Language Selection

இன்று மென்பொருள் விடுதலை நாள் .

GNU/Linux குறிப்பேடு இன்றுமுதல் கட்டற்ற மென்பொருளான WordPress இல் இயங்க ஆரம்பிக்கிறது.

ஓயாத போராட்டங்களுடனும் இடையறாத முரண்பாடுகளின் மோதல்களுடனும் உலகம் தன் வரலாற்று வழியில் நடந்துகொண்டிருக்கிறது.

 

அடக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் சுரண்டல்களுக்கும் எதிரான போராட்டங்கள் காலகாலமாக மனித வரலாற்றை நகர்த்தி வந்திருக்கின்றன.

 

கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத கட்டுக்களுக்குள் மனிதகுலத்தின் பெரும்பகுதி ஒடுங்கிக்கிடக்கிறது.

 

கட்டுக்களை அறுத்தெறியும் வேட்கையும் வெவ்வேறு வெப்பநிலைகளில் மனிதகுலத்தின் மனங்களுக்குள் கனன்றுகொண்டிருக்கிறது.

 

தமது நலன்களுக்காக மற்றவர்களை அடக்கியாளவும் அழித்துவிடவும் நினைப்பவர்கள் போர்களைத் தொடக்குகிறார்கள். மானுடத்தின் குரலை நசுக்குகிறார்கள்.

Software Freedon day Logo

Software Freedon day Logo

 


அந்த அடக்குமுறைக்கு எதிராக பொறுமை கடந்து கொதித்தெழுபவர்கள் போராட்டங்களைச் செய்கிறார்கள்.

 

ஆயுதங்களால், கருத்துக்களால், தொழிநுட்பங்களால், கண்காணிப்பால் அதிகாரம் படைத்தோர் மக்களை அடக்கியாள்கிறார்கள்.

 

கண்ணுக்கு முன்னால் அநியாயங்களையும் சித்திரவதைகளையும் நாம் பார்க்கிறோம்.

 

இத்தனை நெருக்கடிகளோடு சுற்றும் இந்த உலகிலும், சுழலும் எங்கள் வாழ்விலும் மென்பொருள் விடுதலை அத்துணை முக்கியமானதா?

 

இல்லை!

 

மனிதருக்கு நீதி கிடைப்பதில்லை. உழைப்பவருக்கு உணவு கிடைப்பதில்லை. எத்தனையோ பேருக்கு உயிர்வாழும் உரிமை இல்லை. இவற்றுக்கு முன்னால் மென்பொருள் விடுதலை மிக நுண்ணிய பிரச்சினையே.

 

ஆனால்,

சுரண்டலையும் அடக்குமுறையையும் ஏகாதிபத்தியதையும் அதிகாரத்தையும் கண்காணிப்பையும் எம்மால் முடிந்த, எம்முன்னுள்ள எல்லா வழிகளாலும் எதிர்கொள்ள, எதிர்த்துநிற்க வேண்டிய கடமை எமக்குள்ளது.

 

மென்பொருள் விடுதலை சிறியதாயினும் அதிலொரு பகுதி.

 

தகவற் தொழிநுட்பமும், மென்பொருட்களும், நுட்பியல் வளர்ச்சிகளும் இன்று மற்றைய ஒடுக்குமுறைகளுக்கெல்லாம் துணைபோகும் சாதனங்களாக மாறியிருக்கின்றன.

 

மிக நுணுக்கமாக எம்மை அடக்கியாள, அதிகாரம் செலுத்த அநீதியாளர்கள் இவற்றைக் கையிலெடுக்கின்றனர்.

 

சின்னஞ்சிறியளவிலேனும் அவர்களின் முயற்சிகளுக்கு எதிர்ப்பினைக் காட்டுவது இடையறாது எதிர்ப்பது இன்றியமையாததாகும்.

 

கூடவே,

இன்றைய உலக ஒழுங்கும் பொருளாதார அமைப்பும் சிதைத்துவிட நிற்கும் உன்னதமான மனித இயல்புகளான பகிர்தலையும், கூடி உழைத்தலையும், அன்பையும், தோழமையையும், பொதுநல எண்ணங்களையும், சமூக அக்கறையையும் நாம் மீட்டெடுக்க வேண்டியுள்ளது.

 

மனித இயல்பான சுயநலம் மட்டுமே ஊதிப்பெருப்பிக்கப்பட்டு மற்றெல்லா உன்னதங்களும் வலிந்து மறுக்கப்படும் சூழலில், இந்த மாற்றுக்கலாசார வடிவங்களை நாம் வேகத்தோடு தூக்கிப்பிடிக்க வேண்டியவர்களாகிறோம்.

 

கட்டற்ற மென்பொருள் இயக்கம், தொழிநுட்ப மேலாதிக்கங்களை, அதிகாரங்களை எதிர்த்து நிற்பதோடு மட்டுமல்லாது, மனித குலத்தின் நல்லியல்புகளைப் பேணிக்காக்க முன்னிற்கிறது.

 

இந்த நாள் அந்த உன்னதங்களை பேணுவதற்கான ஒரு குறியீடு.

அடக்குமுறைகளுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிராய் இயன்றவரை எழுவோம் என்று,

 

மனிதரை நேசித்து, அறிவை, உழைப்பை, அக்கறையை மற்ற மனிதர்களுக்காகவும், சமூகத்துக்காகவும், இயற்கைச்சொத்துக்களுக்காகவும் பகிர்ந்து மகிழ்வோம் என்று,

 

தனிமனிதராய் மட்டுமல்லாமல் சமூகமாயும் வாழ்வதன் இனிய உணர்வினை, நிறைவினை  அடைவோம் என்று,

 

மென்பொருட் பயனாளராயும் படைப்பாளராயும் இருக்கும் நாம் எமது துறை வழி இவற்றைச் செய்வொம் என்று,

 

இன்றைய நாளில் உறுதிகொள்வோம்.

மக்களை அணைந்துகொள். உன்னைச் சங்கமமாக்கு. “மானுட சமுத்திரம் நான்”  என்று கூவு!

ஆடுவோமே – பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே – பள்ளுப் பாடுவோமே

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே – இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே.

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே – பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே – இனி
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே – கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே


http://mmauran.net/blog/?p=50