09252023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

மானுடராய் வாழ்தலிற்காய் இணைக

நந்திக்கரைவரை நம்மினத்தை
கூடவே குழிபறித்த கூட்டெல்லாம்
வெட்டிவிடு முள்வேலியை என்கிறது
மெல்லத்தடவி மகிந்தவை
வெல்லலாம் என ஏய்க்கிறது
செல்லக்கண்டிப்பாய்---ஜ.நா
பலமுறை சென்று திரும்புகிறது
வல்லவனாய் எழாதிருத்தி
மனஉளைச்சல் கொடுக்கிறது
நல்கூட்டு உலக வல்லவர்கள்
சொல்லெல்லாம் மாயை
கல்லில் நார் உரிப்போமென்கிறது 

பயிற்றுவித்துப் படையாக்கி
கயிற்றில் நடக்கவிடல்
செல்லும் திசைமாற்றி
சீடராய் வளர்த்தெடுத்தல்
ஊதிப்பெருப்பித்து
கூலிப்படையாய் குறுக்கிச் சிதைத்தல்
அஞ்சிப்படு
அடக்கியோன் காலில் விழு
கெஞ்சியவன் நெஞ்சைமாற்று
கஞ்சிக்கும் காலில்விழு என்கிறது 

அடக்குமுறை உடைப்போன் --உளம்
அடக்கிச்சிதைத்து
வெடித்துக் கிளம்பும் வீச்சடக்கி
நடைப்பிணமாய் மாய்த்தல்
அகதியாய் அடைத்துப்போடல்
தமிழினம் மட்டுமா
தரணியெங்கும் ஒத்தவடிவம்
பரவிக்கிடக்கும் அகதிகளைப் பார்
சாம்பல் மேட்டுச் சரித்திரம்
விட்டுச்சென்றது புதியநகர்வுக்கான வழியை
உழைப்பவன் அணிக்காய்
வழிநடாத்த அமைப்பற்று
விடிதலிற்கான களம் திறந்து கிடக்கிறது
 
பாழ்நிலத்துப் பகையெலாம்
வேரிழந்து சரியட்டும்
புலியழிந்த கதைபேசி போக்கிடும் நேரமல்ல
களமாடிநின்ற வீரகதைபேசும் காலமல்ல
மக்கள் பலமான அணியொன்றை
பாட்டாளி சிந்தனையில்
களமாட வழிசமைப்போம்.............
தேசம் கடந்தெங்கும் தோழமைக்கரம் பற்றி
தோள்கொடுத்து வழிநடப்போம்...........

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்