Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தோழர்களே! நண்பர்களே! வாசகர்களே! எதிரிகளே!

 

உங்களுக்கு நான் என்னை அறிமுகப்படுத்துவது தொடர்ந்து போராடுவதற்காகத்தான். எனது சுயஅறிமுகம் என்பது, என்னைச் சுற்றி நிகழ்ந்த அரசியல் வாழ்வுதான். அதுவும் பல தோழர்கள் உள்ளடங்கிய ஒரு கூட்டு வாழ்வுமுறைதான்.

என் கருத்துகள், எனது நடைமுறை சார்ந்த போராட்டம் 30 வருட ஆயுள் கொண்டது. நான் பிறந்து வாழ்ந்த என் சமூகம் இக் காலகட்டத்தில் தான், பல கொந்தளிப்பான இரத்தக்களறி கொண்ட முரண்பாடுகளின் குவியலாக மாறியிருந்தது. இ;க்காலத்தில் இதன் மீதான எனது எதிர்வினைதான், எனது வாழ்வு சார்ந்த சுய அறிமுகம்.  

 

எனது சமூக விசாரணை என்பது மானிடம் சார்ந்ததாக இருந்தது. யாரும் பேச மறுத்ததை பேச வேண்டியிருந்தது. சமூகம் அடங்கி ஒடுக்கிய போது, நான் மட்டும் பேச வேண்டியிருந்தது.

 

இதனால் எனக்கு பல பட்டங்கள் கிடைத்;தது. அரச கைக்கூலி, புலிக் கைக்கூலி, மனநோயாளி, வெள்ளாளன், ஆணாதிக்கவாதி… என்று எண்ணற்ற அடையாளங்கள் மூலம் நான் தூற்றப்பட்டேன். 

 

இதற்கு காரணம் மானிடம் சந்திக்கின்ற வாழ்வியல் அவலங்களை பேசியது தான்;. இவை ஏன் எதனால் எப்படி யாரால் ஏற்படுகின்றது என்பதைப் பற்றியதாக இருந்ததால், இதை முன்னின்று செய்தவர்களால்  வெறுக்கப்பட்டேன்.

   

சமூகத்தை முன்னிறுத்திய சுய விசாரணை மூலம் நான் தெரிந்து கொண்டதை, மற்றவர்களுக்கு தெரியப்படுத்த முனைந்தேன். மற்றவர்களுடன் சேர்ந்து, மானிடம் மீதான அனைத்து ஒடுக்குமுறையையும் எதிர்கொண்டு அதை மாற்றமுனைகின்றேன்.

 

இந்த வகையிலான எனது கருத்துக்கள், எனது செயல்கள் கம்யூனிச கோட்பாடாக இனம் காணப்படுகின்றது. இந்த வகையில் நான் கம்யூனிஸ்ட்டாக இருக்கின்றேன். அந்த அடிப்படையில் நான் வாழவும் முனைகின்றேன்.

 

இந்த நிலையை நான் எனது 20 வது (1980) வயதில் தொடங்கினேன். மக்களுக்காக போராடுவதே என் விருப்பமாக, தெரிவாக, வாழ்வின் மகிழ்ச்சியாக மாறியது. சமூகத்தில் இதற்காகத்தான் வாழ்வது, என்பது என் தேர்வாக மாறியது.

 

எனது 10 வது வயதில் எனது தந்தை மூலம் கம்யூனிசம் அறிமுகமானது. எனது தந்தை 1950 களில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்ததும், 1960 களில் இடமாறியதால் அதன் தொடர்பை இழந்து இருந்தார். மீண்டும் 1969 இல் ஊர் திரும்பிய தந்தை, 1970 இல் தேர்தலில் போலிக் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தார். இக்காலத்தில் தேர்தல் வழிமுறையிலான கம்யூனிசம், எனது தந்தை மூலம் எனக்கு மட்டுமல்ல ஊர் இளைஞர்களும் கூட அறிமுகமானது. தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த வலதுசாரிகளின் கடும் எதிர்ப்புக்கும் வன்முறைக்கும் மத்தியில் தான் கம்யூனிசம் எனக்கு அறிமுகமானது. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, என் தந்தை இருட்டில் வைத்து தாக்கப்பட்டார்.

