12012020செ
Last updateஞா, 29 நவ 2020 7pm

பிரபாகரனின் தந்தையின் உடல் மூலம், மகிந்தா முன்னெடுக்கும் பிண அரசியல்

செத்த பிணத்தில் இருந்து உண்ணி விலகிச் செல்வது போல், தமிழ் தேசிய அரசியல் இன்று புதிய உடலைத் தேடுகின்றது. பிரபாகரனின் மரணம் மூலம் புலி மடிந்தபோது, அதை அண்டிப் பிழைத்து வாழ்ந்த தமிழ் தேசிய உண்ணிக் கூட்டம் தன் வக்கிரமான சொந்த பிழைப்புவாதக் குணத்தைக் காட்டுகின்றது. அது தொடர்ந்து தமிழன் இரத்தத்தைக் குடிக்க, புதிய உடல்களைத் தேடியோடுகின்றது.

இப்படி தமிழ் தேசியம் வெட்கப்படத்தக்க வகையில், பேரினவாதத்தின் நுகத்தடியை முத்தமிடுவதுதான் தமிழனின் ஓரே தீர்வு என்கின்றனர். ஒரு இனத்தை கொன்று குவித்தவர்கள், இனவழிப்பை ஒரு யுத்தமாக நடத்தியவர்களை, நம்பக் கோருகின்றனர்.  இதன் மூலம் சர்வதேச ரீதியாக யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்று அடையாளம் காணப்படுபவர்களைக், காப்பபாற்றும் முயற்சியில், தமிழ்தேசிய உண்ணிக் கூட்டம் இன்று தன் வர்க்க வக்கிரங்களுடன் களத்தில் குதித்துள்ளது. யார் எங்கு எப்படி இரத்தம் குடிக்கலாம் என்று, கணக்குப் பிசகாத அரசியல் மூலம், தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழிகாட்டுவதாக பீற்றிக்கொள்கின்றது.

 

நடைபெறும் பேரினவாத தேர்தல் மூலம் சர்வதேச பேரினவாத குற்றவாளிகளை பாதுகாக்கும், வக்கிரமான முயற்சியில் பலர் ஈடுபடுகின்றனர். கூட்டமைப்பின் நான்கு குழுக்கள், நான்கு விதமான நிலைப்பாட்டுடன் இதை வழிகாட்ட முனைகின்றது. தமிழ் மக்களை யுத்த குற்றத்துக்கு சார்பாக வாக்குப்போடும்படி அல்லது பகிஸ்கரிக்கும்படி வழிகாட்டுகின்றனர். இப்படி அவர்களின் நான்கு முடிவுகளும், தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத யுத்த குற்றத்தைப் பாதுகாத்து நிற்கின்றது.

 

1.சரத்பொன்சேகாவை ஆதரிக்கக் கோரும் கூட்டமைப்பின் முடிவுகள், போர்க் குற்றத்தில் ஈடுபட்ட சரத் பொன்சேகாவை பாதுகாப்பதுடன், தொடர்ந்து அவரின் இனவாத அரசியலையும் தொடரக் கோருகின்றது. ஒரு பேரினவாத தலைமையின் மாற்றத்தை முன்வைத்து, மக்களை மொட்டையடிக்க முனைகின்றனர்.

 

2.மகிந்தாவை ஆதரிக்கும் கூட்டமைப்பின் எம்.பி.கள், போர்க் குற்றத்தை ஆதரிப்பதுடன், தமிழ் மக்களுக்கு எந்த தீர்வும் அவசியமில்லை என்று கூறி அவரை ஆதரிக்கின்றனர். எம்மை அடக்கி ஓடுக்கியவர்களிடம் தான், எதையாவது நாம் இரந்து பெறமுடியும் என்கின்றனர்.

