08102022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

மக்களுக்கு சுதந்திரமான பேச்சுரிமையை மறுக்கும் வரை, போர்க் குற்றத்தை நிறுவமுடியாது

எம் மண்ணில் நடந்ததை நடந்ததாக சொல்லாத வரை, அனைத்துமே பொய்யாகிவிடும். பொய்களுடன் கலந்த உண்மையை ஒரு நாளும் நிறுவமுடியாது. அனைத்துவிதமான  நம்பகத் தன்மையையும் அது இழந்து விடும். பொய்ச் சாட்சியங்களாக அவை மாறிவிடும்.

 

 

இன்று வன்னியில் என்ன நடந்தது என்பதை மக்கள் சுதந்திரமாக சொல்ல முடியாத வண்ணம் மக்களை அடைத்து வைத்துள்ளது பேரினவாத குற்றக் கும்பல். பேரினவாத பாசிச அரசு தாங்கள் செய்த யுத்தக் குற்றங்களை இல்லாததாக்க, மக்களை வதைத்து உளவியல் ரீதியாக சிதைக்க முனைகின்றது.

 

இதில் இருந்து தப்பி வெளிநாடு வந்தவர்களை சுதந்திரமாக பேசமுடியாத வண்ணம், புலத்து புலிகள் உண்மையின் ஒரு பகுதியை மூடிமறைத்து வைக்க நிர்ப்பந்திக்கின்றனர். இதன் மூலம் சாட்சிகளும், தகவல்களும் நம்பிக்கை இழந்து போகின்றது. இதுவே சர்வதேச ஊடகத்தில் வெளிவரும் போது, மறைக்கப்பட்ட உண்மைகள் மூலம் பேரினவாத குற்றமும் பொய்யாகி விடுகின்றது.

 

உதாரணமாக பிரிட்டிஸ் குடியுரிமை பெற்ற தமிழ்வாணி என்ற பெண், யுத்த காலத்தில் அங்கிருந்ததுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ பணியிலும் ஈடுபட்டவர். அவரிடம் பேட்டி கண்ட பிபிசி தமிழோசை, புலிகள் "மக்களை கேடயமாக பயன்படுத்தியதாக" கூறப்படுகின்றது. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்ற போது, தான் அதை நேரில் பார்க்கவில்லை என்றார். பி.பி.சி மக்களை தாம் பேட்டி கண்ட போது புலிகள் மக்களை பணயம் வைத்ததையும் புலிகள் மக்களை கொன்றதையும் கூறுகின்றனர்.  "நீங்கள் அதை நேரில் பார்த்த அனுபவம் அல்லது  செவி வழியில் கேட்ட அனுபவம் உண்டா" என்று கேட்ட போது, அப்படி இல்லை என்றார். "புலிகள் உங்களைச் சந்திக்கவில்லையா என்ற போது" இல்லை என்றார். இப்படி இயல்புக்கும் சூழலுக்கும் முரணாகவே பேட்டி வழங்கினார்.

 

இந்த நிலையில் அவர் போர்க் குற்ற விசாரணையில் சாட்சியமளிக்கத் தயார் என்றார். இப்படி சாட்சியமளித்தால், அரசு தான் போர்க் குற்றத்தில் ஈடுபடவில்லை என்று, மிக இலகுவாகவே இந்தச் சாட்சிகள் மூலம் தப்பிவிடுவார்கள். சாட்சிகளின் பக்க சார்பு, உண்மைகளின் ஒரு பக்கத்தை மூடிமறைக்கும் போது, அதுவே பொய்ச் சாட்சியங்களாகி விடுகின்றது.

 

நடந்த உண்மையையும், சாட்சியத்தின் பக்கச்சார்பையும் காட்டி பொய்யாக்கி விடுவார்கள். ஒரு போராட்டத்தை அழித்த அதே புலியிசத்தின் மூலம், பேரினவாதத்தை  குற்றவாளிக் கூண்டில் ஏற்றி குற்றத்தை நிறுவிவிட முடியாது. அதற்கான நேர்மை, உளசுத்தி எதுவும் கிடையாது. சாட்சிகள் மூலம் தங்கள் பக்க குற்றத்தை மூடிமறைப்பதன் மூலம், எதிரியை இலகுவாக தப்ப வைத்துவிடுவார்கள்.

