்று நாட்டை ஆளுகின்றனர் அல்லது எதிர்க்கட்சி உறுப்பினராக இருக்கின்றனர். இவர்கள் பாராளுமன்ற சாக்கடையில், மக்கள் விரோதிகளாக மாறி விடுகின்றனர். இது விதிவிலக்கற்ற ஒன்றாக உள்ளது. ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு தெரிவு செய்யப்படுபவர்கள், ஜனநாயக விரோதிகளாக மாறுதல் தான், ஜனநாயகத்தின் உள்ளடக்கமாகும்.

 

உதாரணமாக மிகப் பெரிய இயக்கங்களின் தலைவர்கள் எவரும் மக்கள் விரோதிகளாக தலைமை தாங்க செல்லவில்லை. அவர்கள் சமூக இலட்சியத்துடன் போராட முனைந்தவர்கள்;. ஆனால் அவர்கள் தலைமை தாங்கிய வழிநடத்திய அரசியல், அவர்களை மக்கள் விரோதியாக்கியது. இந்த இடத்தில் நான் அந்த அரசியலுக்கு தலைமை தாங்கினாலும், இதுதான் என் விதி கூட.

 

இதைத் தீர்மானிப்பது அரசியல் மட்டுமின்றி, எந்த நிலையில் எங்கே எப்படி மக்களுடன் அது தொடர்புடையது என்பதும் முக்கியமானது.

 

மக்களை அரசியல் மயமாக்காத பாராளுமன்ற வடிவங்களில், மக்கள் விரோதிகள் தான் உருவாகுவார்கள். ஜனநாயக விரோத பாராளுமன்றங்களை, அதன் விதிக்கு வெளியில் பயன்படுத்த முடியாது. நல்லவராக, நேர்மையாளராக, புரட்சியாளராக அங்கு யாரும் இருக்கமுடியாது. இயக்கங்களுக்;கு என்ன விதி இருந்ததோ, அதே விதிதான் இதற்கு இங்கு பொருந்தும்.

 

இப்படியிருக்க ரகுமான் ஜான் தன் பாராளுமன்ற குதிரைக்கு மூன்று கால் என்கின்றார். நல்லவர், வல்லவர், படித்தவர், நேர்மையானவர்களை தேர்ந்;தெடுத்து, மறுசீரமைப்புக்கும் தங்கள் இறுதி இலட்சித்துக்கும் ஏற்ப பாராளுமன்றத்தை பயன்படுத்தமுடியும் என்கின்றார். வேடிக்கைதான். முன்பு புலிக்கு ஏற்ப தமிழீழக் கட்சியை உருவாக்கி புலியிடம் மேய விட்டுவிட்டு, ஒடி ஒளித்தவர் தானே. நாளையும் இதைத்தான் செய்வார். புலிக்கு ஏற்ற தமிழீழக்கட்சி போல், மே18 இயக்கம். புலியில்லாத இடத்தில் பாராளுமன்ற கனவை வைக்கின்றனர். அவரின் வழிகள், எப்போதும் குறுக்கு வழிகொண்டது. பாராளுமன்றத்துக்கு செல்லும் முன் எல்லோரும் எதைச் சொன்னார்களோ, அதையே இவரும் சொல்லுகின்றார்.

 

அவர் கூறுவதைப் பார்ப்போம்.     

 

"• முதலாவதாக, நாம் ஒரு தோல்வியை அடுத்து எமது முயற்சிகளை தொடங்குகிறோம். இப்போது மாற்றுக் கருத்துள்ள அனைவரும் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே எமது போராட்டத்தை முன்னெடுக்கிறோம். இப்படியான சந்தர்ப்பங்களில் சட்டபூர்வமான வழிமுறைகள், அதிலும் பாராளுமன்ற தேர்தல் முறைகள் நாம் மக்களைச் சென்றடைய கணிசமான வாய்ப்புக்களைத் தரும்.

• மக்கள் இப்போதுதான் ஒரு நீண்ட இருண்ட காலத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அமைதி தற்காலிகமானதுதான் என்றாலும் அதனை யாரும் குலைப்பதை விரும்ப மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அரசியல் என்பது வெறுமனே வாக்களிப்பது என்பதாகவே சுருங்கிப் போயுள்ளது. கடந்த காலத்தில் கூட யாருமே பாராளுமன்றத்தின் பற்றாக்குறை குறித்தோ, அதற்கு மாற்றான வழிமுறைகளில் ஒழுங்கமைத்துக் கொள்வது குறித்தோ எதுவுமே செய்யவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

• மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தமது தொகுதிகளில் உள்ள பாராளுமன்ற அங்கத்தவர்களது உதவிகளில் சார்ந்திருக்க நேர்கிறது. அந்த பொறுப்பை ஏன் இந்த கடைந்தெடுத்த அயோக்கியர்களிடம் பிழைப்புவாதிகளிடமும் நாம் ஒப்படைக்க வேண்டும்.