 

3.தமிழ் மக்களின் வாக்கை பெறப்போவதாக கூறும் சிவாஜிலிங்கம் என்ற கூட்டமைப்பின் அரசியல் கோமாளி, மகிந்தாவின் வழிகாட்டலின் கீழ் மறைமுகமாக மகிந்தாவை ஆதரித்து களத்தில் இறங்கியுள்ளார். அரசுக்கு எதிராக சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக விழும் வாக்கை பிரிக்கும் முயற்சியில் தான், மகிந்த குடும்ப சர்வாதிகாரம் தேர்தலில் சிவாஜிலிங்கத்தை நிறுத்தியுள்ளது. இப்படி யுத்த குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், தமிழ்மக்களின் உரிமைக்கு எதிராகவும் ஒரு சதி அரசியலை, சிவாஜிலிங்கம் மூலம் மகிந்தா அரசு தமிழ் மக்கள் மேல்  நடத்துகின்றது. இங்கு பிரபாகரனின் தந்தையின் உடல் மூலம், இந்தச் சதி அரசியலை மகிந்தா சிவாஜிலிங்கம் மூலம் நுட்பமாக்கி நகர்த்துகின்றார்.

 

4. கூட்டமைப்பைச் சேர்ந்த காங்கிரஸ்காரர்கள் தேர்தலை பகிஸ்கரிக்கக் கோருகின்றனர். இரண்டில் ஒன்றை தெரிவு செய்ய தம்மால் முடியாது இருப்பதால், தேர்தல் பகிஸ்கரிப்பைக் முன்வைக்கின்றனர். அரசியல் ரீதியாக தெளிவுபடுத்தாது போர்க் குற்றவாளிகளை பாதுகாத்து, இனவாத அரசின் பக்கத்தில் நின்று இந்தத் தேர்தலை பகிஸ்கரிக்கின்றனர்.

 

இப்படி நான்கு போக்குகளும் தமக்குள் ஒன்றாக இருந்தபடி, தமிழ் மக்களை ஏமாற்றி பேரினவாதத்தின் பின் அணி திரட்டுகின்றனர். உண்ணிக் கூட்டம் இப்படி நாலு பேரினவாத குறுந்தேசிய அரசியலை நடத்துகின்றது. இந்த வகையில் தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தமிழ் தேசியம், கடந்த 60 வருட அரசியல் அடிப்படையைக் கொண்டது.

 

தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் என்ன செய்யச் சொல்லி இருக்க வேண்டும்?

    
இங்கு மக்கள் சார்ந்த இரண்டு அரசியல் வழிகள் உண்டு.

 

1. பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தின் அடிப்படையில் தேர்தலை நிராகரிக்கும், அரசியலை முனவைத்திருக்க வேண்டும்.

 

2. ஜனநாயகக் கோரிக்கையின் அடிப்படையில், தேர்தலைப் பகிஸ்கரிக்க கோரியிருக்க வேண்டும்.

 

இவ்விரண்டும் வேறுபட்ட ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் சார்ந்ததுமான அரசியல் உள்ளடக்கம் என்ன?

 

1. ஆளும் வர்க்கத்தை யார் தலைமை தாங்குவது என்பதை தேர்ந்து எடுப்பதுதான் இந்தத் தேர்தல் என்பதை புரிந்துகொண்டும், இந்த தேர்தலில் வாக்கு போடுவதன் மூலம் சமூக பொருளாதார ஒடுக்குமுறை மாறிவிடாது என்பதைப் புரிந்து கொண்டு, பகிஸ்கரிப்பை அரசியல் ரீதியாக முன்னிறுத்த கோரியிருக்கவேண்டும். மக்கள் தமக்காக தாம் தம் சொந்த தலைமையில் அணிதிரண்டு போராடுவதன் மூலம்தான், சமூக பொருளாதார ஒடுக்குமுறையையும், தம்மை ஒடுக்கி வாழும் ஆளும் வர்க்கத்தையும் தூக்கி எறிய முடியும் என்ற அரசியல் தெளிவுடன், இந்தத் தேர்தலை பகிஸ்கரிக்க கோரியிருக்க வேண்டும். இதுவல்லாத அனைத்தும் மக்களை ஏமாற்றி ஓடுக்கும், ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு உட்பட்ட அரசியல் வழிமுறைகளாக அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்.