 

யுத்தத்தின் பொதுவான எதார்த்தமும், அது சார்ந்த உண்மையும் இன்று உலகம் தளுவியது. இதை வெனிப்படையாக ஏற்றுக்கொண்டு போராடும் போதுதான், பேரினவாத குற்றவாளிகள் புலிக்கு பின்னால் ஓடி ஒளிக்கமுடியாது.

 

பேரினவாதம் அனைத்தையும் புலியின் பெயரால் தான் செய்கின்றது. திறந்தவெளிச் சிறைக் கூடத்தில் மக்களை அடைத்து வைத்திருப்பதற்கு கூட, புலியையே காரணம் காட்டுகின்றனர். போர்க் குற்றம் தொடர்பான விசாரணைக்கு சாட்சியம் அளிப்பவர்கள், புலிகளைச் சார்ந்து அல்லது அதை மூடிமறைத்து சாட்சியமளிப்பார்களானால், போர்க் குற்றத்தில் இருந்து பேரினவாதம் இலகுவாக தப்பிவிடும்.

 

சாட்சியம் உண்மைகளை மறைக்கப்போய், இயல்பாகவே புலிச் சாட்சியமாகிவிடும்;. புலி போர்க் குற்றத்தை அரசு மேல் சுமத்தினால், அது தோல்வி பெறும். மக்கள் மக்களாகவே சாட்சியத்தை வழங்க வேண்டும். என்ன நடந்ததோ, அதை நடந்தபடியே சொல்ல வேண்டும். உண்மை அங்கிருக்கின்றது. குற்றவாளி புலிக்கு பின்னால் ஓளிய முடியாது.

 

மண்ணில் தொடங்கி புலத்து புலிகள் போராட்டம் வரை, அனைத்தையும் கடந்த காலத்தில் தோல்வி பெற்றது. போராட்டத்தின் நியாயத்தன்மையைக் கூட, பொய் புரட்டுகள் மூலம் அழித்தவர்கள் புலிகள்.

 

போர்க் குற்றமும், அதன் சாட்சியமும் உண்மைத் தன்மை கொண்டதாக அமைவதற்கு, நேர்மையான பக்கச்சார்பற்ற வகையில் நடந்தை நடந்ததாக சொல்ல மக்களை அனுமதிக்க  வேண்டும்;. இதை மீறும் தமிழ்வாணியின் பி.பி.சி பேட்டி, அரசுக்கு எதிர்மறையில் சார்பானது. நாளை போர்க்குற்றம் மீதான அவரின் சாட்சியத்தை, பேரினவாதம் இலகுவாக பொய்யென்று நிறுவ இந்த பி.பி.சி பேட்டியே போதும். அவரை புலியாகக் காட்டிவிட, உண்மையினை மூடிமறைத்த பக்கச்சார்பான பேட்டி போதுமானது. பேரினவாதத்தின் போர்க் குற்றத்தை நிறுவ, தமிழ்வாணியின் சாட்சியம் இனி பயனற்ற ஒன்றாகியுள்ளது.

 

நடந்தது என்னவென்று பேட்டிகள் மற்றும் கருத்துகளைக் கூறும் போது, உண்மையான எதார்த்தத்தை மறுத்தால், உண்மையும் பொய்யாகிவிடும். ஒரு தலைப்பட்சமாக மறைக்கப்படும் உண்மை, முழுவதையும் பொய்யாக்கிவிடும்;. யுத்தக் குற்றத்தை இதன் மேலான தர்க்கத்தின் ஊடாகவும், மற்றொரு உண்மைகள் ஊடாகவும் மறுத்து, இலகுவாக பொய்ச் சாட்சியங்களாக நிறுவி, அதை வெறும் புலிச் சாட்சியமாக சிதறடித்து விடுவார்கள்.

 

புலத்து புலிகளுடன் நின்றால், அவர்கள் ஊடாக உண்மைகளை திரித்தால், தமிழ் மக்கள் மேலான பேரினவாத போர்க் குற்றத்தை நிறுவ முடியாது. குற்றவாளிகளை குற்றக் கூண்டில் நிறுத்த முடியாது. இந்த உண்மையை புரிந்து கொள்ளாது, பேரினவாதத்தை எதிர்கொள்ளவும் முடியாது.

 

பி.இரயாகரன்
17.09.2009


பி.இரயாகரன் - சமர்