• நாம் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் அண்மையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பாராளுமன்ற முறைமை அமுலில் இருந்தே ஆக வேண்டியுள்ளது. இதில் பல்வேறு சந்தர்ப்பவாதிகளும், பிழைப்புவாதிகளும் கலந்து கொண்டு ஆசனங்களை நிரப்பவே போகிறார்கள். பாராளுமன்றத்தை நாம் நிராகரிப்பதனால் இந்த இடங்களில் மோசமான பேர்வழிகள் அமர்ந்து கொண்டு அதனை தேசவிரோத செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப் போகிறார்கள். வேறு ஜனநாயக சக்திகள் அந்த இடங்களை எடுப்பதனால் இப்படியாக எமது போராட்டத்திற்கு ஊறு விளைவிக்கும் புல்லுருவியொன்றை ஒரு பகிரங்கமான மேடையை விட்டும் அகற்றி விடுகிறோம்.


• தேர்தல்களில் நாம் கலந்து கொள்வது எப்படியும் ஆசனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற பேரவாவினால் அல்ல. தேர்தலில் கலந்து கொள்வதானது நாம் முதலில் மக்களை சந்திக்கவும், அவர்கள் மத்தியில் எமது கருத்துக்களை எடுத்துச் செல்லவும் வழி வகுக்கிறது.

• வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்லும் பட்சத்தில் அரசினதும், தமிழ் தலைமைகளினதும் மோசடிகளை அம்பலப்படுத்த உதவியாக செயற்படலாம். இது பாராளுமன்றத்திற்கு வெளியில் செய்யும் எமது பணிகளுக்கு உதவியாக அமையும்.

• உள்ளூரில் முளைவிட முயற்சிக்கும் பல்வேறு புதிய குழுக்களும் மோசமாக ஒடுக்கப்படும் நிலைமைதான் இப்போது காணப்படுகிறது. அனுபவத்தில் குறைந்து, போதிய பாதுகாப்பு வசதிகள் அற்ற பல்வேறு நபர்கள் தனித்து இப்படியாக எதிரியின் ஒடுக்குமுறைகளை முகம் கொடுக்குமாறு விட்டுவிடுவது அனுபவம் வாய்ந்த, பாதுகாப்பான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு அழகல்ல. பாராளுமன்ற திசையில் நாம் வைக்கும் முன்னெடுப்புக்களும், அது தொடர்பான எமது செயற்பாடுகளும் இன்னும் இப்படிப்பட்ட பலர் அரங்கிற்கு வந்து செயற்பட இடைவெளியை ஏற்படுத்திக் கொடுக்கும்."

 

இப்படி தேர்தலில் நிற்பதை விளக்கும் ஜானின் அரசியல் சாரம்தான், நாவலின் சுத்துமாத்து பொழிப்புரை. ஜான் தன் சுத்துமாத்து அரசியலை புகுத்த, மார்க்கிசவாதிகளின் ஆய்வுகளை எல்லாம் உப்புச்சப்பின்றி வலிந்து இடைச்செருகுகின்றார்.

 

இதன் மூலம் இதை மார்க்சிய வழியாக காட்டி ஏய்க்க முனைகின்றார். ஆங்காங்கே மார்க்சியத்தை  பொறுக்கி தேர்தல் பற்றிய தன் நிலைக்கு அமைவாக பொருத்துகின்றார். இப்படி மார்க்சியத்தை பயன்படுத்தியதன் மூலம், மைய்யப்படுத்தி சொல்ல வருவது தேர்தலில் நிற்பது சரியானது என்ற தர்க்கத்தைத்தான். புரட்சி செய்ய தேர்தல் உதவும் என்கின்றார். நல்லவர்கள், வல்லவர்கள், நேர்மையானவர்களை, இடதுசாரிகளை தெரிவு செய்வதன் மூலம், பாராளுமன்றத்தை பயன்படுத்த முடியும் என்கின்றார். சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளை தேர்தல் ஜனநாயகத்தால் தீர்க்க முடியாது என்று கருதுபவர்களை, எதிர்த்துதான் ரகுமான் ஜான் களமிறங்குகின்றார். தேர்தல் முறையை மறுக்கும் பிரிவினரை ஏமாற்றி, அரசியல் ரீதியாக முடக்க  வேண்டிய நிலையில் அவர் வைக்கும் வாதம் தான் மார்க்சியம் கலந்த சுத்துமாத்து வாதங்கள். இது உள்ளடக்க ரீதியாக இயக்கங்கள் மார்க்சியத்தை பயன்படுத்திய அதே உத்தி தான். இங்கு ஜான் பரந்துபட்ட மக்களை ஏமாற்றிய, தன் கடந்தகால அனுபவத்தில் இருந்து, மீண்டும் ஒருமுறை ஏமாற்ற மார்க்சியத்தை முன்வைக்கின்றார் அவ்வளவுதான். எப்படி?

 

தொடரும்

 

பி.இரயாகரன்
02.03.2010