மனிதனை மனிதன் ஒடுக்கி அவனை அடிமை கொண்டு இயங்குகின்றது உலகம். மனிதர்களை அடக்கியும், அவர்கள் அடங்கியும் வாழும் இந்த உலகில், மனித குலம் தான் சந்திக்கும் நெருக்கடிக்களுக்கு தனித்தனியாக தீர்வைத் தரும் என்ற சுய நம்பிக்கையுடன் தான் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். அன்றாவது நாம் மகிழ்சியாகவும், திருப்தியாகவும் இருப்பதன் மூலம், அந்த வருடம் முழுக்க வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் தான், மனிதன் புத்தாண்டை கொண்டாடுகின்றான்.
இந்த ஒரு நாள் மகிழ்ச்சியை, வாழ்நாள் மகிழ்ச்சியாக்க மனிதன் முனைகின்றான். உற்றார், உறவினர் தொடங்கி சமூகத்துடன் தன் உணர்வுகளை பகிர்ந்து, ஒன்றாக கூடி உண்டு மகிழ்ச்சியை பகிர்கின்றான்.
இந்த ஒருநாள் மகிழ்சியையும், அவனின் உணர்வையும் சந்தையாக்கி அவனின் உணர்வையே கொள்ளையடிக்கின்றது மூலதனம். இன்றைய உலக ஜனநாயகம், இதைக்கொண்டு அவனை தொடர்ந்து அடிமைப்படுத்துகின்றது சந்தை இயக்கும் பொருட்கள் மனித உணர்வை நலமடிக்க, மனித உணர்வுகள் பொருட்கள் சார்ந்ததாக வடிகின்றது.
இப்படி எதிர்கால மகிழ்ச்சி என்பது, சந்தைக்குள் வடிய வைக்கப்படுகின்றது உலகமயமாக்கலால். புத்தாண்டு பிறந்தவுடன் மீண்டும் தொடங்குகின்ற அடிமைப்பட்ட மக்களின் நரகல் வாழ்க்கை. மகிழ்ச்சி என்பது குறைந்தது ஒரு நாள் தான். அதுவும் கனவாக மாறிவிடுகின்றது உலகில் பெரும்பான்மை மக்களுக்கு.
இப்படி மகிழ்ச்சியாக காட்டும் புத்தாண்டின் முன்னும் பின்னும், உழைப்பில் மேல் சுரண்டல் என்பது ஒரு கணம் கூட நின்று விடுவதில்லை. இனவொடுக்குமுறை, நிறவொடுக்கு முறை, சாதி ஒடுக்குமுறை, பால் ஒடுக்கு முறை, பிரதேச ஒடுக்கு முறை, மத ஒடுக்கு முறை….. என அனைத்தும் இல்லாமல் போய்விடுவதில்லை. அனைத்தும், மனித வாழ்வின் மேலான எதார்த்ததில் மீளமீள பிரதிபலிக்கின்றது. மகிழ்ச்சியாக நம்பி கொண்டாடும் புத்தாண்டின் பின், இவை என்னவோ மறைந்து விடுவதில்லை, குறைந்தபட்சம் அதை மறக்க முனைகின்றனர் அவ்வளவுதான்.
எதார்த்தம் சார்ந்த வாழ்க்கை என்னவோ இதுதான். அடிமைத்தனத்தை மனிதன் மேல் திணிப்பவனின் புத்தாண்டு இது. இதுவே மீண்டும் மீண்டும் புத்தாண்டாகின்றது. இதைத்தான் மூலதனம், தனது புத்தாண்டுப் பரிசாகத் தருகின்றது.
உன் மேலான இந்த அடிமைத்தனத்தை நீ தான் உருவாக்கினாயா? நீ கனவு காணும் ஒருநாள் மகிழ்ச்சியை, ஏன் உன்னால் வாழ்நாள் மகிழ்சியாக்க முடியவில்லை? நீ எப்போதாவது இதை சிந்தித்தாயா? நீ தனித்து அதை சிந்திக்கும் வரை, உன்னால் அதை மாற்ற முடியாது. உன்னைக் கடந்து மற்றவனுடன் ஒன்றிணைந்து சிந்தி. ஏன் நாம் எல்லாம் இப்படியானோம் என்று சிந்தி. அங்கு உன் மகிழ்ச்சியைத் தேடு. புத்தாண்டின் மகிழ்ச்சி, வாழ்வின் பொது மகிழ்ச்சியாக மாற்றும் சக்தி, உன்னிடம் இருப்பதை நீ என் சொந்த எதார்த்தத்தில் காண முடியும். அதற்காகப் போராடுவது தானே மகிழ்ச்சி.
பி.இரயாகரன்
01.01.2010