09252023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

நிழலற்ற நகரத்தில் கால் பதித்த நாள்

பூக்கள் உதிர்ந்த எனது நகரத்தில் கால்களை
இன்றுதான் இறக்கி வைத்திருக்கிறேன்.
ஆடித் திரிந்த எனது நகரத்தில்
அழிவுகளின் துயரடைந்த காலத்தின் பின்னர் 
சற்று தூரம் வரை நடந்து திரிகிறேன்.

 


நான் விட்டுச்சென்றவைகளை தேடுகிறேன்.
சில சனங்கள் திரும்பியிருக்கிறார்கள்.
சாம்பலை அள்ளி கைகளில்
நிரப்பிக்கொண்டு அவர்கள் திரும்பியிருக்கிறார்கள்.

அந்த இரவு எனது நகரத்தில் இரண்டாவது முறையாக
மீண்டும் கால் பதித்திருந்தேன்.
முகங்களைத் தேடிக்கொண்டிருந்தேன்.
முத்தமிட முடியாதபடி
குருதியும் சதையும் கலந்துகிடக்கிற மண்ணை 
கொடூரமான ஓவியங்கள் வரையப்பட்ட 
என் பூர்வீக நகரத்தின் வசீகரம் இழந்த சுவர்களை 
தனியொருவனாய் வாசிக்கிறேன்.

சதிகளால் பலியிடப்பட்ட ஆன்மாக்கள்
அலைந்துகொண்டிருக்கின்றன என்றும்
நகரத்திற்கு மேல் அந்தரத்தில் 
அவை துடித்துக்கொண்டிருக்கின்றன என்றும்
ஒரு முதாட்டி சொல்லிக்கொண்டு 
சுவர்க்கரையில் கிடக்கிறாள்.
நகரம் இருளால் நிரம்பி வெறுமையுள் அமுங்கியிருந்தது.
பாதி மரங்களும் சிறிய துண்டு கட்டிடங்களும்
மீண்டும் துளிர்க்கும் என்று
அந்த மூதாட்டி இன்னும் சத்தமாக சொல்லிக்கொண்டிக்கிறாள்.சாபங்களில் கிழிந்து போன நகரத்தில்
கால் வைக்கிற இடங்களெல்லாம் புதைகிறது.
முட்கம்பிகளிடமிருந்து
மெல்ல மெல்ல எனது நகரத்தை பிடுங்கி எடுப்பேன்.
சிதைவுகளின் கையிலிருந்து
மெல்ல மெல்ல எனது நகரத்தை செழிக்க வைப்பேன்.
என் நகரத்தில் மீண்டும் பூக்களை நாட்டுவேன்.
பூக்களின் நகரத்தில் கனவுகள் பூக்கும்.
எல்லோரும் வரும் நாட்களில் திரும்புவார்கள்
என்ற நம்பிக்கையை நகரத்திலிருந்து வெளியேறிய
நள்ளிரவு சொல்லிக்கொண்டு வந்தேன்.
தனியொருவனாய் வந்திருக்கிற 
என் காலடியை
எண்ணிக்கொண்டிருக்கிறது நிழலற்றுப்போயிருக்கிற நகரம்.
________________________
02.01.2010

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்