 

எனக்கு அன்று கம்யூனிசம் தான் எங்கள் வறுமையை ஒழிக்கும் என்ற அளவில் அறிமுகமானது.  இதனால் கம்யூனிசம் என் தேர்வாக இருந்தது. இதற்கு என் குடும்பத்தைச் சுற்றி நிலவிய கடும் வறுமை, ஒரு நேர உணவுக்கே திண்டாடிய வாழ்க்கையும் காரணமாக இருந்தது. வகுப்பில் கடைசியாக வந்த நான், 12 வயதில் உழைத்து வாழ வேண்டி இருந்தது. 10வது வகுப்பு இறுதிப் பரீட்சையில், இரண்டு தரமும் எந்த பாடத்தையும் சித்திபெற்று இருக்கவில்லை. பின்தங்கிய மலையகத்தில் பிறந்த எனக்கு, அதைப் பெறும் தகுதி இருக்கவில்லை, வறுமை, சிறுவயதிலான உழைப்பு இதை மேலும் இல்லாதாக்கியது.  

 

15,16 வயதில் படிப்பு முடிவுற்றது. சிறுவயது உழைப்புமாக வாழ்வு நகர்ந்தது. வறுமையின் காரணத்தையும், படிக்க இயலாமையையும் தேடத்தொடங்கினேன். இதற்கான மாற்றத்தை தேடத் தூண்டியது. நன்றாகப் படித்தால் வாழ்வு கிடைக்கும் என்று நம்பினேன். மீண்டும் படிக்கும் சந்தர்ப்பத்தை கண்டுபிடித்து, படித்தேன். உயர்தர முதல் பரீட்சையில் பல்கலைக்கழக தேர்வுக்கான தகுதி கிடைத்தது. தரப்படுத்தலால் பல்கலைக்கழகம் கிடைக்கவில்லை.  மூன்று முறையும் இ;தே நிலை. படிப்பு தகுதியிருந்தும், படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. அங்கு செல்வாக்கு தேவைப்பட்டது. கடவுளை கும்பிட்டால் வாழ்வு கிடைக்கும் என்றார்கள். ஆனால் விடிவு கிடைக்கவில்லை. வறுமையும், தீர்வுமற்ற வாழ்க்கையுமே, என் இளம் பருவமாகியது. இதை உணர்வு ப+ர்வமாக புரிந்து கொண்டு வாழத் தொடங்கினேன்.  

 

இக்காலத்தில் சீமெந்து தொழிற்சாலை புதிய பகுதி 1979 கட்டப்பட்ட போது, ஆட்களை வேலைக்கு அமர்த்தும் ஒரு தரகரின் கீழ் கூலி வேலைக்குச் சென்றேன். எனது தந்தையும், எனது தம்பியும் கூட, இந்த தரகரின் கீழ் வேலைக்கு அமர்ந்தனர். அங்கு தான் என்.எல்.எவ்.ரி நிறுவனரான விசுவானந்ததேவனைச் சந்தித்தேன். என் தம்பி மூலம் நான் கம்யூனிசத்தை நேசிப்பதை அறிந்து, அவர்தான் புரட்சிகரமான கம்யூனிசத்தை பற்றிய ஆரம்ப அறிவை அதன் மேல் கற்றுத் தந்தவர்கள். அத்துடன் சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தொழிற்சங்கத்தை கட்ட ஊக்குவித்தார். நூல்களை தந்ததுடன், அதை படிக்கவும் ஊக்குவித்தார்.

 

தொழிற்சங்கத்தை பகிரங்கமாக கட்ட முடியாத நிலையில், இரசியமாக தொழிற்சங்கத்தை கட்டினோம். இரண்டு துண்டுப்பிரசுரத்தை விநியோகித்தோம். இதை அடுத்து விசுவானந்ததேவனும், பாலன் என்ற மற்றொருவரும் இனம் காணப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டனர். நாம் தொடர்ந்தும் இயங்கினோம்.