 

2.ஜனநாயகக் கோரிக்கையின் அடிப்படையில், தமிழ் மக்களின் அரசியல் நலனை முன்னிறுத்தி தேர்தலை பகிஸ்கரிப்பைக் கோரியிருக்க வேண்டும்;. அதாவது

 

2.1.தமிழ் மக்களைக் கொன்று குவித்ததுக்கு எதிராகவும், இனவழிப்பு செய்ததற்கு எதிராகவும், போர்க் குற்ற விசாரணையைக் கோரி தேர்தலை பகிஸ்கரிக்க கோரியிருக்க வேண்டும்.

 

2.2.தமிழ் மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமைகளை வழங்க மறுக்கும், பேரினவாத கட்சிகள் தமக்குள் தாம் நடத்தும் இந்தத் தேர்தல் கூத்தை அம்பலப்படுத்தி பகிஸ்கரிக்க கோரியிருக்க வேண்டும்.

 

இப்படி தேர்தல் பகிஸ்கரிப்பை கோராத, பேரினவாத அரசியலுக்குள் தமிழ்மக்களை இட்டுச்செல்லுகின்றனர். சொந்த இன மக்களையே கொன்று குவித்த பிரபாகரனின் பாணியில், கூட்டமைப்பு தமிழ்மக்களை பேரினவாதத்தின் கீழ் மண்டியிட்டு அடிமையாக வாழக்கோருகின்றது. 

 

ஆனால் இதை நிராகரித்த பேரினவாத அரசியலே, தமிழ் குறுந்தேசியத்திடம் இருந்து வெளிவந்துள்ளது. தமிழ் மக்களை பேரினவாதம் கொன்றதையிட்டோ, இனவழிப்பு செய்ததையிட்டோ, இனங்களின் உரிமைகளை மறுப்பதையிட்டோ, இந்தக் குறுந்தேசிய அரசியல் அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக பேரினவாத குறுந்தேசிய தமிழ் அரசியலை,  கூட்டமைப்பின் தமிழ் தேசியமாக காட்டி, தொடர்ந்து மக்களை மந்தைகளாக வாக்குப் போடக்கோருகின்றனர்.

 

மண்ணில் பேரினவாதத்தின் பின் உண்ணிக் கூட்டம் ஓட, புலத்தில் "வட்டுக்கோட்டை தீர்மானம்", "நாடுகடந்த தமிழீழம்" என்று தங்கள் திருடிய சொத்தைப் பாதுகாக்க வாக்கு போடச் சொல்லுகின்றனர். என்ன வக்கிரம். திருடியவன் புலத்தில் வாக்கு கேட்டு தமிழ் தேசியம் என்று கூத்தாட, மண்ணில் பேரினவாதத்துக்கு வாக்கு போட்டுக் கூத்தாடக் கோருகின்றனர்.

 

இப்படி தமிழ்மக்களை மொட்டையடிக்கும் கூட்டம் உண்ணிக் கூட்டம், அங்குமிங்கும் அரசியல் நாடகமாடி நிற்கின்றது.

 

மகிந்த நடத்துகின்ற பிண அரசியல்

 

இந்தத் தேர்தலில் வெல்ல பிரபாகரனின் தந்தையின் உடல் உதவும் என்றால், அவரைக் கொல்லக் கூட தயங்காத ஒரு பாசிட் தான் இலங்கையின் ஜனாதிபதி. இன்று போர்க் குற்றத்துக்குரியவராக பலரும் அடையாளம் காணப்படுபவர். இலங்கையில் தொடர்ச்சியாக நடந்த பல கொலைகள், மர்ம மரணங்கள் போல், பிரபாகரனின் தந்தையின் மரணம் தேர்தல் சார்ந்து அமைந்து விடுகின்றது.

