10042023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

பூங்காவில் உறங்கிச் செல்லுகிற வீடற்ற குழந்தைகள்

தூக்கம் கண்களை நிறைத்த பொழுது 
குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படும்
பூங்காவுக்கு வருகின்றனர்.
கைகளை இழந்த சிறுவன் செயற்கை கைகளுக்காய்
மீதித் துண்டங்களால் ஏந்திக்கொண்டிருக்கிறான்.
கைகள் பற்றிய கனவுடன் அலைந்துகொண்டிருந்தான்.
சிதைக்கப்பட்ட முகத்தையும்
பிரித்தெடுக்கப்பட்ட கைகளின் மிகுதிப் பகுதியையும்
புகைப்படங்களாக்கி 
உதவி கோரிக்கொண்டிருக்கிறான்.
எல்லாமே 
எட்டாத தூரத்திலிருந்து தூங்கிக்கொண்டிருக்கிறது.
அந்தச் சிறுவன்
கைளோடு தன் புன்னகையையும் இழந்துபோயிருந்தான்.பள்ளிக்கூடம் சென்ற ஒன்பது வயதுச் சிறுமி
மிருகங்களாகிய 
படைகளால் வன்புணரப்படுகையில்
இந்தக் குழந்தைகள் வழியிலிருக்கும் பூங்காவில்
உறங்கிக்கொண்டிருக்கின்றனர்.
இரத்தம் கொட்டிப் படிந்துகொண்டிருக்கிறது
குழந்தைகளின் புத்தகம்.
இந்தக் குழந்தைகள் 
ஐஸ்பழத்தை பார்த்து ஆசைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இரத்தம் சொட்டச் சொட்ட
பழங்களை தின்றுகொண்டிருக்கிறது காலம்.
அவர்கள் தமக்குள்ளாகவே 
எல்லா மீறல்களையும் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர்.

குழந்தைககளிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு
மிகப்பெரிய ஏற்பாட்டில்
பழுதாக்கப்பட்ட அவர்களின் உலகத்தை
மிகப்பெரிய செலவில்
பிய்த்தெறியப்பட்ட குழந்தைகளின் கனவுகளை
வைத்துப் பிய்த்துக்கொண்டிருக்கின்றன
பூங்காவில் தொடர்ந்து கதையளந்துகொண்டிருக்கும் குரங்குகள்.
வீடற்ற குழந்தைகள் 
மாலையானதும் எங்கோ திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

வீடற்ற குழந்தைகள்
எனக்கருகில் அன்றைய பகல் முழுவதும்
விளையாடிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் வைத்திருந்த 
புது உலகத்திற்கான புன்னகையாலும் நம்பிக்கையாலும்
ஈரத்தாலும் விண்ணப்பங்களை நிரப்பிக்கொண்டிருந்தனர்.

குழந்தைகள் ஒரு நாள் முழுவதும்
அமர்ந்திருந்து எழுதி அனுப்பிய
விண்ணப்பங்களை
பழுதடைந்த புகையிரத வீதியில்
அவசர அவசரமாக
கழிவுகளோடு கழிவுகளாக எறியப்பட்டிருக்கிறது.
குழந்தைகள் கொண்டு வந்த புத்தகங்களிலிருந்து
இரத்தம் கசிந்துகொண்டிருப்பதை
கண்டு துடிக்கத் தொடங்குகின்றர் தாய்மார்கள்.
குழந்தைகள் உறங்கிச் சென்ற
பூங்காவின் மரங்கள் வாடி விழுந்து கொண்டிருக்கின்றன.
_______________________
மாசி 2010

 

o தீபச்செல்வன் ---------------------------------------------------------------

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்