 

அதே நேரம் தேசியம் சார்ந்த முன்முனைப்புடன் நாம் செயற்படத் தொடங்கினோம். 1981 இல் எனக்கும்  மேலதிகாரிக்கும் இடையில் நடந்த போராட்டத்தை அடுத்து, நான் வேiயை விட்டுவிலகினேன். விலகிய நான் முழு நேரமாக அரசியலில் ஈடுபடத்தொடங்கினேன்.

 

1983 இல் இனக்கலவரத்தை அடுத்து இந்தியத் தலையீடு அதிகரிக்கும் முன்பாக அண்ணளவாக 150 மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய அமைப்பாக Nடுகுவு இருந்தது. 1983 இல் என்.எல்.எவ்.ரியின் மத்திய குழு உறுப்பினரானேன். இதன் பின் வௌ;வேறு காலத்தில் பல்வேறு அமைப்பு பொறுப்புகளை முன்னெடுத்தேன். இக்காலத்தில் ஆயுதக் கவர்ச்சி, இந்தியப் பயிற்சியை முன்னிறுத்திய அரசியல் போக்கே அரசியல் அலையாக இருந்த போது, அதை எதிர்த்து பிரச்சாரத்தை முன்வைத்தோம். மக்களே மக்களுக்காக போராட வேண்டிய அவசியத்தை முன்னிறுத்தி, 300க்கு மேற்பட்ட சிறு கருத்தரங்குகளை நடத்தினேன். எமது அமைப்பு முனைப்புக் கொண்டு இயங்கியது. மக்கள் போராடுவது என்பது நிராகரிக்கப்பட்டு, ஆயுதம் மற்றும் பயிற்சிகள் மூலம் வெல்ல முடியும் என்ற போக்கு எம் அரசியலை முறியடித்து முதன்மை பெற்று காணப்பட்டது. இது மக்களை மக்கள் சக்தியாக திரட்டுவதை தடுத்து வந்தது.

 

ஆனால் நாங்கள் தொடர்ந்து போராடினோம். பல வெகுஞன அமைப்புகளை உருவாக்க முனைந்தோம். அதற்கான கருக் குழுக்களை கட்டினோம். சில கிராமங்களை அணி திரட்டினோம்;. இ;க்காலத்தில் பயிற்சி, ஆயுதம், தாக்குதல் என்ற வடிவத்தில் போராட்டம் வீங்கி வந்த நிலையில், மக்களை அணிதிரட்டல் என்பது பல தடைகள் கொண்ட பைத்தியக்கார  செயலாக பெரும்பான்மையின் முன் காணப்பட்டது.

 

அதே நேரம் பயிற்சிபெற்று ஆயுதம் ஏந்திக் கொண்ட குழுக்கள், மக்களை தாக்கத் தொடங்கினர். நாம் இதை எதிர்த்து மக்களை இதற்கு எதிராக அணி திரட்ட முனைந்தோம். இதற்கு எதிரான பல போராட்டங்களை நடத்தினோம். இதனால் நாம் இயக்கங்களின் துப்பாக்கியை எதிர் கொண்டு, போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

 

இக்காலத்தில் என்னைக் கண்ட இடத்தில் சுட்டுக்கொல்ல ரெலோ உத்தரவிட்டது. தலைமறைவானேன். புளட் என்னைக் கொல்ல இந்தியாவில் இருந்து ஒருவரை அனுப்பியது. இவை எனக்கு தெரிந்தவை. இதற்கு வெளியில் மக்களை சார்ந்து நிற்பது என்பது, இயக்கங்களுக்கு வெறுப்புக்குரிய ஒன்றாக, போட்டுத்தள்ள வேண்டியவர் பட்டியலில் 1984 முதலே என்னை இணைத்தது.

 

மக்களை அணி திரட்டி அரசு மற்றும் இயக்கங்களுக்கு எதிராக தொடர்ச்சியான பல போராட்டங்களை நடத்தினோம். யாழ் பல்கலைக்கழகத்துக்கு நான் படிக்க செல்ல முன்பு, அங்கு போராட்டங்களில் பங்கு கொண்டோம். நான் அங்கு படிக்கச் சென்ற பின், மேலும் பல முனையில் அதை வழிநடத்தினேன்.