 

இதன்பின் தொடங்கியுள்ள சதி அரசியல், அதுவும் சிவாஜிலிங்கம் மூலம் நடத்தும் காய் நகர்த்தல், இந்த மரணத்தின் பின்னணியை மேலும் சந்தேகிக்க வைக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகாவை தோற்கடிக்கவும், மகிந்தாவை வெல்லவைக்கவும் சிவாஜிலிங்கம்  முனைகின்றார் என்றால், இதன் பின் மகிந்த அரசு இயங்குகின்றது. பிண அரசியலைத் தூக்கிக் கொண்டு, சிவாஜிலிங்கம் கோமாளி வே~ம் போடுகின்றார். வாக்கை சரத்பொன்சேகாவுக்குப் போடாதீர்கள், இதுதான் பிரபாகரனின் தந்தையின் பிணம் மூலம்  சிவாஜிலிங்கமும் மகிந்தாவும் தமிழ் மக்களுக்கு சொல்லும் அரசியல் செய்தி.  

 

இந்த வகையில் பிரபாகரனின் தந்தையின் உடலுடன், மீண்டும் புலி அரசியலை சிவாஜிலிங்கம் மகிந்தாவின் துணையுடன் தொடங்கியுள்ளார். பிரபாகரனின் தந்தை தன் மகன் பிரபாகரனின் அரசியல் நடத்தையுடன் என்றும் உடன்பட்டது கிடையாது. அவர் என்றும்  நேர்மையாக வாழமுற்பட்டவர். தன்மகனின் பாசிச அரசியலுடன் இணைந்து நின்றது கிடையாது. தன் குடும்ப உறவுக்கு வெளியில், பிரபாகரனின் அரசியலுடன் உடன்பட்டு வாழ்ந்ததில்லை.

 

அந்த மனிதனின் உடலைத்தான், அரசும் சிவாஜிலிங்கமும் தாங்கள் பிழைத்துக் கொள்ள அரசியலாக்குகின்றனர். சிவாஜிலிங்கம் என்ற அரசியல் கோமாளி மூலம், மகிந்த தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கின்றார்.

 

இப்படி இலங்கை அரசியல் தன் பாசிச மயமாக்கலுக்குள் மேலும் சதி அரசியலாகின்றது. பேரினவாதத்தின் எல்லைக்குள், தமிழ்தேசியம் நக்கிப்பிழைக்க, தமிழ் மக்களை வழிகாட்டுகின்றது.

 

ஒரு இனவழிப்பு முடிய, அதை இனச் சீரழிவாக மாற்றி அழிக்கும் பேரினவாத அரசியல், மிக நுட்பமாக தமிழ் குறுந்தேசியம் மூலம் இன்று புகுத்தப்படுகின்றது. பேரினமயமாகியுள்ள தமிழ் குறுந்தேசிய அரசியலும், அதன் நடத்தைகளும், தமிழர்கள் எல்லாம் சிங்களவர்களாகவும் புத்தமதத்தினராகவும் மாறிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று சொல்லும் எல்லைக்குள் தான் தங்கள் பிழைப்புவாத அரசியலை நகர்த்துகின்றனர். இவர்கள் அரசியல் இதைத்தாண்டி எதையும் வழிகாட்டவில்லை. இதையே இவர்கள் செய்கின்றனர்.    கூட்டமைப்பு முதல் அரச கூலிக் குழுக்களாக இருந்து உருவான கட்சிகள் அனைத்தும் இதைத்தான் சொல்லுகின்றது.

 

இப்படி தமிழ் மக்கள் சார்ந்த உரிமைகளை கோருவது, முற்றுமுழுதாக பேரினவாதமாகி நிற்கின்றது.    

          

பி.இரயாகரன்
09.01.2010