 

இயக்கங்களின் கட்டுப்பாட்டுக்கு வெளியில், இயக்கங்களை எதிர்த்தும் போராடக் கூடிய வண்ணம் பல்கலைக்கழக போராட்டங்களை வளர்த்தெடுத்தோம்;. இயங்கங்களுக்கு எதிராக பல்கலைக்கழகம் நடத்திய விஜிதரன் போராட்டத்தை (இதுதான் இயக்கங்களுக்கு எதிராக நடந்த பெரிய மக்கள் போராட்டம்) நெறிப்படுத்தி தலைமை தாங்கியவர்களின் நான் ஒருவன். அரசியல் ரீதியாக தலைமை தாங்குமளவுக்கு முன்னேறியவனாக இருந்தேன்.  

 

இந்தப் போராட்டம் ரெலோவை உயிருடன் வீதிவீதியாக புலி எரித்தழித்த பின், 1986 இறுதியில் நடத்தப்பட்டது. மார்ச் 28ம் திகதி 1987 ஆண்டு, புலிகள் என்னை உர்pமை கோராது இரகசியமாக கடத்திச் சென்றனர். சமூகத்தின் முன் நான் காணாமல் போனேன். புலிகள் பலத்த சித்திரவதைகளை செய்தனர். கொல்வதற்காக நிர்வாணமாக வைத்திருந்தனர். 80 நாட்கள் நீடித்த சித்திரவதைகளைத் தொடர்ந்து, அவர்களின் சிறையை உடைத்து தப்பினேன்;. அவர்கள் என்னை கொல்லத் தேடிய நிலையில் தலைமறைவானேன். 40 நாட்கள் கழிந்த நிலையில், பல்கலைக்கழகம் என் உயிருக்கு உத்தரவாதத்தை புலியிடம் கோரி போராடியது. இதனால் புலிகள் பகிரங்கமாக பல்கலைக்கழக மேடையில் உயிருக்கு உத்தரவாதத்தை தந்தனர். நான் அந்த மேடையில் திடீரென தோன்றி உரையாற்றினேன். அதைக் கேட்க, நீங்கள் இதை அழுத்தவும்.

 

புலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை

 

இந்த புலிக் கைதுக்கு முன்னம் 1985 இல் கிளிநொச்சியில் வைத்து இராணுவத்தினால் கைது செய்யப்பட்டேன். அமைப்பைச் சேர்ந்தவர்களும், எனது உறவினர்களும் கூட்டாக எடுத்த முயற்சியால், பணம் கொடுத்து விடுவிக்கப்பட்டேன்.

 

புலிகளின் கடத்தலின் பின், உயிருக்கு உத்தரவாதம் தந்த பின், மீண்டும் பகிரங்கமாக செயற்பட்டேன். இந்திய ஆக்கிரமிப்பு மற்றும் யுத்தம் மீளத் தொடங்கிய நிலையில், இந்திய இராணுவத்துக்கு எதிராக முதலாவது பகிரங்கமான மாணவர் போராட்டத்தை 1988 இல் தலைமை தாங்கி ஒரு ஊர்வலத்தையும் யாழ் நகரம் ஊடாக நடத்தினேன். தொடர்ச்சியாக ராக்கிங் உட்பட பலவற்றை எதிர்த்து, பல தளத்தில் போராடிய நிலையில், பல்கலைக்கழக மாணவனான விமலேஸ்வரனை 1988 நடுப்பகுதியில் புலிகள் சுட்டுக்கொன்றனர். அன்றும், அடுத்த நாளும் என்னைக் கொல்லத் தீவிரமாக முயன்றனர். நான் தலைமறைவான நிலையில் என்னை பல இடத்தில் தேடினர்.

 

அங்கிருந்து கொழும்புக்கு தப்பிச்சென்றேன். இதன் பின் கொழும்பில் புலிகள் அன்றைய பிரதமர் பிரேமதாசாவின் நல்லுறவுடன் நடத்திய ஆட்கடத்தல்களோடு, இது என்னைச் சுற்றி இருந்ததையும், அதில் சிலரையும் அடையாளம் கண்டுமிருந்தேன். அதேநேரம் புலிகள் தொடர்பாக அமைப்புக்குள் இருந்த முரண்பாடு, அதில் இருந்து என்னை வெளியேற வைத்தது. புலியின் ரெலோ அழிப்பைத் தொடர்ந்து, புலிக்கு எதிரான தற்காப்புத் தாக்குதலை நடத்த வேண்டும் என்று அமைப்பு முடிவு எடுத்தது. இதன் பின் இந்தியா சென்ற மத்திய குழு உறுப்பினர்கள் சிலர், அங்கிருந்தபடி இதை செய்வதை தடுத்தனர். இந்த முரண்பாடு தொடர்ச்சியாக அதை செய்ய விடாது தடுத்ததுடன் முற்றியும் வந்தது. பெரும்பான்மை தற்காப்புத் தாக்குதலை நடத்த உடன்பட்ட போதும், சிறுபான்மையின் மறுப்பால் அதை நடைமுறைப்படுத்த மறுத்தது. பெரும்பான்மை எடுத்த பல முடிவுகளை சிறுபான்மை நடைமுறைப்படுத்த மறுத்தது. பெரும்பான்மை முடிவை அமுல்படுத்த நான் கோரினேன். இந்த நிலையில் பெரும்பான்மை, அதை நடைமுறைப்படுத்தத் தயங்கியது. இதையடுத்து நான் அமைப்பில் இருந்து விலகினேன்.

 

இதைத்தொடர்ந்து முழு நேர உறுப்பினரான எனக்கு தொடர்ந்து வாழ, தற்காலிகமான பண உதவியை அமைப்பிடம் கோரினேன். அதை தர அமைப்பு தயாராக இருக்கவில்லை.

 

இந்த நிலையில் புலிகள் கொழும்பில் வைத்து கடத்திச் செல்வது அதிகரித்தது. என் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியது. வாழ பணம் இருக்கவில்லை. எனது மனைவி (காதலி) கொழும்பில் வேலை செய்து வந்தார். அவரின் துணையுடனும், வெளிநாட்டில் இருந்த நண்பர்களும் (குறிப்பாக சபேசன்) சிறியளவில் உதவினர். இந்த நிலையில் 1989 இல் நாட்டை விட்டு வெளியேறினேன். இதற்கு றெலோ (சுநுடுழு) அமைப்பின் தலைவரான சிவபாதம் உதவினார். என்னை அனுப்பிய ஏஜண்டுக்கு ஒரு சிறிய தொகையைக் கொடுத்து, மிகுதிப் பணத்திற்கு சிவபாதம் பொறுப்பு நின்றார். நான் இங்;கு வந்து அந்த பணத்தை உழைத்துக் கொடுத்தேன். 

 

புலம்பெயர்வின் பின் 1990 இல் சமர் என்ற அரசியல் சஞ்சிகையை வெளிக்கொண்டு வந்தேன். இலக்கியம் மற்றும் அருபமான கலவை அரசியலாக புலத்தில் வெளிவந்த சஞ்சிகைகளில் இருந்து மாறுபட்டு, ஒரு மார்க்சிய அடிப்படையில் கருத்துகளை இதில் முன்வைத்தோம். படிப்படியாக புலத்தில் வெளிவந்த இலக்கியம் மற்றும் அரசியல் சீரழியத் தொடங்கியது. இதற்கெதிரான போராட்டத்தையும், அரசு மற்றும் புலிக்கு எதிரான போராட்டத்தையும் ஒருங்கே தொடர்ந்து நடத்தினோம்.

 

புலம்பெயர் மாற்று இலக்கியம் மற்றும் அரசியல் புலியெதிர்ப்பாக, அரசு சார்பாக மாறி அது வரலாற்றில் காணாமல் போய்விட்டது. இதற்கு எதிரான எமது போராட்டம் தனித்துவமானதாக, நாம் மட்டுமே நடத்தும் நிலைக்கு மாறியது.

 

அரசு மற்றும் புலிக்கு எதிரான போராட்டம், இறுதியில் எமது விமர்சன எல்லைக்கு வெளியில் அற்றுப்போனது. வரலாற்றுப் பக்கம் இதற்கு வெளியில், இனி இதைக்காட்ட முடியாது. இக்காலத்தில் எனது 11 நூல்கள் வெளிவந்தது. இதில் ஒன்று இலங்கை அரச பாசிசத்தின் முன், முற்றாக முடங்கிப்போனது. மேலும் நான் எழுதிய நான்கு நூல்கள் இன்னமும் வெளிவரவில்லை. வெளிவந்த நூலைப் பார்வையிட இங்கு செல்லவும்.


தொடர்ச்சியாக தனித்துவமான ஒரு போராட்டத்தை நடத்தினோம். புலி மற்றும் புலியெதிர்ப்புக்கு வெளியில், நாம் மட்டும் தனித்துவமான மாற்றுக் கருத்தை முன்வைத்தோம். இந்தவகையில்  இறுதி யுத்தம் நடந்த 4 வருடத்தில் (2006 முதல் 2009 வரை) மொத்தம் 675 கட்டுரைகள் எழுதியிருந்தேன். இறுதி யுத்தம் நடந்த 2009 இல் 269 கட்டுரைகள் எழுதியிருந்தேன்.

 

இதைப் பார்வையிட

 

பலதரப்பு மீதான விமர்சனங்கள் முதல் பல விடையங்கள் உள்ளடங்கியது. மாற்று ஆலோசனைகள், கருத்துகள், மாற்று வழி முறைகள், அம்பலப்படுத்தல்கள், விமர்சனங்கள், சுயவிமர்சனங்கள் உள்ளடங்கியது இவை. இவை இன்று தொடருகின்றது.

 

மூன்று பிரதான தளத்தை நாம் எதிர்த்துப் போராடினோம்.


1. அரசு அதன் ஆதரவு செயல் தளங்கள் மீதும்


2. புலி மற்றும் புலி ஆதரவுத் தளங்கள் மீதும்


3. மாற்று இலக்கிய மற்றும் அரசியல் சீரழிவுவாதிகள் மீதும்.

 

இதனால் நாம் பல முனையில் பலரின் எதிரியானோம். தனிப்பட்ட வாழ்வில் எனக்கு எந்த தனிப்பட்ட எதிரியுமில்லை. அரசியலில் இதற்கு எதிர்மாறாக காணப்படுகின்றது. 

 

இதனால் நாம் பொதுத்தளத்தில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டோம். நாம் இவர்களின் எதிரிகளானோம். மொத்தத்தில் புறக்கணிக்கப்பட்டோம். யாராலும் எமது நிலை, மற்றும் கருத்துக்கள் பரிந்துரைக்கப்படவில்லை. இதை ஒரு மாற்றுக்கருத்தாக கூட காட்ட முன்வரவில்லை. இந்த யுத்தம் பற்றிய எம் கருத்துக்கள் எவையும், இதுவரை நூலாகக் கூட வெளிவரவில்லை. பல முனையில், பல தடைகள் தொடருகின்றது. எமது தோழர்கள் எழுதிய சில நூறு கட்டுரைகள் கூட புறக்கணிக்கப்பட்டது.

 

ஆனால் நாங்கள் சொன்னவை அப்படியே நடந்துள்ளது. உண்மை எம்முடன் மட்டும் இருந்துள்ளது, தொடர்ந்தும் இருக்கின்றது. போராட்டம் தொடருகின்றது. இந்த வகையில் தமிழ்மணம் எமக்கு உதவியதை, இந்த இடத்தில் நன்றியுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.

 

எம் தோழர்கள்  மேலும் இரண்டு இணையங்களை உருவாக்கியுள்ளனர்.

 

1.புரட்சிகர சிந்தனை மையம்.

 

2.தமிழ் தேசிய ஆவணச் சுவடி

 

பி.இரயாகரன்